செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்
– இலக்குவனார் திருவள்ளுவன்
உலகின் முதல் மொழியான தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் செம்மைச்சிறப்புடன் தோன்றும் பொழுதே செம்மொழியாய் அமைந்தது. இருப்பினும் ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்கை மொழியான சமற்கிருதம் போன்றவற்றைச் செம்மொழி என்ற போர்வையில் ஊக்கப்படுத்தி வந்தது அரசு. ஆனால் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கும் செம்மொழிக்குரிய அறிந்தேற்பு வழங்க வேண்டும் என நல்லறிஞர்கள் குரல் எழுப்பி வந்தனர்.
இதன் தொடர் நிகழ்வால் 12.10.2004 அன்று மத்திய அரசு தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பை வழங்கியது. இதற்கு அமைப்பு நிலையில் முதலில் வித்திட்டது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் 1919 ஆம் ஆண்டுத் தீர்மானம் என்பதைத் தமிழறிஞர்கள் அனைவரும் அறிவர். ஆனால் அத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவந்தது யார் என்பதைத் தமிழறிஞர்களும் அறியாமல் உள்ளனர். அத்தகைய சிறப்பு மிக்கப் பெருந்தகையாளர்தாம் செம்மொழிப்புரவலர் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நாமறிந்த சிறப்பிற்குரிய பலரின் பணிகளுக்கு வேராய் இருந்து பணநீராய்ப் பொழிந்து ஊக்க உரமிட்டு வளர்த்தவர், மக்களால் இராசா என அழைக்கப்பெற்ற, குறு நில மாமன்னர் போல் திகழ்ந்த கோபாலசாமியாரே ஆவார்.
அறிஞர் பெருந்தகை கோபாலசாமி தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்; நூலாராய்ச்சியில் ஈடுட்ட அறிஞர்; சிறந்த சொற்பொழிவாளர்; இறைப்பணிகள் ஆற்றியவர். தமிழ் மருத்துவ நூலில் பயிற்சியும் பட்டறிவும் மிக்கவர். என்றபோதும் மருத்துவ அறிவைப் பணமாக்கக் கருதாமல் ஏழைகளின் மருத்துவராக விளங்கிய செம்மல். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் பயனுறும் வகையில் ‘ஔடதசாலை’ என்னும் மருத்துவமனை அமைத்தவர்.
அரசன் சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி(ஐயர்), உ.வ.சாமிநாத(ஐயர்), விஞ்சைராயர் சதாசிவம்(பிள்ளை), சக்கரை இராமசாமிப்பபுலவர், மு.இரா.அருணாசலக் கவிராயர், கோபாலகிருட்டிண பாரதியார், சேதுராம பாரதியார், தூத்துக்குடி பொ.முத்தையா(பிள்ளை), இலக்கணக்கடல் சாமிநாத(பிள்ளை), கவியரசு வெங்கடேச(ப் பிள்ளை), நாகை முத்துசாமி(ஐயர்), ந.மு.வேங்கடசாமி நாட்டார், நீ.கந்தசாமி(ப்பிள்ளை), பரிதிமாற்கலைஞர், இராகவ(ஐயங்கா)ர், முதலான அறிஞர் பெருமக்களின் தமிழ்வளர்ச்சிப் பணிகளுக்குப் புரவலராக இருந்து ஆதரித்தவர்.
ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலமே அரதைப் பெரும்பாழி. இதுவே இப்பொழுது சமற்கிருதமயமாகி அரித்துவார மங்கலம் எனப்படுகிறது. இவ்வூரில் பிறந்து புகழ் சேர்த்தவர்களுள் முதன்மையான ஆன்றோராகத் திகழ்பவர் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார். புரவலர் கோபாலசாமி கார்த்திகை 17 , 1901 / திசம்பர் 1, 1870 இல் வாசுதேவரகுநாத இராசாளியார்.- ஆயி அம்மாள் ஆகியோரின் திருமகனாகப் பிறந்தவர்; இளம் அகவையில் தந்தை காலமானதால், குடும்பச்சுமையை ஏற்பதற்காகக் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டவர்; மாமா வேலு(வாண்டையாரின்) திருமகள் பெரியநாயகி அம்மையை வாழ்க்கைத் துணையாக ஏற்று நல்லறம் நடத்தியவர்; கல்லூரிக் கல்வியைத் தொடர முடியாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இலக்கியங்களைப் படித்து இலக்கிய ஆர்வலராகச் செயல்பட்டவர்.
பிறருக்கும் தமிழ் இலக்கிய ஈடுபாடு வேண்டும் என்பதற்காகத் தம் ஊரில் பண்டைய இலக்கிய நூல்கள் யாவற்றையும் தொகுத்து நூலகம் அமைத்தவர்; தொல்காப்பியப் பாயிர உரை விருத்தி, தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரை, வீரசோழியம் முதலான இலக்கணநூல் ஓலைச்சுவடிகளையும் நற்றிணை, புறநானூறு முதலான இலக்கிய நூல் ஓலைச் சுவடிகளையும் உலகிற்குத் தந்து அச்சேற்ற உதவியவர்; வள்ளல் பாண்டித்துரை(த் தேவர்) மதுரையில் தமிழ்ச்சங்கம் தோற்றுவித்த பொழுது உடனிருந்து இணைந்து தமிழ்ச்சங்கத் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்; மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தமிழ்க்கல்லூரி தோற்றுவித்த பெருமைக்குரியவர்; கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு வித்தானவர்; ஆளுநர் இலாலி நட்பால், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நிறுவக் காரணமாக இருந்தவர்; சமய நல்லிணக்கர்; அன்னிபெசண்ட்டு அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் ஈடுபாடு கொண்டு அவரை அழைத்துக் கூட்டங்கள் நடத்தியவர்; இவ்வாறு இப்பெருந்தகையைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
கரந்தைத் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டவுடன் அதன் நூலகத்திற்குத் தம்மிடமிருந்த நூற்றுக்கணக்கான நூல்களை அன்பளிப்பாக வழங்கியவர். ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று குன்னூரிலும் ஒரு நூலகம் அமைத்தவர். அதைவிடப் பெருஞ்சிறப்பு மூவாத் தமிழின் தொல்லிலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய பேராசான் தொல்காப்பியருக்கு அங்குச் சிலை எழுப்பியுள்ளார். தொல்காப்பியரை என்றென்றும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக முதன்முதலில் அவருக்குச் சிலை எழுப்பிய பெருமை செம்மொழிப்புரவலர் மா.கோபாலசாமி இரகுநாதரையே சாரும்.
5ஆம் சியார்சு மன்னர் தில்லியில் முடிசூட்டும் விழாவில் பங்கேற்றவர். அப்பொழுது அவரிடம் பேட்டியும் எடுத்துள்ளார். குற்றப் பரம்பரை என்னும் கொடிய சட்டம் நீங்க வாதாடி அதன் கடுமையைத் தணித்துள்ளார். [முத்துராமலிங்க[த்தேவ)ர் தொடர் முயற்சியால் பின்னர் இச்சட்டம் நீக்கப்பட்டது. ஆனால், இராசாளியார் வரலாற்று நூலில் இவரால் எடுக்கப்பட்டு விட்டதாகத்தவறாக இடம் பெற்றுள்ளது.] மணிமுடிநாள் நினைவாக மணிமுடி ஓய்வில்லம் (Coronation rest house) ஒன்றையும் மணிமுடிக்கிணறு ஒன்றையும் தம் பகுதியில் நிறுவியுள்ளார்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். (திருக்குறள் 217)
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாக்கிற்கிணங்கத் தம் செல்வத்தை எல்லா வகையிலும் பிறர் பயன்பட அருந்தொண்டாற்றிய வள்ளல்.
பங்குனி 25, 1951 / ஏப்பிரல் 7, 1920 இல் செம்மொழிப் புரவலர் கோபாலசாமி இயற்கை எய்தினார்; இறந்த உடன், அவர் விருப்பத்திற் கிணங்கத் தமிழில் இறைப்பாடல்கள் பாடப்பட்டன. தாம் இறந்த பின்னரும் தமிழே முழங்க வேண்டும் என்ற தணியா ஆசை இவரின் தமிழ்ப்பற்றை உணர்த்தும்.
அறிஞர் ந.மு.வேங்கடசாமிநாட்டார் அவர்களின் கள்ளர் வரலாற்று நூலிலும் தலைமையாசிரியர் த.கோபால்சாமி தொகுத்த சாதனைச் சரித்திரத்திலும் இராகுல்தாசனின் தீக்கதிர்க் கட்டுரையிலும் செம்மொழிப்புரவலர் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அருந்தொண்டுகளும் கொடைச்சிறப்புகளும் சொற்பொழிவுத்திறனும் நூலாராய்ச்சிப்பணிகளும் குறிக்கப்பெற்றுள்ளன. எனினும் இவரை இளந்தலைமுறையினர் அறியும் வண்ணம் இவரது வரலாறு பாடமாக வைக்கப் பெற வேண்டும். “இராசாளியாருக்குச் செய்யும் சிறப்பு, தமிழன்னைக்குச் செய்யும் சிறப்பு” எனக் கூறியுள்ளார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி(வஞானம்).
ஆனால் செம்மொழி மாநாடு நடந்த பொழுதும் அவர் கவனிக்கப்படவில்லை. அவரால் குன்னூரில் கட்டப்பட்ட நூலகம் மூடப்பட்டு உலகச்செம்மொழி மாநாட்டின்பொழுது திறக்குமாறு வேண்டுதல் விடுத்தும், இன்றுவரை திறக்கப்படவில்லை. அவரால் எழுப்பப்பெற்ற தொல்காப்பியர் சிலையும் பேணப்படவில்லை. இவற்றைப் பேண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்தொண்டாற்றிய இவரை மாப்பிள்ளை எனக்கூறிய பார்புகழ் பாண்டித்துரை(த்தேவரின்) மதுரைத் தமிழ்சங்கத்திலும் இவரால் உருவாக்கப்பெற்ற மதுரைப் புலவர் கல்லூரியிலும் சங்கம் தோன்றிய நாள் முதல், தான் மறையும் நாள் வரை இவரால் பேணப்பட்ட கரந்தைத் தமிழ்ச்சங்கத்திலும் இவரது நினைவுகூரும் ஒளிப்படங்கள்கூட இல்லை.
எனவே, அவரது படங்களை இங்கே திறக்க வேண்டும். அரசு ஆண்டுதோறும் தமிழ்ப்புரவலர் ஒருவருக்கு இவர் பெயரில் விருது வழங்க வேண்டும். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கட்டடம் ஒன்றிற்கு இவர் பெயரைச் சூட்ட வேண்டும். செம்மொழிப்புரவலர் கோபாலசாமி அவர்களின் நினைவை நாம் போற்றுவதே தமிழுலகு அவருக்குச் செய்யும் கைம்மாறு ஆகும்.
செம்மொழிப் புரவலரைக் கொண்டாடிச் செந்தமிழைப் போற்றுவோம்!
– நன்றி : தினஇதழ் நாள் மாசி 07, 2046 வியாழன் 19.02.15 பக்கம் 15
Leave a Reply