[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ங :  தொடர்ச்சி]

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள்  (2013 -14, 2014-15, 2015 – 16)  –  ஙா

  தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30-40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும், நினைவுப் பரிசும் உ.ரூ.1 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய இளம் அறிஞருக்கான விருது ஒவ்வோராண்டும் ஐவர்க்கு வழங்கப்படுகின்றது.

இளம் ஆய்வறிஞர் விருது – 2013-14

முனைவர் உல. பாலசுப்பிரமணியன்

 

  முனைவர் உல. பாலசுப்பிரமணியன் 1975இல் தஞ்சாவூர் மாவட்டம், ஐம்பதுமேல் நகரம் என்னும் ஊரில் பிறந்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இலக்கிய இளங்கலை(பி.லிட்.), முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். முதுகலை இதழியல், முதுகலை மொழியியல் பட்டங்களைப் பெற்றிருப்பது சிறப்பாகும். சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கோயம்புத்தூர் மகாகவி பாரதி அறக்கட்டளை வழங்கிய ‘மகாகவி பாரதி சிறந்த நூல் விருது’, திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய ‘செந்தமிழ்க் கலாநிதி’ விருது ஆகியவற்றைப் பெற்றிருப்பது சிறப்பாகும். முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளில் செவ்விலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளமை சிறப்புக்குரியதாகும். தொல்காப்பியக் கலைச்சொற் களஞ்சியம் – (எழுத்ததிகாரம்), ‘சங்க இலக்கியம்ஓர் எளிய அறிமுகம், சொல்லிலக்கணமும் சமூக உறவுகளும்’ என்னும் நூல்களும் இவரது செவ்விலக்கியக் கட்டுரைகளும் இலக்கண இலக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுத் தேடலுக்கு வழிகாட்டியாகச் சிறப்புப் பெற்றிருப்பது பாராட்டுதற்குரியதாகும்.

 

முனைவர் கலை. செழியன்

 

 முனைவர் கலை. செழியன் 1983இல் சென்னையில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கூடுதல் கல்வியாக இளநிலைச் சட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை உளவியல், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓக (யோகா) ஆசிரியப் பயிற்சிப் பட்டயப் படிப்பு ஆகியவற்றையும் பெற்றிருப்பது சிறப்பாகும். தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றில் கவனகக்கலை வல்லமை பெற்றவர். செம்மொழித் தமிழைப் பரப்பும் வகையில் தொல்காப்பியத் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். சேலம், சிரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். ஆறு நூல்களையும், பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் குறள்பீடப் பாராட்டிதழ்ப் பரிசு, சென்னை, உலகத் திருக்குறள் மையம் வழங்கிய திருக்குறள் தொண்டன் விருது, திருவள்ளுவர் இலக்கிய மன்றம் வழங்கிய கவனகச் சுடர் விருது , சென்னை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் வழங்கிய தமிழ் இளவல் விருது, சென்னைத் தேனீ இலக்கியக் கழகம் வழங்கிய வள்ளுவர் விருது, உலகத் தமிழ்க் கழகம் வழங்கிய நினைவாற்றல் விருது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு வழங்கிய பெட்னா விருது, அமெரிக்கா தென்கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ், அமெரிக்கா நியூ செர்சி தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறப்பு விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

   தொல்காப்பிய உரை, திருக்குறளில் தொழில், குறுந்தொகை இன்பம், செவ்விலக்கிய அறிமுகம் என்னும் நூல்கள் செம்மொழித் தமிழின் சிறப்புகளை எடுத்தியம்புகின்றன.

 தாய்லாந்து, மலேசியா, இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழி குறித்தும், திருக்குறள் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் ஆங்கிலத்தில் உரையாற்றியமையும், செம்மொழித் தமிழைக் கவனகக் கலையின் மூலம் உலகெங்கும் எடுத்துரைத்தமையும் பாராட்டுதலுக்குரிய இவரது அரிய பணிகளாகும்.

 

 

முனைவர் சோ. இராசலட்சுமி

  முனைவர் சோ. இராசலட்சுமி 1982இல் விழுப்புரம் மாவட்டம், சக்காம் பேட்டை எனும் ஊரில் பிறந்தவர். இலக்கியம், மொழியியல், சுவடியியல், நாட்டுப்புறவியல் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். சுவடியியல்-பதிப்பியல், நாட்டுப்புறவியல், புலவர் பயிற்சிப் பட்டயச் சான்றுகள் பெற்றிருப்பது சிறப்பாகும். இவர் நா. வானமாமலை நினைவு விருதினையும் பெற்றுள்ளார்.  மொழியியல் நோக்கில் சங்க இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இலக்கிய இதழ்களான செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில் ஆகியவற்றில் வெளியான செவ்விலக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து ஆராய்ந்து வருகிறார். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வு செய்து வருகிறார். மூன்று நூல்கள் எழுதியுள்ளார். விக்டோரியா மகாராணி அம்மானைஆய்வு, நாடி நிதானம்பதிப்பும் ஆய்வும், தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறுஇதழ்கள், தேடலின் தடங்கள் என்னும் நூல்கள் ஆய்வுத் தேடலுக்குப் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. ஆற்றுப்படைகள்: பெண் குறித்த பதிவுகள், கபிலரின் கள் அறம்ஓர் விவாதம், மொழியியல் கோட்பாட்டாய்வுகள்விளக்கமும் புரிதல்களும் என்னும் ஆய்வுக் கட்டுரைகள் சங்க இலக்கிய ஆய்வுக்கு அரிய பங்களிப்புகளாகும்.

 

  முனைவர் . மகாலெட்சுமி


முனைவர் . மகாலெட்சுமி 1977இல் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனக் கலைக் கல்லூரியில் இலக்கிய இளங்கலை(பி.லிட்.), தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியலில் பட்டம் பெற்றிருப்பது சிறப்பாகும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் முனைவர் பட்ட மேலாய்வு செய்துள்ளார். இலக்கியம், அகராதியியல் துறைகளில் புலமை பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெருஞ்சொல்லகராதித் துறையில் திட்டத் தகைமையாளராக ஓராண்டு பணிபுரிந்துள்ளார். கும்பகோணம், அன்னை கலை-அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக நல்கைக் குழு நிதியுதவியுடன் முனைவர் பட்ட மேலாய்வு மேற்கொண்டு வருகிறார். திருவையாறு, தமிழ் ஐயா கல்விக்கழகம் வழங்கிய செந்தமிழ்ப்பாரதி, செந்தமிழ்ச்சுடர், இலக்கியச் சுடர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் செவ்விலக்கியக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். அறிவியல் பார்வையில் முல்லைத்திணைப் பாடல்கள் என்னும் நூலும், சங்க இலக்கியத்தில் மழை மேகங்கள், சிலம்பில் உறந்தை அல்லது உறையூர், தொல்காப்பியத்தில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள், முல்லைத்திணை ஆய்ச்சியர் தொழில்கள், தொல்காப்பியரின் சொற்பாகுபாட்டில் பெயர்ச்சொல், நானாற்பதில் வாழ்வியல் விழுமியங்கள் ஆகிய செவ்விலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.

முனைவர் சௌ.பா. சாலாவாணிசிரீ

 

  முனைவர் சௌ.பா. சாலாவாணிசிரீ 1977இல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை, இராணிமேரி கல்லூரியில் முதுகலைப் பட்டமும், அன்னை தெரசா மகளிர் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு, சுற்றுலா மேலாண்மைப் பட்டயங்கள் பெற்றிருப்பது சிறப்பாகும். சங்க இலக்கியம், கட்டடக்கலைத் துறைகளில் புலமை பெற்றவர். அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உதவிப் பேராசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தற்போது சென்னை, சிரீகிருட்டிணசாமி மகளிர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகத்தின் தமிழ்ச்சுடர், செந்தமிழ்த்திலகம், இலக்கியச்சுடர், தெய்வத் தமிழ்ச்சுடர்  ஆகிய விருதுகளையும், கவிராசன் தமிழ் மன்றத்தின் முத்தமிழ்ப் பாரதி விருதினையும், இலயோலா கல்லூரியின் இலக்கிய ஊடக விருதினையும் பெற்றுள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட  பன்னாட்டு, தேசியக் கருத்தரங்குகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளார். ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரையினை வழங்கியமை இவரது சாதனையாகும். நான்கு நூல்கள் எழுதியுள்ளார்.  திருவள்ளூர் வட்டச் சிவன் கோயில்கள் என்னும் நூலும், ஆற்றுப்படை இலக்கியங்களில் இசைக் கலைஞர்கள், இன்னா செய்யாமை, திருக்குறளில் உம் உளம் அளந்த ஓர் அடி,  மெய்ப்பாடும் உளவியலும் முதலிய செவ்விலக்கியக் கட்டுரைகளும் சங்க இலக்கிய ஆய்வுக்கு இவரது பங்களிப்புகள் ஆகும்.


[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி  காண்க]