செய்தக்க செய்யா ஆளுநர்

திருவள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு கேடு தருவனவற்றைக் கூறுகிறார்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

(குறள் எண்:466)

ஒருவர் கெடுதி அல்லது தீங்கு செய்தால்தான் கேடு விளையும் என்று எண்ணக்கூடாது. கேடு செய்யாவிட்டாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு வரும் செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும கேடு வரும்.

ஒவ்வொரு தனிமனிதருக்கும் இது பொருந்தும். குடும்பத் தலைவர் என்ற முறையில் ஒருவரின் செயல்பாடு செய்யத் தவறியும் தவறானவற்றைச் செய்தும் அமைந்தது எனில் அவரால், அவரின் குடும்பத்திற்கே கேடு வரும். அதுபோல், அலுவலகத்தின் தலைவர், நிறுவனத்தின் தலைவர், அமைப்பின் தலைவர் எனத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் இவ்வாறு மாறுபட நடந்து கொண்டார் எனில், அந்த அமைப்பிற்கே கேடு வரும். பரிமேலழகர் முதலானோர் அரசரின் இத்தகைய செயல்பாடுகளைக் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சியில் அது சரிதான். எனினும் நாம், மன்னர் என்று மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டா. ஆள்வோர் எனப் பொருவாக எடுத்துக் கொள்ளலாம். ஆக ஆட்சித்தலைமைப் பொறுப்பில் உள்ளவர் பெரியோர்களால் ஒதுக்கி வைக்கப்படுவனவற்றைச் செய்தாலும் பெரியோரால் வற்புறுத்தப்படுவனவற்றைச் செய்யாது விட்டாலும் அவரது ஆட்சிப் பரப்பு தீமையையே சந்திக்கும். ஆட்சியாளர் கடமை தவறுவதால் ஏற்படும் தீங்கை நாம் இவ்வாறு கடமையைத் தவிர்த்தல் தவறானவற்றை மேற்கொள்ளல் என்பனவற்றால் கேடு வரும் எனலாம்.

இந்தியக் கூட்டரசில் ஆளுநர் என்பது பொம்மைப்பதவியே. எனினும் நெருக்கடி நேரத்தில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படும் அதிகாரம் படைத்தவராக மாறி விடுகிறார் .ஆனால், அதற்காக இயல்பான நேரங்களில் அவர் தான்தான் தலைவர் என்று அரசின் அன்றாடப் பணிகளில் குறுக்கிடுவதோ அத்து மீறி அதிகாரம் செலுத்த முற்படுவதோ மக்களாட்சிக்குத் தீமைகளையே விளைவிக்கும். ஆனால், பா.ச.க.ஆட்சியில், பா.ச.க ஆட்சி செய்யா மாநிலங்களில் ஆளுநர்கள் அரசின் பணிகளில் குறுக்கிட்டு முதல்வருடன் முரண்பட நடந்து கொண்டு, ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படுவதைச்சிதைக்கிறார்கள்.  ஆனால், ஆளுநர்கள் தன் விருப்பில் செய்வன அல்ல இவை. ஒன்றிய அரசின் உந்துதலில் பா.ச.க ஆட்சியை மாநிலங்களில் மலரச்செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே செய்கின்றனர். உண்மையில், மாநில அரசுகளை அடிமைப்படுத்த நினைக்கும் இத்தகைய ஆளுநர்கள் ஒன்றிய அரசின் அடிமையரே!

சத்யபால் மாலிக்கு பீகார், பிரிக்கப்படாத சம்மு-காசுமீர் மாநிலம், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்தவர். இவற்றுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநில பாரதிய சனதா கட்சியில் மூத்த தலைவராக இருந்தவர். இவர், தம் மாநில உழவர்கள் 500 பேர் இறந்ததாகத் தலைமையமைச்சர் நரேந்திரரிடம் தெரிவித்த போது, அவர் மிகவும் கோபத்துடனும் ஆணவத்துடனும் பேசினார் எனச் சொல்லியுள்ளார். இவ்வாறு இவர் பா.ச.க.விற்கு எதிராகப் பேசுவது முதல் முறையல்ல. 2018ஆம் ஆண்டு காசுமீர் சட்டப்பேரவையை ஒன்றிய அரசு குதிரை பேரம் நடத்திக் கலைத்ததாகக் கடுமையாகக் குற்றஞ் சாட்டிப் பேசியுள்ளார். பின்னர் சம்மு காசுமீர் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதற்கும் எதிராகப் பேசினார். எனவே,  கோவாவுக்கு ஆளுநராக மாற்றப்பட்டார். அங்கும் பாசக முதல்வர் பிரமோத்து சாவந்து குறித்துச் சாட்டுரையாகப் பேசியதால், மேகலாயா ஆளுநராக மாற்றப்பட்டார். இவர் முந்தைய ஆட்சியில் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தால் தொடக்கத்திலேயே நீக்கப்பட்டிருப்பார். ஆனால், இவர் பா.ச.க.வின் மூத்த தலைவர். எனினும் மக்கள் செல்வாக்கு உள்ளதால் நீக்கப்படாமல் வேண்டாத அதிகாரியை மாற்றிக் கொண்டே இருப்பதுபோல் மாற்றப்பட்டு வருகிறார்.

என்றாலும் ஆண்மையுடன் ஒன்றிய அரசின் தவறுகளையும் தலைமையமைச்சர், உள்துறையமைச்சர் தவறுகளையும் குறைசொல்லத் தவறுவதில்லை. பிற இந்திய ஆளுநர்கள் யாவருமே ஒன்றிய அரசின் ஏவலர்கள்போல் நடந்து கொண்டு பதவிக்குரிய மதிப்பை இழிவு படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதற்காகத்தான் சருக்காரியா ஆணையம், கட்சிப்பொறுப்பில் இல்லாதவர்கள் உயர் பதவிப்பொறுப்பில் இல்லாதவர்களாக ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றது. அவ்வாறில்லாமையால், ஓய்வு நெருங்கும் பொழுதே ஒன்றிய அரசிற்குத் தாளம் போடத் தொடங்கித் தாங்கள் விரும்பிய பதவியை ஓய்விற்குப் பின் பெற்று விடுகிறார்கள்.

தமிழக ஆளுநராக உள்ள இர.நா.இரவி 2012இல் இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பின், 2014இல் தேசியப் பாதுகாப்பு மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 5.10.2018 அன்று இந்தியாவின் தேசியப் பாதுகாப்புத் துணை அறிவுரைஞராக நியமிக்கப்பட்டார். 2014இல் நாகாலாந்து தொடர்பான சிக்கில் நடுவராகச் செயல்பட்டவர் 2019 இல் நாகாலாந்து மாநில ஆளுநராக அமர்த்தப்பட்டார்.

அங்கே சிக்கலில் சிக்கியபின், 09.09.2021 அன்று தமிழக ஆளுநராக அமர்த்தப்பட்டார். எனவே, நடுவுநிலை பிறழ்வதும் ஒன்றிய அரசின் ஏவலுக்குக் கட்டுப்படுவதும் இயற்கைதான்.

ஆளுநர் இழுத்தடிக்கும் கோப்புகள் குறித்து முதல்வரும், அமைச்சர் பெருமக்களும், எதிர்க்கட்சியினரும் மக்கள் நல அமைப்பினரும் பல்வேறு காலக்கட்டங்களில் குறிப்பிட்டு வருகின்றனர் .திருப்போரூர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எசு.எசு. பாலாசி, தமிழர் நலன் சார்ந்த 211 கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேங்கி கிடப்பதாகச் சட்டப்பேரவையிலே யே பேசியுள்ளார்.

எவ்வாறு அதிகாரியாக இருந்த கிரண்(பேடி), தன் முதல்வரின் கனவு அரிப்பைப் போக்குவதற்காகப் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆட்டிப்படைக்குமாறு செயல்பட்டாரோ அதே போல், தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ள முந்தைய அதிகாரி மேதகு இர.நா.இரவி அதிகார அரியணையில் நடனமாடிக் கொண்டுள்ளார். அரசியலமைப்பு அறிவுறுத்தும் விதிமுறைகளுக்கு மாறாகச் சட்டமன்றத்தால் ஏற்கப்பெற்ற தீர்மானங்களையும் சட்ட வரைவுகளையும் அரசின் கோப்புகளையும் கிடப்பில் போடுவதையே முழு நேரப்பணியாகக் கருதிச் செயல்பட்டு வருகிறார்.

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்கி வைக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரின் செயல்பாடு மோசமாக உள்ளதை உச்ச நீதிமன்றமே கண்டிக்கும் வகையில் சுட்டிக்காட்டி யுள்ளது. இவ்வழக்கில் உள்ள பிற அறுவர் விடுதலைக்கும் இது பொருந்தும்.

இவையெல்லாம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாதிருக்கும் ஆளுநரின் அவலப்பாடுகளைக் குறிக்கும். அதே நேரம் செய்யத்தகாதவற்றைச் செய்யும் அவரது செயற்பாடுகளைத் துணைவேந்தர் கூட்டம் முதலான பலவும் உணர்த்தும்.

திருக்குறளை மேற்கோளாகக் கூறும் தலைமையமைச்சர் நரேந்திரரும் பிற அமைச்சர்களும் மேலே குறிப்பிட்ட திருக்குறள் பொருளை உணர்ந்து பின்பற்றி ஆளுநர்களையும் பின்பற்றச் செய்ய வேண்டும். தலைமையமைச்சரும் உள்துறை யமைச்சரும் தம் கட்சியினரைத் தேர்தலில் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்து வாகை சூடி ஆட்சியில் அமரச்செய்ய வேண்டும் என்று செயல்பட வேண்டுமே தவிர, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆளுநர்கள் மூலமாக மாநில ஆட்சிகளை ஆட்டிப்படைக்குமாறு செயல்படக் கூடாது. இந்நிலை தொடர்ந்தால், ஒன்றிய அரசிற்கும் கட்சிக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் பேரிடர் வரும் என்பதை உணர வேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தின் சட்டம் ஒழுங்கினைப் பேணுவதற்காக ஆளுநர்களை இயல்பாகச் செயல்படச் செய்து மாநில அரசுகளின் காவலர்களாகச் செயல்படச் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் ஆளுநர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட கோப்புகளைத் தூசி தட்டிக் கையொப்பமிடச் செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல