செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்
செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம்
முதலமைச்சர் செயலலிதாவின் நடைமுறைப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அனைத்துத்தரப்பாராலும் பாராட்டத்தக்கனவாக உள்ளன. இந்நிலை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.
முதல்வர் செயலலிதா பதவி யேற்பின் பொழுது வழக்கமான வெட்டுருக்கள் வழி நெடுக வீற்றிருக்கும் காட்சியைக்காண முடியவில்லை.
கூட்டுப் பொறுப்பிலுள்ள அமைச்சராக இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் அடி வீழ்ந்து தெண்டனிடும் அடிமைத்தனம்தான் மேலோங்கியுள்ளது. இத்தகைய, தன்னலம் சார்ந்த போலித்தனமான பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி இட நாம் வேண்டியிருந்தோம். மக்களுக்குச் சிறிதும் விருப்பமில்லா அடிபணிதல், வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுமாகத் தெரிவிக்கப்பட்டன. ஊடகங்களிலும் இச்சீரழிவுப் போக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொண்டர்களின் விருப்பம் என்று அமைதியாயிராமல், இந்த அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளியிடும் வகையில், முதல்வர் செயலலிதா, அமைச்சரவை பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுக்கும் முன்னரும் பின்னரும் நெடுஞ்சாண்கிடையாகக்காலில் விழும் அமைச்சர்களைக் கட்டுப்படுத்திவிட்டார்.
“இன்றைய முதல்வரின் காலில் மண்டியிடுவோரிடம் கண்ணசைவில் தன் விருப்பமின்மையைக் காட்டினால் தலைக்குனிவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்களே!” என்று குறிப்பிட்டு இருந்தோம். அதற்கிணங்கச் சிலர் காலில்விழுவதற்கு முயன்ற பொழுது கண்களாலேயே கட்டுப்படுத்தியுள்ளார். மக்கள் உணர்வுகளை மதித்துத் தன்னை மாற்றிக்கொள்ளும் மாற்றம் நிகழ்ந்துள்ளது வரவேற்பிற்கும் பாராட்டிற்குமுரியது. இதனையே எல்லா நேர்வுகளிலும் பின்பற்ற வேண்டும். அமைச்சர்கள் முதல்வரை வரவேற்கும் வழியனுப்பவும் தமைலமைச் செயலகத்தில் அல்லது அவர் வந்து போகக்கூடிய இடத்தில், குனிந்து படுத்து உருண்டு கூத்தடிப்பதை நிறுத்த வேண்டும். தாலின் போன்ற பிறரும் காலடி வீழ்தலுக்குமுற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
முதல்வர் செயலலிதாவிடம் ஏற்பட்டுள்ள மற்றொரு மாற்றம், மாற்றுக்கருத்தையும் பொருட்படுத்துதல்.
பதவியேற்புவிழாவின் பொழுது தாலினுக்கு முன்வரிசையில் இடம்தரவில்லை என அவர் தந்தையான கலைஞர் கருணாநிதி கண்டித்திருந்தார். முந்தைய செயலலிதா என்றால், அமைச்சர்களைவிட்டுத் தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது என்பதுபோல் ஏதும் விளக்கம் அளிக்கச் செய்திருப்பார். இதனால் கசப்புணர்வுதான் வளரும். ஆனால், இந்த அறிக்கையைப் படித்தவுடன் அவரே, “பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால், அவருக்கு நான் இத்தருணத்தில் ஒரு விளக்கத்தைத் தர விரும்புகிறேன். இருக்கை ஒதுக்கீடு மூலம் திமுகவையோ, தாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை. ஒருவேளை, தாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் நடைமுறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன். மாநில மேம்பாட்டிற்காகத் தாலினும், அவரது கட்சியும் செயல்பட எனது வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்” என வருத்த உணர்வில் அறிவித்துப் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், கலைஞர் கருணாநிதி, கட்சித்தலைவர் போன்று இல்லாமல் தந்தையாக இருந்து கருத்து தெரிவித்துச் சறுக்கிவிட்டார். கட்சித்தலைவர் கண்ணோட்டத்தல் அணுகி இருந்தால், அவரே செய்தியளாரைக் கேள்வி கேட்கச் செய்து அல்லது வினாவிடை மூலம், “தாலின் உட்காருவதற்குரிய இடம் முதல்வரிசையல்ல என அதிகாரிகள் நடந்துகொள்வதன் மூலம் தாலினுக்கு ஒன்றும் தரக்குறைவில்லை. ஆனால், இதன்மூலம் அம்மையாரை மனநிறைவு(திருப்தி) அடையச்செய்யலாம் என எண்ணிய அதிகாரிகள் பயனடைந்தால்சரிதான்” என்றிருப்பார்.
தந்தையாகப் பார்த்ததால்தான் தேவையற்ற ஒப்பீடுகளுடன் அறிக்கையிட்டுள்ளார்.
மக்களின் மறதியைப் பயன்படுத்தித்தான் அரசியல்வாதிகள் மாறிமாறிப் பேசிவந்தார்கள். இப்பொழுது முகநூல் முதலான வலைத்தளப் பயன்பட்டாளர்கள், பழைய பேச்சுகளை அல்லது நிகழ்ச்சிகளைத் தோண்டி எடுத்தாவது மக்கள் பார்வைக்கு வைத்துவிடுகின்றனர். கலைஞர் கருணாநிதி செம்மொழிமாநாட்டின் பொழுது தம் குடும்ப உறுப்பினர்களை முதல் வரிசையில்அமரச்செய்து, தமிழறிஞர்கள் பின்னா் நிற்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்டுக்கொண்டாற்போல் ஆயிற்று.
கலைஞர் கருணாநிதி இனியேனும் தன் குடும்பப்பாசத்தை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்ள வேண்டும். கட்சி அரசியலாயினும் சரி, நாட்டு அரசியலாயினும் சரி, தமிழகச் சட்டமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் என்ற முறையில் மொழி, இன, நாட்டு நலன் கருதியே கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும், செயற்படுத்த வேண்டும். கலைஞரின் அகவையையும் உழைப்பையும் பட்டறிவையும் மதித்து அரசும் அவர் கருத்துகளுக்குச் செவிமடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சித்தலைவர் தாலினும் கனிமொழியும் முதலமைச்சர் செயலலிதாவின் கருத்தினை வரவேற்றுள்ளனர். கலைஞர் கருணாநிதியும் அரசுடன் ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பாரும் ஒருவர் மீது மற்றொருவர் குறைகூறுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகம் இழந்த உரிமைகளைத் திரும்பப்பெறவும், தமிழ்நாட்டில் தமிழே வீற்றிருக்கவும் இணைந்து பணியாற்ற வேண்டும். பாராமுகம் காட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலமும் உலகத் தமிழ்ச்சங்கம் மூலமும் உலகெங்கும் தமிழ் செழிக்கவும் தமிழர்கள் மேம்படவும் தொண்டாற்ற வேண்டும். கட்சி அரசியலைத் தேர்தல் நேரத்தில் மேடையில் வைத்துக்கொள்ளட்டும். ஒரு நல்ல மாற்றம் அரும்பத் தொடங்கியுள்ளது. மலர்ந்து மணம் வீசித் தமிழ்மக்களுக்கு நன்மை கிட்டட்டும்!
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க;செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 655.)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply