..பதினெண்மர் வழக்கு:

மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்!

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.(திருவள்ளுவர், திருக்குறள் 578)

 தீர்ப்பு என்பது வழக்கின் தன்மையைமட்டும் கருதி வழங்கப்படுவதில்லை. நேர்வுகளுக்கேற்ப, வழக்காளிகளின் செல்வாக்கு, வழக்கின் பரபரப்புத் தன்மை, நீதிபதியின் பார்வை, வழக்குரைஞர்களின் வாதத்திறமை, வழக்கு நீட்டித்து ஆனால் சட்டென்று உடனே தீர்ப்பு சொல்ல வேண்டிய காலச்சூழல், அரசியல் மேலாதிக்கம் முதலியவற்றின் அடிப்படையிலேயே பல தீர்ப்புகள் அமைகின்றன. பணிச்சுமைகளில், வழக்குரைஞர் அல்லது வேறு யாராலோ தெரிவித்துத் தட்டச்சிடப்படுவதே தீர்ப்பாக வந்துள்ளதாகவும் சில சமயங்களில் கூறியுள்ளனர். சில நல்ல தீர்ப்புகளுக்கு மோசமான எதிர்க் கருத்துகள் வந்துள்ளன. சில மோசமான தீர்ப்புகள் நேர்மையானவையாகக் காட்டப்பட்டும் உள்ளன. எவ்வாறிருப்பினும் கீழமைவு நீதி மன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை தீர்ப்புகள் மாற்றப்பட்டுள்ளன என்பதே தீர்ப்பின் நிலையற்ற தன்மையை விளக்கும்.

  தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது குறித்த கருத்தைச் சொல்ல யாருக்கும் உரிமையுண்டு. இதனை நீதிமன்ற அவமதிப்பாகக் கூற இயலாது. நீதிமன்றத்தீர்ப்பைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளவர், மேல்முறையீடு செய்துள்ளமை போன்ற காரணம் இன்றிச் செயல்படுத்தாதிருந்தால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதலாம்.

 நீதிபதி, தான் உய்த்துணர்ந்ததன் அடிப்படையில் தீர்ப்பு சொல்லி யுள்ளதை, அவர் பயன் அடைந்தோ பயன் எதிர்நோக்கியோ தீர்ப்பு சொன்னதாகப் பொய்க்குற்றம் சாட்டுவதும் நீதிமன்ற நடவடிக்கைக்குரியதே!

 எனவே, நாடே எதிர்நோக்கிய – உலகின் பல பகுதிகளில் எதிர்பார்த்திருந்த – தீர்ப்பு வெளியானபின்னர் அது குறித்து மக்களிடம் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை ஊடகத்திற்கு உண்டு என்ற அளவில் நாமும் சிலவற்றைத் தெரிவிக்க விருமபுகிறோம்.

 தகுதிநீக்க வழக்கினை விரைவாக முடிப்பதாகக் கூறி 12 நாள் கேட்பில் ஆகத்து 31 இல் இறுதிக் கேட்பு நிகழ்ந்தது. ஆனால், கிட்டத்தட்ட அட்டோபர் இறுதியில் அஃதாவது அட்டோபர் 25(2018) ஆகிய நேற்றுதான் தீர்ப்பு சொல்லப்பட்டது.

 18 சட்ட மன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்த வழக்கில் மூன்றாம் நீதிபதியின் தீர்ப்பு காலந்தாழத் தாழ இவர்களுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் எனப் பலரும் கருதினர். அதற்கேற்பவே தீர்ப்பும் வந்துள்ளது.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சட்டமன்றத்தலைவரின் தீர்ப்பு தவறெனக் குறிப்பிட்டு இரண்டாம் நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பை ஏற்று இதனை அறிவிப்பதாகச் சொல்லியிருப்பார் என்றுதான் அறத்தை எதிர்பார்த்தவர்கள் நம்பினர். இருப்பினும் அரசியல் சூழல் மாறாகவே தீர்ப்பைத் தரும் என்ற அச்சமே பலருக்கும் இருந்தது.

  இத்தீர்ப்பு படிக்கும்பொழுது ஆராய்ந்து சொல்லப்பட்டதுபோல்  எழுதப்பட்டிருந்தாலும் நாம் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதே  நீதிக்கு மாறான பல இடறல்களைக் காண முடிகிறது.

  முதல் இடறல் பன்னீர் அணிக்கு ஒருமாதிரி நடவடிக்கையும் தினகரன் அணிக்கு வேறுமாதிரி நடவடிக்கையும் எடுத்ததாகக் குற்றம்சாட்டியதற்குத் தீர்ப்பு சொல்லும தவறான விளக்கம்.

 கடந்த 2017ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 18ஆம் நாள் தமிழகச் சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திக்கு எதிராக அதிமுக ச.ம.உறுப்பினர்களில் பன்னீர் அணியினர் 11 பேர் வாக்களித்தனர். இது குறித்து பேரவைத்தலைவருக்கு முறையிட்டும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்தான் திமுக கொறடா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். தீர்ப்பு வந்ததன் பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடும் செய்துள்ளார்.

 அரசை எதிர்த்து நம்பிக்கையில்லை என வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தீர்ப்பு கூறுகிறது. எனவே அவர்களுக்குச் சாதகமாகவும் ஒருதலைச்சார்பாகவும் பேரவைத்தலைவர் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது  என்றும் தகுதி நீக்க விதிகளையும் இயற்கை நீதியையும் முழுமையாகப் பின்பற்றியே உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் தீர்ப்பு கூறுகிறது.

உண்மைப் பூச்சுணைக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றதாக இத் தொடர்கள் அமைந்துள்ளன.

 மக்கள் எழுப்பும் வினா, அரசிற்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த பொழுதும் அதை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டிய பின்பும் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், வேறு கட்சியினருடன் சேராமல் நாட்டுத்தலைவர் என்ற முறையில் ஆளுநரிடம் முதல்வரை மாற்றுமாறு கோரியதற்குச் சட்ட மன்ற உறுப்பினர் பறிப்பு என்றால் ஒருவர் கண்ணில் வெண்ணெயும் மற்றொருவர் கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதுதானே.  இதைத் தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய தீர்ப்பு இதற்குப் பின்னர் நேர்ந்த முறையீட்டைக் காரணம் காட்டி வழக்கு நிலுவையால் நடவடிக்கை இல்லை என்று சப்பை கட்டுவது ஏன்?

  அரசியல் கடமையை ஆற்றி நடுவுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் உண்மைக்கு மாறாகவும் இரு வேறு நிலைப்பாட்டைப் பின்பற்றுவது இயற்கை முறைமையை மீறியதாக இல்லாமல் வேறு என்னவாம்?

 அடுத்த இடறல்.

முதல்வருக்கு எதிராக 18 ச.ம.உ.களும் ஆளுநரிடம் முறைப்பாடு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ள தகவலைத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  ச.ம.உ.கள்  தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற உசாவலின் பொழுது தெரிவிக்கவில்லை எனத் தீர்ப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

இதுவும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. இவ்வாறு தகவல் தெரிவிக்காமையால் தீர்ப்பு உண்மைக்கு எதிராக வழங்கப்பட்டதாக – அஃதாவது இதைக் கவனிக்காமையால் மாறான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்று – சுட்டிக்காட்டுவதாக இருந்தால் இவ்வாறு கூறலாம். இதனால் எந்த வகையில் முந்தைய தீர்ப்பு மாறியுள்ளது எனக் கருதுகிறார் என்பது புரியவில்லையே! இத்தகவல் பேரவைத்தலைவர் அல்லது முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படவில்லை யெனில் இதைக் குற்றமாகச் சொல்லி  இதன் அடிப்படையில் தகுதி  நீக்கம் செய்தது சரி என்று சொல்வது எப்படி  முறையாகும்? நியாயமாகும்?  நீதியாகும்? நயன்மையற்ற வாதமாகப் படுகிறது.

 முதன்மையானதும் தலைமையானதுமான இடறல் வழக்கினைக் குறித்த நீதிபதியின்கண்ணோட்டம்.

  தீர்ப்பை வாசிக்கும் முன், ‘மாறுபட்ட உத்தரவுகளின் அடிப்படையில் பார்க்காமல், இந்த வழக்கை தனியாகக் கருதிப்பார்த்து, உத்தரவு பிறப்பிக்கிறேன்’ என, நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வழக்கு கேட்பு தொடங்கியபொழுது இரு தரப்பாரும் முதலில் இருந்து தெரிவிக்கத் தேவையில்லை; தீர்ப்புரைகளின் மாறுபட்ட தன்மையில் சொன்னால்  போதும் என்று தடைவிதித்துள்ளார்.  வழக்கு தொடர்பனாவர்களுக்கு ஒரு நீதி! தீர்ப்பாளருக்கு வேறு ஒரு நீதியா?  தனியாகக் கருதிப் பார்ப்பதாக இருந்தால் வழக்கின் முந்தைய உசாவல்களைப் புறந்தள்ளி, இரு தரப்பாரிடமும் தொடக்கத்திலிருந்து அல்லவா விவரங்களையும் வாதங்களையும் கேட்டிருக்க வேண்டும்.  எனவே, அடிப்படை அறமே மீறப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த தீர்ப்புரையுமே தவறாகப்படுகிறது.

 தலைமை நீதிபதி தீர்ப்பு தொடர்பான மறு உசாவல், அவரது கருத்திற்கு எதிராகச் சொலலக்கூடாது என்ற எண்ணத்தை அவரது சார்நிலையில் உள்ள நீதிபதிக்குத் தோற்றுவிக்கலாம். எனவே, இதுபோன்ற நேர்வுகளில் பிற மாநிலத்தலைமை நீதிபதியின் கருத்திற்கு விடலாமா என்பது குறித்து ஆராய வேண்டும்.

 தினகரன் அணியினர் தேர்தலையும் எதிர்நோக்கி, மேல் முறையீட்டிற்கும் செல்ல வேண்டும். மேல் முறையீடு அவர்களுக்காக அல்ல! தவறான தீர்ப்பு இனி முன் எடுத்துக்காட்டாக அமையக்கூடாது என்பதற்கும் வாளனளாவிய அதிகாரம் என்பது அரசியல் யாப்பின்படித்தானே தவிர பதவியில் உள்ளவர் எண்ணத்திற்கு ஏற்ப அல்ல என நிலை நாட்டப்படுவதற்காகவும்!

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.            (திருவள்ளுவர், திருக்குறள் 118)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல