தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் – 1
(தொடர் கட்டுரை)
தகவல் அறியும் உரிமைச்சட்டம் குடிமக்களுக்குச் செலவில்லாத எளிய வழியில் அரசிடமிருந்து வேண்டிய செய்திகளை/ புள்ளிவிவரங்களை, அவரவர் தேவைக்கேற்ப அறிய உரிமை அளிக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு உரிய துறையில் தகவல் அளிக்காவிட்டால் குறிப்பிட்ட அதிகாரி தண்டத்தொகை கட்டவேண்டும். அண்மையில் நடந்த ஆய்வின்படி 2014 ஆம் ஆண்டு மத்திய செய்தி அளிக்கும் ஆணையாளர் மாதபூசி சிரீதர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச் செய்தியின்படி. “எனது அலுவலகத்தில் பல்வேறு பணிகளை எனது உதவியாளர் ஒருவரே செய்கிறார். இதனால் பல மாதங்கள், ஏன், ஆண்டுகள் தாமதம் ஆகும் நிலையில் விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கின்றன. 40-50 இலட்சம் விண்ணப்பங்கள் ஓர் ஆண்டில் வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில் எடுத்துக்கொண்டால் அடுத்த 60 ஆண்டுகள் இந்த விண்ணப்பங்களை முடிக்க ஆகும். மேற்கு வங்காளத்தில் 18 ஆண்டுகள் ஆகும். 3% விண்ணப்பங்களில்தான் அதிகாரிகள் மீது தண்டத்தொகை விதிக்கப்பட்டுள்ளது. பல அலுவலகங்களில் அரசு ஆவணங்கள் காணாமல் போயுள்ளன” என அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்து கிடக்கின்றது. அந்த ஊழலை வெளிக்கொணரவேண்டும் என்பதற்காகவும் பொதுமக்கள் வெளிப்படையான நிருவாகம் இருக்கவேண்டும் என்பதற்காகவும் ‘தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005’ ஐ மத்திய அரசு இயற்றியது.
இச்சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தகவல் பெறும் உரிமை முறையாக அளிக்கப்படவில்லை. தகவல் கேட்பவர்கள் தற்கொலை விளிம்பிற்குச் செல்லும் வரை அதிகாரிகள் மனுக்களைத் திருப்பி அளிக்கும் வகைகளுக்கானயிலான ஓட்டைகளைப் பயன்படுத்தி அலைக்கழிப்பு செய்து மனஉளைச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் எப்படித் தகவல் கேட்டால் எப்படி விடை அளிக்கிறார்கள் என்ற ஆவலுடன் மாநில அரசின் கீழ் இயங்கும் 100க்கும் மேற்பட்ட துறைகளுக்குத் தகவல் கேட்டு அனுப்பினோம். அதில் ஒவ்வொரு துறையும் எவ்வாறு மனுக்களுக்கு முறையாகத் தகவல் அளிக்காமல் எவ்வாறு திருப்பி அனுப்புகிறது என்பதுடன் அச்சட்டம் எப்படி எல்லாம் வளைக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
“உப்பு விற்கப்போனால் மழை பொழிகிறது; உமி விற்கப்போனால் காற்றடிக்கிறது; எனக்கு நேரமே சரியில்லை” என்று கூறுபவர்கள் பலர் உண்டு. அதுபோலச் சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய அதிகாரிகளே மறைமுகமாகத் தற்கொலைக்குத் தூண்டியும், மனஉளைச்சலை ஏற்படுத்தியும் வருகிறார்கள். சிலரைத்தவிர மற்றவர்கள், கோரும் தகவல்களுக்காகப் பல நாட்கள் போராடி மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அரசியல்வாதிகள், அடியாட்கள் மூலம் மிரட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களும் உள்ளனர். சிலர், தகவல் கேட்பவர்களைக் காவல்துறை உதவியுடன் பொய்வழக்கு போட்டுச் சிறையில் தள்ளியும் உள்ளனர். அதே வேளையில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும் மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களும் நிகழ்கின்றன என்பதை மறுப்பதிற்கில்லை. ஒரு சில மாநிலங்களில் சேவைக் கட்டணம் உரூ.2 மட்டும் செலுத்தித் தகவலை கேட்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு துறையிலும் ‘மக்கள் சாசனம்’ என்ற தகவலேடு உள்ளது. அந்த மக்கள் சாசனத்தில் எந்த அதிகாரியிடம் மனு கொடுத்தால் மனு எத்தனை நாட்களுக்குள் தீர்வு செய்யப்படவேண்டும்; எத்தனை நாட்களுக்குள் விடை அளிக்கவேண்டும், யாரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று குறிக்கப்பெற்றிருக்கும். ஆனால் புத்தக வடிவில் இருக்கும் மக்கள் சாசனம் எந்த அலுவலகத்திலும் அச்சடித்து வைக்கப்படவில்லை என்பதே உண்மை. ஒரு துறையில் வேலை நடந்து கொண்டிருக்கும் போது அது எந்தத் துறையின் பணியாக இருந்தாலும் அதனை ஆய்வு செய்ய மனுதாரருக்கு உரிமை உண்டு. வேலை நடக்கும்போதோ வேலை நடைபெற்ற பின்னரோ ஆய்வு செய்யலாம்.
அரசு அலுவலரின் பணிப்பதிவேட்டை நாம் பார்வையிடவோ ஆய்வு செய்யவோ கேட்டாலோ அதன் படியைத் தருமாறு கோரினாலோ அதனை மூன்றாமவரின் தகவல் எனக் கூறி மறுக்கக் கூடாது. மனுதாரரைத் தகவல் ஆணையம் நேரில் வருமாறு உத்தரவு பிறப்பித்தால், நேரில் வர வேண்டிய கட்டாயம் இல்லை. விரும்பினால் வரலாம். அல்லது தனது சார்பாக மனு தொடர்பான விவரங்கள் அறிந்த ஒருவரை அதிகாரஅளிப்பு மடலுடன்(Authorised Letter) அனுப்பி வைக்கலாம். தமிழகத்தில் (சி.பி.சி.ஐ.டி.) சிறப்பு புலனாய்வுக்குழு முதலான 43 துறைகள் இந்த சட்டத்தின்படித் தகவல் தருவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
பொதுத் தகவல் அலுவலருக்குக் கீழ்வரும் காரணங்களடிப்படையில் தண்டனையோ தண்டத்தொகையோ விதிக்க முடியும்.
- உரிய முகாந்திரம் இன்றி மனுவை வாங்க மறுத்தல்.
- குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோரிய தகவல்களைத் தராமல் இருத்தல்.
- தீய எண்ணத்துடன் தகவலை தரமறுத்தல்.
- தெரிந்தே தவறான அல்லது முழுமையற்ற அல்லது தொடர்பில்லாத தகவல்களைத் தருதல்.
- தகவலைத் தருவதற்குப் பொதுத்தகவல் அலுவலரே தடைகல்லாக அல்லது இடையூறாக இருத்தல்.
- மனுதாரர் கோரிய விவரங்கள் அடங்கிய கோப்பினை அல்லது பதிவேட்டினை வேண்டுமென்றே அழித்தல்.
- பொதுத்தகவல் அலுவலர் மேல் முறையீட்டு அலுவலரின் ஆணைக்கு க் கட்டுப்படவில்லை என்றாலும் அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேல்முறையீட்டு அலுவலர் துறைத்தலைவருக்குப் பரிந்துரைக்கலாம்.
- பொதுத்தகவல் அலுவலர் விரும்பியோ அலுவலகப் பணி நிமித்தமாக வெளியூர் சென்றாலோ அவருக்கு மாற்றாக அந்தப் பொறுப்பில் இருப்பவர் மனுவைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்கான ஏற்பாட்டைச்செய்யவேண்டியது உரிய துறைத்தலைவரின் பொறுப்பாகும். தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி பொதுத்தகவல் அலுவலர் பதவி காலி என்பதற்கு இடமில்லை.
கட்டணங்கள்
- ஏ4 அல்லது ஏ3 அளவுத்தாளில் எழுதி உருவாக்கப்பட்ட அல்லது அச்சு மற்றும் படி எடுக்கப்பட்ட ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு உரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.
- பெரிய அளவுத் தாளுக்கான படி எடுக்க அப்போது நடைமுறையில் உள்ள கட்டணம் மற்றும் அதற்கான செலவுத்தொகை மட்டும் செலுத்தப்படவேண்டும்.
- மாதிரிகள் அல்லது மாதிரிப் படிவங்களுக்கு அப்போது நடைமுறையில் உள்ள செலவு அல்லது விலை.
- ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு முதல் ஒருமணிநேரத்திற்குக் கட்டணம் எதுவும் இல்லை. அதன்பின்னர் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் கட்டணம் ஐந்து உரூபாய் ஆகும்
- கணிவட்டையில் பதிவு செய்து பெறுவதற்குக் கட்டணம் ஐந்து உரூபாய் ஆகும்.
ஆணையத்தின் தீர்ப்புகள்
- தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005பற்றி எனக்குத் தெரியாது எனப் பொதுத்தகவல் அலுவலர் கூறினால் அதை ஏற்க முடியாது என மத்தியத் தகவல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன. [மத்தியத் தகவல் ஆணையம் வழக்கு எண் (CIC/DS/A/2001/00050/2/04/2012) கேரள உயர்நீதிமன்றம் WP(C) NO&272 of 2007 (L)]
- மனுதாரர் ஆவணங்கள், கோப்புகளைப் பார்வையிட வரும்போது அவருக்கு உதவியாக இன்னொருவருக்கும் இசைவளிக்க வேண்டும் (மத்திய தகவல் ஆணையம் வழக்கு எண் (CIC/SG/A/2009/000601)
- மொழிபெயர்ப்பாளரை மனுதாரர் அழைத்து வந்தால் அவருக்கும் இசைவளிக்க வேண்டும். (CIC/AD/A/2013/000761/4.4.2013)
- மாதிரிப் பொருட்களை மனுதாரர் கேட்டால் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அல்லது பணி நிறைவடைந்தாலும் வழங்கவேண்டும். (CIC/WBA/A/00259/260/261/22.5.2006)
- மனுதாரருக்கு அனுப்பும் மறுமொழியில் அல்லது தகவலில் அல்லது கடிதப் போக்குவரத்தில் பொதுத் தகவல் அலுவலர் தனது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை. (CIC/691/SC/A/2006.F.NO.CIC/MA/A/2006/00146165/20.06.2006)
- பணியாளர் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பின் அவர் தொடர்பான குறிப்புக்கோப்பு படியைக்கேட்டாலும் தரவேண்டும். ;. (CIC/117/ICPM/2006/F.NO.PBA/061/94/28.9.2006)
- அரசு ஊழியரின் ஆண்டு மந்தன அறிக்கையினைத், தொடர்பான ஊழியர் கேட்டால் கட்டாயம் காண்பிக்கவேண்டும். (APPEAL NO.7631/2002/12.05.2008)
- மனுதாரர் கோரிய தகவல் தொடர்பான கோப்பு காணாமல் போய்விட்டது என அவருக்குத் தெரிவித்தால் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும். [WP(C) NO.2132/2009,WP(C)NO.2143/2009/19.01.2006]
- கேள்வித்தாளுக்கு உரிய விடை வழங்கப்படவேண்டும்.
- ஆணையம் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் பொதுத்தகவல் அலுவலர் நேரில் வரவில்லை எனில் அவருக்குத் தண்டம் விதிக்கலாம். (WP.NO.44805/2012/10.1.2013)
- வாரியக் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு கேட்டால் வழங்கவேண்டும்.
- பொதுத்தகவல் அலுவலர் தகவலை விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சலில் அனுப்பவேண்டும்.
- தகவல்கேட்பு விண்ணப்பத்தில் ஒருவருக்கு மேல் பலர் கையொப்பமிட்டாலும் அம்மனுவினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
- தகவல்கேட்பு(Right To Information Act) மனுவை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகையைப் பொதுத்தகவல் அலுவலர் மனுதாரருக்கு வழங்கவேண்டும்.
- மனுதாரர் தகவல்கோரி அனுப்பி மனுவை அலுவலகத்தில் பெற்றுக்கொண்டபின், அது வரப்பெறவில்லையென்று பொதுத்தகவல் அலுவலர் தெரிவித்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். மேலும் மனுதாரருக்கு இழப்பீட்டுத்தொகையும் வழங்கவேண்டும்.(CIC/SM/A/2012/001061)1.5.2013)
இவ்வாறு பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாம் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரக்கான்சாவடி பகுதியில் இயங்கும் ரெடிமிக்சு நிறுவனம் வரி ஏய்ப்பு தொடர்பான பல தகவல்கள் கேட்டிருந்தோம். அதற்கு நாகப்பட்டினம் வணிகவரித்துறை அலுவலர் பல மனுக்களை மறுத்து இறுதியாக மறுமடல் ஒன்றை அனுப்பினார். அதில், “தாங்கள் இந்தியக்குடிமகன் என்பதற்கான ஆதாரம் இல்லாததால் மனு நிராகரிகப்படுகிறது” என்ற ஒற்றை வரியில் மறுமொழி கூறியுள்ளார்.
(தொடரும்)
Leave a Reply