(தந்தை பெரியார் சிந்தனைகள் 23 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 24

3. சாதிக்கொள்கை தொடர்ச்சி

(ஊ) சமுதாயத்தில் நலம் ஏற்படவேண்டுமானால் சாதி ஒழிக்கப் பெறவேண்டும். சாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி, சாதிகள் ஒழிக்கப்பெற வேண்டும் என்று சொல்லத் துணிவுள்ள ஆட்சியே தவிர, சாதிகளை ஒழிக்கத் துணிவுள்ள ஆட்சி அல்ல.

தேர்ந்தெடுக்கபெற்ற எந்த அரசும் தன்னிச்சையாகவோ, சட்டம் நிறைவேற்றவோ ஒன்றும் செய்யமுடியாது. மனிதச் சமுதாயத்தில் ஆத்திகர்கள் அதிகம். ஏதாவது துணிவாகச் செய்யத் தொடங்கினால் ஆட்சி கவிழும். எந்தவிதச் சீர்த்திருத்தங்களையும் சங்கங்கள் போன்ற அமைப்புகள் மூலம் பிரச்சாரத்தால்தான் செய்யவேண்டும். ஆத்திகர்கள், நாத்திகர்களின் சங்கங்கள் இவற்றைச் செய்து வருகின்றன. அனைத்தையும், மக்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். காலந்தோறும் இது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

 

 (7) சாதிவேற்றுமையை வளர்ப்பவை: இவைபற்றியும் தந்தை பெரியார் அவர்கள் சிந்தித்துள்ளார்கள். சில சிந்தனைகளை உங்கள் முன்வைக்கிறேன்:

(க) வருணாசிரமதர்மத்தின் மூலமாக நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமுலில் இருந்து வருகின்றதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால் தீண்டாமைக்கொள்கை பரவ மார்க்கமே இல்லை. வருணாசிரமதர்மம் என்கிற உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை.

(ங) இன்றைய சாதி வேற்றுமைக்கு ஆதாரமாயுள்ள சாலை, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவை எல்லாம் ஒருவிதமாக மாற்றப்பட்டு வந்துகொண்டிருந்தாலும், இந்தக் கோயில்கள் தாம் சிறிதும் மாற்றுவதற்கு இடம்தராமல் சாதிவேற்றுமையை நிலைநிறுத்தப் பயன்படுத்தப்பெற்று வருகின்றன. ஆதலால்தான் நான் தீண்டத்தகாத மக்கள் என்போர் கண்டிப்பாய்க் கோயிலுக்குள் போய்த்தீர வேண்டும் என்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ, மோட்சத்திற்காகவோ, பாவமன்னிப்புக்காவோ, அல்லவே அல்ல. கோயில் சமத்துவம் அடைந்துவிட்டால் மற்ற காரியங்களில் வேற்றுமை இருக்க முடியவே முடியாது. கோயிலில் பிரவேசித்து நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் சாதி வேற்றுமையை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை. இன்றைய தினம் எல்லோரும் கோயிலுக்குள் சாதி வேற்றுமையின்றி விடப்பட்டார்கள் என்று ஏற்பட்டுவிட்டால் நாளைய தினமே நான் அங்கு எதற்காகப் போகிறீர்கள்? என்று சொல்லித் தடுக்கவே முயற்சி செய்வேன்.

(ச) எந்த மதமும், கடவுளும், அரசாங்கமும் ஏழைகள் முதுகின்மீது சவாரி செய்கின்றனவேயொழிய முதலாளிமார்களை ஏன் என்றே கேட்பதில்லை. அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உதவிசெய்தே வருகின்றன. கேவலம் தீண்டாமை என்கின்ற ஒருகாரியம் எவ்வளவு அக்கிரமம் என்றும், அயோக்கியத்தனமானதென்றும் ஆதாரமற்றதென்றும் எல்லா மனிதனுடைய அறிவுக்குட்பட்டிருந்தும் இன்று அதை அழிப்பது என்றால் எவ்வளவு கடினமாய் இருக்கிறதென்று யோசித்துப் பாருங்கள்.

(ஞ) இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும் சாதி வேற்றுமை ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100க்கு 100பேரும் கீதை மநுதர்மம், சாத்திரம் ஆகியவற்றை நம்பும், ஆதரிக்கும் சோணகிரிகளேயாவார்கள். இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் அடியற்ற ஓட்டைக்குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களேயாவார்கள். ஆகவே தீண்டாமை ஒழிப்புக்கோ, சாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தை விட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒருநாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ பறைத்தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது உறுதி. ஆகவே மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள்.

கிறித்துவ மதத்திற்குப் போனால் கழுவாய் ஏற்படலாம் என்று நினைப்பது தவறு. 1970-75களில் பெருந்தலைவர் காமராசர் இறந்த ஆண்டு புரசவாக்க கிறித்துவச் சங்கத்தில் மூன்றுநாள் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. கருத்தரங்கப் பொருள் “தந்தை பெரியார் கொள்கை” (Periyarism) என்பது. ‘தாய்’ ஆசிரியர், வார்த்தைச் சித்தர் வலம்புரிசான் என்பவர் கூட அதில் கலந்து கொண்டார். திருப்பதியிலிருந்து அடியேனும் என் மேற்பார்வையில் பிஎச்.டி. பட்டத்திற்கு ஆய்வு செய்து கொண்டிருந்த என். கடிகாசலம் என்ற மாணவரும் கலந்து கொள்ள வந்திருந்தோம். பெங்களூரிலிருந்து வந்திருந்த சமயத்தலைவர் (Bishop) ஒருவர் கிறித்துவமதம் மாறினும் சாதிவேறுபாடு ஒழியவில்லையே என்று மிக்க ஆத்திரத்துடன் பேசினார். நாடார் கிறித்தவர், ஐயர்கிறித்தவர், அரிசனக் கிறித்தவர் என்றெல்லாம் வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் இந்துமதத்தில் திருமால் பத்து அவதாரங்கள் எடுத்து வந்து திருத்தியது போல் தந்தை பெரியார் பத்து முறை கிறித்துவ அவதாரம் எடுத்துவந்து கிறித்தவ சமூகத்தைத் திருத்தவேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.

(ட) மனிதனுக்கு இழிவு சாதியால் தானே வருகிறது? சாதியோ மதத்தினால் உண்டாகிவருகின்றது. மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது. இவற்றுள் ஒன்றைவைத்துக் கொண்டு ஒன்றை அழிக்கமுடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக உள்ளன என்று யோசித்துப் பாருங்கள்- என்கின்றார் தந்தை.

(vi) நம்நாட்டில் எம்.ஏ. படிக்கிறான்; பி.ஏ. படிக்கிறான்; டாக்டராக இருக்கிறான்; வக்கீலாக இருக்கிறான்; சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றான்; முதல் அமைச்சராக இருக்கிறான்; இன்னும் வெங்காயமாக இருக்கின்றானேயொழிய இதில் எவனும் தான் ஏன் இழிமகனாக இருக்கவேண்டுமென்று கருதுவதில்லை என்பதோடு மண்ணையும் (திருமண்) சாம்பலையும் (திருநீறு) நெற்றியில் பூசிக்கொண்டும் கோயிலுக்குப் போய்க் கொண்டும் மேலும் மேலும் தன்னை இழிமகனாக்கிக் கொண்டிருக்கின்றானேயொழிய ஒருவன்கூட தான் ஏன் தாழ்ந்த சாதிக்காரன்? பார்ப்பான் மட்டும் ஏன் உயர்ந்த சாதிக்காரன்? என்று கேட்பதில்லையே!

(ண) மனிதன் மேலும் தெளிவுபெறவேண்டும். ஒருவன் உயர்வு, ஒருவன் தாழ்வு; ஒருவன் காலை ஒருவன் கழுவிக் குடிப்பது என்பது முட்டாள்தனம், அறியாமை. அவனுக்கும் இவனுக்கும் எவனுக்கும் பிறவித் தத்துவத்தில் எவ்வித பேதமும் இல்லை. இருவருக்கும் நெருப்பு சுடத்தான் செய்யும். இருவருக்கும் உப்புகரிக்கத்தான் செய்யும். இருவருக்கும் வேம்பு கசக்கத்ததான் செய்யும். இப்படியிருந்தும், பிறவியின் பெயரால் சாதி வேற்றுமை இருந்துவரக் காரணம் என்ன என்பதை உங்கள் சொந்த புத்தியைக்கொண்டு சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

(த) இந்தச் சாதி இழிவிற்குக் காரணம் கடவுள்தான் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு முன்னறிவிப்பு (Notice) தாருங்கள். “நாங்கள் தாம் உனக்கும் உன்னைக் குளிப்பாட்டி வரும் உன் அருச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம். பாடுபடாத உன்னையும், பாடுபடுகிற எங்களையும் ஏமாற்றுகிற அவனை உயர்சாதியாக்கிவிட்டாய். ஆகவே, ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீயல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டு விடு. இந்த அறிவிப்பு விண்ணப்பத்தை அறிந்து இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்கா விட்டால் உன் கோயிலை இடித்துவிடுவோம்” என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந்திருக்குமானால் அது வாய்திறந்து பேசட்டும். இன்றேல் அதனை உதறித்தள்ளுங்கள்.

இங்ஙனம் தந்தை பெரியாரவர்கள் தம் கருத்தைக் கேட்டோர் மனத்தில் ஆணித்தரமாகப் பதியும்படிப்பேசுவார்கள். அவரிடம் அலங்காரப்பேச்சு இராது. தெளிவான நடையில் தம் சிந்தனைகளை மக்கள் மனத்தில் கொட்டுவார்கள்.

(8) சாதிஒழிப்பு: இது பற்றித் தந்தை பெரியாரவர்கள் ஆழ்ந்து சிந்தித்துள்ளார்கள். அவர்களின் சிந்தனைகள் சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன்.

(ங) ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலானவர்கள் இல்லை என்று சொல்லி வருவதுபோல் தங்களுக்குக் கீழானவர்களும் இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் ஒற்றுமையை நிலைநிறுத்தமுடியும்.

(ஙா) மனிதனை மனிதன் தொடக்கூடாது; பார்க்கக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பது அந்த மதமக்களுக்கு மாத்திரமேயல்லாமல் உலகமக்களுக்கே அவமானமாக காரியமாகும்.

(ஙி) சாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் உள்ளன. சாதிப்பட்டங்கள் (ஐயர், முதலியார், பிள்ளை, ஐயங்கார், செட்டியார், நாயுடு, நாயக்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பெற வேண்டும். புதிதாக மணம்புரிவோர் அத்தனைபேரும் கலப்புமணம் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்பெறல் வேண்டும். ஒரே வகுப்பில் ஒரே சாதிப்பிரிவில் திருமணம் செய்பவர்களுக்குப் பல கடினமான நிபந்தனைகளையும் சட்டத்திட்டங்களையும் விதித்து அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்யவேண்டும். சமயங்களைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, சாதியைக் குறிக்கும் பூணூல் சின்னங்களையும் சட்டபூர்வமாகத் தடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால்தான் சாதிகள் அடியோடு ஒழியும்.

சட்டங்களை இயற்றுவது நடைமுறைக்கு ஒவ்வாது. இன்று கலப்புத்திருமணங்கள் பரவலாக நடைபெறுகின்றன. இது மக்களின் மனமாற்றத்தை ஒருவாறு காட்டி நிற்கின்றது. நெற்றிக்குறி, பூணூல் முதலிய சின்னங்களை அணிதல் கூடாது என்று கூறுவது சரியல்ல. இதனால் யாருக்கும் தீங்கில்லை. இவற்றை எவரும் பொருட்படுத்துவதில்லை.

(ஙீ) தங்களுக்குள் சாதிபேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்னவாக்கும் சித்தர்கள்-ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப் பெறுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிது கூட பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் எப்படிச் சாதி ஒழியும்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

எல்லாம் மெதுவாக மனமாற்றத்தால்தான் முடியும். பிரச்சாரத்தாலும் நூல்களைப் படிப்பதாலும் நடைபெறும்.

(ஙு) தான் உயர்ந்தசாதி, மற்றவன் தாழ்ந்தசாதி என்று பார்ப்பான் மட்டுமல்ல; வேறு எவர் நினைத்தாலும் அவர்கள் பார்ப்பனீய வெறிபிடித்த நாசக்காரர்கள்; கொடுமைக்காரர்கள் என்றே மதித்தல் வேண்டும். அப்பேர்ப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர்களைச் சமுதாய துரோகிகளாகப் பாவித்தல் வேண்டும்.

(ஙூ) உயர்சாதி ஆணவமும் அதைத்தாங்கி நிற்கும் பழக்க வழக்கமென்னும் தூண்களும் என்று சரிந்து விழுந்து தரை மட்டமாகின்றதோ அன்றுதான் நம் நாடும் மக்களும், நம் நாட்டு நாகரிகமும் தழைத்தோங்கமுடியும்.

(ஙெ) சாதிகள் கடவுளால் உண்டாக்கப்பெறாமல் எப்படி உண்டாயிற்று என்று எந்த ஆத்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்லட்டும். கீதை, இராமாயணம், மநுதர்மசாத்திரம், பராசர சுமிருதி, வேதம் ஆகியவற்றை நெருப்பில் பொசுக்கத் துணிவதுதான் சாதி ஒழிப்பு.

(ஙே) ‘சாதி’என்னும் சொல்லே வடமொழி. தமிழில் ‘சாதி’ என்ற சொல் நீர்வாழ் பிராணிகளையே குறிக்கும் (தொல்காப்பியம்). தமிழில் என்ன இனம்? என்ன வகுப்பு? என்று மட்டிலும் சொல்லுவார்கள். பிறக்கும்போது சாதிவேற்றுமையை, அடையாளத்தைக் கொண்டு பிறப்பதில்லை. மனிதரில் சாதி இல்லை. ஒரு நாட்டில் பிறந்த நமக்குள் சாதி சொல்லுதல் குறுப்புத்தனம்; அயோக்கியத்தனம்.

(ஙை) மனிதனக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள இழிவாகும். சமுதாயத்துக்குள்ள இழிவு நாட்டுக்கே இழிவாகும். இந்த இழிவு சாதி முறையினால் ஏற்படுவதேயாகும். இந்தச் சாதி இழிவு நீங்கவில்லையானால் நமக்கு எந்த முன்னேற்றமும் இல்லை; சுதந்திரமும் இல்லை. திராவிடர்கழகம் இதை நீக்கவே பாடுபடுகின்றது.

(ஙொ) உண்மையான எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்த வரையில் கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரசாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடந்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

 

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்