(தந்தை பெரியார் சிந்தனைகள் 39 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 40

பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி

(18) “மனச்சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை ‘நாத்திகன்’ என்று கூறும் அன்பர்கள் நாத்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன். . . அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி தெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணிஅணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சைவார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிப்பைப் பார்க்கவும் கேட்கவும், வெகுதூரத்திலிருந்து மக்கள் வண்டுகள் மொய்ப்பது போல வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாயகங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகம் இல்லை. செய்யவேண்டும் என்று தோன்றியதைப்போல, தமிழ் நாட்டில் வேறு எவரிடமும் காணப்பெறுவதில்லை. தமிழ் நாட்டின் வருங்காலப் பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன்.”

-வ.ரா. 1933-இல் ‘காந்தி’ இதழில் எழுதியது.

(19) “சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணிநேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்திற்குமேல் என்னால் உட்கார்ந்து கேட்கமுடியாது. .. இராமசாமியார் தமது பேச்சை எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவதே இல்லை. அவ்வளவு ஏன்? தமிழ் நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றுமட்டும்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்கமுடியும் என்று தயங்காமல் கூறுவேன்… அவர் உலக அநுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்.

தாம் உபயோகிக்கும் கடும்சொற்கள் எல்லாம் செந்தமிழ்ச் சொற்கள்தாமாவென்று நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய் பயனில்லைகள், ஒருமை பன்மைகள், வேற்றுமையுருபுகள் முதலியவை பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆனால் தாம் சொல்லிவரும் விசயங்களை மக்களின் மனத்தைக் கவரும் முறையில் சொல்லும் வித்தையை அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ சொல்லவேண்டுவதில்லை.

இராமசாமியாரின் பிரசங்கம் பாமரமக்களுக்கே உரியது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். பாமரமக்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ் நாட்டில் வேறெவரையும்விட அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதிலிருந்து அவருடைய பிரசங்கம் படித்தவர்களுக்குச் சுவைக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்பாளர்களேயன்றி.(குறிப்பு 1)  முழுதும் படித்துத் தேர்ந்த பி.ஏ., எம்.ஏ., பட்டதாரிகளும் கூட அவருடைய பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத் திறமை அபாரமானது. “இவர் மட்டும் வக்கீலாக வந்திருந்தால் நாமெல்லாம் ஓடு எடுத்துக்கொள்ள வேண்டியது தான்” என்று ஒரு பிரபல வக்கீல் மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டதுண்டு. . . உபயோகமற்ற வாதங்களும் அவர் வாயில் உயிர்பெற்று விளங்கும். இதற்கு ஓர் உதாரணம்; அந்தக் காலத்தில் நாயக்கர் அவர்கள் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது, சட்டசபைப் பிரவேசிதத்துக்கு விரோதமாகப் பலபிரசங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறியவாதங்களில் ஒன்று சட்டசபைப்பிரவேசத்தினால் வீண் பணச்செலவு நேரும் என்பது.

“ஒரு சில்லாவில் சுமார் 30,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சகராக நிற்பவர் இவர்களுக்கு 30,000 ‘கார்டாவது’ போட வேண்டும். தபால் துறைக்கு இதனால் நல்ல வருவாய். இத்துடன் போதாது. இந்த அபேட்சகர் இறந்து விட்டதாக எதிர் அபேட்சகர் ஒருவதந்தியைக் கிளப்பிவிடுவார். “நான் இறக்கவில்லை உயிருடன்தான் இருக்கிறேன்” என்று மறுபடியும் 30,000 கார்டு போடவேண்டும்”.

நாயக்கரின் இந்த வாதத்தில் அர்த்தமே இல்லை என்று சொல்லவேண்டுவதில்லை. (குறிப்பு 2)  அதுவும் எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால் அப்போது நாயக்கரவர்கள் கூறும்போது நானும் இன்னும் 4,000 மக்களும் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒருமுறை ‘கொல்’ என்று சிரித்து மகிழ்ந்தோம்.”

-கல்கி [1931-இல் ‘ஆனந்தவிகடன்’ இதழில் எழுதப்பட்டது.

(20) “பெருனாட்சா தம் மனத்திற்பட்ட எதையும் பயப்படாமல் சொல்வார்; அறிவுக்கு சரியென்று தோன்றியதை வெளிப்படையாகக் கூறுவார். எவருடைய போற்றுதலையும், தூற்றுதலையும் பொருட்படுத்தாமல் பேசிவிடுவார். இப்படித்தான் பெரியாரும் தமக்குச் சரி என்று தோன்றும் எவ்வித புதுக்கருத்தாக இருந்தாலும் பிறருக்கு எப்படியிருக்கும் என்பதைச் சிறிதும் சிந்திக்காமல் மிகத் துணிவோடு கூறிவிடுவார். இவ்வகையில் இவரைத் ‘தமிழ்நாட்டு பெருனார்சா’ என்று கூறலாம்.

உலகிலேயே ஒரே ஒரு சாக்ரடீசு; ஒரே ஒருபுத்தர்; ஒரே ஒரு மார்ட்டீன்லூதர்; ஒரே ஒரு அப்துல்லா; ஒரே ஒரு கமால் பாட்சா, ஒரே ஒரு பெருனாட்சா, ஒரே ஒரு இராமசாமிப் பெரியார்தான் தோன்றமுடியும்.”

  • தமிழ்ப்பண்டிதர் சாமி-சிதம்பரனார்[1939]

(21) “பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் நாவன்மையும், எழுத்துவன்மையும் அபாரம். அது மட்டுமா? அஞ்சாமையை வெகுதிறமையுடன் ஆளும் திறமை பெற்றவர் பெரியார். எத்தனையோ மகத்தான காரியங்களைச் சாதித்திருக்கிறார்.”

-நகைச்சுவை மன்னர் என்.எசு.கிருட்டிணன் [1947]

இன்னும் பலர் தந்தையவர்களின் பெருமையைப் பேசியுள்ளனர். பிற மாநிலப்புகழ்களும் உண்டு.

அலர் காலத்தில் வாழ்ந்து, அவரோடு பழகி, அவர் கொள்கையைப் பரப்பும் நம்முடன் உள்ள நாரா. நாச்சியப்பன் பாடல்களில் சில:

சாதியால் மதத்தால் பார்ப்பான்
சாதியினால் சேர்ந்த இந்து
நீதியால் மூட பக்தி
நிறைவினால் கேட்டி ருக்கும்
போதிலே தன்மா னத்தைப்
புகட்டுதற் கென்று வந்த
சோதியாய்ப் ஈரோட் டண்ணல்
தோன்றினார் தமிழர் நாட்டில்.

ஆரியத்தின் வைரி யாகி
அதனாலாம் தீமை நீக்கப்

போரியக்கும் வீரன்! எங்கள்
பொன்னாட்டுத் தந்தை! மிக்க
சீரியற்றித் தமிழ கத்தார்
சிறப்புற வேதன் மானப்
பேரியக்கம் கண்டோனே! நல்ல
பெரியார்ஈ ரோட்டுத் தாத்தா! (குறிப்பு 3)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

(தொடரும்)

குறிப்பு 1. இப்படிக் கூறுவது ‘கல்கி’யின் இயல்பான அடக்கம். படித்தவர்கள் இவரை மிஞ்சமுடியாது. அவர்தம் புதினங்கள்கூட நல்ல தமிழில் அமைந்துள்ளன. தாமசு ஆருடியின் புதினங்களை நிகர்த்தவை அவர்தம் புதினங்கள்.

குறிப்பு 2. ஆங்கில அறிஞர் முனைவர் சான்சன் வாதம் புரிவதில் சில சமயம் வாதம் தவறாக முடியும்போது விதண்டாவாதத்தில் இறங்குவார். அவர் வரலாற்றை எழுதும் ஆசிரியர் கூறுவார்: “if his pistol misses fire, he would knock at its butt’s end” இதை ஐயா அவர்களின் விதண்டாவாதத்துடன் ஒப்பிட்டு மகிழலாம்.

குறிப்பு 3.  நாரா. நாச்சியப்பன்-ஈரோட்டுத் தாத்தா – ஆரியத்தின் வைரி 3, 5. பெரியார் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியின் காரணமாக தம்முடைய பதிப்பகத்தையும் ‘அன்னை நாகம்மை பதிப்பகம்’ என்று பெயரிட்டுள்ளார்.