(தந்தை பெரியார் சிந்தனைகள் 36 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 37

7. தமிழ்ப்புலவர்கள்

தமிழ் மொழியைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் ஆராய்ந்து பேசும், எழுதும் தமிழ்ப்புலவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்கட்கு நல்ல மதிப்பு இல்லை; குறைகள் மிகுந்தவர்கள், ஒழுங்கற்றவர்கள், யோக்கியதை இல்லாதவர்கள் என்றே கருதுகின்றார். புலவர்களைப் பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகள்:

(1) நம்நாட்டில் எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை. தமிழ்ப்புலவர்கள் ஆரியப்பண்பாடு, பழக்கவழக்கங்களில் மூழ்கிப் போனவர்களாவார்கள். மேனாட்டுப் புலவர்கள் இப்படியல்லர்; அவர்கள் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வழியில் பாடுபட்டனர்.

(2) இன்று புலவர்களில், அறிஞர்கள் நல்ல ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்களேயானால் கற்பனையான மூடநம்பிக்கையான இலக்கியங்களை மக்களுக்கு எடுத்துகாட்டி இவற்றைப் பற்றிய மக்கள் கருத்தைத் திருத்திக் கொள்ளவும் செய்வதோடு அதே இலக்கியங்களையும் திருத்தியாக வேண்டும். புதிய புதிய இலக்கியங்களை, மக்களுக்கு அறிவூட்ட வல்லவையும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டதுமான இலக்கியங்களைச் செய்யவேண்டும்.

(3) மக்களுக்கு அறிவுவரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காயப் புலவனும் இல்லை. அவன் வேலைக்குப் போனாலும் அங்குப் புராணக் கதை என்று பேசுவானே தவிர மனிதன் அறிவு வருவதற்காகப் பேசமாட்டான். நல்ல புலவன் ஆபாசக்கதைகளுக்கு வியாக்கியானம் எழுதினவனாகவே இருப்பான். நல்ல புலவன் என்றால் இவர்பெரிய புராணத்திற்கு விளக்கம் எழுதியவர், இவர் கம்பராமயாணத்திற்கு நுண்பொருள் கண்டவர் என்ற நிலையில் இருப்பானே தவிர ஒருவனும் அதில் வரும் அசிங்கங்களை நீக்கி அறிவு வரும்படிச் செய்யக் கூடியவனாக இல்லை.

(4) நமது நாட்டில் இன்றைக்கு டாக்டர் பட்டம் பெற்ற புலவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் பழமைக்கு மெருகு பூசுபவர்களாக இருக்கின்றனரேயொழிய, இலக்கியங்களிலுள்ள குற்றம் குறைகளை எடுத்துக்காட்டுபவர்களாகப்(?) பழமைக்கு நுண் பொருள் காண்பவர்களாகத்தான் இருக்கின்றனர். (? பேச்சு நூல் வடிவம் ஆகும் பொழுது ஏதோ விடுபாடு நேர்ந்துள்ளது.)

(5) புலவர்கள் என்றால் அறிவாளிகளாக, புரட்சியாளர்களாக இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் சொல்வார்களே கண்டனம் தெரிவிப்பவர் (புராட்டசுடண்டு) என்பவர்களாக இருக்க வேண்டும்.

(6) நாட்டில் மக்களைத் திருத்தத் தகுதியுள்ளவர்கள் புலவர்களே. தமது புலமையெல்லாம் சோற்றுக்கு ஆக அல்ல; மக்களைத் திருத்த என்று கருதித்தொண்டாற்ற வேண்டும். புலவர்களாலேயேதான் நாடு திருத்தப்பாடு அடைய முடியாமல் போய் விட்டது.

(7) நம் மக்கள் அறிவுத்துறையில் இவ்வளவு காட்டுமிராண்டிகளாக மூடநம்பிக்கைக் களஞ்சியங்களாக ஆகப் புலவர்களும் இவர்களது தமிழின் பெருமையும்தான் காரணம் என்று கூரைமேலிருந்து கூறுவேன்.

(8) புலவர்கள் என்றால் அறிஞர்கள், மேன்மக்கள் என்பது அகராதிப் பொருள். ஆனால் நம் புலவர்கள் எவரிடமும் இவை இரண்டும் காணுவது குதிரைக்கொம்பு. மற்றென்னவென்றால் இவர்கள் புலமையைப் பயன்படுத்தும் தன்மையைக் கொண்டு பார்த்தோமேயானால் பெரும்பாலான புலவர்கள் என்பவர்களைத் தமிழ்க் கொலைஞர்கள் என்று சொல்லத்தக்க வண்ணம் தான் நடந்து கொள்ளுகின்றனர்.

(9) தமிழ்புலவர்கள் தமிழை ஒரு நியூசென்சு ஆக ஆக்கிவிட்டார்கள். அதாவது தமிழினால் மக்களுக்கு வாழ்க்கையில், வளர்ச்சியில் ஒரு பயனும் ஏற்படமுடியாதபடிச் செய்துவிட்டார்கள். சமயத்துறையில் புலமையைக் காட்டும் இலக்கண இலக்கியத்துறையல்லாமல் அறிவுத்துறைக்கோ, வாழ்க்கைத் துறைக்கோ, மனிதச் சமுதாய வளர்ச்சிக்கோ ஒரளவுகூடப் பயன்படமுடியாத மொழியாகத் தமிழை ஆக்கிவிட்டார்கள்.

(10) தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானானே ஒழிய எவனும் பகுத்தறிவுவாதியாகவில்லை. நமக்குத் தெரிய மறைமலையடிகள் தமிழ் படித்துச் சாமியானவர்தானே. இப்போது நடந்தது சாமிசங்கரதாசு நூற்றாண்டுவிழா. நாடகத்துக்குப் பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். இந்த சங்கரதாசு என் வீட்டில் வந்து நாடகத்துக்குப் பாட்டு எழுதிக் கொண்டிருந்தவர். சங்கரம்பிள்ளை என்று பெயர். சங்கரதாசு ஆக இன்று சாமி ஆகிவிட்டார்.

(11) நம் நாட்டை நாசமாக்கியது பார்ப்பான் மட்டும் அல்ல; நமது புலவர்களும் ஆவார்கள். பார்ப்பான் புராணங்களையெல்லாம் வடமொழியில் செய்திருந்தான். அவற்றையும் நாம் படிக்கக்கூடாது, கேட்கக்கூடாது என்று வைத்திருந்தான். அவற்றைப் புலவர்கள் தமிழில் ஆக்கியதால் அவை சந்து பொந்து எல்லாம் பரவி மக்களையெல்லாம் மடையர்களாக்கிவிட்டன.

(12) வள்ளுவன் சொன்னான்; சிலப்பதிகாரத்தில் இருக்கிறது; இராமயணத்தில் கம்பன் சொன்னது இது; பாரதத்தில் கிருட்டிணன் இப்படிச் சொல்லியிருக்கிறான்; அந்தப்புராணத்தில் இப்படி இருக்கிறது; இந்தப்புராணத்தில் அப்படி இருக்கிறது என்றெல்லாம் சொல்லிப் புலவர்கள், மக்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தாமல் தடைசெய்கின்றனர். புலவர்களுக்கு இந்தக் குப்பையைத் தவிர வேறு கிடையாது. அதைக்கொண்டு பிழைக்கத்தான் பார்க்கின்றார்களே தவிர அதனால் நம்மக்கள் அடைந்துள்ள இழிவை மானம்மற்ற தன்மையை எடுத்துக்காட்ட எந்தப்புலவனும் முயல்வதில்லை. (குறிப்பு 1)    

(13) கடுகளவு அறிவுள்ளவன்கூடப் பாரதிதாசன் கவிதையைப் படித்தால் முழுப்பகுத்தறிவு வாதியாகி விடுவான்.

(14) பல புலவர்கள் நம்மைக் காணும்போது நமக்கு ஏற்றாற் போல் பேசுவதும், அடுத்து மக்களிடையே போய் கந்தபுராணத்திலிருக்கிற நுண்பொருள், பக்திரசம் என்று மடமையை, மூடநம்பிக்கையைப் புகுத்துவதுமாக இருக்கிறார்கள். நம்மக்களுக்கு அறிவு வளர வேண்டும். அதற்காக நாம் நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று நம் புலவர்கள் கருதவேண்டும்.

(15) நம்பண்டிதர் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய அவர்களது அறிவுக்குறைவன்று. தவறிக்கீழே விழுந்த பிள்ளைக்கு அரிவாள்மனை எதிரில் இருந்தால், எப்படி அதிகக் காயம் ஏற்படுமோ, அதுபோல புராண இதிகாசக் கதைச்சேற்றில் விழுந்த நமது பண்டிதர்களுக்கு, இயற்கைவாசனை அறிவால் ஏற்படக்கூடிய பகுத்தறிவையும் பாழ்படுத்தித் தக்க வண்ணம் மூடநம்பிக்கைச் சமயங்கள் என்னும் நச்சரவங்கள் அவர்களைக் கரையேறாதபடிச் சுற்றிக்கொண்டுள்ளன.

(16) வள்ளுவர் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினார் என்பதல்லாமல் அதில் பகுத்தறிவைப் பயன்படுத்தினார் என்று சொல்வதற்கில்லை. அதில் மூடநம்பிக்கை, பெண் அடிமை, ஆரியம் ஆகியவை நல்ல வண்ணம் புகுத்தப்பெற்றுள்ளன.

குறிப்பு: பெரியார் சொல்கிறார் என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அவர் கூறியவை எவற்றையும் மறுத்துச் சொல்ல முடியாது. அவற்றை சிந்திக்கலாம். இயன்றவரைப் பின்பற்றலாம் என்றாலும் என் மனத்தில் எழுந்தவற்றையும் உங்கள்முன் வைக்கிறேன்.

(1) பாடத்திட்டத்தில் சமயஇலக்கியங்கள், புராணங்கள், சாத்திரநூல்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. அந்நூல்களைக் கற்பிக்கும்போது புலவர்கள் தத்தம் அறிவுநிலைகேற்ப திறனாய்வு முறையில் ஏதோ சில கருத்துகளைக் கூறலாமேயன்றி பகுத்தறிவு நோக்கில் பிரச்சாரமுறையில் வகுப்பறையைப் பயன்படுத்தலாகாது. பல்கலைக்கழகவிதிகள் ஆசிரியர்க்குரிய விதிகள் இவற்றிற்குட்பட்டே தம் கடமையைச் செய்யவேண்டும்.

(2) கடவுள், சமயநம்பிக்கையுள்ளவர்களால் எழுதப்பெற்ற நூல்கள் பாடநூல்களாக உள்ளன. அவற்றைப் பயிற்றும்போது அவற்றிலுள்ள கருத்துகளை விளக்கலாம்; புதிய பார்வையில் சிந்திக்க மாணாக்கர்களைத் தூண்டலாம்.

(3) ஐயா அவர்கள் நினைக்கிறபடி அனைத்தையும் விஞ்ஞானத்திற்குக்கீழ் கொண்டு வரமுடியாது. விஞ்ஞானக் கருத்துகள் கொண்ட நூல்கள் (குறிப்பு 2) பாடநூல்களாக அமைந்தால் (குறிப்பு 3)  அவற்றை அவர்கள் விருப்பத்துடன் நோக்குவதில்லை.

(4) நானும் நான்கைந்து தலைமுறைகளாக ஆசிரியர்களுடன் நெருங்கிப்பழகுபவன். பெரும்பாலோருக்குக் கற்கும் விருப்பமே இருப்பதில்லை. புத்தம்புதிய நூல்களைப் படைக்கவேண்டும் என்ற ‘உந்தும் ஆற்றல்’ அவர்களிடம் நான் காண்பதில்லை. அவர்கள் பணியாற்றும் முறையும் அறிஞர் மனத்திற்கு உகந்ததாக இல்லை.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

 

குறிப்பு 1. திருவிளையாடற்புராணத்தில் தாயைப் புணர்ந்தவன், குருபத்தினியைப் புணர்ந்தவன் இவர்கட்கு மோட்சம் சொல்லப்பெற்றுள்ளது. பெரியபுராணத்தில் சிவபெருமான் அடியார் வேடங்கொண்டு பிள்ளைக்கறி கேட்டது, அவரது மனைவியைக் கேட்டது போன்ற நிகழ்ச்சிகள் வருகின்றன. பகுத்தறிவு உள்ளவனுக்கு அருவருக்கத்தக்க இவை கோபத்தைக் கிளப்புகிறது. கற்பனை செய்தாலும் இவ்வளவு கீழான நிலைக்குப் போகவேண்டுமா? பெரியார் சொல்லுகிறார் என்றால் ஏன் சொல்லமாட்டார்? அவரைத்தவிர எவர் இவற்றை எடுத்துக் காட்டினார்; அதனால் தானே ‘பெரியார்’ ஆகிவிட்டார்!

குறிப்பு 2. எ-டு: என் நூல்கள் அறிவியல் விருந்து, அறிவியல் தமிழ்.

குறிப்பு 3.  தேர்வுக்குழுவே அவற்றை எடுப்பதில்லை. தப்பித் தவறி பாடநூல்களாக அமைந்துவிட்டால் ஆசிரியர் தம் ஒவ்வாமைப் பண்பால் அவற்றைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. தாம் அக்கருத்துகளை அறிந்து கொள்ளலாம் என்ற அவாவும் அவர்கள்பால் எழுவதில்லை. இது மிகவும் வருந்தத்தக்க நிலை.