தந்தை பெரியார் சிந்தனைகள்- 2. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 1 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் – 2
(2) நான் நெருக்கமாகப் பழகினவரையில் என் அறிமுகம் இது: கல்லூரியில் படித்த காலத்தில் (1934-39) அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன்[குறிப்பு 2]; குடியரசு, விடுதலை இதழ்களில் வந்த அவருடைய கட்டுரைகளைப் படித்து அநுபவித்தேன்; நேரில் பேசினது இல்லை. துறையூரில் என் முயற்சியால் தொடங்கப்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் முதல் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் அவரிடம் நெருங்கிப் பழகினேன்[குறிப்பு 3]. தேவாங்கர் தெருமக்கள் எல்லாம் சுயமரியாதைச் கட்சியினர்; அவர்களில் முக்கியமானவர் அரங்கசாமி(செட்டியார்); அவர் வீட்டில்தான் ஐயா அவர்கள் தங்குவதுண்டு. ஆண்டிற்கு ஆறு, ஏழு முறை ஐயா அவர்கள் கட்சி வேலையாகவும், திருமணம் முதலியவை நடத்தவும் வருவதுண்டு. பள்ளி தொடர்பாகவும், சொந்த வேலையாகவும், பல்வேறு உதவிகளையும் ஆலோசனைகளையும் ஐயா அவர்களிடம் பெற்றதுண்டு. அவை காரணமாக நெருங்கிய பழக்கம்.
(க) ஏழை மாணாக்கர்கட்கு உதவும் வகையில்: என் வாழ்வில் இதனை முக்கிய நோக்கமாகக் கொண்டவன். இதைப்பற்றிப் பெரியார்:
(அ) ‘நீங்கள் உண்மையைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கின்றீர்கள். நெற்றியில் விபூதி குங்குமத்துடன் திகழ்கின்றீர்கள்! இந்தச் சைவக்குறிகளுடன் நல்லாடை அங்கவத்திரம் போட்டுக் கொண்டு திருவரங்கம் உயர்நிலைப் பள்ளி- ஈ.இரா. உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லுங்கள். அந்தந்த தலைமையாசிரியர்களிடம் ‘நான் புதியன்; இளைஞன். ஏழைமாணாக்கர்கட்கு எவ்வெவ்வகையில் எல்லாம் உதவலாம்’ என்று கூறி வேண்டுங்கள். அவர்கள் பார்ப்பன மாணாக்கர்களை மனத்தில் வைத்துக்கொண்டு உதவுவதைக் கூறுவார்கள். நீங்கள் அம் முறையை நம் மாணாக்கர்கட்கு உதவுவதற்குப் பயன்படுத்துங்கள்’ என்று கூறினார் இதில் நல்ல பயன்கிடைத்தது.
(ஆ) பிற்போக்கு இனத்தைச் சேர்ந்த மாணக்கர்களின் பெற்றோர் குறைந்த வருவாயைக் காட்டி வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்றுத் தம் பிள்ளைகட்கு அரைக்கட்டணச் சலுகைக்குக் கோரியிருந்தனர். அவர்கள் இரண்டாயிரத்திற்கு மேல் வருமான வரியும் ஐயாயிரத்திற்கு மேல் விற்பனை வரியும் கட்டுகின்றனர் என்பதை அறிவேன். இதனைப் பெரியாரிடம் தெரிவித்தபோது ‘இதில் தலைவிட்டு பொதுமக்கள் பகையைச் சம்பாதிக்க வேண்டா; சான்றிதழ்கள் இருந்தால் சலுகையை வழங்கிவிடுங்கள்’ என்று அறிவுரை கூறி திசைதிருப்பி உதவினார்.
(இ) மேல் வகுப்பு தொடங்குவதற்கு இசைவு பெறுவதற்காக கோவை சென்று மண்டலப் பள்ளித்தணிக்கையாளரைச் சந்தித்துத் திரும்பும்போது ஈரோட்டில் இறங்கி பெரியாரைச் சந்தித்து அவர் பேணுகையில் இருந்து வரும் ஈரோடு மகாசனப் பள்ளியின் நிருவாகக் குழு அமைப்பது பற்றிய விதிகளின் படி வாங்கச் சென்றேன். பெரியார் ஊரில் இல்லை. பள்ளித் தலைமையாசிரியர் பெருமாள் முதலியார். அவரைக் கேட்ட போது அவர் பள்ளிக்காரியப் பொறுப்பாளர் அலுவலகத்துக்கு ஆளை அனுப்பி படி வாங்கி வருமாறு பணிக்க அலுவலகப் பொறுப்பிலிருந்த ஒரு பார்ப்பனச் சிறுவன் காரியப் பொறுப்பாளர் இசைவின்றித் தரமுடியாது என்று மறுத்து விட்டார். துறையூருக்குத் திரும்பியதும் பெரியாரின் ஈரோட்டு முகவரிக்குக் கடிதம் எழுதினேன். ஒருவாரத்தில் விதிகளின் நகலைப் பதிவு அஞ்சலில் அனுப்பி வைத்து உதவினார். இங்ஙனம் எத்தனையோ முறைகளில் தந்தை பெரியாரின் உதவிகள் பெற்றுப் பள்ளி வளர்ச்சியில் பயன்பெற்றேன்.
(கா) மூன்று சுவையான நிகழ்ச்சிகள்: தந்தை பெரியாரை நினைக்கும் போது மூன்று சுவையான நிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றன.
(அ) ஒரு சமயம் பெரியார் வாழ்வில் நிகழ்ந்த ‘மிதியடி வரலாறு‘ பற்றிக் கேட்டேன். ஒரு சமயம் அவர் திறந்த மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தபொழுது அவர்மீது அவருக்குப் பிடிக்காத ஒருவன் ஒரு மிதியடியை வீசினான். அஃது அவர் மடியின்மீது விழுந்தது. அவர் அதை எடுத்து நோக்கியபோது அது புதியதாக இருந்தது. வண்டியோட்டியிடம் ‘வண்டியைத் திருப்பு; மற்றொன்று சாலையில் கிடக்கும்; அதை எடுத்து வரலாம்! அது ஒருவருக்கும் பயன்படாது; இது நமக்கும் பயன்படாது. இரண்டும் நம் கைக்குக் கிட்டினால் நமது அலுவலகத்தில் யாராவது பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறி சாலையில் கிடந்த மிதியடியை எடுத்து வந்தார்.
தந்தை பெரியாரைப் பார்த்து ‘செருப்பு உங்கள்மீதுப் பட்டும் கோபம் வரவில்லையே ஏன்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘தம்பி, பொதுத்தொண்டில் இருப்பவர்கட்கு இது போன்றவை அடிக்கடி நிகழக்கூடியவை. படித்தவனாக இருந்தால் கூட்டத்தில் மறுத்துப் பேசுவான்; அல்லது செய்தித்தாளில் மறுப்பு தெரிவிப்பான். இவன் படிக்காத முட்டாள். இவன் தன் எதிர்ப்பைச் செருப்புமூலம் காட்டினான். இதில் கோபப் படுவதற்கு என்ன இருக்கின்றது?’ என்று அமைதியாகக் கூறினார் ‘பெரியார், பெரியாரே’ என்பது என் அறியா மதிக்குத் தெளிவாயிற்று.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல்
‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம்
[குறிப்பு 2. 1934-39 ஆண்டுகளில், அப்போது அவர்தாடி இல்லாதவராக இருந்ததாக நினைவு- அப்போது என் வயது 18; அவருக்கு வயது 55.
3. ↑ 1944 முதல். அப்போது என் வயது 28; அவர் வயது 65. தாடியுடன் இருந்ததாக நினைவு.]
Leave a Reply