(தந்தை பெரியார் சிந்தனைகள் 7 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 8

திருவாழி: சக்கரபாணி என்பது திருமாலின் மற்றொரு பெயர். அண்டங்களின் நடைமுறையை விளக்குவது சக்கரம். கோள் எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. வட்டமிடுவது அவற்றின் இயல்பு. நட்சத்திரங்கள் பல நேரே ஓடிக் கொண்டுள்ளனபோலத் தென்படுகின்றன. பெருவேகத்துடன் பல்லாண்டு பல்லாண்டுகளாகப் பறந்தோடி ஒரு வட்டத்தை நிறைவேற்றுகின்றன. ஒன்றுக்கு அப்பால் ஒன்று அனந்தம் சக்கரங்கள் ஓயாது சுழல்கின்றன. அவையாவும் திருமாலின் திருச்சக்கரத்தில் தாங்கப்பெற்றுள்ளன. அண்டங்கள் யாவையும் உண்டு பண்ணுதலும், நிலைபெறச் செய்தலும், பின்பு அவற்றை நீக்குதலும் நாராயணனின் ‘அலகிலா விளையாட்டுச்’ செயல்கள்; நிரந்தரமான செயல்கள். சக்கரம் சுழல்வது போன்று இச்செயல்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. முடிவில்லாத விளையாட்டாக முகுந்தன் முத்தொழில்களையும் முறையாகச் செய்துவருகின்றான். இதனைத் திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் அபயங்கார்,

ஞாலத் திகிரி முதுநீர்த்திகிரி
⁠நடாத்தும் அந்தக்
காலத் திகிரிமுதலான யாவும்
⁠கடல்க டைந்த
நீலத் திகிரியனையார் அரங்கர்
⁠நிறைந்த செங்கைக்
கோலத் திகிரி தலைநாளதனின்
⁠கொண்ட கோலங்கள். 1

என்று பாசுரமிட்டு அற்புதமாக விளக்குவர்.

அறவாழி அந்தணன்: சக்கரத்தின் செயல்களால் ஆரா அமுதன் ஆழியங்கை அம்மான் ஆகின்றான். தருமசக்கரம் அல்லது அறவாழி அவன் திருக்கரத்தில் திகழ்கின்றது. ஏனென்றால் அவன் அறத்தைப் பாதுகாப்பவன் அல்லவா? இயற்கையின் நடைமுறையிலுள்ள ஒழுங்குப்பாடு அறமெனப் படுகின்றது. உயிர்வகைகள் செய்யும் செயலில் முன்னேற்றத்துக்கு ஏதுவானவை தருமம் எனப்படுகின்றன. அவை ஏற்கெனவே அடைந்துள்ள நிலைகளினின்று கீழே இழுத்து செல்லும் செயல்களாதலால் அதருமம் எனப்படுகின்றன. தருமத்தின் முடிந்த பயன் இன்பம். அதருமத்தின் முடிந்த பயன் துன்பம். ஆழியங்கைக் கருமேனியன் உயிர்களைக் காக்கும் கடவுள். அறவாழியைக் கொண்டு அவன் அனைத்தையும் காத்து வருகின்றான். அறம் செய்கின்றவர்களை ஆழிகாப்பாற்றுகின்றது. கேடு செய்கின்றவர்களை அது துன்புறுத்துகின்றது. சக்கரத்துக்கு மறைந்திருந்து யாரும் எச்செயலும் செய்யமுடியாது. எங்கும் வியாபகமாய் எல்லா உயிர்களிடத்தும் மனச்சாட்சி என்னும் பெயரெடுத்து, அஃது ஊடுருவிப் பாய்ந்திருந்து ஆணை செலுத்துகின்றது. திருமாலின் அறவாழிக்கு உட்பட்டு நடடப்பவர் நலம் அனைத்தையும் அடைவர்.

அதே ஆழியைக் காலச்சக்கரம் என்றும் பகரலாம். ஆதியந்தம் இல்லாத காலமாக அது சுழல்கின்றது. சென்றது, நிகழ்வது, வருவது எல்லாம் ஒருவட்டமாய் வருகின்றது. அதற்கு இருப்பிடம் திருமாலின் திருக்கரம். திருமாலே காலச் சொரூபம். காலம் முழுவதையும் நாம் அறிய முடியாது. அக்காரணத்தை முன்னிட்டே அவன் கருமேனியனாக நமக்குத் தென்படு கின்றான். காலம் என்னும் ஆழியை நன்கு பயன்படுத்துவது திருமாலின் ஆராதனையாகும்.

இங்ஙனம் வழிவழியாக வரும் கடவுளைப் பற்றிய கருத்துகள் காலந்தோறும் வளர்ந்து வருபவை. இந்த வளர்சிக்கு ஒரு சமூகத்தார் பொறுப்பாளர்கள் அல்லர்; குறிப்பாகப் பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் அல்ல. இது வழிவழியாக வளர்ந்து வரும் வழிவழி உடைமை (Heritage); அதாவது மரபுரிமை.

உருவழிபாட்டுக்கு எதிர்ப்பு: தந்தை பெரியாருக்கு முன்னரே சித்தர்கள் உருவ வழிபாட்டைக் கடிந்தனர்; உருவத்தில் கடவுள் இல்லை என்று சாதித்தனர். சிவவாக்கியரின் புரட்சிகரமான பாடல் ஒன்று உள்ளது. அஃது இது:

நட்ட கல்லை சுற்றி வந்து
⁠நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொ ணென்று
⁠சொல்லும் மந்தரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
⁠உள்ளி ருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம்
⁠கறிச்சுவை அறியுமோ!

நெற்றி நிறைய திருநீறு அணிந்து மணிக்கணக்காக இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு வீடுவீடாக அமுதுபடி யாசித்து வரும் பண்டாரங்களைக் காணாத ஊரோ நகரமோ தமிழ்நாட்டில் இல்லை. இன்னொரு பாடல்:

இருப்பு நெஞ்ச வஞ்சகத்
⁠திசைந்து நின்ற ஈசனைப்
பொருப்பி னும்பு னலினும்
⁠புரண்டு தேடும் மூடர்காள்!
கருப்பு குந்த காலமே
⁠கலந்து நின்ற அண்ணலார்
குருப்பி ரானோ டன்றி
⁠மற்றுக் கூடலாவதில்லையே.

இதுவும் உருவ வழிபாட்டைக் கடிவதாகும்.

இதற்கு முன்னதாகவே நாவுக்கரசர்,

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
⁠மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லான்
ஒப்புடையவன் அல்லன்; ஒருவன் அல்லன்;
⁠ஓர்ஊரன் அல்லன்; ஓர்உவான் இல்லி;
அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்
⁠அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
⁠இவன் இறைவன் என்றெழுதிக் காட்டோ ணாதே(6.97:10)

என்று இறைவனை வடிவத்தில் வடித்துக் காட்டமுடியாது என்று சொல்லிப் போனதையும் நினைக்கலாம்.

மேல்நாட்டிலும் கடவுள் மறுப்புக் கொள்கை இல்லாமல் இல்லை. இங்கர்சால் என்பாரைக் கேள்விப்படாதவர் இல்லை. இவர் இறைமறுப்புக் கொள்கையினரின் முன்னோடி. என் கல்லூரி வாழ்வின்போது இவர் நூலைப் படித்து நுகர்ந்ததுண்டு.

தந்தை பெரியாரும் ஒரு சாக்கிரடீசைப் போலவும் வைர நெஞ்சுப்படைத்த வால்டேர் போலவும், ‘எரிமலையாய், சுடுதழலாய், இயற்கைக் கூத்தாய், எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடியொலியாய்’ இயங்கி இறைமறப்புக் கொள்கையைப் பல்வேறு கோணங்களில் பேசியும் எழுதியும் வந்தார். அவற்றை உங்கள் முன் வைக்கின்றேன். அதற்கு முன் தந்தை பெரியார் அவர்களுக்கே உரிய தன்னடக்கத்துடன் ஒரு முறை ‘நான் பேச்சாளனும் அல்லன்; எழுத்தாளனும் அல்லன்; கருத்தாளன்’ என்று குறிப்பிட்டதை நினைவு கூர்கின்றேன்.

கடவுளைப்பற்றிப் பேசத் தொடங்குமுன் அதுபற்றிய குழப்பத்தைக் காட்டுகின்றார். கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதன் கடவுள் நம்பிக்கையாளர்களில் ஒருவருமே இல்லை. ஒரு பொருள் இருந்தால்தானே அஃது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும்? அஃது இல்லாததனாலேயேதான் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒரு விதமாய்க் கடவுளைப் பற்றி உளறிக் கொட்டவேண்டியுள்ளது.

அதற்குப் பெயரும் பலப்பல சொல்ல வேண்டியுள்ளது; அதன் எண்ணிக்கையும் பலப்பல கூற வேண்டியுள்ளது; அதன் குணமும் பலப்பலவாக மொழிய வேண்டியுள்ளது; அதன் உருவமும் பலப்பலவாக உளற வேண்டியுள்ளது; அதன் செயல்களும் பலப்பல சொல்ல வேண்டியுள்ளது. இந்த இலட்சணத்தில் கடவுளைப் பற்றிப்பேசும் அறிவாளிகள் பெயரில்லாதான்- உருவமில்லாதான்- குணம் இல்லதான்- என்பதாக உண்மையிலேயே இல்லாதானை- இல்லான்- இல்லான் என்றே அடுக்கிக் கொண்டே சென்று உளறலை உச்சக்கட்டத்துக்கு ஏற்றிவிடுகின்றார்கள். இதனைப் பெரியார் பேச்சிலும் எழுத்திலும் கண்டவற்றை உங்கள் முன் வைக்கின்றேன். பலதலைப்புகளில் பாகுபாடு செய்து சமர்ப்பிக்கின்றேன்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 26.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்), தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்புகள்

1. திருவரங்கத்துமாலை-84