(தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2. தொடர்ச்சி)

இந்நல்லிசைப்புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரமீன் என்பவரும் “வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் உரைநடையை உயிர்வுபடுத்துகின்றன வென்று பிழையாக கதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட்குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டு பண்ணுகின்றன; ஆதலால், அவற்றுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ஆங்கிலச் சொற்களையே ஒவ்வொரு பக்கத்திலும் வைத்து எழுதுவது எளிதெனக் கண்டிருக்கின்றேன். பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் யான் எழுதியதை விட இப்போது யான் தெளிவான தூய ஆங்கில நடை எழுதக்கூடுமென யான் கண்டுகொண்டமை எனக்கு எவ்வாற்றானும் வெட்கமாயில்லை; நடையெழுதப் பழகும் இளைஞரைத் தேற்றல் வேண்டி இவ் வுண்மையைச் சொல்வது நல்லதென எண்ணுகின்றேன். நடையெழுதக் துவங்குவோர் தாம் உயர்நடை யெழுதுவதாக எண்ணிக்கொண்டு எழுதுவதில் மயக்கம் உடையராகின்றார்கள். உண்மையான ஆற்றலுக்கும், எல்லாவற்றையும் விட உண்மையான தெளிவுக்கும், நம் மூதாதைகள் வழங்கிய பழைய ஆங்கில மொழியை ஒப்பது பிறிதில்லை என்னும் உண்மை முற்றும் உணரப்படுதற்கு பல ஆண்டுகளின் பழக்கம் இன்றியமையாதது வேண்டப்படும்“.

(Quoted in Meikle John’s The Art of Writing Enlighs, ப, 128), என்ற ஆங்கிலமொழியைத் தூயதாய் வழங்குதலின் மேன்மையை வற்புறுத்தி பேசியிருக்கின்றார்.

ஆங்கிலமக்களுக்கு நாகரிகமுந் தம்மைப் பாதுகாத்துக கொள்ளத்தக்க நிலையும் வாயாதிருந்த பழையநாளில், ஐரோப்பாவின் வடமேற்கு மூலையிற் றோன்றிய சுடர், ஆங்கிலர், சாகிசர் முதற் பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் பிரித்தானிய தீவின்கண் வந்து புகுந்து, அங்கு இருந்த பிரித்தானியரைப் போரில் வென்று அவர்தம்மை தத்தம் ஆளுகைக்குள் அடக்கி அரசுபுரிந்து வந்தனர். அவர்கட்கு பின்னரும் பல்வகை மக்களும் அடுத்தடுத்து படையெடுத்து வந்து ஆங்கிலரைத் தங்கள் கீழ் வைத்து ஆண்டு அவரொடு கலந்தமையாலேதான், கெல்டிக், காந்திநேவியம், இலத்தீன், நார்மன், பிரஞ்சு, கிரேக்கு முதலான பற்பல மொழிச்சொற்களும் ஆங்கிலத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கலந்து அதனைப் பெருக்கச் செய்தன. முதன்முதற் சூடர் வந்தகாலத்து, அதன்கண் இரண்டாயிரஞ் சொற்களுக்குமேல் இல்லையென்று அம்மொழிவல்ல இலக்கண ஆசிரியர்கள் வரைந்திருக்கின்றனர். இங்ஙனம் முதலில் மிகக் குறைந்தநிலையி லிருந்து பின்னர்க் காலந்தோறும் பலமொழிக் கலப்பினாற் பெருகிய ஆங்கிலமொழி, அப் பிறமொழிச் சொற்களின் உதவியின்றி முற்றும் நடைபெறுதல் இயலாதென்பதனை ஆங்கிலம் நன்கு உணர்ந்தார் எவரும் விளக்கமாய் அறிந்திருப்பவும், ஒருவர் அவ்வுண்மையை மறைத்து, அது தனித்து இயங்கமாட்டாதது என்று எனவுந் தனித்து இயங்கவல்ல அதனை அவ்வாறு இயக்குதல் பயன்றராது எனக் கண்டே அதனைப் பல மொழிச் சொற்களோடுங் கலப்பித்து வழங்குகின்றார் எனவுங் கூறியது பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க.

இனி, முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்றமட்டுந் தூய்தாய் வழங்குதலிற் கண்ணுங்கருத்தும் வைக்கவேணடுமென்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்து வருகவராயிற், பண்டைக்காலந்தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த், தாம் ஒருவர்கீழ் அடங்கி வழாது, பிறமொழி பேசுவாரையுந் தங்கீழ் அடக்கைவைத்துத், தமது செந்தமிழ்மொழியையே நீண்டகாலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்துவந்த தமிழ்மக்களின் கால் வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணும் கருத்தும் வைக்க வேண்டும்! அதற்காக நாட் எவ்வளவு எடுக்க வேண்டும்! அங்ஙனமிருக்க அதனைக் குறைபாடுடைய ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு, அதன் தூய்மையைக் கெடுத்து வடமொழி முதலான மற்றை மொழிச்சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தல் அதற்கு ஓர் ஆக்கமேயாம் என்று கூறுவார் உரை இப்போது அவர் அடைந்திருக்கும் அடிமைத்தனத்தைக் காட்டுகின்ற தன்றோ?

பண்டைநாளில் ஆரியப் பார்ப்பனருந் தமிழர்க்கு அடங்கியிருந்து தமிழைவளர்த்தனர்; இப்போது அப்பார்ப்பனர் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழர்க்கு மேம்பட்டார்போற் றம்மைத்தாமே உயர்த்துக்கொண்டு, தமிழரைக் தங்கீழ் அடக்கி அடிமைகளாக்குதற் பொருட்டு மிகமுயன்றும் அதுமுற்றுங் கை கூடாமையின்  தமிழர்க்குரிய தமிழையாவது ஆரியம் முதலான பிறமொழிச் சொற்கள் சேர்த்துக் கெடுத்து வைத்தால் தங்கருத்து நிரம்புமென்றுன்னி அதனைப் பெரிதும் மாசுபடுத்தி வருகின்றார். அப்பார்ப்பனர் வலையில் சிக்கிய தமிழ்ப்புலவர் சிலரும் அச்சூழ்ச்சியை பகுத்துணர்ந்து பாராது ‘குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பு‘ போல், அவ்வாரிய பார்ப்பனரினும் பார்க்கத் தாமே தம் தனித்தமிழ் மொழியைச் சிதைத்தொழிக்க மடிகட்டி நிற்கின்றனர்! ஐயகோ! பண்டுதொட்ங்கி புனிதமாய் ஓங்கிநிற்கும் நம் தனித்தமிழ்த் தாயைப், பிறமொழிச்சொற்களென்னுங் கோடாரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப்புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத்தீவினைச் செயலைப்புரியும் இவர்தம்மைத் தடுத்து, எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன்நிற்கும் எம்போல்வராது நல்வினைச்செயல் ஒருகாலுங் கலிகாலக் கொடுமையாகாதென்று உணர்மின் நடுநிலையுடையீர்!

தமிழ்க்கடல் மறைமலையடிகள்

தனித்தமிழ் மாட்சி