தனித்தமிழ் மாட்சி

1

பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் நடைபெறும் மொழி தமிழ் ஒன்றே ஆகும். பண்படுத்தப்பட்ட பழைய மொழிகளில் தன்னைத் தவிர மற்றையவெல்லாம் இறந்து போகவுந், தான்மட்டும் இறவாமல் நடைபெற்றுப், பன்னூறாயிரம் மக்களுக்குப் பெரிது பயன்பட்டு வரும் பெருஞ்சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியைக் கல்லாதவர் எல்லாந் தூயதாய் வழங்கியவர், அதனைக் கற்று அதனாற் பேரும் புகழும் பொருளும் அடைந்துவருஞ் சிற்சிலர் மட்டுந் தமக்கு எல்லா நலங்களையுந் தந்து தாயினுந் தம்மைப் பாதுகாத்துவரும் அதனை நிலைகுலைத்து அழித்தற்குக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இவர்களின் இக்கொடுஞ் செயல் தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுங் கொடுஞ்செயலினுங் கொடியதாக இருக்கின்றது.

இன்னுந் தமிழிற் பிறமொழிச் சொற்களை ஏற்றி அதனை மாசுபடுத்தி யழிப்பதுதான் அதனை வளர்ப்பதாகும் என்று எழுதுவோர், தூய தனித்தமிழ் எழுதுவாரைக் ‘குறுகிய மனநிலை’ ‘அறியாமை’, ‘பேதமை’ யுடையரென இகழ்ந்து பேசிவிடுகின்றனர். கொள்கையளவில் ஒருவரோடு ஒருவர் மற்ற்றொருவர் மாறுபட்டிருப்பது பற்றி, அவர் மற்றவரைக் ‘குறுகிய மனநிலையுடையவர்’ எனவும், ‘அறியாமை’, ‘பேதமை’ மிக்கவர் எனவும் இகழ்ந்து பேசுதல் அறிவுடையோர்க்கு முறையாகாது என்பதை மட்டும் வற்புறுத்துகின்றோம். தாங்கொண்ட கொள்கையே உண்மையானது என்று ஒவ்வொருவருந் துணிந்துரைத்தல் ஆகாது. மக்கள் எல்லாருஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையர். ஒருவர் ஒருகாலத்து அறிவெனக் கொண்டது பிறிதொரு காலத்து அறியாமையாக மாறுதலும் உடைத்து. இதனைத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் “அறிதோ றறியாமை கண்டற்றால்” என நன்கு தெருட்டியிருக்கின்றனர். இத்தகைய நிலையில் உள்ள மக்கள் ஒருவரை யொருவர் “அறியாமையுடையர்” என்று இகழ்ந்து பேசுவதினுந் தகாத்து யாது உளது! தாந்தாம் உண்மை யெனக் கண்டவற்றைத் தக்க சான்றுகள் கொண்டு விளக்கிப்போதலே அறிவுடையார்க்குக் கடனாவதாம்; தமக்கு மாறான கொள்கை யுடையாரை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்குச் சிறிதும் முறையன்றாம். அது நிற்க.

இனி, நமது செந்தமிழ்மொழியில் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமல. நம்மாற் கூடியவரையில் முயன்று அதனைத் தூயதாக வழங்கல் வேண்டும். ஆனால். ஒருசாரர், உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் மாறுந் தன்மையவாகலின், அவற்றுள் ஒன்றாகிய மொழியும் மாறுதல் அடைதல் இயற்கையேயாம் என்றும், அதனால் நன்றேயாமென்றும் வரைந்திருக்கின்றனர். இனி ‘மாறுதல’ என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின் இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம்.

முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுருவு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப் பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன; இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின் நிலை குறைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன; இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன. மக்கள் தமக்கேற்ற உணவுகளை உட்கொண்டும். இசைவான இடங்களிற் குடியிருந்தும், வரவரத் தம்முடம்பும் உணர்வும் மாறிமாறி வளர்ந்து வருகின்றனர் மக்கள் அல்லாத மற்றை உயிர்களில் நிலையியற் பொருள்களாகிய புல் மரஞ் செடி கொடி முதலியனவும், இயங்கியற் பொருள்களிற் புழு முதல் யாடு மாடு முதலான எல்லா வுயிர்களுந் தத்தமக்கேற்ற உணவுப் கொருள்களை உட்கொண்டு த்த்தமக்கு இசைவான இடங்களிலிருந்து நாடோறும் மாறுதல எய்தி வளர்ந்து வருகின்றன. இம் மூவகைப் பட்ட மாறுதல்களில் எத்தகைய மாறுதலை எல்லா உயிர்களும் விரும்புகின்றன வென்று உற்றுநோக்கின், தம் இயல்புக்கு ஒத்தவற்றின் சேர்க்கையால் தமது தன்மைகெடாமல் வரவரப் பெருக்கமுற்று மாறிமாறி வளர்ந்து வருதலையே அவையெல்லாம் அல்லும் பகலும் விழைந்து வருகின்றனவென்பது எல்லார்க்கும் புலனாம், தமக்கு ஏலாத பொருள்களோடு கலந்து தமது நிலைகுலைந்து மாறி மாய்தலை எவ்வகைப்பட்ட உயிரும் விரும்புவ தில்லை; தமக்கு இடர்தரும் இடத்தையேனும் பொருளையேனுங் கண்டால் அவற்றை அகன்றுபோய்ப் பிழைக்கும் முயற்சியைப் புழு முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் மிகவும் பரபரப்பொடு நிரம்பக் கருத்தாய்ச் செய்தல் எவரும் உணர்ந்த்தேயாம். இடம் விட்டுப் பெயராத புல்மரம் முதலியனவுங் கூடத் தத்தமக்கேற்ற உணவுகளை உட்கொள்ளும் வரையில் உயிரோ டிருத்தலும், அங்ஙனம் அமையாக்கால் அவை பட்டுப்போதலும் எல்லாருட் அறிவர்.

ஆகவே உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் மாறுதல் அடைதலாகிய பொது நிகழ்ச்சியைப்பார்த்து, அப்பொதுவகையான மாறுதலுள் எத்தகைய மாறுதல் மக்களால் வேண்டப்படுவது என்பதனை உணர்ந்துபாராமல், தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைபியைய் பிடித்துக் கொண்டு, அதன்பை நமது அருமைச் செந்தமிழ்மொழியுந் தனது தூயநிலை குலைந்து மாறுதல் அடையவேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலதாமோ? எல்லாப்பொருள்களும் எல்லா உலகமும் ஒரு காலத்து மாறி மாய்தல் உண்மையேயாயினும், அம் மாறுதலும் அதனால் வரும் அழிவும் இப்போதே வந்துவிடல் வேண்டுமென்று எவரேனும் விரும்புவரா? அங்ஙனம் எவரேனும் விரும்புவராயின் அவரை அறிவு திரிபெய்திய வெறியர் என்றே உலகங் கொள்ளுமல்லது, மற்று அவரை அஃது உயர்த்துக் கூறுமோ? ஆண்டில் முதிர்ந்திருவர்களுந் கூடத் தமது உடம்பின் நலம் பழுதுபதாதவாறு அறிவான முறைகளைக் கையாண்டு மேலும்மேலும் அதனை நலமுறைவைத்து வாழ்நாளைப் பெருக்கதற்கன்றோ முயல்கின்றனர்? நலமுடனிருந்து வாழ்நாளைப் பெருகச் செய்பவரக்ளுக்கு அறிவு வளர்ச்சியும் அதனாற் பேரின்ப்ப் பேறும் வாய்த்தலால், உடம்பை விரைவில் நிலைகுலையச் செய்பவர்பகளுக்கு அறிவும் இன்பமும் வாயா.

இது போலவே, நமது செந்தமிழ்மொழியாகிய ஒலியுடம்பும் பழுதுபடாமற் செவ்வையாகப் பாதுகாக்கப் படுமானால் அஃது இன்னும் பலநூறாயிரம் ஆண்டு உயிரோடு உலவித், தன்னைப் போற்றி வழங்கும் மக்களுக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும், சிலருடம்பு தமக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும். சிலருடம்பு தமக்கு இயற்கையிலேயுள்ள குறைபாட்டானுந், தம்மையுடையவர்களால் நன்கு பேணப்படாமையானும் விரைவில் அழிந்துபோதல் போலச், சமற்கிருதம், இலத்தீன், கிரீக்கு, ஈபுரு முதலான பழைய மொழிகளுந் தமக்கு இயல்பாகவுள்ள குறைபாட்டானுந் தம்மை வழங்கியியோர் நாகரிகம அற்றவராய் இருந்தமையானும் வழங்குதல் அற்றன. நமது செந்தமிழ்மொழியோ தன்னை வழங்கிவரும் நாகரிக நன்மக்களின் அறவுமுயற்சியாற் பெரிது போற்றப்பட்டு வருதலானுந் தனது இளமைத் தன்மை குன்றாது இன்னும் உலவி வருகின்றது. சிலர் இளமையிலேயே மூத்துப் போதலையும் வேறு சிலர முதுமையிலும் அது தோன்றாமற் புத்திளமையோடுங் கட்டழகோடும் விளங்குதலையும் நீங்கள் பார்த்த்தில்லையா? பாதுகாப்பினால் இளமையும் வாழ்நாளும் இவ்வாறு நீண்டுவருவதல் போலவே, நமது தனித்தமிழையுந் தூயதாக வைத்துப் பாதுகாப்போமாயின் அது மக்கள் உள்ள்ளவும் இறவாது நடைபெறுதல் திண்ணமன்றோ? எனவே, தமிழ்மொழியின் வளவிய வளர்ச்சிக்கு ஏதுவாகிய மாறுதலே எல்லாரும் விரும்பத்தக்கதா மன்றி, அதுகுன்றி மாய்தற்கு ஏதுவான மாறுதல் அறிவுடையார் எவரானும் எக்காலத்தும் விரும்பற்பாலதன்று.

(தொடரும்)

தமிழ்க்கடல் மறைமலையடிகள்

தனித்தமிழ் மாட்சி