சங்கக்காலச் சான்றோர்கள் 

1. அணிந்துரையும் முன்னுரையும்


அணிந்துரைபேராசிரியர் திரு. ம.சண்முக சுந்தரனார்

‘சங்ககாலச் சான்றோர்கள்’ என்னும் தலைப்புக்கொண்ட இந்நூலில் திரு. ந. சஞ்சீவி அவர்கள், விருந்தினர்க்கு அறுசுவை அடிசில் சமைத்து அளிப்பது போல, பழந்தமிழ் நூல்களின் சுவைகளையெல்லாம் பிழிந்து தமிழருக்கு ஒர் இலக்கிய விருந்து அளித்துள்ளார். வீரமும் பரிவும், நேர்மையும் நெறியும், வள்ளன்மையும் தெளிவும் இக்கட்டுரைகளில் ஊறி வழிகின்றன. பழந்தமிழ்ப் புலவர்களும் அவர்கள் அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி அவர்களைப் பெருமைப்படுத்திய புரவலர்களும் இதில் கண் நிறைந்த காட்சியளிப்பதோடு, தங்கள் சுவை மிக்க செந்தமிழ்ப் பாடல்களால் செவிக்கின்பமும் ஊட்டி நம் உள்ளங்களை ஊக்குவிக்கின்றார்கள். அவர்களது வாழ்க்கை வரலாறுகளின் பல சீரிய பகுதிகள் இதில் இவ்வாசிரியருக்கே சிறப்பான உணர்ச்சியும் கவர்ச்சியும் மிக்க தோரணையில் ஒரு பேசும் படம் போல நம்முன் தோன்றுகின்றன. தமிழ் நாட்டுச் செந்தமிழ் மேடை வீரர்களிடையே தலையாயவர்களுள் ஒருவராக மதிக்கப் பெறும் ஆற்றலும் புகழும் தம் இளமையிலேயே பெற்றுள்ள திரு. சஞ்சீவியோடு சென்ற மூன்று ஆண்டுகள் இடைவிடாது பழகும் நல்வாய்ப்புப் பெற்ற எனக்கு, அவரது இனிய குரலும், ஆர்வமும் கற்பனையும் ததும்பும் பேச்சும் இந்நூலின் வரிகளூடே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சங்கத் தமிழும் அவ்வரிகளுக்கு உரம் பாய்ச்சி நிற்கின்றது. அவ்வகையில் இந்நூலினைப் பாட்டிடை யிட்ட ஒர் உரை நடைக் காவியத் தொகுப்பு எனலாம். இப்பண்புகளோடு இதில் திரு. சஞ்சீவி மிக்க மதிப்புடன் அடுத்து நெருங்கிப் பழகிய முனைவர் மு. வ., திரு. வி. க. அவர்களின் நடை நயங்களும் இடையிடையே தோய்ந்து சொட்டிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய சிறப்புகளோடு அமைந்துள்ள இந்நூல் தமிழ் நாட்டுக் கல்லூரிகளில் கலை பயிலும் மாணவர்கட்கும் தமிழில் ஆர்வமிக்கவர்கட்கும் எல்லையற்ற இன்பமும் அறிவும் ஊட்டும் என்பதில் ஐயமில்லை. திரு. சஞ்சீவி இலக்கியத் துறையில் இத்தகைய முயற்சிகளில் மேலும் மேலும் ஈடுபட்டுத் தமிழன்னையின் சேவையில் தலை சிறந்து விளங்கவேண்டுமென்பது எனது அவா.

 ம. சண்முகசுந்தரம்
பச்சையப்பர் கல்லூரி,
காஞ்சிபுரம், 1-7-54. 

முன்னுரை

நம் வாழ்விற்கு எஞ்ஞான்றும் வழி காட்ட வல்லனவாய்த் திகழும் ஒளி விளக்கங்களை இருவகையாகப் பாகுபடுத்தலாம்: ஒரு வகை, ‘மாசறு காட்சி’ படைத்த திறவோர் யாத்த அற நூல்கள். மற்றொரு வகை, அவ்வறவோரின் நூல்கள் வழி வாழ்ந்து புகழ் கொண்ட பெருமை சான்ற சான்றோர்களின் நல்வாழ்க்கை முறைகள். திருக்குறள் போன்ற அறநூல்களை அறிவுகொண்டு ஆராய்ந்து கற்பதாலும், இதயம் கொண்டு உணர்ந்து பண்படுவதாலும் மனித வாழ்க்கை அடைய வல்ல பயன்கள் பலவாகும். அவ்வாறே அவ்வறநூல்கள் நுவலும் வாழ்வின் இலக்கணங்கட்கு ஓர் இலக்கியமாய் இவ்வுலகில் வாழ்ந்து காட்டிய சான்றோர்களின் பல்வகையான பயன் நிறைந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட வரலாறுகளை அறிந்து தெளிவதாலும், பல திறப்பட்ட ஒளி படைத்த உணர்ச்சி அலைகள் ஆடிப் பாடும் அவர்களின் வாழ்வுக் கடலில் படிந்து உள்ளம் குளிர்தலாலும் நம் உயிர் வாழ்க்கை காண வல்ல நன்மைகள் பலவாகும். ஆயினும், எளியதாம் பின்னைய வழியாலேயே அரியதாம் முன்னைய நெறியால் பெற வல்ல பயன்கள் பலவற்றையும் பெறல் கூடும் என்பது எண்ணிப் பார்ப்பவர் எவர்க்கும் இனிதின் விளங்கல் திண்ணம்.

இக்கருத்தோடு யான் சங்க இலக்கிய உலகில் புகுந்தேன். அவ்விலக்கிய நல்லுலகில் யான் கண்டு பழகிப் பெரும்பயனடையக் காரணராயிருந்த சான்றோர் பலர் ஆவர். அவருள் தலைமை சான்ற அறுவரின் அருமை பெருமைகளையும், இலக்கிய உலகில் அவர்களோடு யான் பழகிய போது பெற்ற இன்பத்தையும் பயனையும் ஒருவாறு அனைவருக்கும்-சிறப்பாகத் தமிழ் இளைஞர்கட்கும்-எடுத்துரைக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் எழுந்த முயற்சியே சங்ககாலச் சான்றோர்கள்’ என்னும் இந்நூல்.

*அன்பும் அறிவும் ஆற்றலும் பொருந்திய தமிழ் நாட்டு வீர இளைஞர்கட்கு*

(தொடரும்)

சங்கக்காலச் சான்றோர்கள்: ந. சஞ்சீவி