naavalar_somasundara_bharathiyaar01kathirnilavan01

 

நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள்

கார்த்திகை 29, 1990 / திசம்பர் 14, 1959

ஆரிய எதிர்ப்பும் திராவிட மறுப்பும்

  1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில்தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.

  முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழின அடையாளத்தை இழக்க சோமசுந்தர பாரதியாருக்கு மனம் வரவில்லை. பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை சோமசுந்தர பாரதியார் ஒப்புக் கொள்ள மறுத்தார். ஆரியர் x தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும்.

  1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார். தமிழ்மொழி ஆக்கத்திற்கும், இந்தி எதிர்ப்புக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் வெவ்வேறு பெயர்களில் அமைக்கப் பெற்ற இயக்கத்தினர்களெல்லாம் தமிழர் கழகக் கிளைகளை ஆங்காங்கே அமைக்க வேண்டுமென்று பாரதியார் பேரழைப்புக் கொடுத்தார். பிறகு ‘தமிழர் கழகம்’ எனும் இதே பெயரில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் அமைப்பைக் கட்டிய போதும் அதன் தலைவராக பாரதியார் பொறுப்பு வகித்தார்.

  1942 இல் பெரியாரின் திசை மாறிப்போன ‘திராவிடநாடு திராவிடர்க்கே’ முழக்கம் காதைப் பிளந்து வந்த நிலையில், சி.பா.ஆதித்தனார் ‘தமிழ் இராச்சியக் கட்சி’யை உருவாக்கினார். அப்போது அதனை மனமுவந்து தொடங்கி வைத்தவரும் பாரதியார் என்பது நினைவு கூரத்தக்கது.

  நீதிக்கட்சியில் பெரியார், அண்ணா இருந்த போதும், தி.மு.க.வை அண்ணா உருவாக்கிய போதும் திராவிடம் குறித்தத் தமது மறுப்புக் கருத்தை பாரதியார் வெளிப்படுத்திய தருணங்கள் பல உண்டு.

  14.3.1943இல் சேலத்தில் நடந்த ‘கம்பராமாயண எரிப்புப் போர்’ உரையாடலின் இறுதிப் பகுதியில் பாரதியார் கூறுகிறார்: “தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்” என்று இடித்துரைத்தார்.

  1950ஆம் ஆண்டு மே மாதம் 27, 28 நாட்களில் கோவையில் தி.மு.க. சார்பில் ‘முத்தமிழ் மாநாடு’ நடைபெற்றது. அதில் மாநாட்டுத் திறப்பாளராக கலந்து கொண்ட பாரதியார் அவர்கள் மீண்டுமொரு முறை திராவிடத்தின் மீது குட்டு வைத்துப் பேசினார். அது வருமாறு: “இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ் தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர்” என்றார்.

  பாரதியாருக்கும் ஒரு படி மேலே சென்று அம்மாநாட்டிலே தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோ ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது என்று சொன்னாரே பார்க்கலாம். அண்ணாவோ பதைபதைத்துப் போனார். முத்தமிழ் மாநாடு திராவிடத்திற்கு விளக்கம் சொல்லும் மாநாடாக மாறிப் போனது.

  1953ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தினார். கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், தார்பிடோ சனார்த்தனம், திருக்குறள் முனுசாமி ஆகியோர் பங்கு கொண்ட மாநாட்டில் அதன் தலைவராகிய பாரதியார் “நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று” என்று பேசிய போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் கூட்டத்திலே பங்கு பெற்றவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் தவிர, மற்ற ஏனையோர் திராவிடச் சார்பாளர்கள் என்பதே உண்மையாகும்.

  திராவிட இயக்கத்தவரின் ஆரிய எதிர்ப்பில் உடன்பாடு கொண்டவராக இருந்த போதிலும், அந்த ஆரிய எதிர்ப்பையும் கூடத் தாம் தன்மதிப்பு இயக்கத்தால் கற்றுக் கொள்ள வில்லை என்பதை தெளிவுபடுத்திக் கூறவும் பாரதியார் துணிந்தார். அது வருமாறு:

  “ஆரியருக்கு அடிமைப்படாத எண்ணம் எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. தன்மதிப்பு இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது. என்னுடைய 14 வயதில் திருமணம் நடைபெற்றது. என்னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப்பண்டிதர் கூறும் சைவமல்ல, உண்மையே எனக்குச் சிவம். எனக்குத் திருமணம் பார்ப்பனரை வைத்து செய்வதாகக் கூறினார்கள். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்கள் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோயில்களிலே அவர்கள் கொடி மரத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால் அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு திருமணம் செய்யாமல் சைவ குருக்களை வைத்துத் திருமணம் செய்தேன். எனது சிறிய வயதிலேயே எனக்கு அந்த நோக்கம் இருந்தது. தன்மதிப்பு இயக்கத்தாலோ, அண்ணாதுரையாலோ அந்த நோக்கம் எனக்கும் வரவில்லை. அது முதற்கொண்டு இதுவரை நான் தமிழருக்கு தன்மானம் வரவேண்டுமென்று உழைத்து வந்திருக்கின்றேன்.”

  பாரதியார் தமிழ் நூல்களிலே உள்ள ஆரியத்திற்கு வலுசேர்க்கும் கருத்துகளை புறந்தள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் அதே வேளையில் நல்ல கருத்துகள் இருக்கும்நேர்வில் போற்றிடவும் தயங்கக் கூடாது என்பார்.

  அண்ணா கம்ப இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதை வன்மையாகக் கண்டித்ததோடு ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதன்று. அது தமிழ் நெறியன்று. ஆபாசக்கருத்துகளை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணை நிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போல் சிறந்த கவியை கண்டதில்லை என்று கம்பனைப் போற்றினார். பாரதியார் முன்னெடுத்த ஆரிய எதிர்ப்பும், திராவிட மறுப்பும் இன்றைக்கு வளர்ந்து வருவது கண்கூடான உண்மையாகும்.

 

கதிர்நிலவன்