தலைப்பு-தமிழகவரலாறு, சமூகநீதி வரலாறு :thalaippu_thamizhagavaralaaru_samuukaneethivaralaaru_thiru

தமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு

– வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக

வைக்கப்பட வேண்டும்

 

   தொன்மையான, சிறப்பான வரலாற்றுக்கு உரியவர்களாக இருந்தும் அவ்வரலாற்றை அறியாதவர்களாக வாழ்ந்து மடிவோர் யாரெனில் உலகிலேயே தமிழ் மக்களாக மட்டும்தான் இருக்க முடியும். நம் வரலாறு குறித்த அறிந்துணர்வு இல்லாததால்தான்,  மக்கள் நலன் குறித்த விழிப்புணர்வே நம் நாட்டவரிடம்  இல்லை. நம் பாடங்களும் நம் வரலாறு தெரியாதவர்களாகவே நம்மை உருவாக்குகின்றன. எனவே,  இப்பாடங்களின் அடிப்படையில் தேர்வுகள் எழுதி உயர் பொறுப்புகளுக்கு வருபவர்களுக்கும் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, முதலான எவ்வரலாறும் தெரிவதில்லை. இ.ஆ.ப. முதலான  குடிமைப்பணித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழக வரலாறு என்பது மிக மிகச்சிறிய பகுதியே. அங்குதான் இப்படி என்றால் தமிழ்நாட்டின் அரசுபணியாளர் தேர்வின் முதல்நிலைப் பணிகள் முதலானவற்றிற்கான தேர்வுப்பாடத்திட்டங்களைப் பார்த்தால், இங்கும்  அதே அவல நிலைதான். இவற்றைப் பார்த்து தேர்வுப் பாடத்திட்டங்களை வகுக்கும் மத்திய அரசினைக் குறை கூறிப்பயனில்லை.

  பணித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களின் வாயில் முதுகலைப்பட்டப் பாடத்திட்டங்கள்தானே!  இடைக்காலச்சோழர்கள்பற்றிச் சிறிதளவு இருக்கின்றதே தவிர,   சேர, சோழ,பாண்டிய மூவேநதர்கள் பற்றிய முழுமையான பாடங்கள் இங்கும் இல்லை. இவ்வாறான சூழலில் தமிழ்த்தேசிய உணர்வுடன்,  வரலாற்று உணர்வுடன், பண்பாட்டு உணர்வுடன்,  மக்கள் உருவாவது எங்ஙனம்?

 குமரிக்கண்டத் தோற்றம் தொடங்கிக் கடந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை, தமிழக  வரலாறு, வரலாற்றுப் பாடத்திட்டத்தில் முழுமையாக இடம் பெற வேண்டும்.

  அனைத்து வகுப்புகளிலும் அவரவர் வகுப்பு நிலைக்கேற்ப தமிழக வரலாறு என்று  தேர்வினைப் பாடநூல் துணையுடன் எழுதும் வகையில், துணைப்பாடநூல் இருக்க வேண்டும்.

 இந்த ஆண்டே, தமிழ்நாட்டின் அனைத்துப் பணித் தேர்வுகளிலும் தமிழக வரலாறு குறித்த வினாக்கள் அமைய வேண்டும். அரசே மாதிரி வினாக்களை வெளியிட்டுவிட்டால், தேர்விற்கு ஆயத்தப்படுத்துவோர் உரிய பாடங்களைப் பணித்தேர்வர்களுக்கு அளித்துவிடுவர்.  வரும் ஆண்டு முதல் புதியதாக அமைக்கப்படும் தமிழக வரலாறு என்னும் பாட நூல்கள் துணையாக அமையும். மத்திய அரசிற்கும் இப்பாடத்திட்டங்களைத் தெரிவித்து மத்திய அரசின் பணித்தேர்வுப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

  தமிழக  வரலாறு போல் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பாடம்  குமுகாயநீதி வரலாறு.  வகுப்புரிமை, இட ஒதுக்கீட்டு உரிமை, தன்மானம், தன் மதிப்பு, சமன்மைத்துவம், வருணாசிரமம் எனப்படும் சாதிப்பாகுபாடு ஒழிப்பு முதலான பல்வேறு அரும்பணிகள்  ஆற்றிய நீதிக்கட்சித் தலைவர்களைப்பற்றியும்   குமுகாய வரலாறு பற்றியும் அறிந்துகொள்ளாததால்தான் கட்சி அரசியல் அடிப்படையில் பார்த்து உண்மைக்கு எதிரான தாக்குதல் அரசியல் இப்போது நிகழ்கிறது.  கட்சி அடிப்படையில் தாங்குதலோ தாக்குதலோ இல்லா வகையில் குமுகாய நீதி வரலாறு ஒவ்வொரு வகுப்பிற்குமேற்ற நிலையில்  எழுதப்பட வேண்டும். இவையும் பாடநூல் துணையுடன் தேர்வு எழுதும் வகையில் துணைப்பாடங்களாக  வைக்கப்பெற வேண்டும்.

 குமுகநீதி பற்றி அறியாததால்தான், சாதி ஆணவக்  கொலைகள் முதலானவை நிகழ்கின்றன, மூடநம்பிக்கைகளைப் பின்பற்றி அடிக்கல்நாட்டலும் கட்டடத்திறப்பும் மண்சோறு தின்னலும் எனப் பல தாழ்செயல்கள் பரவுகின்றன.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.  (திருவள்ளுவர், திருக்குறள் 972)

என்பதைஉணரவும் குமுக நீதி வரலாறு தேவை. ‘எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்‘ என்பதை நிறைவேற்றவும் குமுகநீதி வரலாறு தேவை.

 சமூகநீதி காத்த வீராங்கனை என்னும்  விருது பெற்றவர் முதல்வர் செயலலிதா. எனவே, குமுகநீதி வரலாறு என்பது பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஏற்பார் என்றே நம்பலாம்.

  எனவே, தமிழக வரலாறு, குமுகநீதி வரலாறு தொடர்பான பாடத்திட்டங்களை உருவாக்கத் தமிழறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் அடங்கிய குழுக்களை அரசு அமைக்க வேண்டும். இக்கல்வியாண்டிலிருந்தே இவை பாடமாக இடம் பெற வேண்டும். ஆங்கிலவழியாகப் படிப்பர்வளும் அறிய இவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பாடநூல் துணையுடன் தேர்வு எழுதும் வகையில் துணைப்பாடங்களாக வைக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo