தமிழண்ணலின் தமிழ் வாழ்வு – தமிழ்ச்சிவா
தமிழண்ணலின் தமிழ் வாழ்வு
(ஆடி 28, 1956 – மார்கழி 13, 2046 /
ஆக. 12, 1928 – திசம்பர் 29, 2015)
எண்பத்தெட்டாம் அகவைவரை வாழ்ந்து தமிழ் மொழிக்குத் தன்னாலான பல ஆய்வு நூல்களை வழங்கித், தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார், அறிஞர் இராம.பெரியகருப்பன் என்கின்ற தமிழண்ணல். ஆய்வுலகில் ஓர் தமிழரிமாவாகத் திகழ்ந்தார். கவிஞர், புதின ஆசிரியர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல முகங்களைக் கொண்டிருந்தவர்; தம்முடைய திறமையால் பல படிநிலைகளைக் கடந்தவர்; மொழிப்போர் வீரர்; அஞ்சா நெஞ்சினர்; ஓயா உழைப்பினர்.
24.07.2015 அன்று நானும் என் துணைவியாரும் வீட்டிற்குச் சென்று, நேரில் சந்தித்தபோதுகூட, பக்தி இலக்கியம் தொடர்பான அவருடைய ஆய்வுநூலைத் திருத்திக் கொண்டிருந்தார். “பணியாற்றிய காலத்தில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். இனிமேலாவது பக்தி இலக்கியங்களைப் படிப்போமென்று நினைத்து இந்த நூலை எழுதியுள்ளேன். மீண்டும் சங்க இலக்கியங்கள் முழுமையையும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். ஆனால், அவருடைய எண்ணம் நிறைவேறாமலேயே போய்விட்டது.
2006 – 2009 ஆண்டுகளில் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆய்வு செய்தபோதும் அங்கேயே பணியாற்றியபோதும் அவருடைய பேச்சைப் பலமுறை கேட்டுள்ளேன். அவரைக் குருவாக மதிக்கும் பேரா. முதுமுனைவர் ச.சு.இராமர்இளங்கோ இவரை அடிக்கடி அழைத்துவருவார். அண்ணலுடைய பொழிவில் நகைச்சுவை இழையோடும். ‘சனசக்தி’யின் நடுப்பக்கத்தில் நான் எழுதிய “நடிப்பு சுதேசிகளும் நச்சு உணவுகளும்” (25.06.2015) என்ற கட்டுரையை அவரிடம் கொடுத்தபோது (24.07.2015), அதில் மேற்கோள் காட்டியிருந்த “கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு, இந்நான் கல்லது உணவும் இல்லை” (புறம்.335) என்ற புறநானூற்றுப் பாடலைப் படித்துவிட்டுப், “பொருத்தமான பாடலைத் தேடிப்பிடித்துச் சரியாக எழுதியிருக்கப்பா” என்று மனதாரப் பாராட்டினார். இளையவர்களுடன் இணைந்து பணியாற்ற எவ்விதத்திலும் தயக்கம் காட்டாதவர். பேரா.இ.முத்தையாவுடன் இணைந்து தமிழியல் ஆய்வு என்கின்ற புத்தகத்தைப் பதித்துள்ளதே இதற்கு நற்சான்று.
கல்விப்பயணம்: மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும் திருவையாற்று அரசர் கல்லூரியிலும் பயின்று வித்துவான் (1948) பட்டம் பெற்றார். தன்முயற்சியாகச் சென்னைப் பல்கலையில் இளங்கலைப் பொருளியல் (1948), முதுகலைத் தமிழ் (1961) ஆகிய பட்டங்களைப் பெற்றார். மொழிப்போர் மறவர் பேராசிரியர் சி.இலக்குவனார், இலக்கணச் செம்மல் போராசிரியர் அ.சிதம்பரநாதன்(செட்டியார்) ஆகியோரின் வழிகாட்டுதலில் “Tradition and Talent in Cankam Poetry” (1969) என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வைச் செய்தார். காரைக்குடியிலுள்ள மீ.சு.உயர்நிலைப் பள்ளியில், தன்னுடைய கல்லூரித் தோழர் கவியரசு முடியரசனாருடன் இணைந்து 13 ஆண்டுகள் பணியாற்றினார். மதுரைக் கருமுத்துதியாகராசரின் தியாகராசர் கல்லூரியில் வேலைவாய்ப்பிருப்ப தறிந்து நேர்முகத்தேர்விற்குச் சென்றவர், பணி கிட்டா நிலை எய்தினார். ஆனால், பேராசிரியர் சி.இலக்குவனார், இவரது ஆய்வுத்திறன் சிறப்பிற்காக இவருக்குப் பணிவாய்ப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தியதால் பணிவாய்ப்பு கிடைக்கப்பெற்று தமிழ்வளர்க்கும் அக்கல்லூரியல் 10 ஆண்டுகள் பணிசெய்தார்.
1971இல் பேரா.முத்து சண்முகம்(பிள்ளையின்) விருப்பத்தின் பேரில் காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இவர் 1988இல் காமராசர் பல்கலைக்கழகத் துறைத்தலைவராக இருந்தபோது, அத்துறை தமிழாய்வுநிறுவனமாக(School of Tamil Studies) மாறுவதற்குப் பெரிதும் உழைத்தார். மறைந்த முன்னாள் அமைச்சர்கள் மு.தமிழ்க்குடிமகன், கா.காளிமுத்து முதலான நாற்பதின்பமருக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆய்வு நெறியாளராக இருந்துள்ளார். அமெரிக்கா, இலங்கை, சப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்குள்ள தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் வகுக்கும் பணியாற்றியுள்ளார். 1989இல் மலேசியத் திராவிடர் கழகம் நடத்திய விழாவிற்குத் தலைமை தாங்கியுள்ளார்’ (thirutamil.blogspot.in).
பெற்ற விருதுகள் / சிறப்புகள்: திரு.வி.க. விருது (1989), கலைமாமணி விருது (2010), நல்லாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது (1995, காமராசர் பல்கலைக்கழகம்), தொல்காப்பியர் விருது (2010-2011, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்), பேரா.இரா.மோகன், நிர்மலாமோகன் ஆகியோர் தமது இலக்கிய இணையர் அறக்கட்டளை சார்பில் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2012, உரூபாய் பத்தாயிரம், நாள்: 27.04.2013, eraeravi.blogspot.in), திஇராநி (எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (2013 – பாரிவேந்தர் பைந்தமிழ் விருது- 5இலட்சம்) எனப் பல விருதுகள் இவரின் தகுதிக்கு அணிசேர்த்துள்ளன.
1981-82இல் பல்கலைக்கழக நல்கைக்குழு, இவரைத் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்தது. சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகப் பத்து ஆண்டுகள் இருந்துள்ளார். 1985முதல் ஞானபீட விருதிற்குரிய கருத்துரைஞராகப் பல்லாண்டுகள் இருந்துள்ளார். 1996-2001இல் தமிழக அரசால் குறள் பீடத்திற்குத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். தி.மு.க. தலைவர் திரு.மு.கருணாநிதி எழுதிய, ‘தொல்காப்பியப் பூங்கா’ என்ற நூலை வெளியிடும் விழாவிற்குத் தலைமையேற்றார்.
மொழிப்போர் வீரர்
1992இல் “தமிழ்ச்சான்றோர் பேரவை” என்ற அமைப்பைத் திருவாளர் நா.அருணாசலம் என்பார் தோற்றுவித்தார். அவ்வமைப்பில் தமிழண்ணலும் இருந்தார். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துதல், தமிழே ஆட்சிமொழியாக வேண்டும், கோவில்களில் செய்யப்படும் அருச்சனைகள், சடங்குகள், இசையரங்குகள் ஆகியவற்றில் தமிழே இருக்க வேண்டும், பாராளுமன்றத்தில் தமிழ் நடைமுறை மொழியாக ஏற்கப்பட வேண்டும், தமிழ் படித்தவருக்கு வேலைவாய்ப்பு, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் முதலாய பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 25.04.1999 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்தனர். அந்த அறப்போராட்டத்திற்குச் சிலம்பொலி செல்லப்பன் தலைமையேற்பதாய் இருந்தது. அவர் விலகிக்கொள்ள, தமிழண்ணல் தலைமையேற்றார். கோரிக்கைகளையேற்று நடைமுறைப்படுத்துவதாய், அன்றைய தி.மு.க. அரசின் தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் மு.தமிழ்க்குடிமகன் தெரிவித்தார். அதையடுத்துப் போராட்டப் பந்தலில் தமிழண்ணல் பேசியதாவது, “என் நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் உணர்வுப்பூர்வமாக இங்கே திரண்டிருக்கும் தமிழுணர்வாளர்களே! பட்டினிப் போராளிகளே! உன்னதமான உங்கள் தமிழுணர்வுக்கும் எழுச்சிமிக்க உங்கள் போராட்டத்திற்கும் வெற்றி கிடைத்திருக்கிறது” என்றார் (கீற்று.காம்). அறிவாலயம் சென்று தமிழ்க்குடிமகனுடன் கலந்துபேசி நல்லமுடிவு எட்ட வழிவகுத்தார் (முந்தைய நாளில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது). ஆயினும், தன்னை முன்னிறுத்தாமல் உங்களுடைய போராட்டத்திற்கு வெற்றிகிடைத்துள்ளது என்று பேசியுள்ளதால் தமிழண்ணலின் தூய உள்ளம் தெளிவாகத் தெரிகிறது. அரசாணை எண் 117 (3.5.1999)இன்படி, 30.4.1999இல் நீதிபதி மோகன் தலைமையில், தமிழண்ணல், புலவர் இரா.இளங்குமரன், பேரா.ச.முத்துக்குமரன், பேரா.வா.செ.குழந்தைசாமி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் வழிகாட்டுதலில் பொதுமக்கள் விரும்பும் வகையில் கல்விக்கொள்கை வகுக்கப்படுமென்று அரசு அறிவித்தது. எனினும், இன்றைக்கும் போராட்டத்திற்கான பல கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. ஆகவே, தமிழறிஞர்கள் முன்வைத்துப் போராடிய கோரிக்கைகள் எத்தனை இன்றைக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்று சிந்தித்து, மீண்டும் போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டியவர்களாகவே உள்ளோம்.
அஞ்சா நெஞ்சினர் : பொள்ளாச்சி மகாலிங்கனார், அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் முயற்சியில் தொல்காப்பியப் பதிப்பொன்றை வெளியிட்டார். அப்பதிப்பு, தமிழுக்குக் கேடானது என்று துணிந்து அவற்றைப்புதைக்கச் சொல்லிய தீரமிக்கவர்.
எழுதிய நூல்கள்: தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் போற்றுமாறு வலியுறுத்திய தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் வழியில் அவற்றில் ஆய்ந்து நூல்கள் இயற்றினார். பிற துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார். அவை வருமாறு:
பொது – 21:
1.வாழ்வரசி, 2.நச்சுவளையம் (புதினங்கள்), 3.தாலாட்டு, 4.காதல் வாழ்வு, 5.பிறைதொழும் பெண்கள், 6.ஒப்பிலக்கிய அறிமுகம் (மீனாட்சி, 1973), 7.மாணிக்கக் குறள், 8.ஆய்வியல் அறிமுகம் (திரு.இலக்குமணனுடன் இணைந்து), 9.எழுச்சிதரும் எண்ணச் சிறகுகள் (மெய்., 2008), 10.ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு (மெய்., 2008), 11.சிவ வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும், 12.வேதமும் ஆகமமும், 13.தமிழில் வழிபாடு – குழப்பமும் விளக்கமும், 14.இறைவன் இறைவி பெயர் மாற்றம், 15.வடமொழியின் செல்வாக்கும் இருக்குவேதத் தோற்றமும், 16.இருக்கு வேத சாரம், 17.யசூர் சாம வேத சாரம், 18.அதர்வ வேத சாரம், 19.சேக்கிழார் திருவுள்ளம் – சண்டீசர் வரலாறு, 20.சேக்கிழார் திருவுள்ளம் – மனுநீதிச் சோழன் வரலாறு (11-20, தமிழ்க் கல்வி, பண்பாட்டு விழிப்புணர்ணவுப் பேரியக்கம், ஏப். 2011, குறுநூல்கள்), 21.உரை விளக்கு (விழிகள், 2011)
உரைநூல்கள் – 13
இலக்கணநூல்கள் (10): 1.தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரை (மணிவாசர், ஆகத்து 1999), 2.சொல்லதிகார உரை (மணி., 15.06.1994), 3.பொருளதிகாரம் உரை பகுதி-1 (செப்.2003), 4.பகுதி-2 (செப்.2003), 5.பகுதி-3 (செப்.2003), 6.நன்னூல், 7.அகப்பொருள் இலக்கணம், 8.புறப்பொருள் வெண்பாமாலை, 9.யாப்பருங்கலக்காரிகை, 10.தண்டியலங்காரம்
சங்க இலக்கியங்கள் (2): குறுந்தொகை (ஏப்.2002, கோவிலூர் மடாலயம்), அகநானூறு 3ஆம் பகுதி (301-400) (கவிஞர் நா.மீனவனுடன் இணைந்து, செப்.2004, கோவிலூர் மடாலயம்)
திருக்குறள்: திருக்குறள் நுண்ணுரை
ஆய்வு நூல்கள் – 23
சங்க இலக்கியம் தொடர்பானவை (13): 1.பரிசில் வாழ்க்கை (பாரிநிலையம், அக்.1956), 2.குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு (மீனாட்சி, மே 1961), 3.சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கியக் கொள்கைகள்) – மீனாட்சி, அக்.1975(இதன் திருத்திய பதிப்பு, 2003இல் சிந்தாமணிச் செல்வ வெளியீடாக வந்துள்ளது), 4.சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய வகைகள்) – சோலைநூலகம், மார்ச்சு 1978, 5.ஔவையார் (சாகித்திய அகாதெமி, 2008), 6.ஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச்சுடர்கள் (மெய்., திசம்.2007), 7.சங்க இலக்கியத் தொன்மைச் சான்றுகள் (நோக்கு, நவம்.2008), 8.செவ்விலக்கியச் சிந்தனைகள் (மெய்., 2008), 9.செம்மொழிப் படைப்பியல் (மணி., 2008), 10.சங்க மரபு (முனைவர்பட்ட ஆய்வேடு, சிந்தாமணிப் பதிப்பகம், அக்.2009, மொ.பெ. பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன்), 11.தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும் (எசு.ஆர்.எம்., 2013), 12.The Tainted Spectacles and faulty vision of Dr.Nagasamy (The Real Status of Tamil and Sanskrit) – S.R.M., 2013, Tr. Dr. K.V.Balasubramaniyan), 13.கபிலர் பாடல்களில் காட்சி உருவகம் (சிந்தாமணிச் செல்வ வெளியீடு, ஆ.இ., குறுநூல்)
தொல்காப்பியம் தொடர்பானவை (8): 1.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்: உள்ளுறை, 2.இறைச்சி (மீனாட்சி, ஏப். 1986), 3.மெய்ப்பாடு (மீனாட்சி, மே 1986), 4.நோக்கு, 5.தொல்காப்பியர் (சாகித்திய அகாதெமி, 1998), 6.தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் (உள்ளுறை, இறைச்சி, நோக்கு, மெய்ப்பாடு நான்கும் இணைந்தது. மணி., 2004), 7.தொல்காப்பிய இலக்கிய இயல் (மெய்யப்பன், 2008), 8.தொல்காப்பியர் விளக்கும் திருமணப்பொருத்தம் (எஸ்.ஆர். எம்., 2012)
திருவள்ளுவம் தொடர்பானவை (2): 1.தேடவைக்கும் திருவள்ளுவர் (மெய்., 2008), 2.வள்ளவர் நெறியில் வாழ்வது எப்போது? (மெய்., 2008)
வரலாறுகள் (2): 1.புதிய நோக்கில் இலக்கிய வரலாறு (மீனாட்சி, 13ஆம் பதி.1995), 2.உலகத் தமிழ் இலக்கிய வரலாறு – தொன்மை முதல் கி.பி.500வரை (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004)
தமிழ்மொழி (15): 1.தமிழை அறிவோம்! தமிழராய் வாழ்வோம்! (மெய்., 2007), 2.தமிழ் ஒரு கட்டமைப்புள்ள மொழி (மெய்., 2008), 3.இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள் (மெய்., 2008), 4.தமிழ்வழிக் கல்விச் சிந்தனைகள் (மெய்., 2008), 5.தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும், 6.பேசுவது போல் எழுதலாமா?, 7. பேச்சுத் தமிழை இகழாலாமா?, 8.பிழை திருத்தம் மனப்பழக்கம், 9.தமிழ் உயிருள்ள மொழி, 10.தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள், 11.தமிழ்த்தவம், 12.உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள், 13.இனிய தமிழ்மொழியின் இயல்புகள், 14.தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?, 15.சொல் புதிது சுவை புதிது.
பதிப்பாசிரியர் (12)
- தமிழியல் ஆய்வு (இ.முத்தையாவுடன் இணைந்து) – மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1983
- சங்க இலக்கியங்கள் (முனைவர் சுப.அண்ணாமலையுடன் இணைந்து) – கோவிலூர் மடாலயப் பதிப்பு (11 தொகுதிகள், 2002– 2004, அகம். 3 தொகுதிகள்).
இங்கு, மொத்தம் 74 நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. அவற்றுள் 11 நூல்கள் குறுநூல்கள். பதிப்பாசிரியராயிருந்து 12 நூல்களைக் கொணர்ந்துள்ளார். ஆகமொத்தம் 86 நூல்கள். (இப்பட்டியல் முழுமையானதாய் இருக்குமென்று தோன்றவில்லை.) 2008இல் மட்டும் 11 நூல்கள் வெளியாகியுள்ளன. சிந்தாமணிச் செல்வ வெளியீடு, சிந்தாமணிப் பதிப்பகம், தமிழ்க் கல்வி, பண்பாட்டு விழிப்புணர்ணவுப் பேரியக்கம் என்னும் பதிப்பகப் பெயர்கள் அவருடைய சொந்த வெளியீடுகள். பொது நூல்களில் 10, 11ஐ மட்டுமே நேரில் கண்டேன். 13-20வரையுள்ள நூல்கள் பின்னட்டையில் தரப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்துக் குறிக்கப்பட்டுள்ளது. 15.01.1976இல் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரி, மறைமலையடிகள் நூற்றாண்டையொட்டி (15.06.1976), அவர் பெயரில் பிள்ளைத்தமிழ் நூலொன்று எழுதும் போட்டியை அறிவித்தது. அதில் பதின்மூவர் பங்கெடுத்தனர். அப்போட்டியில், மலேசிய நாட்டுப் பினாங்கைச் சேர்ந்த திரு.சி.அன்பானந்தம் முதல் பரிசு பெற்றார். இதில், தமிழண்ணலும் கலந்துகொண்டு நூல் எழுதினார். அந்நூல் அச்சாயிற்றா என்பது தெரியவில்லை. (அன்பானந்தம் எழுதிய நூலை, அக்கல்லூரியே செப்.1978இல் வெளியிட்டுள்ளது.)
“ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர் அனைவரும் கிரேக்க, இலத்தீன் இலக்கியங்களைப் பயின்ற பிறகே, இலக்கியத்தைப் படைத்துள்ளனர். ஆனால், நமது தமிழில், சிறுகதை, புதினம், கவிதை எழுதுவோர் பலரும் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியை அறவே புறக்கணித்துவிட்டுத் தம் படைப்புகளை எழுதுகின்றனர். ஆகவே, அவர்களது படைப்புகள் ஒளிவீசித் திகழவில்லை. வேரை மறந்து, அடிமரத்தைச் செல்லரிக்கவிட்டால் கிளைகள் காய்ந்து சருகாகுமே தவிர தளிர்க்காது. தமிழராகப் பிறந்த அனைவரும் சங்க இலக்கியத்தில் அறிமுகம் பெற்றாலன்றி, நமது தமிழ் வளர்ச்சியை மேலெடுத்துச் செல்ல முடியாது” (சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான முத்தமிழ் விழாவில், அமெரிக்கன் கல்லூரியில், 10.12.2012 அன்று பேசியது, தினமணி.காம்) என்ற அவருடைய கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
2015ஆம் வருடம் பெருமழை வெள்ளத்தால் நூற்றுக்கணக்கினரும், அறிஞர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் மறைந்தனர். அவ்வகையில், தமிழுக்குத் தமிழண்ணலின் இழப்பு, பேரிழப்பு. அவரின் எண்ணங்களை ஈடேற்றப் பாடுபடுவோமாக!.
நன்றி: www.akaramuthala.in, muelangovan.blogspot.com, ta.m.wikipedia.org, சங்க இலக்கியக் களஞ்சியம் – பேரா.சு.அமிர்தலிங்கம்
கி.சிவா, ஆய்வாளர்,
காந்தியூர் ஊரகப்பல்கலைக்கழகம்
(காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்)
பேச 97517-79791
Leave a Reply