தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் ஙு – இலக்குவனார் திருவள்ளுவன்
(புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)
எல்லாக் கோயில்களிலும் தமிழிலும் அருச்சனை செய்யலாம் என இருந்து, இப்பொழுது தமிழில் அருச்சனை செய்யப்படும் என அறிவிப்பு உள்ளதும் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடலாம் என்பது நடைமுறைக்கு வந்தபின்பும் தமிழ் வழிபாட்டைப்பற்றிப் பெருமை கொள்ளாமல் இருக்கலாமா எனச் சிலர் எண்ணலாம். சிதம்பரம் கோயிலில் ஆரியவழிபாடு முடிந்தபின்பு வெளி மேடையில் சிறிது நேரம் தேவாரம் பாடத்தான் இசைவே அன்றி, தெய்வப் படிமம் உள்ள கருவறையில் தேவாரம் பாட இயலாது. மேலும், தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க் கோயில்களில் தமிழ்க் கடவுள்களுக்குத் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு அறிவிப்பு தேவைதானா? அறிவிப்பு எதுவும் இல்லாமலேயே தமிழில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்படவேண்டும். ஒரு சில கோயில்களில் மட்டுமே எழுத்து மூலமான வேண்டுகோளின் அடிப்படையிலேயே பிற மொழி வழிபாட்டிற்கு இசைவு வழங்கப்பட வேண்டும்.ளூளூ
நாம் எண்ணுவது போலக் காலங்காலமாகச் சமசுகிருதம் கோயில் மொழியாக இல்லை. பிற்காலச் சோழர் காலத்தில்தான் ‘ரிக் ஓதும் மறையவர்க்கு ஒரு கோயில்’எனத் தனியாக சமசுகிருத வழிபாட்டிற்கு என ஒரு கோயில் ஒதுக்கப்பட்டது. பின்னர் எல்லாக் கோயில்களிலும் புகுந்து கொண்டு இப்பொழுது காலங்காலமாகத் தமிழ் வழிபாடு நடைபெற்று வரும் சிறு தெய்வ வழிபாட்டு இடங்களிலும் அம்மன் கோயில்களிலும் புகுந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் கோயில் எழுப்பப்படும் பொழுது ஆரிய வழிபாடு சென்று அமர்ந்து கொள்கிறது. (உலகத் தமிழர்களே நீங்கள் உண்மையான இறைப்பற்றாளர் எனில், தமிழ் வழிபாட்டிற்கு மட்டுமே இடம் தாருங்கள்.)
சமய உரிமை அல்லது ஆகம வழிபாட்டு முறை என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிப்பது தமிழர்களின் இறைவழிபாட்டு உரிமைக்கு எதிரானது எனச் சட்டம் கொண்டு வந்து அத்தகையோரின் அடாவடிப் போக்குகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்கள் வழிபாட்டிற்கு வந்தேறிகள் தடைபோடுவது அறமல்ல என்பதை உணர வேண்டும்.
இறைவழிபாடு தமிழில் அமையப் போராடிக் கொண்டிருக்கும் இச் சூழலில், சிறு பூசாரிகளுக்குப் பயிற்சி என்ற பெயரில் சமசுகிருத வழிபாட்டு முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அநீதி உடனே நிறுத்தப்பட வேண்டும். தமிழர்களுக்காகத் தமிழர்களால் தமிழர்களின் உழைப்பால் தமிழர்களின் பொருளால் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் ஒன்றுதான் ஆட்சி செய்ய வேண்டும். இதை விரும்பாதவர்கள் தமிழகத்திற்கு வெளியே சென்று விரும்பியவாறு வழிபட்டுக் கொள்ளத் தடையில்லை.
‘இராமலீலா’என்ற பெயரில் ஆண்டுதோறும் இராவணன் உருவத்தை எரிப்பது தமிழர்க்கு எதிரான கொடும்போக்கு என்பதை உணர்த்தி அதைத்தடை செய்ய வேண்டும். இவ்விழாவானது தமிழர்க்கு – இலங்கைத் தமிழர்க்கு – ஈழத் தமிழர்க்கு – எதிரான உணர்வையே வடவருக்கு உண்டாக்கும் என்பதை உணர்ந்து நிறுத்த வேண்டும். பிற இன நல உணர்விற்கு எதிரான போக்கைச் சமய உணர்வு என்று கருதி ஏற்கக் கூடாது.
திரைப்படங்களோ, தொலைக்காட்சிகளோ, இதழ்களோ எவையாயினும் பெரும்பாலும் தமிழ்க்கொலையில் முதலிடம் பெறுகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் திரு என வரவேண்டிய இடங்களில் சிரீ என மாற்றிய தணிக்கையை ஏற்றுக் கொண்ட நாம், இப்பொழுது தமிழ்க்காப்பிற்கெனத் தணிக்கையை அறிமுகப்படுத்தினால்தான் நாம் பிறநிலைகளில் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றி காணும் என்பதை உணர வேண்டும். பிறமொழிக் கலப்பின்றித் தமிழைத் தமிழாகப் பயன்படுத்தினால் மட்டுமே, அரசு விளம்பரங்களும் நல்கைகளும் கடன் உதவிகளும் விருதுகளும் வழங்கப்பெற வேண்டும். தமிழோசையும் மக்கள் தொலைக் காட்சியும் இம்முயற்சிகளில் வெற்றி கண்டு வரும் பொழுது, தினமணியின் ஒரு பகுதி நல்ல தமிழில் செய்திகளைத் தந்து வெற்றி ஈட்டிக் கொண்டிருக்கும் பொழுது சிற்றிதழ்கள் பலவும் இலக்கிய இதழ்கள் பலவும் நல்ல தமிழில் வந்து கொண்டிருக்கும் பொழுது பிறவற்றால் ஏன் இயலாது? தமிழ், தமிழ் என முழங்கும் எல்லாக் கட்சிகளும் தத்தம் கட்சி இதழ்களைக் கலப்பு நடையின்றித் தமிழில் நடத்தியும் தமிழில் உள்ள தமிழ் இதழ்களை மட்டுமே வாங்குமாறு தொண்டர்களுக்கு வற்புறுத்தியும் தமிழின உணர்வை வெளிப்படுத்த வேண்டும் அதாவது, பிற மொழி இதழ்களைப் படிக்கத் தடையில்லை. ஆனால் தமிழில் வரக் கூடிய இதழ்கள் எனில் உண்மையிலேயே பிழையற்ற நல்ல தமிழில் வந்தால் மட்டுமே படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என அடையாளம் காட்டி அறிவுறுத்தினால் போதுமே! பண்பாட்டுச் சீர் குலைவான படைப்புகளைத் தணிக்கையின் மூலம் தடுத்தால், நாடகங்கள், படங்கள், தொகுப்பு நிகழ்ச்சிகள் மூலம் நடைபெறும் மொழிக் கொலைகளைத் தடுக்க இயலுமே!ளூளூ
வணிக நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கும் பொழுதே, நல்ல தமிழில் பெயர் இருந்தால் மட்டும் ஏற்பு அளிப்பின், இயல்பாகவே விளம்பரப் பலகைகளில் தமிழைக் காண இயலுமே பொதியப் பட்ட எப்பொருளாயினும் அதன் உறைகளில் தமிழைக் காணலாமே அவ்வாறாயின் இயல்பாவே மக்கள் நாவில் நற்றமிழ் நடமாடுமே!
இவ்வாறு கூறுவதெல்லாம் புதிய திட்டங்கள் அல்ல. பல நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்படுவனதாம். நம் நாட்டிலும் காலங்காலமாக வலியுறுத்தி வரப்படுவனவே.ளூளூ
தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையை ஆங்கிலத்திலும் (Madras எனக் குறிப்பிடாமல்) சென்னை என்றே குறிப்பிட வேண்டும் எனத் தமிழ் உணர்வாளர்கள் வேண்டுதலை ஆணையாக்கியது அரசு. ஆனால், உயர்நீதிமன்றம், பல்கலைக்கழகம் முதலான பல அரசுசார் அமைப்புகள், கல்வியகங்கள் இதனைப் பின்பற்றத் தேவையில்லையாம். சென்னை மருத்துவக் கல்லூரி என ஆங்கிலத்தில் பெயர் மாற்றப்பட்ட கல்லூரியின் பெயரை ஓர் ஆரிய மருத்துவர் கூறினார் என்பதற்காக மீண்டும் மதராசு மருத்துவக் கல்லூரி என்றே அழைக்கும்படித் தமிழாய்ந்த தலைவரே ஆணையிட்ட கொடுமை எங்கேனும் நடந்ததுண்டா? தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு எதிராகத் தமிழைப்பற்றி முடிவெடுக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பம்பாய் மும்பை எனவும் கல்கத்தா கொல்கத்தா எனவும் இவைபோல் பிற நகரங்கள் பெயர் மாற்றத்திற்கு ஆளாகும் பொழுது அந்தந்த மாநில மக்களின் உணர்விற்கு எதிராகச் செயல்படாமல் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், முதன்மைப் பொறுப்புகளில் அயலவர் ஆளுமை உள்ளமையால் அவர்களின் விருப்பம்தான் கோலோச்சுகின்றது. நாமும் வெட்கப்படாமல் ஏற்றுக் கொள்கின்றோம். ‘ஆரியர்க்குப் பாய்விரித்து ஆங்கிலர்க்குக்கற்பிழந்து பூரியர் செய் இந்திக்கு வால்பிடிப்போர்’நிறைந்துள்ள நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க இயலும்?
தமிழ்ப்பெயர் சூட்டப்படும்போது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் ‘பீடி’பல்கலைக்கழகம் எனச் சுருக்கப்படுவது போல் பெயர்கள் சுருக்கப்படக் கூடாது என்னும் நிலை வரவேண்டும். பேரறிஞர் அண்ணா தலைமைச் செயலகம் எனக் குறிப்பிட்டது ‘செக்கரட்டேரியட்டை’மட்டும்தான் என்று கூறி இன்றுவரை ‘செயிண்ட் சார்சு கோட்டை’எனக் குறிப்பவர்களே மிகுதியாக உள்ளனர். செயலக முகவரிகள், அமைச்சர்களின் மடலேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றிலும் இவ்வாறு குறிக்கப்படுவதை நாம் காணலாம். தலைமைச் செயலகம் தவிர, நடுவணரசின் அலுவலகங்கள், பல துறை அலுவலகங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஏன், இதனைத் தலைமைச் செயலக வளாகம் எனக் குறிக்கக் கூடாதா? இத்தகைய போக்கைப் போக்க, தமிழருக்கே உரிய ஐந்திணைப் பாகுபாட்டை உணர்த்த ‘ஐந்திணைக் கோட்டை’என்று பெயர் சூட்டக் கூடாதா? அல்லது ‘தமிழ்க் கோட்டை’என்று அழைக்கக் கூடாதா? பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் ‘கிரீன்வேய்சு சாலை என்று ஆங்கிலத்தில் இருக்க வேண்ணடுமா? பைந்தமிழ்ச் சாலை என்று மாற்றக் கூடாதா? வெள்ளையர் (whites) தெரு, கறுப்பர் (Blacks) தெரு, என்ற இனப்பாகுபாடு தேவைதானா? வெள்ளி வீதியார் தெரு அல்லது வெள்ளை நாகனார் தெரு, கார்நாற்பது தெரு எனப் புலவர்கள் நூல்களைச் சூட்டலாமே! இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் பல உள்ளன. காவல் ஆணையர் அலுவலகத் தெருவில் அவ்வலுவலகமே இப்போது இல்லை. சங்கப் புலவர் காவற்பெண்டு பெயரைச் சூட்டலாமே! மேலும் இவ்வாறான பெயர்கள் பல தமிழில் அமையாததால் அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அஞ்சலகங்கள் முதலியனவும் அயல்மொழிப்பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக ‘முனிசிபல் காலனி’மதுரையில் உள்ளது. அதனால் அந்தப் பெயரில் அஞ்சலகம் அமைந்துள்ளது. (மதுரை, மாநகராட்சியான பின்னும் அப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில் ‘மெயின் கார்டு கேட்’உள்ளது. (கீழவாயில், மேலவாயில் போல) ‘தலைவாயில் அல்லது தலைவாசல்’எனலாமே! இருக்கின்ற தெருப் பெயர்களை மொழிபெயர்த்துக் கொண்டிராமல், ஒத்துவரக்கூடிய அல்லது முற்றிலும் புதிய பெயர்களைச் சூட்ட வேண்டும். உணர்வே இல்லாத மக்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் வெறும் அரசாணைகளால் என்ன பயன்?
‘தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’என்னும் நிலை மேலும் மோசமடைந்து வீட்டிலும் தமிழ் இல்லை என்னும் இழிநிலை வந்து விட்டதைப் போக்குவதற்கு இவ்வாறு கல்வி, தொழில், வணிகம், அலுவலகம், இறைவழிபாடு,என எல்லா நிலைகளிலம் தமிழே இருக்க வகை செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்ச் சூழல் மட்டுமே தமிழ்நாட்டில் துலங்கச் செய்ய வீட்டிலும் ஏட்டிலும் ஊரிலும் பாரிலும் தமிழே ஆட்சி செய்யுமாறு தமிழுக்குத் துறைதோறும் உணர்ச்சி கொண்டே ஊழியம் செய்ய வேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற
6-ஆவது உலகத் தமிழர்கள் ஒற்றுமை மாநாடு – 2009
தி.பி.2040, புரட்டாசி 9,10,11 * கி.பி.2009 செப்டம்பர் 25,26,27
கோலாலம்பூர், மலேசியா
Leave a Reply