(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி)

தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

03

  “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம்.

  “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும். . . . தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிவதற்கு இவையன்றிப் பிற சான்றுகளை நாம் பெற்றோம் இல்லை. எனவே தமிழக வரலாற்றின் முதற்பகுதியே இந்நூல் எனக்கொள்ளுதல் தகும்.” (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம் 285) என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். அதனால்தான் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் தொல்காப்பியத்தைக் கற்க வேண்டும் என்கிறார் அவர். இந்திய வரலாறு எழுதுபவர்கள் தொல்காப்பியத்தைப்படித்து விட்டு எழுத வேண்டும் என்று கூறுகிறார் அவர். பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பியப் பரப்புரைப் பணியாலும் ஆராய்ச்சிப்பணியாலும் இன்றைக்குப் பலர் தொல்காப்பிய ஆர்வலர்களாக உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.   அதே நேரம் தமிழின் பெருமையை இழித்தும் பழித்தும் சொல்வோரும் உள்ளனர். அவர்களுள் ஒருவர் ‘தொல்காப்பியத்தின் சிறப்புகள் என நாம் தவறாக விளக்குகிறோம்’ என்கிறார்

  தாவரங்களுக்கும் உயிர் உண்டு என 1902 ஆம் ஆண்டில் அறிஞர் சகதீசு சந்திரபோசு(1858-1937) தம்முடைய ‘உயிருள்ளன – உயிரல்லனவற்றின் எதிரிவினைகள்’ (The Reaction of Living and Non-living) என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் தெரிவித்தார். உலகமே இதற்கென அவரைக் கொண்டாடுகின்றது. ஆனால், நம் தமிழர்கள் இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளனர் என்பதை நாம் உலகிற்கு உணர்த்தத் தவறிவிட்டோம். தமிழறிஞர்கள்,

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அவற்றோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனமே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே .

எனத் தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் பயிரினமும் உயிரினமே எனக் கூறியுள்ளதை இக்காலத்தவர்க்கு உணர்த்தி வருகின்றனர்.

  இதற்கு அவர் எழுதுகிறார். தொல்காப்பியர் ஒன்றும் கண்டுபிடிக்க வில்லையாம். இது பெரிய அறிவியல் தத்துவம் இல்லையாம். இப்படி எல்லாம் இருக்கின்றன என மேம்போக்காக எடுத்துச் சொல்லும் செய்திதானாம். தொல்காப்பியர் தாம் கண்டறிந்ததாக ஒன்றும் கூறவில்லை. “நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினர்” என்று தம் முன்னோர்கள் நெறிப்படுத்திய உண்மை என்றுதான் கூறுகின்றார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியருக்கு முன்பிருந்த தமிழ் அறிவியலாளர்கள் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதுடன் ஓரறிவு உயரி, இரண்டறிவு உயிர், மூன்றறிவு உயிர், நான்கறிவு உயிர், ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர் என வகைப்பாடுகளையும் விளக்கி உள்ளனர். இவற்றைத்தான் தொல்காப்பியரும்

புல்லும், மரனும் ஓரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா:28) என அடுக்கடுக்காக விளக்கி யுள்ளார்.

  தமிழால் பிழைக்கும் அந்த நண்பருக்கு இது வெறும் செய்தி என்றால் எதற்கு அறிஞர் செகதீசு சந்திரபோசை உலகம் பாராட்ட வேண்டும்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் அறிந்த அறிவியல் உண்மை என்பதைச் சொல்ல வேண்டியவர் மட்டந்தட்டிக் கூறுகிறார் எனில் அவரைப் போன்றவர்களின் செல்வாக்கை வீழ்த்தாமல் நாம் வாளாவிருந்து பயன் என்ன?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் திருவள்ளுவன் :Ilakkuvanar_thiruvalluvan03