தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி)
05
இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.
திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல நாடுகளில் அதற்கென எச்சட்டமும் இல்லாமல் இருந்தது. 1964இல் ஐ.நா. இதற்கெனக் கூட்டிய மாநாட்டில் எல்லா நாடுகளும் திருமணப் பதிவினைக் கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அப்பொழுதும் பல நாடுகள் நடைமுறைப் படுத்தாமல் 1979இல் மீண்டும் ஐ.நா. கூடித் திருமணப் பதிவைக் கட்டாயமாக்குமாறு அறிவுறுத்தியது.
ஆனால், தமிழ்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறை இருந்துள்ளது. வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் திருமண முறையைக்
“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (நூற்பா 1088)
என்கிறார்.
(கிழவன் – உரியோன். தலைவன். கிழத்தி – உரியோள், தலைவி.)
(தலைவன் தலைவியைக் கொள்ளுவதற்குரிய முறைமைப்படி கொடுப்பதற்குரியவர் கொடுப்பக் கரணத்துடன் பெற்றுக் கொள்வதாகும்.) கரணம் என்பது எழுதிப் பதிவு செய்வதைக் குறிப்பது எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுகிறார். இப்பொழுது திருமணத்தை உறுதி செய்யும் வெற்றிலை பாக்கு மாற்றும் நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்பர். இவ்வாறு எழுதி உறுதிப்படுத்தும் பழக்கமே பதிவு முறையாக மாறிற்று என்கிறார் அவர். தலைவனும் தலைவியும் இணைந்து வாழும் பொழுது பொய்யும் வழுவும் தோன்றி ஒருவரை மற்றொருவர் கைவிட்டுச் செல்லும் நிலையும் சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. அதனைத் தடுப்பதற்குத்தான் ஊரறி நன்மணமாக அமைய வேண்டும் என்பதற்காகத் திருமணப் பதிவு முறை தோன்றியது என்பதையும் தொல்காப்பியர் விளக்குகிறார்.
சிற்றூர் ஆட்சி அலுவலர் (V.A.O.) என இப்போது அழைக்கப்படுவோர் பணியாற்றும் முன்னர் நம் நாட்டில் கடந்த நூற்றாண்டு வரை இப்பணியை ஆற்றி வந்தவர்களைக் கரணம் என்பர். ஊர்க்கணக்கு எழுதும் கணக்குப்பிள்ளைகளாகப் பணியாற்றியோர் அனைவரும் கரணம் என அழைக்கப்படுவதில் இருந்தே முறையாக எழுதி வைப்பதைக் குறிப்பதே கரணம் எனலாம். ஆகவே இன்னாருக்கு இன்னார் வாழ்க்கைத் துணை என எழுதிப் பதியும் முறை கரணம் எனப்பட்டது எனலாம் என்பதைப் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கியுள்ளார். வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் ‘என்ப’ எனக் குறிப்பதால் அவருக்கு முன்பே இவ்வாறு திருமணத்தைப் பதியும் முறை இருந்திருக்கிறது எனலாம்.
கடந்த நூற்றாண்டில்கூடச் சில நாடுகள் திருமணப் பதிவை மேற்கொள்ளாதபொழுது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருமணப் பதிவு முறையைத் தமிழர்கள் பின்பற்றி உள்ளனர் என்னும்பொழுது பைந்தமிழர் பதிவு அறிவியலையும் பாங்குடன் அறிந்திருந்தனர் என்று சொல்லிப் பெருமை கொள்ளலாம் அல்லவா? ஆனால், நம் வரலாறு அறியாமல் பூனையப் பார்த்துத்தான் புலி பாய்ச்சலைக் கற்றுக் கொள்கிறது என்பதுபோல்பண்பாடுஅறியா ஆரியர் வந்துதான் தமிழருக்குத் திருமண முறையைக் கற்றுத் தந்தார்கள் என்போர் உயர் பதவிகளில் இருக்கும் பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply