(அகரமுதல 108 கார்த்திகை13, 2046 / நவ.29, 2015 தொடர்ச்சி)

தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

06

  “தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.“எனச் செம்மொழி முனைவர் க. இராமசாமி (சென்னை வானொலி நிலையம் நடத்திய இலக்குவனார் நூற்றாண்டு விழா – கருத்தரங்க உரை) தொல்காப்பியத்தின் சிறப்பை விளக்குகிறார். தமிழர்க்காக – தமிழ் மரபுகள் அடிப்படையில் – தமிழ்மரபுகள் காக்கப்பட – தமிழ் முந்துநூல்கள் கண்டு தமிழில் – தமிழரால் எழுதப்பெற்ற தொல்காப்பியத்தை ஆரிய வழி வந்ததாகக் கூறுவோரும் உளர்! அத்தகையோரை உச்சத்தில் ஏற்றிக் கொண்டாடும் நாம் தமிழர் எனப்பெருமைப்பட என்ன இருக்கிறது?

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தமிழர் பண்பாடு.

சாதி இரண்டொழிய வேறில்லை என்பது தமிழர் நடைமுறை.

  சாதி என்பதே தமிழ்ச்சொல்லல்ல என்பதிலிருந்தே சாதிப்பகுப்புமுறை தமிழர்க்குரியதல் என்பது நன்கு தெளிவாகிறது. ஆனால், நால் வருண வேறுபாட்டைப் புகுத்திய ஆரியர்கள், அதற்கேற்ப தொல்காப்பியத்தில் இடைச்செருகலைப் புகுத்தி, சாதிப்பகுப்புமுறை தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகத் தவறாகவும், இதன் அடிப்படையில் தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தொடர்ந்து இனப்பழிப்பைச் செய்து வருகின்றனர்.

  “மரம், செடி, கொடி முதலிய நிற்பன பற்றிய சொற்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன முதலிய இயங்குவன பற்றிய சொற்கள் யாவும் புலவர் தெரிந்திருத்தல் வேண்டும். மக்களைப்பற்றியும் அவர்களைச் சார்ந்தவற்றைப்பற்றியும் பிற இயல்களில் விளக்கப்பட்டுள்ளன. அங்ஙனமிருந்தும், விலங்குகளைப்பற்றியும் மரங்களைப்பற்றியும் கூறுமிடத்தில் எவ்விதத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகளைக் குறிக்கும் செய்திகள் கூறப்படுகின்றன. இங்ஙனம் கூறும் பதினைந்து நூற்பாக்களும் (மரபியல் 71 முதல் 85 முடிய) பின்னுள்ளோரால் இடையில் நுழைக்கப்பட்டனவே என்பதில் ஐயமே இன்று. “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்ற நூற்பாவும், “வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல் என மொழிப பிறவகை நிகழ்ச்சி” என்ற நூற்பாவும் குன்றின் விளக்கெனத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றன.” என்கிறார் தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 249).

  “நூல்களைப் பற்றியும் அவற்றின் வகை பற்றியும் செய்யுளியலில் ஆசிரியர் கூறுகின்றார். கூற வேண்டுவனவற்றை ஆங்கே கூறாமல் மரபியலில் கூறத் தலைப்பட்டதன் பொருத்தம் விளங்கவில்லை. உலகியல் மரபினையும் செய்யுளியல் மரபினையும் இங்கு விளக்குகின்றார் என உரையாசிரியர்கள் உள்ளதற்கு அமைதி கூறும் வகையில் உரைத்துள்ளனரேனும் நுணுகி ஆராய்வார்க்கு உண்மை வெளிப்படுதலில் தவறாது. சூத்திரம் என்ற சொல்லும் உத்தி என்ற சொல்லும் தாம் இடையில் புகுத்தப்பட்ட தன்மையை எளிதே புலப்படுத்துகின்றன. ஆதலின் நூறு முதல் நூற்றுப் பன்னிரண்டு முடிய உள்ள நூற்பாக்கள் ஆசிரியருடையனவல்ல என்பது அங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகின்றது.

  நூற்பாவின் இறுதியில் நூலின் புறனடையாக உரைக்கப்பட்டிருப்பது ஏனைய புறனடைகளோடு ஒப்பிடுமிடத்துத்தான் பின் வந்த பேதைப் புலவன் படைப்பெனப் பேசா நிற்கின்றது.” என்றும் இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியரான பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 250).

இவற்றை எல்லாம் அறிந்தும் தமிழினத்தை இழிவுபடுத்தும் வகையில் நால்வருணப்பாகுபாடும் வேறுபாடும் தமிழர்கள் ஏற்றுக் கொண்ட முறை எனக் கூறுவோர் ஏற்றமுடன் வாழ்கையில் நாம் தமிழர் எனப்பெருமைப்பட என்ன இருக்கிறது?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar_thiruvalluvan+10தமிழர் எனப் பெருமைப்பட என்னஇருக்கிறது?- 7