(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 6 தொடர்ச்சி)

தலைப்பு-தமிழன் என்பதில் பெருமை:thalaippu_thamizharenbathil_ennaperumai

07

  ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது.

 

தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 )

             செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 398)

             செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 400)

             தமிழ்கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)

             செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு

(தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம்)

  தமிழ் இலக்கியங்களில் ஆயிரக்கணக்கில் தமிழ் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கில் தமிழ் அடைமொழிகளுடன் குறிக்கப்படுகிறது. அவ்வாறிருக்க, தமிழ் மொழிக்குப் பெயரைப் பிற இனத்தார் அல்லது மொழியார் சூட்டினர் என்பது கேலிக்குரியதல்லோ?

  “உலகில் ஈராயிரத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ – ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.” என்கிறார் பழந்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 30).

  திராவிடம் என்று சொல்லாமல் நாம் தமிழ்க்குடும்ப மொழிகள், தமிழ்க்குடும்ப இனம் என்றே சொல்வோம். ஆனால், வேண்டுமென்றே திராவிடம் தமிழைக் குறிக்கின்றது என்பதை மறைத்துவிட்டு, தமிழில் இருந்து பிற மொழிகள் வந்தன என்பதையும் மறைத்து விட்டு, மூலத் திராவிட மொழி என்று ஒன்று இருந்ததாகவும் அதிலிருந்தே தமிழ் முதலான மொழிகள் தோன்றின என்றும் திரிப்போர் உலகில் செல்வாக்குடன் திரிகின்ற பொழுது நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்னஇருக்கின்றது?

  தலைசிறந்த மொழியியல் அறிஞர் தொல்காப்பியர். அவர் தமிழ் மரபைக் காக்க அன்றைக்கே நூல் எழுதினார். இன்றைக்கோ மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையர் தமிழின் சிதைவிற்கு வழிவகுத்து வருகின்றனர். பேச்சுவழக்கே மொழியின் உயிர் எனக் கூறிக் கொண்டு, கொச்சை நடைக்கு வாழ்வளித்துச் செந்தமிழை அழித்து வருகின்றனர்.

  “ஒலி எழுத்து முறைகளில் தமிழ் எழுத்து முறையே சாலச் சிறந்ததாக அமைந்துள்ளது. தமிழில் ஒலியைக் குறிக்கும் வரி வடிவங்கள் முப்பத்தொன்றேயாகும். ஆங்கிலத்தில் வரி வடிவங்கள் இருபத்தாறு என்றாலும் ஒரே வரி வடிவம் வெவ்வேறு ஒலிகளைத் தருகின்ற முறையில் சில எழுத்துகள் உள்ளன. தமிழில் அவ்வாறு இன்று. வல்லின எழுத்துகள் மெல்லினச் சேர்க்கையாலும், சார்ந்து வரும் பிற எழுத்துகளினாலும் ஒலிப்பு முறையில் சிறிது வேறுபடக் கண்டாலும் அதனால் பொருள் வேறுபாடு ஏற்படாது. மிகுமுயற்சியின்றி ஒலிப்பதற்குரிய எழுத்து முறையையுடையது தமிழேயாகும்.” என்கிறார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 27).

  உலகில் எழுத்து முறையை முதன் முதல் அமைத்துக் கொண்டவர் தமிழரே என்றும் தமிழரிடமிருந்து சுமேரியர் கற்றுப் பிற இனத்தவர்க்கு அறிவித்தனர் என்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். தமிழர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே செப்பமுள்ள எழுத்து முறையைக் கொண்டிருந்தனர் ஆதலின், எழுத்து முறை தமிழர்களிடமிருந்தே பிற மொழியாளர்க்குச் சென்றுள்ளது என்னும் கூற்றுப் பொருத்தமும் உண்மையும் உடையதாகவே தோன்றுகிறது. என்றும் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகிறார்(பழந்தமிழ் பக்கம் 26).

  “தமிழர்கள் எழுத்து முறையை என்று அமைத்துக் கொண்டனர் என்று எவராலும் வரையறுத்துக் கூற இயலாது. நமக்கு கிடைத்துள்ள நூல்களுள் ‘தொல்காப்பியம்’ தமிழ் எழுத்து முறையை விரிவாக ஒன்பது இயல்களில் ஆராய்கின்றது. இத்தகைய விரிவான ஆராய்ச்சி வேறு எம்மொழியினும் காண்டல் அரிது. ‘எழுத்து’ என்னும் சொல் ஒலி வடிவத்தையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஆதலின் பேச்சு மொழி தோன்றியவுடனே எழுத்து முறையையும் அமைத்துக்கொண்டனர் என்று எண்ண இடம் தருகின்றது. அன்றியும் தமிழில் வரிவடிவ எழுத்து ஒலி வடிவ எழுத்தையே சுட்டுகின்றது. கருத்தினையோ (idea) பொருளையோ (object) சுட்டுவதின்று.” என்றும் நற்றமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்குகின்றார் (பழந்தமிழ்: பக்கம் 26).

  இத்தகைய ஒலிவடிவச்சிறப்பு மிக்க தமிழ்எழுத்துகளை ஊடகங்கள் வழி சிதைப்பவர்களும் உலவும் பொழுது வாளாவிருக்கும் நாம் தமிழர் எனப் பெருமைகொள்ள என்ன இருக்கிறது?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

ilakkuvanar_thiruvalluvan+10

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8