தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி)
08
“தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே நம்நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும்” எனப்பயிற்றுமொழிப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்.(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284:285) இன்றைக்கு ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. தமிழ்வழிப்பள்ளிகள் உள்ள அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி புகுந்துவிட்டது. அது தானாகப் புகவில்லை. அரசால் புகுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழே கல்வி மொழி என்பதைச் செயல்படுத்தாத நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்கு, “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய நிலை என்ன? “தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை” என எத்தனைப் பாவேந்தர்கள் அவலக்குரல் எழுப்பினாலும் மாற்றிக் கொள்ளாத மாந்தர்களாக நாம் இருக்கின்றோம். வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கி
ஆற்றுக்குக்கரை போல் இலக்கியத்திற்கு இலக்கணம் தேவை. ஆனால், இன்றைக்கு இலக்கணத்தை அழித்து இலக்கியத்தையும் அழித்து வருகின்றனர்.
“இன்று தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் புலவர்களும் பெருகி வருகின்றனர். மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்டு சிலர் கட்டுரைகள் எழுதுகின்றனர்; பாடல்கள் இயற்றுகின்றனர். அவர்கள் தமிழிலக்கண மரபை அறியாமலும தமிழிலக்கிய மரபைப் புறக்கணித்தும் கருத்துச் செறிவின்றி நடையழகு இன்றி எழுதிக் குவிக்க முற்படுகின்றனர். முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட் செறிவும் பெறுதல் இயலாது.”(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 282) என்கின்றார் இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார். காலந்தோறும் இயல்பாக இலக்கண மரபில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால், இலக்கணமே தேவையில்லை எனத் தப்பும் தவறுமாக எழுதிக் கொண்டு அதனையே புது இலக்கியமாகக் கூறிவருவோர் பெருகி வருகின்றனர்.
இலக்கணங்கள் ஒலி வடிவ எழுத்துகளில் உரு வடிவங்கள் குறித்தும் கூறியுள்ளன. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்கிறது நன்னூல். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் இவ்வாறே கூறுகின்றது. ஆனால், தமிழ் வரிவத்தைச் சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டு சிலர் வாழ்ந்து வருகின்றனர். உரோமன் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேவாரம் படிப்பதற்கேற்ப வரிவடிவம் அமைய வேண்டும் என்று புதுப்புது வரிவடிவங்களைக் கற்பித்தும் கிரந்த எழுத்துகளுக்கு வாழ்வு தந்து கொண்டும் உள்ளனர். தமிழின் வாழ்விற்குத் தடையாக உள்ளவர்கள் தளர்ச்சியின்றி வாழ்கையில் நாம் தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 9)
Leave a Reply