(ஆவணி 22, 2045/ செப்.7,2014 தொடர்ச்சி)

heding-thamizharkalin-thaazhvumvazhvum

6. தமிழ்நாட்டிலுள்ள தற்போதைய மொழிச் சூழலை மாற்றுக:

  தமிழ்நாட்டில் தற்பொழுதுள்ள மொழிச் சூழலை உணர வேண்டும். இங்கு, ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’, ‘இன்றும் தமிழ்! என்றும் தமிழ்!’, ‘அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!’ என்பன போன்ற முழக்கங்கள் வெற்று ஆரவாரமாக உள்ளன என்பதுதான் உண்மை. கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் சட்ட மொழியாகவும் இறைமொழியாகவும் ஊடக மொழியாகவும் பணிவாய்ப்பு மொழியாகவும் பேச்சு மொழியாகவும் தமிழின் நிலை தேய்பிறையாகத்தான் உள்ளது. ஒரு சாராரின் உரைகள் இவற்றை வளர்பிறையாக மாற்ற இயலாது. மேலும், தமிழ் என்னும் பொழுது ஒரு சில தமிழ்ச் சொற்கள் கலந்த பிறமொழி நடையை நாம் தமிழ் என்று ஏற்றுக் கொள்ள இயலாது. இங்குத் தமிழைத் தேய்ந்த நிலையில் விட்டு விட்டு, உலகெங்கும் செம்மொழித் தன்மையைப் பரப்புவோம் என்பது பெற்றோர் பசித்திருக்க மற்றோருக்கு உணவு அளிப்பதுபோல்தான். எனவே, நம் நாட்டில் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் தாய்த்தமிழ் ஏற்றமுடன் இருக்கச் செய்வதையும் செம்மொழி மேம்பாட்டிற்கான அடிப்படைத் திட்டமாகக் கருத வேண்டும்.

  மொழிக்கல்வி என்ற முறையில் தமிழ்நாட்டில் பயிலுவோர் அனைவரும் தமிழை அறியச் செய்வதுபோல், கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் முதலான அனைத்துத் துறைகளிலும் மழலைநிலை முதல் உயராய்வுநிலை வரை தமிழ் இருக்கவும் இவ்வாறு தமிழைத் தெரிவுசெய்வோருக்கு உதவிகள் புரியவும் கல்விநிலையும் படிப்புதவி நிலையும் இருக்க வேண்டும்.++

thamizhariyacheyka_muzhakkam

  தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும் ஆங்கிலம், இந்தி, அரபி, உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, சமசுகிருதம், பிரெஞ்சு, செருமன் ஆகிய பிற மொழிகளில் அவரவர் வகுப்பு நிலைக்கேற்றவாறு தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பாடு, தமிழ் நாகரிகம் முதலிய சிறப்புகளை உணரும் வகையில் பாடநூல்களில் கட்டுரைகளும் பாடல்களும் கதைகளும் நாடகங்களும் இடம் பெறவேண்டும். இவ்வாறு, அயல்மொழிக் கல்வியைப் படித்தாலும் அதில் செம்பாதி தமிழ் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால்தான் தமிழ்நாட்டில் பயின்று உயர்நிலை அடைந்த பலரும் தமிழை அறியாதவராகவும் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டில் பயின்று இந்தியாவின் உயர்நிலைப் பதவிகளை அடைந்தவர்களால்தாம், தமிழ்நாட்டின் பல பகுதி, பிற மாநிலப் பகுதிகளில் சேர்ந்ததையும் இத்தகையோர் திருவள்ளுவரின் சிறப்பை அறியாமல் பிற மொழிவாணர்களைப் புகழ்வதையும் சங்கப் புலவர்களையும் தொல்காப்பியரையும் எண்ணிக்கூடப் பார்க்காமையையும் உணர்ந்தால் இத்தகைய நிலை அன்று முதல் இன்றுவரை இருப்பதை அறியலாம். எனவே, தமிழ்நாட்டில் கல்வி முழு நேரமாக இருந்தாலும் பகுதி நேரமாக இருந்தாலும் பிற இந்திய மொழிகளாக இருந்தாலும் பிற உலக மொழிகளாக இருந்தாலும் அம்மொழிப் பாடங்களில் உயர்தனிச்செந்தமிழ்ச் சிறப்பை உணர்த்தும் பாடப்பகுதிகள் வரும் கல்வியாண்டு முதலே இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ++

  தமிழ் நாட்டுக் கல்வி நிலையங்களில் படித்துப் பயனடைந்த, புகழடைந்த அயலவர் மிகுதி. எனினும் தமிழகச் சூழலில் தமிழுக்கு மதிப்பில்லை யென்பதால் தமிழ் அறியாமலேயே தமிழகத்தில் வாழ்ந்து விடுகின்றனர். எனவே, தமிழில் சான்றிதழ்த் தேர்ச்சியாவது பெற்றிருந்தால்தான் கல்வியகம் நடத்த இயலும்; தொழில் தொடங்க இயலும்; பணியாற்ற இயலும்; கலைத்துறைகளில் ஈடபட இயலும் என்னும் தமிழ்ச் சூழலைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

  இந்திய நாட்டின் முதல் குடிமகனாக அறிவார்ந்த தமிழ் மகன் திகழ்ந்த போதும் அண்டை மாநிலங்களின் தமிழ் எதிர்ப்பை மாற்ற முடியவில்லை. உலகப் புலவர் திருவள்ளுவர் சிலையைக் கூட கருநாடக மாநிலத்தில் 18 ஆண்டுகளாகத் திறக்க இயலவில்லை. (இக்கட்டுரை முடிக்கப்பட்ட பொழுது இச்சிலை திறக்கப்பட்டது. எனினும் மூவாறு ஆண்டுகள் உலகப் பாவலரின் திருவுருவம் மூடிக்கிடந்த அவலக் கறை கறைதானே!) தமிழக உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்பட்டும் மீட்பார் இல்லை. தமிழ்ச் சேய்மொழியினரே தமிழுக்குப் பகையாக இருப்பதன் காரணம் உண்மை வரலாற்றை உள்ளபடி நாம் பிறர்க்கு உணர்த்தத் தவறியதே ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் சார்நத சூழல் இருப்பின் இங்குள்ள பிற இனத்தவரால் தமிழின் அருமை உணரப்பட்டு அவரவர் தாய்நிலங்களிலும் தமிழருமை பரவும். எனவே, தமிழ் நாட்டில் உள்ள பிற மொழியினரும் தமிழில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் தமிழின் சிறப்புகளையும் அறியும் வகையில் நமது தமிழ்ப்பணி அமைய வேண்டும். அவர்கள் வாயிலாகவே பிற மொழி பேசும் பகுதிகளிலும் தமிழ்நலச் சூழலை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாக நல்லுறவையும் ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்தலாம்.

தமிழ் ஆட்சி மொழி என்றால் ஏதோ 2% அரசு ஊழியர்கள் ஒப்புக்கு நிறைவேற்றும் திட்டம் என்று பலர் கருதுகிறார்கள். அவ்வாறில்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநில, மைய, தனியார் துறைகள், அவைசார்ந்த அமைப்புகள், கல்வியகங்கள், வங்கிகள், அயலக நிறுவனங்கள் என அனைத்து அலுவலகங்களிலும் தமிழே அலுவல் மொழியாக ஆட்சி செய்ய வேண்டும். இதற்காகப் புதிய ஆட்சிமொழிச் சட்டம் ஒன்றைத் தமிழக அரசு பிறப்பித்து, அனைத்து நிலைகளிலும் அன்னைத் தமிழ் உடனே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்ற வரையறை இல்லாவிட்டாலும் இந்தியைத் தேசிய மொழியாக விளம்பரப்படுத்தப்படுவதை நிறுத்தச் செய்ய வேண்டும். மக்கள் மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள்தாம். பட்டியலிலுள்ள 31 மொழிகள் மட்டுமல்ல; பத்தாயிரத்திற்கும் குறைவில்லாத அளவில் பேசப்படும் பிற 100 மொழிகளும் தேசிய மொழிகள்தாம். பத்தாயிரத்திற்கும் குறைவாகப் பேசப்படும் மொழிகளையும் எண்ணிக்கை அடிப்படையில் அல்லாமல் இனத் தகுதி அடிப்படையில் தேசிய மொழிகள் என்று சொல்வதில் தவறில்லை. எனவே, தேசிய மொழி என இந்தி விளம்பரப்படுத்தப்பட்டு மிகுதியாகச் செலவினம் மேற்கொள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இந்திமொழியில் உருவாக்கப்படும் அகராதிகளின் முதன்மை நோக்கம் இந்திய மொழிகள் முழுமையும் சீரான ஒத்த கலைச்சொற்கள் நிலவ வேண்டும் என்ற போர்வையில் சமசுகிருத, இந்திச் சொற்களைத் திணிப்பதுதான். இந்தி மொழியில் கலைச்சொல்லகராதிகள், ஆட்சித்துறைச்சொற்கள் அகராதிகள் என்ற வகையில் அகராதிகள் வெளியிடுவதில் தவறில்லை. ஆனால், இந்திய மொழிகளுக்கான இந்தி அகராதி என்ற முறையில் வருவது பிறமொழிகளின் வளர்ச்சிக்கும் இந்தி முதன்மைக்கும் ஆழமாய் வழிவகுக்கும் என்பது விளக்காமலேயே புரியும். எனவே, குறைந்தது இந்நிலையிலாவது இதன் தீங்கைப் புரிந்து கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆந்திரா, பீகார், தில்லி(2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும் மொழியான சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படவேண்டும். தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.++

விரும்பும் மொழியைப் பயில உரிமை உண்டு என்றும் இந்திய நாடு என்னும் போர்வையிலும் யாரும் எதிர்ப்பு தெரிவிப்பின், அவர்களை மக்கள் இல்லாப் பகுதிக்கு அனுப்பி அவர்கள் விருப்பம் போல் படித்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.

ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்

சாக இந்தியா என்று சாற்றிடுவோம்

என்னும் பாவேந்தரின் முழக்கத்திற்குத் தேவையில்லாத சூழலை உருவாக்கி வலிவான பொலிவான இந்தியத் துணைக்கண்டத்தை உருவாக்க வேண்டும் எனில், தமிழே தமிழ்நாட்டின் கல்வி மொழி என்பதை நடுவணரசிற்கும் நாம் உணர்த்த வேண்டும்.ளூளூ

(தொடரும்)

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற

6-ஆவது உலகத் தமிழர்கள் ஒற்றுமை மாநாடு – 2009

தி.பி.2040,புரட்டாசி 9,10,11 * கி.பி.2009 செப்டம்பர் 25,26,27

கோலாலம்பூர், மலேசியா

ilakkuvanar thiruvalluvan