தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா?
ஒருவர் நலனுக்காக மற்றவர் குரல்கொடுக்கக்கூடாது என்பதும் ஓர் இனத்தவரின் நலனுக்காகப் பிற இனத்தவர் குரல் கொடுக்கக்கூடாது என்பதும் அறியாமையல்லவா? இனப்பற்றை ஆரவாரச் செயலாகக் கருதுபவர்கள் அப்படித்தான் அறியாமை மிகுந்தவர்களாக இருக்கின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்!
அண்மையில் எழுவர் பேரணிக்காக, வேலூரில் இருந்து சென்னை வரை ஊர்திப்பேரணி நடப்பதாக இருந்ததை அனைவரும் அறிவர்! அந்தப் பேரணிக்குப் பலதரப்பட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல் நடிகர் விசய்சேதுபதியும் 25 ஆண்டுகளாக அறமுறையின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கொடுமையாகக் கூறித் தானும் அப்பேரணியில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். உடன் ஆரவாரக் கூட்டத்தினர், “தெலுங்கன் நீ எப்படிக் குரல்கொடுக்கலாம்” எனக் கூக்குரல் இட்டுள்ளனர். வி்சய் சேதுபதி தமிழரா அல்லரா என்பதைப் பிறகு பார்ப்போம்! அவர் தெலுங்கர் என்றே வைத்துக்கொள்வோம்! நம் இனத்தவர் நலன்என்பது நமது போராட்டங்களால்மட்டும் கைகூடும் என்பது இன்றைய சூழலில் ஏற்கக்கூடியதா? உலக அளவில் இதற்கு வரவேற்பு வேண்டும் என்னும் நாம் இந்தியத் துணைக்கண்டத்தில் அதற்கான கருத்தாதரவைத் திரட்ட வேண்டாவா? இங்குள்ள ஈழத்தமிழர் நலன்களுக்கும் தமிழ்ஈழ மக்கள் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் தமிழரின் தாயகமான தமிழீழம் விடுதலை பெறவும் நாம் இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள பிறரிடம் ஆதரவு பெற வேண்டுமல்லவா? இந்திய அளவில் நெருக்கடி கொடுத்தால்தானே நாம் மத்தியஅரசை அடிபணியச் செய்ய முடியும்! குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டி என்ன பயன்?
நாம் முதலில் தமிழ்நாட்டில்வாழும் பிற இனத்தவரினடம் இதற்கான ஆதரவைப் பெற்று அவர்கள் வாயிலாகப் பிற மாநிலத்தவர் ஆதரவு பெறுவதுதானே நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்?
இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு மண்ணின் மைந்தர்களின் நலன்களில் பாராமுகமாக வாழ்வது என்பது சரியல்லவே! ஆனால், நமக்காகக் குரல் கொடுக்கவும் கை கொடுக்கவும் வருபவர்களையும் நாம் விரட்டியடித்தால், உண்மையில் விரட்டியடிப்போர்தானே இனப்பகைவராவார்.
தமிழனைப்போல் திரையில் நடித்துவிட்டு உண்மையில் தமிழர்க்கு எதிராகச் செயல்பட்டால் அத்தகையவரை எதிர்க்கலாம். ஆனால், திரைக்கு வெளியே தமிழர்க்காகக் குரல் கொடுப்பவரை மதித்து வரவேற்காமல் விரட்டியடிப்பது பண்பாடா? நடிகர் விசய்சேதுபதி நன்கு வளர்ந்து வரும் பண்பட்ட கலைஞராகத் திகழ்கிறார். அவருக்கென்றும் நேயர் கூட்டம் உள்ளது. திரைப்படக் கலைஞர்களைத் தெய்வத்திற்கு மேலாகவும எண்ணுவதே மக்களின் பழக்கமாகப் போகிவிட்டது. அத்தகைய நேயர்கள் இவரின் குரலைப்பின்பற்றி எதிரொலிப்பது கருத்தாதரவு பெருக்கத்திற்குத்தானே வழிவகுக்கும்! அவ்வாறிருக்க வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்கலாமா? இவர்களின் தனிப்பட்ட சிக்கல்களுக்கு இத்தகையோர் ஆதரவை இழக்க அவர்கள் முன்வரலாம். ஆனால், பிறருக்குத் தெரிவிக்கும் ஆதரவை எதிர்ப்பதற்கு இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? பேரறிவாளன் முதலானோர் இவர்களிடம் தெரிவித்தார்களா? எனவே, இத்தகைய அறிவற்ற செயல்களில் ஆரவாரக் கூட்டத்தார் ஈடுபட வேண்டா என அன்புடன் வேண்டுகின்றோம். நம் உரிமைக்கான ஆதரவு எங்கிருந்து வந்தாலும் வரவேற்க வேண்டும். அதுபோல் 25 ஆண்டுகளாகச்சிறைக்கொட்டடிகளில் துன்புறும் அப்பாவித்தமிழர்க் எழுவர் விடுதலைக்கான ஆதரவுக் கரங்களை யார் நீட்டினாலும் பற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆதரவு தராதவர்களை, அவர்கள் தமிழ்மண்ணில் இருந்துகொண்டே தனித்தீவுபோல் விளங்குவதாக எதிர்க்கலாமே தவிர, நமக்கான ஆதரவுக் கரங்கள் நீட்டுபவர்களை எதிர்க்கக்கூடாது.
தமிழ்நாட்டிலுள்ள அயலினத்தவர் தமிழர் நலன்கள் தொடர்பில் அமைதி காத்தால், தமிழர்களால் பிழைத்துக்கொண்டு தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்று கண்டிப்பதும், குரல்கொடுத்தால், வந்தேறிகள் ஒன்றும் குரல் கொடுக்க வேண்டா என்பதும் நடுநிலையற்றதும் பொதுநலனுக்கு எதிரானதுமாகும் என்பதை இத்தகையோர் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, எதற்கெடுத்தாலும் வந்தேறிகள் என வைவதையே தொழிலாகக் கொள்ளாமல்,
வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 471)
வேண்டும் என அறிந்து பிறரின் ஒத்துழைப்பபைப் பெற்று வெற்றி ஒன்றே இலக்கு என நடை போட வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
அணுவளவாவது மூளை என்கிற ஓர் உறுப்பு இருப்பவர்கள் அப்படிப் பேச மாட்டார்கள். எது எதற்குத்தான் எதிர்ப்புத் தெரிவிப்பது என இங்கு ஓர் வரைமுறையே இல்லாமல் போய்விட்டது.
இரசினி, கமல், விசய், அசீத்து போன்ற பெரிய நடிகர்கள் “தமிழ்!… தமிழன்!…” என்றெல்லாம் திரையில் வீரம் பேசிவிட்டு, தமிழர் சிக்கல் எதற்குமே குரல் கொடுக்காத தன்னலப் பிண்டங்களாக இருக்கும் வேளையில் நேற்று வந்த விசய் சேதுபதி, இயக்குநர் இராம் போன்றவர்கள் இந்தச் சிக்கலுக்காகக் குரல் கொடுத்ததை எண்ணி நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி! எப்படி இந்த அளவுக்குக் கூச்சமே இல்லாமல் சிந்திக்க முடிகிறது எனப் புரியவில்லை. விசய் சேதுபதி தெலுங்கர் என்றே வைத்துக் கொள்வோம். நீங்கள் சொல்லியுள்ளதுபோல், தமிழர்கள் எவ்வளவோ பேர் திரையுலகில் இருந்தும் அவர்களெல்லாரும் இந்தச்சிக்கலுக்குக் குரல் கொடுக்கத் துணியாதபொழுது தெலுங்கராக இருந்தும் இவர் குரல் கொடுக்கிறாரே என்று நாம் பெருமைதானே பட வேண்டும்? மாறாக, அது எப்படி இதைக் கண்டிக்க மனம் வருகிறது? பெரியார் பற்றிய மதிப்பீடுகளும் இப்படித்தான். அவர் தெலுங்கர் என்று மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, தமிழர்களுக்காகத் தன் வாழ்நாளையே காணிக்கையாக்கிய அவரை எப்படித் தெலுங்கர் எனச் சொல்ல முடியும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர் தெலுங்கர் என்றே வைத்துக் கொண்டாலும், தெலுங்கரான அவர் தமிழர்களுக்ககாக இவ்வளவு செய்திருக்கிறார் எனும்பொழுது இன்னும் அவரைப் போற்ற வேண்டிய கடமை நமக்குக் கூடுதலாகத்தானே ஆகிறது? மாறாக, தெலுங்கர் என எப்படித் தூற்ற மனம் வருகிறது உங்களுக்கெல்லாம்? மனிதப் பிறவிகளா நீங்களெல்லாம்?! வெட்கமாக இல்லை? என்னைப் போன்றவர்கள் கருதுவதை நன்றாக எதிரொலித்துள்ளீர்கள். இனியாவது போலி இனப்பற்றாளர்கள் திருந்தட்டும்!