தமிழர் நாகரிகம்– சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 20 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 21
11. நாகரிகம்
பண்பாடு அகத்தின் – உள்ளத்தின் – தொடர்புடையது. நாகரிகம் புறத்தின் பாற்பட்டது. உணவு, உடை, அணிகலன்கள், வசதி, வாய்ப்புகள், ஊர்தி, வீடு, நகர், வாழ்க்கைமுறை முதலியவற்றின் சிறப்பால் அறியப்படுவது. உள்ளச் சிறப்பால் உரையாலும், செயலாலும் பண்பாடு வெளிப்படும். செல்வச் செழிப்பால் நாகரிகம் உயர்ச்சியும் வளர்ச்சியும் பெறும். பண்பாட்டால் நாகரிகம் மாற்றமுறுதலும், நாகரிகத்தால் பண்பாடு வெளிப்படுதலும் உண்டு. திருவள்ளுவர் புறத்தோற்ற நாகரிகத்திற்கு மிகு மதிப்புத் தாராது பண்பாட்டுச் சிறப்பையே நாகரிகம் என்று கூறியுள்ளார்.
“பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்” (குறள்-580)
“உருவுகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து” (குறள்-667)
என்னும் குறட்பாக்களை நோக்குக.
‘நாகரிகம்’ என்னும் சொல் ‘நகர்’ என்பதன் அடியாகத் தோன்றியது. ‘நகர்’ என்பது முதலில் பலவகையாலும் சிறப்புற்று விளங்கும் பெரிய மாளிகையைக் குறித்தது; பின்னர் அம் மாளிகைகள் நிறைந்த இடமாம் பேரூரைக் குறித்தது. நகர் அல்லது நகரம் வழக்குக்கு வந்த பின்னர், பேரூர் வழக்கிழந்துவிட்டது. நகர் இன்று இந்திய மொழிகள் பலவற்றிலும் இடம் பெற்றுள்ளது.
நகர் வாழ்க்கை நாகரிக வாழ்க்கையாகிவிட்டது. நாகரிகத்தின் பிறப்பிடம் மாளிகைதான். ஆனால், பண்பாடு குடிசையிலும் தோன்றும். ‘நகர்’ என்பதும் ‘நாகரிகம்’ என்பதும் தூய தமிழ்ச்சொற்கள். தமிழர்கள் பிறருடைய கூட்டுறவைப் பெறுவதற்கு முன்னரே நாகரிகத்தாற் சிறந்து நாகரிகத்தை மதித்துப் போற்றினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுறுத்துகின்றன.
‘பண்பாடு’ உலகுக்கெல்லாம் என்றும் பொதுவாகும். நாகரிகம் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், காலத்துக்குக் காலம் வேறுபடும் இயல்பினது. ஆதலின், சங்க காலத் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் இன்றைய தமிழ்மக்களின் நாகரிகத்திற்கும் இடையே வேறுபாடுகள் காணப்படலாம்.
உணவு முறையில் சங்ககாலத் தமிழ் மக்களுக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு. அன்று புலால் உணவை யாவரும் விரும்பி உண்டனர். ‘புலனழுக் கற்ற அந்தணாளர்’ என்று பாராட்டப் பெற்ற கபிலரே தாம்,
“ புலவுநாற் றத்த பைந்தடி
பூநாற்றத்த புகைகொளீஇ, ஊன்துவை,
கறிசோ றுண்டு”
(புறநானூறு-14)
வாழ்ந்ததாக அறிவிக்கின்றார்.
முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் தம்மிடம் வந்த புலவர்கட்கும் பாணர்கட்கும் கறியும் மீனும் பல்வகையாகச் சமைத்துப் பெருவிருந்து அளித்துள்ளனர். சமைக்கும் முறையில் மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமைக்கப்பட்டது இன்னது என்று அறியாவகையில் கூடச் சமைத்துள்ளனர். சமையல் பற்றிய நூல்கள் இருந்துள்ளன. நூல்களில் கூறப்பட்ட முறைதவறாது சமைப்பதில் தேர்ந்தவர்களும் இருந்துள்ளனர். 1
உணவுமுறை வீட்டுக்கு வீடு மாற்றமுற்றிருந்ததை ஆற்றுப்படைகளால் அறியலாகும். மறை காப்பாளர் வீட்டில் மரக்கறி உணவுதான் இடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கறிவேப்பிலையுடன் வெண்ணெயில் வறுக்கப்பட்ட மாதுளங்காய்ப் பொரியலும் மாங்காய் வடு ஊறுகாயும் பல்வகைச் சோற்று வகைகளும் அங்கு இடப்பட்டனவாம்.1 புலால் உணவும் மரக்கறி உணவும் நாகரிக முறையில் சமைக்கப்பட்டதாக உள்ளன என்பது தான் இங்குக் குறிப்பிடத்தக்கது. மிகமிகப் பழங்காலத்திலிருந்தே புலால் உணவை நீக்கி மரக்கறி உணவைக் கொள்வோர் தமிழகத்தில் இருந்து வருகின்றனர் என்பதும் அறியத்தக்கது.
குடிவகைகள் மிகுதியாக இருந்துள்ளன. கள், தேறல், மட்டு, மது என அவை பலவகையாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை ஆக்கியும் வெளிநாடுகளிலிருந்து வரவழைத்தும் நாட்பட வைத்திருந்து விறுவிறுப்புச் சுவையை மிகுத்து உண்ணும் வழக்கமும்அறிந்திருந்தனர்.
“தேட்கடுப் பென்ன நாட்படு தேறல் ” என்றும் (புறநானூறு-392), ‘பாம்புவெகுண் டன்ன தேறல்’ என்றும் (சிறுபாணாற்றுப்படை-23) சிறப்பிக்கப்பட்டுள்ளன. புலவரும் புரவலரும் பொது மக்களும் உண்டாட்டு, விருந்து, விழா ஆய சிறப்புக் காலங்களிலும் பிற நேரங்களிலும் தேறல் அருந்தும் வழக்கம் சிறப்புற்றிருந்துள்ளது. பிறரை வாழ்த்துங் காலத்தில் கூட “நன்றாகத் தேறல் அருந்தி வாழ்வாயாக“ என வாழ்த்தியுள்ளனர். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்துங்கால்,
“யவனர் நன்கலந்தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற” ( புறநானூறு-56)
எனக் கூறியுள்ளார். யவன நாட்டிலிருந்து தேறல் வந்த செய்தியும் அழகிய பொற்கலங்களில் ஆரணங்குகள் ஊற்றிக் கொடுக்கும் நிலையும் குடித்துக்கொண்டே ‘வாழ்க’ என வாழ்த்தும் முறையும் அறியத்தக்கன. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார்,
“மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினிது உறைமதி பெரும
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே” (மதுரைக்காஞ்சி:780-2)
என வாழ்த்துவதூஉம் காண்க.
உண்பதற்கும் பருகுவதற்கும் பொன்னாலும் வெள்ளியாலும் புனைந்து செய்யப்பட்ட கலன்களைப் பயன்படுத்தியுள்ளனர். “இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு பொற்கலம்”1 என்றும், “மீன் பூத் தன்ன வான் கலம்”2 எனவும், “பெறலருங் கலம்”3 எனவும் அவை சிறப்பிக்கப்பட்டுள்ளன.
இன்றுபோல் அன்றும் அவர்கள் உண்கலன்களிலும் இலைகளிலும் உணவு கொள்ளும் உயர் நாகரிக முறையைப் பெற்றிருந்தனர்.
உடையை அற்றம் மறைப்பதற்கோ, மிகு தட்பவெப்ப நிலையினைத் தடுப்பதற்கோ அன்றி அணி நாகரிகத் தோற்றத்திற்காகவும் அணிந்துள்ளனர். உடை, ஆடை, வேட்டி, துணி, துண்டு, சீரை, மெய்ப்பை முதலிய யாவும் தனித்தமிழ்ச் சொற்களே. தமிழகத்தில் ஆடவரும் பெண்டிரும் அன்று முதல் இன்று வரை ஆடை உடுத்துவதில் பெருமாற்றம் இன்றியே வாழ்ந்து வருகின்றனர். இந் நாட்டில் எளிய வாழ்வினை மேற்கொள்வோர்க்கு நான்கு முழமே சாலும் என்றனர். “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” ( நல்வழி-28) என்று பிற்காலத்தார் கூறியிருப்பினும் கீழாடையும் மேலாடையுமாக இரண்டு ஆடைகளைச் சங்க காலத்தார் அணிந்திருந்தனர் (“உண்பது நாழி உடுப்பவை இரண்டே”, புறநானூறு-189). மேலாடை ஆடவர்க்கு மதிப்பிற்குரிய ஆடையாகக் கருதப்பட்டது. அரசரும் புலவரும் வேளிரும் செல்வரும் மேலாடையின்றி வெளியில் செல்லார். மேற்சட்டையை மெய்ப்பை என்றனர். கால்சட்டையைக் கச்சை1 என்றனர். போர் வீரர்களும் மன்னர்களும் கால்சட்டை அணிந்திருந்தனர். அவை பூ வேலைப்பாடுகள் பொருந்திப் பொலிவுற விளங்கின. தலையில் பாகையும் கொண்டிருந்தனர். காலில் செருப்பும்2 கவினுற அணிந்திருந்தனர். கொட்டைக் கரையபட்டுடையும், பாலாவி யன்ன மேலாடையும் விரும்பிக் கொண்டனர். மகளிரும் மார்பினை மறைக்கக் கச்சு3 அணிந்திருந்தனர். ‘பூங்கரை நீலம்’ புடை தாழ உடுத்திருந்தனர்.4
தாம் ஈடுபடும் செயல் முறைக்கு ஏற்ப ஆடையை மாற்றி மாற்றி யணியும் நாகரிகமும் கொண்டிருந்தனர்(பட்டினப்பாலை). மெல்லிய ஆடையையே விரும்பி மேவினர்; என்பதனை ஆடையை ‘நூலாக் கலிங்கம்’, ‘அரவுரி யன்ன அறுவை’, ‘ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்’, பல்கலைச் சில்பூங் கலிங்கம்’, ‘நேர்கரை நுண்ணூற்கலிங்கம்’, ‘இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்’, ‘காம்பு சொலித்தன்ன அறுவை’ எனப் பாராட்டிச் சிறப்பித்துள்ளமையால் அறியலாம். ஆடைகளை வெளுத்தலும், வெளுக்குங்கால் கஞ்சியூட்டலும் நன்கு அறிந்திருந்ததோடு அதற்கெனத் தொழில் புரிவோரையும் கொண்டிருந்தனர். ஆடைகட்குக் கண்ணுக்கு இனிய சாயம் ஏற்றலும் கைவரப் பெற்றிருந்தனர்.
நூலாடை, பட்டாடை, மயிராடை எனப் பலவகை யாடைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
Leave a Reply