(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  21 –  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  22

11. நாகரிகம் (தொடர்ச்சி)

அணிகலன்கள் அணிந்து கொள்வதில் ஆடவரும் பெண்டிரும் பெருமகிழ்வு காட்டினர்.  தலைமுதல் கால் வரையில் அணியக்கூடிய அணிகலன்களைப் பெற்றிருந்தனர் (புறநானூறு-378). அணிகலன்கள் பொன்னாலும் முத்தாலும் மணியாலும் செய்யப்பட்டிருந்தன (குறிஞ்சிப் பாட்டு ).

மணமகளுக்குத் தாலியணிதலும் அதனை ‘ஈகை யரிய இழையணி’(புறநானூறு-127) எனலும் உண்டு. 

மணமகன், மணமகளுக்குக் கையுறையாக அணிகலன்கள் அளித்தலும் அவற்றுள் காதலை அறிவிக்கும் அடையாளம் பொருந்திய மோதிரம் உண்டென்பதும் (மருதக்கலி-19) அக்கால நாகரிகச் சிறப்பை உணர்த்துவனவாம்.

கணவனை இழந்த மகளிர் தம் துயர மிகுதியால் அணிகலன்களைக் கழற்றிவிடுதல் உண்டு.   அதனால் அவர் ‘கழிகலன் மகளிர்’ எனப்பட்டனர்.  அணிகலன் தமக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சியை யளித்ததனால் அதனை ‘நகை’ என்றும் அழைத்தனர் போலும். உணவு உடை அணிகளால் சிறந்து மகிழ்ந்து வாழ்ந்தவர்கள் தமக்கென இல்லங்களையும் கொண்டிருந்தனர்.  ‘நாகரிகம்’ எனும்சொல்லே ‘நகர்’ என்பதன் அடியாகத் தோன்றியது என்றோம்.  ‘ நகர்’ என்பது முதலில் பெரிய மாளிகையைத்தான் குறித்தது என்றோம்.  ஆதலின், பெரிய பெரிய கவினுறு மாளிகைகளைக் கட்டி வாழ்ந்தவர்கள் சங்ககால மக்கள் என்று அறியலாம்.  ‘நெடுஞ்சுவர் நல்லில்’1 என்றும் ‘விண்பொரு நெடுநகர்’2 என்றும் ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர்’3  என்றும் கூறப்பட்டுள்ளமையால் வீடுகள் எல்லாம் மிக உயர்ந்தோங்கி இருந்தன என்று தெரியலாம்.  அவ் வீடுகளில் கண்டார் கண்களைக் கவரும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. ‘ ஓவத் தன்ன வினைபுனை நல்லில்’,4  ‘ஓவத் தன்ன உருகெழு நெடுநகர்’5 ‘கதிர்விடு மணியில் கண்பொரு மாடம்’6 எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளமை காண்க.

+++++

  1. ஐங்குறுநூறு 386
  2. அகநானூறு 167
  3. பெரும்பாணாற்றுப்படை வரி 405
  4. பதிற்றுப்பத்து 61
  5. பதிற்றுப்பத்து 87
  6. புறநானூறு 53

+++++

வீடுகளுக்குக் கதவுகளும் கதவுகளுக்குத் தாழ்ப்பாள்களும் பூட்டுகளும் இருந்தன. பூட்டுக்குரிய திறவுகோல் ‘தாழ்க்கோல்’7 எனப்பட்டது.வீடுகளைக் காப்பதற்குக் காவலர்கள் இருந்தனர்; நாய்கள் வளர்த்தனர்.

+++++

7. தொல்காப்பியம் எழுத்து

+++++

வீடுகள் கட்டுவதற்கு நல்ல நாளில் மனை நூற் புலவரைக் கொண்டு ஏற்ற இடமும் காலமும் அறிந்து அடிப்படைக்கல் நாட்டி அழகுற வீடு கட்டும் முறை பற்றியும் அதன் சார்பான பிற பற்றியும் ‘நெடுநல்வாடை’ யில் நீளப் புனைந்து கூறப்பட்டுள்ளன.

பீடுகெழு சிறப்பின் பெருந்தகை யல்லது

 ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்

 வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு

 வில்கிடந்த தன்ன கொடிய பல்வயின்

 வெள்ளி யன்ன விளங்குசுதை உரீஇ

 மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்

 செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்

 உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்

கருவொடு பெயரிய காண்பின் நல்இல்”

என அரசிக்குரிய தனியறை அழகுற வண்ணிக்கப்

பட்டிருப்பதை நெடுநல்வாடையில் (வரிகள் 106-14) படித்தறிந்து மகிழலாம்.

                இத்தகைய எழுநிலை மாடங்களில் பாவை விளக்குகள் நம் நாட்டிற் செய்யப்பட்டனவும், யவன நாட்டிலிருந்து பெறப்பட்டனவுமாய பல சுடர்விட்டு ஒளி செய்தன.  காற்றால் அணையாதனவும், எரிநெய்யை ஏந்து சுரை வழியாய்ப் பெற்று எரிந்தனவும் அக்கால விளக்குகளின்  சிறப்பியல்பைத் தெரிவிப்பனவாம்.

உறங்குவதற்குரிய கட்டில்களும், கட்டில்களில் இடப்பெற்றிருந்த மெத்தைகளும், இக்காலப் பெருஞ் செல்வர் இல்லங்களிலும் காண்டற்கரிதாகும்.

“வரைகுயின் றன்ன வான்தோய் நெடுநகர்

 நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை

 நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து”8 உறங்கினர்.

இன்றுயிற்கு இடையூறு இல்லாத வகையில் மங்கிய ஒளி விளக்கு மணியால் பெற்றிருந்தனர். 

                இவ் வீடுகளில் “கடவுட் கற்பொடு குடிக்கு விளக்காகிய புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் நன்னராட்டி”கள்9 நற்றலைமை பூண்டு இல்லறம் இனிதே நடாத்தினர்.  அவர்கள் தம்மை ஒப்பனை செய்துகொண்ட முறைமை இக்காலத்தையும் வென்றுவிடும்.  மகளிர் தம் தலைமயிரைக் கத்தரித்து ஒழுங்கு செய்து கொண்டமை10யும், நறுமணங் கமழும் எண்ணெயாலும், அகில் புகையாலும் தம் கூந்தலை என்றும் மணங்கமழுமாறு வைத்துக் கொண்டமையும் அக்கால அரிவையர் பெற்றிருந்த நாகரிக மேம்பாடாகும்.  நகங்களுக்கும் உதடுகளுக்கும் செவ்வண்ணம் ஊட்டுதலையும் செவ்வனே அறிந்திருந்தனர்.

வீடுகள் எல்லாம் தெருத்தெருவாக அழகுற அமைந்திருந்தன.  தெருக்கள் எல்லாம் அகன்று போக்குவரவுக்கு இடையூறின்றிப் பொலிந்தன.  ‘ ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெரு’11 என்பது காண்க.

+++++

8. அகநானூறு 93

9. அகநானூறு 184

10. கலித்தொகை, பாலை 31

11. நற்றிணை 200

+++++

 

தெருக்களில் இரவு நேரங்களில் இருள் போக்கும் விளக்குகள் எரிந்தன.  காவலர் சுற்றிக் கடுங்காவல் புரிந்தனர்.

“கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்

 தொடலை வாளர் தொடுதோல் அடியர்

 குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்

 சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்

 நிறம்சுவர்பு புனைந்த நீலக் கச்சினர்

 மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர்

 நிலன்அகழ் உளியர் கலன்நசைஇக் கொட்கும்

 கண்மா றாடவர் ஒடுக்கம் ஒற்றி

 வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்

 துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்

 அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த

 நூல்வழிப் பிழையா நுணங்குநுண் தேர்ச்சி

 ஊர் காப்பாளர்”

என மதுரைக்காஞ்சியில் (635-47) திருடர்களின் நிலையும் ஊர்காப்பாளர் சிறப்பும் கூறப்பட்டுள்ளமை கொண்டு அக்காலக் காவற்சிறப்பை அறிந்து மகிழலாம்.

மாடங்களில் வரைமிசை யிழிதரும் அருவியினைப்போல் வளிமுனை அவிர்வரும் கொடிகள் நுடங்கவும் தெருவில் சொரி சுரைகவரும் நெய்வழிபுஉராலின் பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழலவும் நன்னுதல் விறலியர் நகரில் ( வீட்டில்) அரசர் புகழ் பாடி ஆடினர் ( பதிற்றுப்பத்து : 5.7).

ஆடலும் பாடலும் அக்கால மக்கள் வாழ்வை அணி செய்தமையும் நாகரிகச் சிறப்பன்றோ? “குழலகவ யாழ் முரல, முழவதிர, முரசியம்ப விழவறா வியலா வணங்கள்“  நகரங்கள்தோறும் காட்சி தந்தன.

காலத்தை ஆண்டு, திங்கள், கிழமை, நாள் எனப் பகுத்திருந்தனர்.  ஓராண்டு பன்னிரண்டு திங்களும், ஒரு திங்கள் நான்கு கிழமைகளும், ஒரு கிழமை ஏழு நாள்களும், ஒரு நாள் ஆறு பிரிவுகளும் கொண்டிருந்தன.  ஒரு நாளின் பொழுதறிந்து கடனாற்ற குறுநீர்க் கன்னல் எனும் நாழிகை வட்டில் பெற்றிருந்தனர்.  அரண்மனைகளிலும் அரசியல் அலுவலகங்களிலும் பொழுதறிந்து நுவலும் பணியாள்கள் நியமிக்கப் பெற்றிருந்தனர்.

முகத்தல் அளவை, நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை யாவும் கொண்டிருந்தனர்.ஒன்று முதல் கோடிவரை எண்ணவும் தெரிந்திருந்தனர்.

பிறந்த நாளும், இறந்த நாளும், வெற்றிபெற்றுச் சிறந்த நாளும் கொண்டாடும் நாகரிக வாழ்வும் அவர்கள் அறியாததன்று.

 

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்