தமிழர் பண்பாடு –– சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 19 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 20
10. பண்பாடு
நல்லாட்சியின்கீழ்க் கல்வி முதலியன பெற்று இல்லற வாழ்வில் சிறந்து கடவுளுணர்வுடையராய் மெய்யுணர்ந்த மக்கள் பண்பாட்டில் உயர்ந்தோராய் இருந்திருப்பர் என்பதில் ஐயமின்று. ‘பண்புடைமை’யே மக்களை மாக்களினின்றும் பிரித்து உயர்த்துவதாகும். பண்படுத்தப்படும் வயல் நல்ல விளையுளைத் தருதல் போன்று பண்படுத்தப்படும் உள்ளமும் உலகிற்கு உயர் பயனை நல்கும். பண்புடையாளரால்தாம் உலகம் வாழ்கின்றது என்று திருவள்ளுவர் தெளிவுறக் கூறியுள்ளார்.
“பண்புடையார்ப் பட்டுண் டுலகம்; அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன் ” (குறள்-996)
கல்வி கேள்விகளாற் சிறந்து கூர்த்த மதியுடைய ராயினும் மக்கட்கே யுரிய பண்பினைப் பெற்றிராவிடின் அவர் மரத்துக்கே ஒப்பாவார் என்பதும் திருவள்ளுவரின் சீர்சால் கருத்தாகும்.
“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்” (குறள்-997)
மக்களுக்குரிய சிறந்த இயல்பு பிறருடன் கூடிவாழ்தலே. பிறருடன் கூடி வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பு பிறர் கூட்டுறவால் உள்மகிழ்ந்து நகையாடுதலாகும். இவ் வியல்பு ஒருவர்க்கு இல்லையேல் அவர்க்கு உலகம், ஞாயிறு விளங்கும் பகற்பொழுதினும் இருளடைந்ததாகும் என்பதும் பொய்யாமொழியாரின் மெய்ம்மொழியாகும்.
“நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.” (குறள்-999)
கோடி பலயாத்து நாடு பெரிது நந்தும் பல திட்டங்களை வகுத்துச் செயலாற்றக் கூடிய பெருஞ்செல்வம் ஒருவர் பெற்றிருப்பினும் அவர்க்குப் பண்புடைமை யின்றேல் அச் செல்வம் முழுவதும் மாசுடைக் கலத்தில் ஊற்றிய பால்போல் கெட்டுப் பயனற்றுவிடும்.
“பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று” (குறள்-1000)
என்பது செந்தமிழ்ப் பாவலரின் திருவாய்மொழி.
இவ்வாறு உலகுக்கு உயிரெனவும் ஒளி எனவும் மக்களுக்கு மாண்பு அளிப்பதெனவும் வாழ்வுக் குறு துணையாம் செல்வத்தைச் செந்நெறியில் துய்ப்பதற்குப் பயன்படு கருவி எனவும் புகழப்பட்டுள்ள பண்புடைமையில் சங்ககால மக்கள் சாலச் சிறந்து விளங்கியுள்ளார்கள்.
பண்புடையார் இயல்புகள் யாவை?
தமக்கென வாழாது பிறர்க்கென முயலுதல், கிடைத்தற்கரிய அமுதமே கிடைப்பினும் தாமே உண்ணாது பிறருடன் கலந்து உண்ணுதல், வாழ்வில் வெறுப்பற்று இருத்தல், மடியை மடியாக் கொண்டு ஒழுகுதல், தீயவற்றிற்கு அஞ்சுதல், தம் செயலால் புகழ் உண்டாகுமானால் உயிரையும் கொடுத்துக் கடனாற்றுதல், உலகத்தையே கொடுத்தாலும் பழியொடுபடும் செயலைச் செய்யாதிருத்தல், தாம் மேற்கொண்டுள்ள கருமத்தில் அயர்வற்று இருத்தல் என்பவை உயர் பண்புடையார்க்குரியனவாம்.
பிறர் நமக்கு அறிந்தோ அறியாமலோ பிழை செய்யுங்கால் நாம் நம்முடைய நற்பண்பை இழந்து விடுகின்றோம். பிறர் பிழை பொறுத்தலும் பிழை இழைத்தார்க்கு அவர் நாணுமாறு நன்மை செய்தலும் தலையாய பண்புகளாகும்.
திருவள்ளுவர் ‘இன்னா செய்யாமை’ எனும் தலைப்பில் கூறும் கருத்துகள் பண்புடையார் போற்றி ஒழுக வேண்டியன.
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்” (குறள்.314)
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போற் போற்றாக் கடை” (குறள்.315)
“இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்” (குறள்.316)
என்பனவற்றை உளத்திற்கொண்டு எவர் ஒழுகுகின்றனரோ அவரே உயர் பண்பாளர் ஆவார். நற்பண்புகளைக் கொண்டிலங்கும் நல்லியல்பைச் சான்றாண்மை என அழைப்பர் நம் வள்ளுவர் பெருமான். ‘சான்றாண்மை’ என்பது பல நற்குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளுந் தன்மையாகும். சான்றாண்மையுடையோர் சான்றோர் எனப்படுவர். சான்றாண்மைக்குரிய இயல்புகள் அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, பிறர் தீமை சொல்லாமை, பணிவுடைமை, தம் தோல்வியை எவரிடமும் ஒப்புக்கொள்ளுதல், இன்னா செய்தார்க்கும் இனியனவே செய்தல் என்பனவாம்; இவையுடையோரே உண்மையான பண்பாளர்; சான்றோர். சங்ககாலத்தில் இவை பண்பியல்புகள் என வற்புறுத்தப்பட்டன. பண்புடைமைக்கு உரியன எனக் கூற இவையன்றி வேறு யாவுள?
உண்மைப் பண்பு எந்தாட்டாருக்கும் எக்காலத்துக்கும் பொருந்துவனவாய் அமையும். நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம், மாறுவது உண்மைப் பண்பாகாது. உண்மைப் பண்பு இஃது என அறிந்திருந்த சங்ககால மக்களின் சிறப்புத்தான் என்னே !
குறமகள் இளஎயினி எனும் பெண்பாற் புலவர் ஏறைக்கோனின் பண்பியல்புகளைச் சிறப்பித்துக் கூறுகின்றார்.
“தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தான்நா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தினன் ஆதலும்
வேந்துடை யவையத்து ஓங்குபு நடத்தலும்
நும்மோர்க்குத் தகுவன வல்ல . . . . . . . .
* * * * *
பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே”
(புறநானூறு -157)
இங்கு, “தம்மைச் சார்ந்தவர் குற்றம் செய்யின் அதனைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிறர் ஒழுக்கம் கெட்ட நிலைக்குத் தான் நாணுதலும், படைக்குப் பழியளிக்காத வலிமையினைப் பெற்றிருத்தலும், அரச அவையில் செம்மாந்து நடத்தலும்” பண்புடைச் செயல்களாகக் கூறப்பட்டுள்ளன. ‘பிறர் ஒழுக்கக்கேட்டுக்குத் தான் நாணுதல்’ என்பது பொன்னெழுத்தில் பொறித்து வைக்கத் தக்கது அன்றோ? உண்மைப் பண்பாளர் தம் குற்றத்திற்குத் தாம் நாணுதலன்றிப் பிறர் குற்றத்திற்காகவும் தாம் நாணுவர். ஏன்? தாம் பிறந்த மனித இனத்தைச் சார்ந்த ஒருவன் இவ்வாறு பண்பு தவறிவிட்டானே என்று எண்ணுவதனால். ஆ! ஆ! இஃதன்றோ பண்புடைமையின் உயர் உச்சியாகும். இவ்வாறு நாணுவோர் பலராக இருப்பின் மனித இனம் பண்புடைமையால் சிறந்து விளங்குமன்றோ? பண்புக் குறைபாடு உடையோரும் விரைவில் திருந்திப் பண்பு நலம் சான்றவராக இலங்குவர் அன்றோ?
கபிலர் என்னும் புலவர் பெருமான் தமது குறிஞ்சிக் கலியில் தலைவன் ஒருவன் இயல்பை வண்ணிக்கின்றார்.
“ஒன்று இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும்; உலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்.
வல்லாரை வழிபட்டுஒன்று அறிந்தான்போல்
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையில் தணிக்க
வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்” 1
எனத் தோழியின் கூற்றாக அமைந்துள்ள இதில் பணிவுடைமையும், அடக்கமும், பிறர் துயர் போக்கும் வண்மையும் தலைவன் பண்பாக அமைந்துள்ள முறை எவ்வளவு இனிமையாக வெளிப்படுத்தப்படுகின்றது. இப் பண்பு நலன்கள் யாவரிடமும் இருக்க வேண்டியன அல்லவோ?
நல்லந்துவனார் எனும் நற்பெரும் புலவர் தமது நெய்தற்கலியில் பண்புநலங்கள் சிலவற்றைக் கூறுகின்ற இனிமை போற்றிக்கொள்ளத்தக்கது.
ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை என்பன நற்பண்பிற்குரிய இயல்புகள். இவை யாவென விளக்குகின்றார்.
“ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பெனப்படுவது தன்கிளை செறாமை
அறிவுஎனப் படுவது பேதையார் சொல்நோன்றல்
செறிவுஎனப் படுவது கூறியது மறாஅமை
நிறைஎனப் படுவது மறை பிறர் அறியாமை
முறைஎனப் படுவது கண்ணோடாது உயிர் வெளவல்
பொறைஎனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” 2
இங்கு விளக்கப்பட்ட இவை எவர்க்கும் வேண்டியவை. பண்பு என்பதற்கு கூறும் விளக்கம் எவரும் கூறாத ஒன்று. பிறர் தன்மை யறிந்து ஒழுகுதல்தான் பண்பாட்டின் தனி இயல்பாகும். அதனை இங்கு அழகுறச் சுட்டிக் கூறியுள்ள நலம்தான் என்னே!
‘முறை’ என்பது அறங்கூறும் அவையத்தார்க்கு இருக்க வேண்டிய இயல்பு ; நடுநிலை பிறழாத்தன்மை. கொலையிற் கொடியாரைப் பைங்கூழ்களைகட்டல்போல் ஒறுத்தல் அறங்கூறு அவையத்தின் கடனன்றோ? அதில் உறுப்பினராய் அக்காலத்தில் சான்றோர்தாம் இருந்தனர். ஆதலின், சான்றோர்க்குரிய பண்புகளை விளக்கப் போந்த அதனை உடன் கூறியுள்ளார்.
இவ்வாறு சங்ககால மக்கள் உயர் பண்புகளைப் போற்றி ஒழுகி வந்துள்ளனர்.
“பண்பாடு என்பது வாழ்வுபற்றிக் கொண்டுள்ள கொள்கை, மனித இனம், உலகம், கடவுள் ஆய முதலிய இவைபற்றிக் கொண்டுள்ள கருத்து ஆயவற்றின் துணைகொண்டு மதிப்பிடப் படுவதாகும். மாறுதலுறும் நிலைக்கேற்ப அமையும் உடை,நடத்தை,சொல்,எண்ணம், பழக்கம் முதலியவைபற்றி மதிப்பிடுவதற்கு உரியதன்று” எனப் பேரறிஞர் மாத்தியு ஆர்னால்டு கூறியுள்ளார். சங்கக் கால மக்களின் வாழ்வியல், கடவுட்கொள்கை, உலகக் கண்ணோட்டம் ஆயவற்றால் அவர்கள் உயர்ந்த பண்பாடு உடையவர்களாக வாழ்ந்தார்கள் என்று தெரிந்து மகிழலாம்.
+++
- குறிஞ்சிக்கலி-47
- நெய்தற்கலி-16
+++
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
Leave a Reply