தமிழர் வாணிகம் 2 – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 26 – தொடர்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 27
14. வாணிகம் ( தொடர்ச்சி)
காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், தொண்டி, முசிரி முதலியன உலகப் புகழ் பெற்ற துறைமுகங்களில் தலைமையானவை. “உலகுகிளர்ந் தென்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி”1 விரைந்து சென்று கொண்டிருந்தன. ”அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்”2 திசைகள்தோறும் திரிந்தன. ”நெடுங்கொடி நுடங்கும் நாவாய்கள்” 3 துறைமுகங்கள் தோறும் தோன்றின. பெரிய மரக்கலங்கள் கூம்புடனே மேல் விரிக்கப்பட்ட பாயையும் மாற்றாமல் அதன் மேற்பாரத்தை இறக்காமல் நுழையக் கூடிய துறைமுகங்களும் இவ்வாறு வரும் மரக்கலங்களால் வந்து நிறையும் பல்வகைப் பண்டங்களையுடைய கடற்கரைப் பட்டினங்களும் உடையனவாய் இருந்தன, அக்காலத் தமிழகம் என்பதனை,
“ . . . கூம் பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே” (புறநானூறு.30)
எனச் சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாராட்டுவதினால் அறியலாம்.
+++
- அகநானூறு-255
- பதிற்றுப்பத்து
- அகநானூறு110.
+++
பல்வேறு நாடுகளிலிருந்தும் பொருள்கள் வந்தன என்பதை,
‘வேறுபல் நாட்டுக் கால் தர வந்த
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை”
(நற்றிணை-295)
என்று கூறுவதனால் அறியலாம்.
நாட்டுக்கு வேண்டிய விலையுயர்ந்த பண்டங்கள் பெரிய கப்பல்களில் வந்து இறங்கி மலைபோல் குவிந்து கிடந்தன என்பதையும், கப்பல்கள் அஞ்சத்தகும் கடலில் அலைகளைப் பிளந்து கொண்டு கடுங்காற்றோடு கரை சேர்தலும் இன்னிசை முழங்க அவை வரவேற்கப்படுதலும் உண்டு என்பதையும்,
“வானியைந்த இருமுந்நீர்ப்
பேஎநிலைஇய இரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை இதைஎடுத்து
இன்னிசைய முரசுமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்குஇழிதரும்
ஆடியற் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கிருக்கைத்
தெண்கடல் ” (மதுரைக்காஞ்சி வரி 75-86)
என்று கூறுவதனால் தெளியலாம். இது பாண்டிய நாட்டுத் துறைமுகத்தின் காட்சி. துறைமுகங்கள்தோறும் கப்பல்கள் ஏற்றிவந்த பண்டங்களை இறக்குதலும், வெளிநாடுகட்குச் செலுத்தவேண்டிய பண்டங்களைக் கப்பல்களில் ஏற்றுதலும், ஓய்வு ஒழிவு இன்றி நிகழ்ந்து கொண்டிருந்தன. ஏற்றுமதி இறக்குமதிக் காப்பு வரிகள் இருந்தும் பொருள்கள் வருதலும் போதலும் குறையவில்லை. பெரிய காவல் ஏற்பாடுகள் இருந்தன. வலிமை வாய்ந்த வீரர்கள் பணிபுரிந்தார்கள். வெளிநாட்டுக்குச் செல்லும் பொருள்களின் மீது சோழ அரசின் அடையாளமாகும் புலிப்பொறியைப் பொறித்தனர். அங்குப் பணி செய்வோர்கள் நாட்டுப் பற்றும் அரசர்பற்றும் உடையோராய்ப் பொருள்களைக் காக்கும் தொழிலில் ஞாயிறு போன்று நாள்தோறும் அயர்வின்றி உழைத்தனர். இவர்கள் எல்லோரும் இவ்வகைத் தொழில்களை வழிவழியாகச் செய்து புகழ்பெற்றவர்கள்.
கட்டற்ற வாணிகம் (Free trade) நடந்தது. கடலிலிருந்து நீராவியாகச் சென்ற நீர் மலையில் பெய்வதும், மலையில் பெய்த நீர் மீண்டும் கடலுக்கு வருவதும் இயற்கையாக மாறி மாறி நிகழ்வது போன்று பொருள்கள் இந் நாட்டிலிருந்து வெளி நாட்டுக்குச் செல்வதும் வெளிநாட்டிலிருந்து இந் நாட்டுக்கு வருவதும் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருந்தன. இவ்வாறு வாணிகச் சிறப்புடன் விளங்கியது சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினம். கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் பெரும்புலவர் கவினுறக் கூறுவது பின்வருமாறு :
“ நல்லிறை வன் பொருள்காக்கும்
தொல்லிசைத் தொழில்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
தேர்பூண்ட மாஅபோல
வைகறொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்துஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்புஅறியாமை வந்துஈண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போர் ” (பட்டினப்பாலை 120-37)
இவ்வாறு சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினத்தைத் துறை முகமாகக் கொண்ட தமிழ்நாடு – சிறப்பாகச் சோழநாடு,
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு” 1
உடையதாகச் சிறப்புற்றிருந்தது.
யவன நாடுகளிலிருந்து பாவை விளக்குகளும், தண் கமழ் தேறலும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன.2 யவன நாட்டுக் கப்பல்கள் பொன்னொடு வந்து கறியொடு பெயர்ந்தன.3
+++
- பட்டினப்பாலை 185-93
- நெடுநல்வாடை வரி 101, புறநானூறு – 56, வரி18.
- அகநானூறு-149
+++
‘யவனம்’ என்பது முதலில் கிரேக்க நாட்டையும் பின்னர் உரோம நாட்டையும் குறித்தது. பின்னர் மேனாட்டனைத்தையும் குறிக்கும் சொல்லாகி அரபிய நாட்டையும் குறிக்க வழங்கியுள்ளது.
சங்கக்காலத்தில் பல வணிகர்களும் காவிரிப்பூம் பட்டினத்தில் வந்து தங்கியிருந்தனர். வேற்றுமையுணர்வின்றி அனைவரும் ஒன்றுபட்டு உறைந்தனர். என்றும் விழா நடக்கும் ஊர்போலவே மக்கள் கூட்டம் உடையதாய்க் காவிரிப்பூம்பட்டினம் காட்சியளித்தது.1 அக்காலத்தில் பட்டினம் என்றாலே அது காவிரிப்பூம்பட்டினந்தான் என்று அறியும் அளவு புகழ் பெற்றிருந்தது.
+++
- பட்டினப்பாலை 216-217
+++
சங்கக்காலத் தமிழ்நாடு வெளிநாட்டு வாணிகத்தாலும் நன்கு செழிப்புற்று ஓங்குவதற்குத் துணையாகக் கப்பலோட்டும் மாலுமிகள் ஆழ்கடலிலும் அச்சமின்றிச் சென்றனர். அவ்வாறு செல்வோர்க்குப் ‘பெருநீரோச்சுநர்’ என்னும் பட்டம் அளித்துப் பாராட்டினர். கடற்கரைகளில் கப்பல்கள் இரவில் கரைவந்து சேர்வதற்கு உதவியாகக் கலங்கரை விளக்கங்கள் இருந்தன. ‘கலங்கரை விளக்கம்’ எனும் சொல்லே நம் நாட்டுக் கப்பல் செலவுச் சிறப்பை நன்கு விளக்கும் தன்மையதாய் உள்ளது. “திரைகடல் ஓடியும் செல்வம் தேடு” என்பது நம் நாட்டுப் பழமொழி யன்றோ?
Leave a Reply