தமிழால் முடியாதா? – புலவர் வி.பொ. பழனிவேலனார்
இற்றை ஞான்று தமிழுக்கும் தமிழ் நாகரிகம், பண்பாட்டுக்கும் வந்து கொண்டிருக்கின்றன இடையூறுகள் பல. சமற்கிருதத்தால் தமிழ் அடைந்த கேட்டைச் சரி செய்ய இன்னும் நம்மால் இயலவில்லை. எது தமிழ்ச் சொல். எது சமற்கிருதச் சொல் என்று வேறுபடுத்திக் காண்பது தமிழ்ப் பெரும் புலவர்களால் கூட முடியவில்லை.
அடுத்து ஆங்கிலம் வந்தது. அதனால் பல தீந்தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்தன. இன்று தமிழ்ப் பேராசிரியர்கள் கூடத் தனித் தமிழில் பேசவோ எழுதவோ இயலாதவர்களாயுளர். தமிழ் வகுப்பில் விளக்கங் கேட்டால் ஆங்கிலத்தில் கூறுகிற அளவுக்கு மொழியறிவு குன்றி விட்டது அது மட்டுமா? ஆங்கில உடையணிந்து கொண்டு ஆங்கிலேயரைப் போல் நடிக்கத் தொடங்கிவிட்டனர். ஏன்? பேராசிரியர் மட்டுமன்று, தொடக்கப் பள்ளி ஆசிரியரும் ஆங்கில உடையணிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரைகுறை ஆங்கிலம் பேசித் திரியும் அறியாமை மலிந்துவிட்டது.
தமிழ் நாகரிகம் மறைந்து ஆரிய – ஆங்கிலக் கலப்பு நாகரிகம் தலையெடுத்து வருகின்றது. தமிழ்ப் பண்பாடு யாதென்றே பலர்க்குத் தெரியாது.
‘சாதி’ப் பட்டங்களை எங்ஙனம் படித்தவர்கள், சீர்திருத்தம் பேசுவோர்கூட விடாது பெயர்கட்குப் பின்னால் ஒட்டிக்கொண்டே வருகிறார்களோ அது போன்றே கலப்பு நாகரிகம் நம்மைக் கவர்ந்துவிட்டது. இவற்றைக் களைந்து தமிழ் நாகரிகம் பண்பாட்டை நிலைநாட்ட வேண்டுமெனத் தமிழ் நெஞ்சமுள்ள சான்றோர் தத்தளித்துக் கொண்டிருக்கும் போழ்து வடவரது இந்தி புகுத்தும் பணி நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டே போகிறது.
இந்தியால் தமிழுக்கு வரும் கேட்டினைப் பண்டு தொட்டுத் தமிழ்ப் பெரியார்கள் பலரும் கூறியும் எழுதியும் வருகின்றனர். தி.மு.க தோழர் தனித்து நின்று எதிர்த்தும் வருகின்றனர். பலர் சிறையிலும் தள்ளப்படுகின்றனர். இன்னும் பல தமிழ் ஏடுகள் எதிர்த்து ஆசிரிய உரைகள் எழுதி வருகின்றன. வடவர் சிறப்பாக இந்தி வெறியர்கள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது இந்தியைப் புகுத்துவதில் முளைந்து நிற்கின்றனர். இந்தியப் பாராளுமன்றில் தங்களுக்குப் பெரும்பான்மை உறுப்பினர் இருப்பதால் இந்தி பற்றிய எந்தச் சட்டத்தையும் எளிதில் நிறைவேற்றி விடுகின்றனர். சிறுபான்மையோர் எதிர்ப்புக் குரலுக்கு அவர்கள் செவிசாய்ப்பதே இல்லை.
பேராயக் கட்சி (காங்கிரசு) ஆட்சி ஒழிவதற்குள் நாவலந்திட்டு முழுவதும் (இந்தியா முழுமையும்) இந்தியைப் பரப்பிவிட்டு ஆங்கிலத்தை அகற்றிவிட வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள். கேட்கின்றவர்கட்கு 1965க்குப் பிறகும் ஆங்கிலம் நீடிக்கும் என்கின்றனர். இதனால் என்ன தெரிகிறது? என்றைக்காவது ஆங்கிலம் ஒழிக்கப்படும் என்பது தெளிவாகிவிட்டது.
வடக்குக் கோடியில், சீன போர்முனையமைத்துக் கொண்டு இந்தியாவைத் தாக்கிக் கொண்டேயிருக்கிறது. காசுமீர் பற்றி பாகித்தான் கனன்றுகொண்டு இருக்கிறது. சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு இன்னல் விளைத்துக் கொண்டு இருக்கிறது; பல கல் தொலைவு ஊடுருவிவிட்டது. கிழக்குப் பாகித்தானிலிருந்த இந்துக்களையெல்லாம் வெளியேற்றிக் கொண்டே வருகிறது. இந்தியாவில் உள்ள மக்கள் உணவுப் பொருள்களின் விலை உயர்வால் படும் துன்பங்கள் அளப்பில. அயல்நாடுகளில் உள்ள இந்தியர்களையும், தமிழர்களையும் அந்தந்த நாட்டு அரசு வெளியற்றி வருகிறது. தமிழ் நாட்டு மக்கள் ஏன்? இந்திய மக்களும் வாழ வகையின்றித் திண்டாடுகின்றனர். கிழக்குப் பாகித்தானிலிருந்து விரட்டப்படும் வடநாட்டார்களையெல்லாம் தமிழ்நாட்டில் குடியேற்றுகின்றனர். மதுரை – திருநகரிலும் குடியமர்த்தக் குடிசைகள் கட்டுகிறது அரசு. சென்னையில் நடைபாதைகளில் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கும் வீடில்லாமல் அலைந்து திரிந்து இரந்துண்டு வாழும் தமிழ்க் குடும்பங்கட்கும் வீடுகள் அமைத்து உதவத் தமிழ்நாட்டு அரசு கூட முன் வரவில்லை. இந்தியாவின் வடகோடியிலிருந்து வருகின்றவர்கட்குத் தமிழ்நாட்டில் வரவேற்பு. தன் வீட்டாரையெல்லாம் பட்டினி போட்டுவிட்டுப் பொதுத் தொண்டாற்ற புறப்பட்ட கதையாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு இன்றைய ஆட்சி மீதுள்ள வெறுப்பு அளவு கடந்து நிற்பதை ஆட்சியாளர் அறியாது இருக்கின்றனர். நெருக்கடி மக்கட்கு நாளுக்கு நாள் மிகுந்து வருகிறது.
(தொடரும்.)
Leave a Reply