rasini_rajini01vairamuithu01

 

கவிதை உலகிலும் திரைப்பாடல் உலகிலும் வைரமுத்துவிற்கு எனத் தனி இடம் உள்ளதை மறுப்பதற்கில்லை.  அவருக்குரிய  செல்வாக்கிற்கு அவர் எப்பொழுதோ ஒரு முறை என்றில்லாமல் எப்போதுமே தமிழ்நாட்டின் காசி ஆனந்தனாக வலம் வந்து பாவேந்தர் பரம்பரை போன்ற புதிய பாவலர் பரம்பரையை உருவாக்க இயலும். ஆனால், பணத்திற்காகவும் தன் சொல்லாற்றலைக் காட்டவும், தமிழினத்திற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவரை, தமிழுக்காக  வாழும் தகைமையாளர்போல் காட்டுவது பலரின் வருத்தத்திற்கும் உரியது. தன் தவறான செயலை அவரே பெருமைத்  தொனியில் கோச்சடையான் பட விழாவில் தெரிவித்துள்ளார்.

  இரசினிக்குத் தலைமுறை கடந்த ஆதரவு மக்களிடையே இருப்பது உண்மைதான். அதனாலேயே அவர் kochataiyan01தமிழர் தலைவராக இயலாது. அவரும் அப்படி எண்ணப் போவதுமில்லை. சிறந்த நடிகர்களுள் ஒருவர்; பொது வாழ்க்கையில் தன் முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்த தயங்காத தன்னம்பிக்கையாளர்; கெழுதகை நட்பை மறவாதவர் என்றெல்லாம் பாராட்டக்கூடிய பண்பிற்குரியவர். என்றாலும் தமிழ் மக்களால் அடையாளம் காணப்பட்டு, திரை உலகின் உச்சியில் ஏற்றப்பட்ட அவர் தமிழ் மன்பதைக்கு என்ன செய்துள்ளார்? ஒன்றுமில்லை.

 

  தமிழ் மக்கள் நெஞ்சில்  உச்சிக்கலைமீனாக இரசினிகாந்த்து குடியேறத் தன்  பாடல் வரிகளும் உதவின என்று பிறர் சூட்டிய புகழாரத்தை ஏற்றுக் கொள்வதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். அவர் மராத்தியரா, கன்னடரா, தமிழரா என்ற கேள்வி எழுந்தபோது, அந்த அடையாளச் சிக்கலைத் தான் எழுதிய வரிகள் தீர்த்தன என்று தெரிவித்துள்ளார்.

 அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு…

என்னை வாழ வைத்தது தமிழ்ப் பாலு…

என்னும் வரிகள்தான் அவை. தமிழ்ப்பால்தான் அவரை வாழ வைக்கிறது என்பது உண்மையே! தமிழ்ப்பால் தந்த தமிழன்னைக்கு அவர் என்ன செய்தார்? ஒன்றுமில்லையே!

இனஅடையாளச்சிக்கலைத் தீர்க்க,

என் ஒரு துளி வியர்வைக்கு

ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா

என் உடல்பொருள் ஆவியைத்

தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா

 

என்றும் எழுதினாராம். முதல்வரி உண்மைதான். இரண்டாம் வரியும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய ஒன்று. ஆனால், கொடுப்பது முறை என்று சொல்வதன் மூலமே கொடுத்துவிட்டது போன்ற மாயை நிலவ இவ்வரிகள் துணைநின்றன.

 

வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு

பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு

தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு

எனக் கேட்க வைத்தாரே!

 

துன்ப வெள்ளத்தில் சிக்கிய யாரை இரசினி கரையேற்றினார்?

பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழரெல்லாம் எழுச்சி பெற என்ன செய்தார்?

மக்களை மாக்களாக்கும் சாதியத் தீமைகளுக்கு எதிராக என்ன செய்தார்?

மது மயக்கத்தில் ஆழ்வதை இயல்பான ஒன்றாகக் காட்டினாரே தவிர,  மது போதையில் இருந்து மக்களை  மீட்க  திரைப்படம் வாயிலாகவாவது எதுவும் தொண்டாற்றினாரா? 

தமிழினத்தில் பிறந்தமைக்காக,  ஈழத்தமிழர்கள் கொல்லப்படும் கொடுமைக்கு எதிராக என்ன குரல் கொடுத்தார்?

 

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்

என எழுதிக் கொடுத்து வாயசைக்க வைத்தாரே! அதற்கு உண்மையாக நடந்துகொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் தெரிவித்திருப்பாரா?

  திரைப்படம் என்பது கற்பனை. அது வேறு! வாழ்வு வேறு! என்கின்றாரா? அப்படியானால் எந்தப் படத்திலாவது தமிழ் நலனுக்காக – தமிழர் மேம்பாட்டிற்காக – ஏதேனும் சிறு செயலாவது செய்திருப்பவராக வந்துள்ளாரா?

  பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தமையால் தண்டிக்கப்பட்டவர் தன் நண்பர் எனக்கூறி அவர்மீது பரிவுகாட்டிக் குரல் கொடுத்தாரே!  மீச் சிறு மின்கலன் ஒன்றை வாங்கித்தந்தைமைக்காகக்  கொலை வழக்கில் சிக்கிவைக்கப்பட்டுத் தூக்குமேடையா? வாழ்க்கைப் பாதையா என அல்லாடுகிறாரே பேரறிவாளன்! அவரின் மீதும் அவரைப் போன்ற  பழிபாவம் அறியாத பிறர் மீதும் பரிவு காட்டி ஏதும்  தெரிவித்தாரா?

 

  கலைஞர்கள் கட்சி அரசியலில் ஈடுபடாமல் இருப்பது தவறல்ல! ஆனால், வாழ்வரசியலில் அவர்கள் அமைதி காப்பது தீதல்லவா? முல்லை-பெரியாற்றுச்சிக்கல், காவிரிச் சிக்கல் என எதைப்பற்றியாவது படங்களிலாவது ஏதும் சொல்லியிருப்பாரா?

 

  தமிழுக்காகவும் தமிழர்க்காவும் ஒன்றும் செய்யாதவர் தமிழ்ப்பால் குடித்தது அவர் வளமைக்கே தவிர, நமக்காக அல்லவே!

  அப்படிப்பட்டவரை, மராத்தியனுமல்லன், கன்னடனுமல்லன், தமிழன் என அடையாளம் காட்டினார் எனில், அது,  தமிழனல்லாதவனைத் தமிழனாக அடையாளம் காட்டும் தமிழினத்திற்கு எதிரான திரிபு வேலைதானே!

 

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

     தெரிந்து ரைப்பது கவிதை

எனக்கவிமணி வழியில்

இனியேனும் உண்மையைமட்டுமே உரைக்கட்டும் கவியரசு வைரமுத்து!

 

வாயசைத்தமைக்காகவாவது உப்பிட்ட தமிழ் மண்ணுக்கு இனியேனும் தொண்டாற்றட்டும் உச்சிக்கலைமீன் இரசினி!

தமிழ்நலக் கலைஞர்களை மட்டுமே போற்றட்டும் தமிழர்கள்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

thamizh02