valaikuta vanambadi12 valaikuta vanambadi13  குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம் 14-03-2014 வெள்ளி அன்று மிகச் சிறப்பாக, தோழர் செங்கொடி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை வானம்பாடி நிறுவனர் திரு சேது அவர்கள் தொடங்கி வைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது. செல்வி அனு,  திருக்குறள்களைத் தன் மழலை மொழியால் வழங்க, நிகழ்ச்சி இனிதே  களைகட்டியது. நிகழ்ச்சிக்கு ”அரவணைப்பு” திரு இளங்கோவன், தொழிலதிபர் திரு சாமி, வானம்பாடிகள் உதவித் தலைவர் திரு அலெக்சு ஆகியோர் தலைமை வகித்தனர்.

  நிகழ்ச்சியில் மண்ணிசைப் பாடல்களை, திரு பாண்டி, செந்தில்,இராமகிருட்டினன் ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களை “புலி உறுமுது புகழ்” சண்முகம், திரு கணேசன், டென்சில் மற்றும் திருமதி செல்லம்மா வித்யாசாகர் ஆகியோரும்  பாடித் தங்களின் இனிய குரலால் கூட்டத்தைக் கட்டிப்போட்டனர்.

  கவியரங்க நிகழ்ச்சியில் புலியைப் பெற்றெடுத்த தமிழ்த்தாய் பார்வதி அம்மாளைப் பற்றிய மிக உணர்வுக் கவிதையைக் கவிஞர் முனு சிவசங்கரனும், மற்ற தலைப்புகளில்
கவிஞர் பட்டுக்கோட்டை சத்யா, கவிஞர் கவிசேய் சேகர், கவிஞர் வித்யாசாகர் ஆகியோரும் மிக சிறப்பாகப் பாடி அனைவரையும் ஈர்க்கச் செய்தனர்.

  பெண்ணியல் பகுதியில் அம்மாவும் பிள்ளையுமாக வந்து அரங்கை அதிரச் செய்தவர்கள் திருமதி சமுனா சிரீதரும்  அவருடைய செல்லமகள் செல்வி அகசுபா சிரீதரும்ஆவர்.  ”மகளே எனக்கு தாயானாள்” என்று தாயும் “பள்ளிப்பருவம்” என்ற தலைப்பில் மகளும்  கவிதை பாடினர். திருமதி நாகதேவந்தி, திருமதி தேவி இரவி அவர்களும் சிறப்பான கருத்துகளைப் பதிவு செய்தனர்.
கவிஞர் வித்யாசாகர் தோழர் செங்கொடியின் வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக எடுத்துரைக்க, கவிஞர் விருதை பாரி அவர்கள் ”மாயன்களின்” வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க, கவிஞர் பழ கிருட்டிணமூர்த்தி தமிழ் இலக்கியம் பற்றி இனிக்க இனிக்கப் பேச, பட்டுக்கோட்டை சத்யா  வேளாண்மை பற்றி விரிவாகச் சொல்ல, திரு சாந்தகுமார் எட்டு என்ற எண்னை வைத்து எட்டுக்கட்டிப் பாட, பேச்சரங்கம் மிக சுவைப்பட அமைந்தது.

  புத்தக ஆய்வுப் பகுதியில் மலையாள எழுத்தாளரும் நோபல் பரிசுக்கான எல்லாத் தகுதியும் இருந்த தனது புத்தகத்தைக் கூட அனுப்ப வேண்டா என்று மறுத்துத் தட்டிகழித்தவருமான ”சுருளிக்காடு” பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய “சிதம்பரஇரகசியம்” என்ற அற்புதமான நூலைப் பற்றி கவிஞர். முனு.சிவசங்கரன். மிக அருமையாக விளக்கிப் பேசினார்.

  தலைமையுரை ஆற்றிய திரு அரவணைப்பு இளங்கோவன் அவர்கள் “தொடு வானம் வெகு தூரமில்லை” என்ற தலைப்பில் தன் உரையை நிகழ்த்தினார்.

  சிறப்புப் பார்வையாளராக வந்திருந்த திரு ஆதிபாசுகர் அவர்கள் தன் எண்ணங்களை வெளிபடுத்த நிகழ்ச்சி இனிமையாக நடந்தேறியது.

  கவிஞர் செங்கை நிலவன் தொகுத்து வழங்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

(குறிப்பு. நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து தமிழறிஞரும் தாய்த் தமிழை கணினியில் ஏற்றி உலக தமிழர்களுக்கெல்லாம் தமிழை மிக நெருக்கமாக்கி வருபவருமான  ஐயா திரு பொள்ளாச்சி நசன் அவர்கள் தொடர்புகொண்டு பேசினார் ஆனால் ஊடகம் சரியாக ஒத்துழைப்பு அளிக்காததால் அடுத்த மாதக் கூட்டத்தில்  ஐயா அவர்களின் உரை தொடரும்)