(தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன் தொடர்ச்சி) 

தமிழின்பம் தனி இன்பம் 2/3

 

  நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில் கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி.

குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகை யில்லாத வரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச் சான்றோருடன் கூடி உரையாடி மகிழ்வதனாற் பெறும் இன்பத்தைவிட மேலுலக இன்பம் இனியது என்றால் பிறகு அதனைப் பற்றிக் கவனிக் கலாம் என்று கூறுகின்றது.

“தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்

     இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ

நகலி னினிதாயிற் காண்பா மகல்வானத்(து)

     உம்ப ருறைவார் பதி”

என்னும் நாலடியார்ப் பாட்டு இக் கருத்தைக் கூறுகிறது.

  பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டுள் ஒரு பாட்டு. இது கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர், கரிகாற் பெரு வளத்தானைப் பாடிய பாட்டு. இதன் பொருட்டு மன்னன், புலவருக்குப் பதினாறு கோடிப் பொன் பரிசிலாகத் தந்தனன், இச் செய்தி

“பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு

     கோடிபொன் கொண்டது நின் கொற்றமே”

என்னும் தமிழ்விடுதூது என்னும் நூலால் அறியப்படுகிறது.

“பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு

     கோடி பசும்பொன் கொடுத்தோனும்”

என்று சங்கரசோழன் உலா என்னும் நூலும்,

“தத்துநீர் வரால்குருமி வென்றதும்

     தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்

பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்

     பண்டு பட்டினப் பாலை கொண்டதுமே”

எனக் கலிங்கத்துப்பரணியென்ற நூலும் இச் செய்தியை எடுத்துப் போற்றுகின்றன.

  ஒரு நூலுக்குப் பதினாறு கோடி பொன் பரிசாகத் தந்தனன் அம் மன்னன் என்றால், அத் தமிழ் அவனுக்கு எத்தகைய இன்பந் தந்திருக்கக் கூடும். அந்த இன்பப் பெருக்கன்றோ அவனைப் பெருங் கொடைஞன் ஆக்கியுள்ளது.

  பட்டினப் பாலை என்னும் அச் சீரிய நூல், சோழநாட்டின் கண்ணமைந்த ஊரொன்றில் எழுப்பப்பட்ட பதினாறு கால் மண்ட பத்தில் அரங்கேற்றப்பட்ட பெருமையுடையது.

(தொடரும்)

-கவியரசர் முடியரசன்