(தமிழின்பம் தனி இன்பம் 2/3 – முடியரசன் தொடர்ச்சி) 

தமிழின்பம் தனி இன்பம்  3/3

 

  மாறவர்மன் சுந்தரபாண்டியன் முன்பகை காரணமாகச் சோழ நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். பொருது வெற்றியுங் கொண்டான். அவ் வெற்றிச் செருக்கால் ஊரைப் பாழ் படுத்த ஆணையிடுகிறான். படைவீரர் பாழ்ச்செயலில் ஈடுபடு கின்றனர். பெரும் பெரும் மாளிகைகள் தரைமட்டம் ஆக்கப்படு கின்றன. அதனைக் கண்டு, மாறன் வெற்றி வெறிகொண்டு நகைக்கின்றான். ஆனால், ஓரிடத்துக்கு வந்ததும் அவனது வெறி விலகு கிறது. ஆணவச் சிரிப்பு அடங்குகிறது. “அதோ அந்த மண்டபத்தை ஒன்றுஞ் செய்யாதீர், அப்படியே விட்டுவிடுங்கள்” என்று ஆணையிடு கின்றான்.

  அவ்வாணையைக் கேட்ட வீரர்கள் திகைத்து நிற்கின்றனர், வேந்தன் ஏன் இப்படித் திடீரென மாறினன் என வியப்புடன் அவனை நோக்கினர். “வீரர்களே, அது பட்டினப்பாலை என்னும் நூல் அரங்கேற்றப்பட்ட பதினாறுகால் மண்டபம்; அதனை பழுதுபடுத்திவிடாதீர்” என விழியில் ஒளி வீசப் பேசினான்.

  பாண்டியன் பகை மறந்தான்; வெறி விடுத்தான்; தமிழை நினைந்தான்; அத்தமிழ் அரங்கேறிய இடம் அவன் கண்ணெதிரில் தோன்றியது. அது தூய்மை வாய்ந்த இடம், வழிபடற்குரிய இடம் என்று எண்ணினான். அதனை மாசுபடுத்துதல் தகாது எனக் கருதினான். ஆதலால், அம் மண்டபத்தைப் பேணுக என்றனன். தமிழ், சோழனுக்கு மட்டும் உரியதன்று, நமக்கும் உரியது; அதனால் அது எங்கிருந்தாலும் வாழ்தல் வேண்டும்; மதிக்கப்படுதல் வேண்டும் என்று எண்ணினான். இதனால் மாறன் தமிழின்பாற் கொண்ட பற்றும் தமிழின்பாற் கண்ட இன்பமும் நமக்குத் தெரிகின்றன. அதுமட்டுமன்று; நமக்குப் பாடமாகவும் அமைகிறது, அவன் செயல். பகைமை காரணமாக நமக்குப் பொதுவான ஒன்றை இழந்துவிடுதல் கூடாது என்னும் பாடந்தான் அது.

  இம் மாறனுடைய செயலைத் திருவெள்ளறைக் கல்வெட்டி லுள்ள ‘வெறியார் தளவத் தொடைமாறன்’ எனத் தொடங்கும் பாடல் நமக்கு உணர்த்துகிறது. அப்பாடலில்,

“பறியாத தூணில்லை, கண்ணன்செய் பட்டினப்

     பாலைக்கு, அன்று

நெறியால் விடுந்தூண் பதினாறு மேசுங்கு

     நின்றவே”

என்ற பகுதி மண்டபம் காக்கப்பட்ட செய்தியைத் தெரிவிக் கின்றது.

“பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்

பசுங் கொண்டலே”

எனக் குமரகுருபரரும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிற் கூறுகிறார். திருமழிசை யாழ்வாருடைய பாடலைக் கேட்டதும் திருமால் தமது பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு ஆழ்வாருக்குப் பின்னே ஓடுகிறார். அவருக்குப் பின்னே அவர் துணைவியார் திருமகளும் தொடர்கிறார். தமிழுக்குப்பின் திருமால் ஓடக் காரணமென்ன? அத் தமிழ் தந்த இன்பமன்றோ? தமிழின்பம் ஆண்டவனை ஆட்டிப் படைக்கவல்லது; அரசரை ஆட்கொண்டு தன்வயப்படுத்த வல்லது. அடியவரை அகங் களிக்கச் செய்யவல்லது; மக்களுக்குக் களிப் பூட்டிச் சோர்வகற்றித் தென் பூட்டவல்லது.

 

கவியரசர் முடியரசன்