(தமிழ் வளர்த்த நகரங்கள் 10. – அ. க. நவநீத கிருட்டிணன்: மதுரை கடைச்சங்கம்- தொடர்ச்சி)

குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ், நான்காம் தமிழ்ச்சங்கம்

திருமலை நாயக்கர் குமரகுருபரரைத் தமது மாளிகையில் சிலநாட்கள் தங்கியருளுமாறு அன்புடன் வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய முனிவர் சின்னாள் மதுரையில் தங்கினார். அரசியல் அலுவல்களில் ஈடுபட்ட நாயக்க மன்னர் நாள் தோறும் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் கண்ட குமரகுருபரர், ஒருநாள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது,
“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்ற திருக்குறளை நினைவூட்டினர். ‘அரசே! நீவிர் எத்துணைச் செல்வம் படைத்திருந்தும் குறித்த காலத்தில் உணவுகொள்வதற்கு வாய்ப்பில்லேயே’ என்று வருந்தியுரைத்தார். அதுகேட்ட நாயக்கர், “அடிகளே! தாம் குறித்த பாடல் எந்நூற்கண் உள்ளது?” என்று வினவினர். உடனே குமரகுருபரர் திருவள்ளுவர் அருளிய பொதுமறையாகிய திருக்குறளில் உள்ளது அப்பாடல் என்றுகூறி, அந் நூலின் மாண்பையும் விளக்கினார். ‘ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங் குறட்பாக்களையும் நோக்கியுணர்வதற்கு எளியேற்குக் காலங்கிடையாது. ஆதலின் அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுருக்கமாகத் தொகுத்துச் சிறு நூலாக இயற்றித் தந்தருளவேண்டும்’ என்று மன்னர் அடிகளாரை வேண்டிக்கொண்டார். அங்ஙனமே திருக்குறட் கருத்துகளைச் சுருக்கி ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் சின்னூலாக ஒரே நாளில் உருவாக்கிக் கொடுத்தார். இதனைத் திருக்குறளாகிய தாய் உரிய காலத்தில் கருவுற்றுப் பயந்த ‘குட்டித் திருக்குறள்’ என்று அறிஞர் கொண்டாடுவர்.

குமரகுருபரரின் புலமைத் திறத்தையும் அருளாற்றலையும் கண்டு வியந்த திருமலை நாயக்கர் ஆண்டொன்றுக்குப் பதினாயிரம் பொன் வருவாயுடைய அரிய நாயகபுரத்தை அவருக்குப் பரிசாக வழங்கிப் பாராட்டினர். அச் செல்வமே இன்று காசிமாநகரில் குமார சாமி மடமாகவும் திருப்பனந்தாள் ஆதீனமாகவும் திகழ்ந்து அறப்பணிகளுக்குச் சிறப்பாக உதவி வருகிறது.

மேலும், இவ் அருட்கவிஞர் மதுரையில் வாழ்ந்த நாளில் மதுரைக் கலம்பகம், மீனாட்சியம்மை குறம் மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களையும் பாடித் தமிழை வளப்படுத்தினார்.

பரஞ்சோதியார் வளர்த்த பைந்தமிழ்

திருவிளையாடற் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்டவர்; வடமொழி தென்மொழிகளில் வல்லவர்; நுண்ணறிவும் நூலறிவும் படைத்தவர்; சிவபத்தியும் செந்தமிழ்க் கவிபாடும் திறனும் உடையவர். இவர் பிறவிக் கடலைக் கடத்தற்கு நன்னெறி காட்டும் ஞானாசிரியரை நாடிச் சிவத்தலங்களைத் தரிசித்து வந்தார். சிவராசதானியாக விளங்கும் மதுரைமா நகரை அடைந்தார். இந்நகரில் சின்னாள் தங்கி அங்கயற்கண்ணியையும் சொக்கலிங்கப் பெருமானையும் வழிபட்டு வருங்காலத்தில் ஒருநாள் ஞானாசிரியர் ஒருவரைத் தரிசித்து அவரை வணங்கி ஞானோபதேசம் பெற்றுச் சைவத் துறவு பூண்டு விளங்கினார்.

இவரது இருமொழிப் புலமையையும் வாக்கு நலத்தையும் கண்டுணர்ந்த மதுரைமாநகரப் பெருமக்கள் பலர் அவரைக் கண்டு அடிபணிந்து வடமொழியில் உள்ள ஆலாசிய மான்மியத்தைத் தமிழில் பாடித் தந்தருளுமாறு வேண்டினர். இவரும் அன்பர்களின் கருத்தை நிறைவேற்றும் மனத்தினராய் ஒருநாள் துயில் கொள்ளும்போது அங்கயற்கண்ணம்மை இவரது கனவில் தோன்றி, “நம் பெருமான் திருவிளையாடலைப் பாடுவாயாக!” என்று பணித்து மறைந்தருளினார். உடனே முனிவர் விழித்தெழுந்து மீனாட்சியம்மையின் திருவருளைச் சிந்தித்து வியந்து அவர் கட்டளைப்படியே ‘சத்தியாய்’ என்ற மங்கலச் சொல்லால் தொடங்கிக் சோமசுந்தரப்பெருமான் நிகழ்த்தியருளிய அறுபத்து கான்கு திருவிளையாடல்களையும் திருவிளையாடற் புராணமாகத் தெய்வ மணங்கமழும் பாக்களால் ஆக்கி யுதவினார். மேலும் இவர் திருவிளையாடற் புராணத்தின் சாரமாக ‘மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’ என்ற ஒரு சிறு நூலையும் மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி’ என்னும் சிறு பிரபந்தத்தையும் பாடியருளினார்.

நான்காம் தமிழ்ச்சங்கம்

கடைச்சங்கம் மறைந்து பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர்ப் பாலவனத்தம் குறுநிலமன்னராகிய பாண்டித்துரைத் தேவரால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பெற்றது. இவ்வருஞ்செயலுக்குப் பெருந்துணையாக இருந்தவர் இராமநாதபுரம் மன்னர் பாசுகரசேதுபதியாவார். இவ் விருவரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையாளர். ஒரு பொருளைப் பற்றிப் பல மணி நேரம் நீண்ட சொற்பொழிவாற்றும் ஆன்றமைந்த நாவலர்கள். பாண்டித்துரைத் தேவர் எப்பொழுதும் புலவர் குழாம் தம்மைச் சூழத் தமிழ்க்கலைப் பெருவெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருப்பார். பல நகரங்களுக்கும் சென்று இலக்கியச் சமயச்சொற்பொழிவாற்றி மக்களை மகிழ்விக்கும் இயல்பினராய் விளங்கினார்.

இத்தகைய தமிழ் நாவலராகிய பாண்டித்துரைத் தேவர் ஒருகால் மதுரைமாநகருக்குச் சொற்பொழிவின் பொருட்டு வந்திருந்தார். அவ்வமயம் ஒருசில குறிப்புக்களைப் பார்த்துக்கொள்ளுதற்காகக் கம்பராமாயணமும் திருக்குறளும் யாரிடமிருந்தேனும் பெற்றுவருமாறு தமிழ் வளர்த்த மதுரை பணியாளரை அனுப்பினார். மதுரையில் வாழும் சில முக்கியமானவர்கள் வீட்டிற்கூட அந்நூல்கள் இல்லை. நாட்டிலுள்ள புலவர்களையெல்லாம் கூட்டிச் சங்கம் அமைத்துத் தமிழாய்ந்த துங்க மதுரையில் ‘தமிழுக்குக் கதி’யென விளங்கும் கம்பரையும் திருவள்ளுவரையும் காணுதற்கில்லையே என்று பெரிதும் கவன்றார்; தமிழ்ப் புலவர்களும் தமிழ்ப் பயிற்சியும் இல்லாதிருப்பது கண்டு உள்ளம் இனைந்தார். அன்றே மதுரையில் தமிழ் தழைத்தோங்குதற்குரிய முயற்சியை மேற்கொண்டார்.

1901 ஆம் ஆண்டு மதுரையில் சென்னை மாநில அரசியல் மாநாடு கூடியது. அம் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராகப் பாண்டித்துரைத் தேவர் அமைந்தார். அம் மாநாட்டின் முடிவில் மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவக் கருதியிருக்கும் தம் கருத்தினை வெளி யிட்டார். தேவரின் முயற்சியையும் கருத்தையும் மாநாட்டிற்கு வந்திருந்த பெருமக்கள் அனைவரும் முழுமனத்துடன் ஆதரித்துப் பாராட்டினர். அம் மாநாட்டைத் தொடர்ந்து சங்கம் நிறுவும் முயற்சிகள் நடைபெற்றன. 1901 ஆம் ஆண்டு செட்டம்பர்த் திங்கள் 14 ஆம் நாள் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி. மண்டபத்தில் பேரவையொன்று கூடிற்று. அதில் தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள், பெரும்புலவர்கள், செல்வர்கள் ஆகிய பலர் கலந்துகொண்டனர். இராமநாதபுரம் மன்னர் பாசுகர சேதுபதியும் கலந்துகொண்டார். இத்தகைய பேரவையில் பாண்டித்துரைத்தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினர்.

தேவரின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பாசுகரசேதுபதி, சங்கம் தழைத்து நிலைத்தற்குத் தம் சமசுதானத்தின் வழியாக என்றும் பெரும்பொருள் கிடைக்குமாறு உதவினர். பாண்டித்துரைத் தேவர், மதுரை வடக்கு வெளி வீதியிலிருந்த தம் மாளிகையைத் தமிழ்ச்சங்கத்திற்கு உவந்தளித்தார். இச் சங்கத்தின் அங்கங்களாகச் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை, நூலாராய்ச்சிச்சாலை, சங்கப் பதிப்பகம் முதலியவையும் அமைக்கப்பெற்றன. கல்லூரியின் தலைமையாசிரியராக வடமொழி தென்மொழிப் புலமை சான்ற திரு. நாராயண ஐயங்கார் நியமிக்கப்பெற்றார். இரா. இராகவையங்கார் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக நியமனம் பெற்றார். இவரை ஆசிரியராகக் கொண்ட ‘செந்தமிழ்‘ என்னும் திங்களிதழ் தொடங்கப்பெற்றது. சுப்பிரமணியக் கவிராயர், அருணசலக் கவிராயர், கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் நூற்பதிப்பாளர்களாக அமைந்தனர். அரசஞ் சண்முகனார் போன்ற சிறந்த தமிழ்ப்புலவர்கள் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

கல்லூரியில் பயிலும் மாணவர்க்கு உண்டியும் உறையுளும் வழங்கப்பெற்றன. கல்லூரித் தேர்வுகள் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்று மூன்றாகப் பகுக்கப்பெற்றுப் பாடத்திட்டங்களும் வகுக்கப்பெற்றன. இத் தேர்வுகளில் முதன்மை யாகத் தேர்ச்சி பெறுவார்க்குப் பொற்பதக்கம், பொற் கடகம், பொற்காசுகள் போன்ற பரிசுகள் புதுக்கோட்டை மன்னரால் வழங்கப்பெற்றன. சங்கத்தின் வளர்ச்சிக்குக் குறுநிலமன்னர்களும் பெருநிலக்கிழார்களும் வணிகப் பெருஞ்செல்வர்களும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பொருளுதவியை விருப்புடன் கொடுத்து வந்தனர்.

1956 ஆம் ஆண்டில் தமிழவேள் பி. டி. இராசன் அவர்கள் பெருமுயற்சியால் இச்சங்கத்தின் பொன் விழாப் பேராரவாரத்துடன் நடைபெற்றது. அதன் பின்னர் இச்சங்கம் புலவர் கல்லூரியாகப் புதுப்பிக்கப் பெற்று ஆக்கமான தமிழ்ப்பணிகளை ஊக்கமாகச் செய்துவருகிறது.

(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்