(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  தொடர்ச்சி)

தலைப்பு-தலைமைப்போராளிஇலக்குவனார், மறைமலை ;thalaippu_thalaimiapoarali_ilakkuvanar_maraimalai

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3

  1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது.

  1936-இல் தஞ்சை நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியேற்ற இலக்குவனார் தாம் பணியாற்றிய பள்ளிகளிலெல்லாம் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோவடிகள் விழா, ஔவையார் விழா எனப் புலவர்விழா நடத்தித் தமிழின் மாண்பையும் தமிழரின் நாகரிகச் சிறப்பையும் திருக்குறளின் பெருமையையும் மாணவர்கட்கு மட்டுமின்றிப் பெற்றோர்க்கும் உணர்த்தினார். 1937-இல் இரட்டையாட்சி முறையில் சென்னைச் சட்டமன்றத் தேர்தலில் நின்று காங்கிரசு வெற்றி பெற்றதும் இலக்குவனார் பணியாற்றிய ஊர்களிலெல்லாம் காங்கிரசார் இலக்குவனார் நடத்திய தமிழ்விழாக்களில் கலகம் செய்தனர். அவர் எந்த ஊரிலும் தொடர்ந்து பணியாற்றமுடியாத சூழலை ஏற்படுத்தினர்.

  1953-ஆம் ஆண்டில் அப்போது சென்னை மாநில ஆளுநராக இருந்த சிரீபிரகாசா என்பவர் தமிழ்ப்பெண்களைத் தரக்குறைவாகப் பேசிவிட்டார். அப்போது அரசியல் கட்சிகள் கூட வாளாவிருந்துவிட்டன. இலக்குவனார் தாம் நடத்திய ‘திராவிடக்கூட்டரசு’ என்னுமிதழில் தமிழ்ப்பெண்களைப் பழித்த ஆளுநருக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து எழுதினார்.

  1959-ஆம் ஆண்டு இளங்கலை-சிறப்பு (பி.ஏ.ஆனர்சு) முறை மாறி எம்.ஏ.பட்டம் அறிமுகாகும் கல்விச்சூழலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்முதுகலை(எம்.ஏ.) கிடையாது என அரசர் முத்தையா(ச்செட்டியார்) அறிவித்துவிட்டார். தமிழில் படித்தால் வேலை கிடைப்பதில்லை, எனவே தமிழ்ப்பட்ட வகுப்புகளும்  தேவையில்லை என்பது அரசர் கருத்து. அந்த நேரத்தில் புதுக்கோட்டை அண்ணலார் பு.அ.சுப்பிரமணியனார் அவர்களின் மணிவிழாவுக்கு அரசர் முத்தையா(ச் செட்டியாரும்) வந்திருந்தார்; இலக்குவனாரும் வந்திருந்தார். புரட்சிக்கவிஞர் முதலான தமிழகத்தின் அனைத்துத் தமிழறிஞர்களும் கூடியிருந்த அந்த மண்டபத்தில் தமிழ்ப்பாடப்பிரிவை நீக்கிவிடுவதாக அரசர் கூறியது தவறு எனக் கூறிய இலக்குவனார் தமிழுக்காகவே அண்ணாமலையரசர் தொடங்கிய பல்கலைக்கழகத்தில் தமிழை நீக்கப்போவதாகச் சொன்ன முத்தையா(ச் செட்டியார்) மன்னிப்புக் கேட்கவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

  தமிழ்ச்சான்றோர் ஒருவரைப் பாராட்டவந்த தம்மிடம் இந்தச் செய்திகளைக் கூறியது இலக்குவனாரின் பிழையெனச் சீறிய அரசர் தாம் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லையெனவும் கூறினார். தமிழ்ச்சான்றோருக்கு எடுத்த விழாவில் தமிழ்நலன் குறித்துப் பேசுவது பொருத்தமானதே என விடையளித்த இலக்குவனார், அரசர் முத்தையாச் செட்டியார் தமது பிழையை உணர்ந்து அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் தமிழை ஒருபோதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கமாட்டேன் என உறுதியளிக்கவும் இந்த மேடையே சாலச் சிறந்த இடம் என வாதிட்டார்.

  அப்போது அங்கிருந்த பாரதிதாசனாரும் இலக்குவனாருடன் சேர்ந்துகொள்ளவே வேறுவழியின்றித் தம் தவறுக்கு வருத்தம் தெரிவித்த அரசர், ஒருபோதும் தமிழை நீக்குவதில்லை என உறுதியுமளித்தார்.

 ஆகம உபநிடதங்களைக் காட்டிலும் திருக்குறள் சிறந்ததெனக் கூறிய ஆல்பர்ட்டு சுவைட்சரின் புத்தகத்துக்கு இந்திய அரசு தடைவிதித்தபோது அதனைக் கடுமையாகக் கடிந்துரைத்த இலக்குவனார் அப்போது குடியரசுத் துணைத்தலைவராக இருந்த இராதாகிருட்டிணனே இதற்குக் காரணம் என்பதனையும் அம்பலப்படுத்தினார். ஓரிரு ஆண்டுகளில் தடை விலகியது.

  1942-43 ஆம் ஆண்டு முதல் 1947 வரை நெல்லை இந்துக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய இலக்குவனார் தனித்தமிழ்மணம் கமழும் தமிழ்ச்சோலையாக அக் கல்லூரியை மாற்றினார் என்பதை அப்போது அவரிடம் அங்குப் பயின்ற தோழர் இரா.நல்லக்கண்ணு, நினைவில் வாழும் கல்வியாளர், முனைவர்.வேங்கடசுப்பிரமணியன் ஆகியோர் ஆவணப் படுத்தியுள்ளனர்.

  ‘Yes Sir’  என்றும்  ‘Present Sir’ என்றும் ஆங்கிலத்தில் வருகைப்பதிவு கூறிக்கொண்டிருந்த மாணவர்களை “உளன் ஐயா” எனத் தனித்தமிழில் வருகைப்பதிவு அளிக்கச்செய்த ஒரே பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களேயாவார். இஃது தமிழ்நாடெங்கும் பரவியது. ”உள்ளேன் ஐயா” என மருவியது.

  தாம் செல்லுமிடமெங்கும் தமிழ்க்கழகம் நிறுவியும் இதழ்கள் நடத்தியும் தனித்தமிழ் மாண்பு, திருக்குறள் நெறி, தொல்காப்பியச் சால்பு ஆகியவற்றைப் பரப்புவதே இலக்குவனாரின் உயிர்மூச்சாக விளங்கியது.

  நெல்லையில் ‘சங்க இலக்கியம்’, விருதுநகரில் ‘இலக்கியம்’ தஞ்சாவூரில் “திராவிடக்கூட்டரசு’, புதுக்கோட்டையில் ‘குறள்நெறி‘  தனிச்சுற்று இதழ், மதுரையில் ‘குறள்நெறி‘ (திங்களிருமுறை) ஆங்கிலத்தில் குறளுக்காக இதழ், தனித்தமிழுக்காக நாளேடு எனச் சோர்வின்றி நடத்திய இலக்குவனாரின் செயல்திறம் காப்பியம் பாடிச் சிறப்பிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

  ‘விலைவாசி எதிர்ப்புப்’ போராட்டத்தில் சிறைசென்று மீண்ட அறிஞர் அண்ணாவிடம் 1965 சனவரி முதல் இந்தி ஆட்சிமொழியாக அமர்ந்துவிடுமே, நாம் வாளாவிருக்கலாமா எனத் தூண்டிச் சட்ட எரிப்புப் போராட்டத்துக்கு வித்திட்டவர் சி.இலக்குவனார் அவர்களே.

  தமிழ்ப்பயிற்சிமொழிக்காக தமிழ் உரிமைப் பெரும்பயணத்திற்குத் திட்டமிட்டுத் தமிழர்களின் கவனத்தைக் கவர்ந்து தமிழ்வீறு தழைக்கச் செய்தவர் இலக்குவனாரே. அதற்காக இருமுறை சிறை சென்றவரும் அவரே!

மறைமலைஇலக்குவனார் ; maraimalai_ilakkuvanar

பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்

(தொடரும்)

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3