வேலுப்பிள்ளை02 :velupillai02

ஈழத் தமிழறிஞர் .வேலுப்பிள்ளை (1936-2015):

தமிழியல் ஆய்வுக்கு வழிகாட்டி  

 
ஈழத்தைச் சேர்ந்த அறிஞர் ஆ. வேலுப்பிள்ளை மறைந்த செய்தியை  அறிந்தபோது கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அவரது நினைவு எழாமல்போய்விட்டதே என வருத்தமுற்றேன்.

அவரை  நேரில் அறிந்ததில்லை எனினும் அவரது எழுத்துகள் வழியே நெருக்கமாய் உணர்ந்திருக்கிறேன். தொல்லியல், கல்வெட்டியல், செவ்வியல் இலக்கியம் எனப் பல்வேறுதுறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராக இருந்தவர். தமிழும் பௌத்தமும் குறித்துபேராசிரியர்பீட்டர் சால்க்குடன் இணைந்து அவர் தொகுத்த இரண்டு தொகுதிகள் மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்தவை.

தனது 28 ஆவது அகவைக்குள் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 1960-1961 ஆம் ஆண்டுக்கான இலங்கை குடிமைப்பணித் தேர்வில் இலங்கை முழுதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவராக அவர் இருந்தார். அந்தப் பதவிக்குச் சென்றிருந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கப் பொறுப்புகளுக்குப் போயிருக்கலாம். ஆனால் ஆசிரியர் பணியிலேயே தொடரவேண்டும் என அவர் முடிவெடுத்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் கல்வெட்டியலைப் பயின்று அவரது வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்ற வேலுப்பிள்ளை அதன்பின் இன்னொரு முனைவர் பட்டத்துக்காக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியலறிஞர் டி.பர்ரோவின் மாணவராகச் சேர்ந்தார்.

  திருவனந்தபுரத்தில் திரு வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டலில் செயல்பட்டுவந்த திராவிட மொழியியல் நிறுவனத்துக்கு மூத்த ஆய்வறிஞராக 1973 ஆம் ஆண்டில் அவர் அழைக்கப்பட்டார். பேராசிரியர் தெ.பொ.மீ அவர்களுக்கு அடுத்ததாக அந்த மதிப்பைப் பெற்றவர் அவர்தான். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராக அவர் பணியாற்றினார். அதன் பின்னர் சுவீடன் நாட்டின் உப்பசாலா பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் வர்சீனியா, அரிசோனா பல்கலைக்கழகங்களிலும் அவர் பணிபுரிந்தார்.

  கல்வெட்டியலில் புலமைகொண்ட பலருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஆழ்ந்த ஞானம் இருப்பதில்லை. ஆனால் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அதற்கொரு விதிவிலக்கு. அவரது முதன்மையான நூல்களில் ஒன்றான ‘சாசனமும் தமிழும் ‘ நூலில் இருக்கும் ’சாசனத்துத் தமிழ்மொழி’ என்ற அத்தியாயம் அவரது இலக்கணப் புலமைக்கு எடுத்துக்காட்டு. இலங்கைக் கல்வெட்டுகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் திரு வேலுப்பிள்ளை தமிழ் வரிவடிவத்தின் தோற்றம் குறித்து வெளிப்படுத்திய கருத்துகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வெட்டியல் அறிஞர்கள் போதுமான அளவு முதன்மைத்துவம் தந்து விவாதிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

‘எழுத்துமுறை என்பது தற்போது பலராலும் நம்பப்படுவதுபோல வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவில்லை. மாறாகத் தமிழகத்தில் தோன்றி இலங்கைக்குச் சென்று அங்கிருந்து தெலுங்குப்   பகுதிக்கும் அதன்பின் வட இந்தியாவுக்கும் சென்றிருக்கிறது என்பதே உண்மை’ என்கிற கருத்துகள் தமிழ்நாட்டு கல்வெட்டியல் அறிஞர்கள் சிலரால் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாகத்திரு வேலுப்பிள்ளை கூறிய சில கருத்துகள் இன்றைய சூழலில்   கருதிப்பார்க்கப்பட வேண்டியவையாக உள்ளன.

“அசோகரது ஆட்சிக்காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் பௌத்தம் இலங்கைக்கு வந்தது என்றும், பௌத்தத் துறவிகள் மூலமாகத்தான் எழுத்து முறை என்பது இலங்கைக்கு அறிமுகமானது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அது இப்போது பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக மாறிவிட்டது. ஆனால் இந்தச்செய்தி விவாதத்திற்குரியதாக இருக்கிறது” எனக் குறிப்பிடும் முனைவர் வேலுப்பிள்ளை, “அசோகரது ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தியப்பகுதிகளிலும், இலங்கையிலும் கிடைத்துள்ள கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும்போது அவற்றுக்கிடையில் பல வேறுபாடுகள் இருப்பது தெரியவருகிறது. அதுபோலத்தான் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டுகளும் தன்மையில் வேறுபடுகின்றன. அதனால்தான் அவற்றைத் தமிழ்பிராமி, திராவிடி, தமிழி என்று பலவாறாக அழைக்கின்றனர். அதுபோலவே இலங்கையில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களைப் பழைய சிங்களம் என்று கூறுகின்றனர்.” என்கிறார் அவர்.

  இலங்கையில் கிடைத்துள்ள கல்வெட்டுகளுக்கும், தமிழ்நாட்டில் கிடைத்துள்ளகல்வெட்டுகளுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளை ஆய்வாளர்கள் பலர் எடுத்துக்காட்டியுள்ளனர்.

“பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்களப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ஃபெர்னான்டோ என்பவர் ‘‘பொதுவான தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், இலங்கையில் கிடைத்துள்ள பழங்காலக் கல்வெட்டுகளை ஒத்திருக்கின்றன. மிகுந்தலை, வேசகிரியா முதலான இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் போலவே தமிழகக்கல்வெட்டுகள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதைத் தனதுகட்டுரையில் எடுத்துக்கூறியிருக்கும் வேலுப்பிள்ளை, இரண்டு பகுதிகளிலும் குகைகளில் காணப்படும் கல்வெட்டுகள் ஒத்த தன்மை உடையனவாக இருப்பதையும், அசோகர் காலத்துக் கல்வெட்டுகளில் காணக்கிடைக்காத ‘ஐ’ மற்றும் ‘ம’ ஆகிய எழுத்துகள் இவற்றில் இருப்பதையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

‘சாசனமும் தமிழும்‘ நூல் ஆறு தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். “இந்த ஆறுவகை ஆராய்ச்சிகளையும் தமிழ்ச் சாசனங்களைக்கொண்டு நடாத்தி விரிவான நூல்கள் வெளியிட என்னால் இயலும்” என 1971 ஆம் ஆண்டில் வெளியான அந்த நூலின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டிருப்பார். சொன்னதுபோலவே ஏராளமான ஆய்வு நூல்களை அவர் வெளியிடவும்செய்தார்.

  “ஆய்வுநூலை எழுதும் ஆராய்ச்சியாளரே அதை அச்சிடுவது, சந்தைப்படுத்துவது ஆகிய வேலைகளையும் செய்யவேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. நூல்களை எழுதுவதே ஆராய்ச்சியாளரின் பணியாக இருக்கவேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

  பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் ஆய்வுகளை தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுத் துறை, தமிழ்த்துறை பேராசிரியர்கள் ஏன் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை?

  அவரை முன்மாதிரியாகக் கொள்ளும் கடமை ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே உரியதல்ல. தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் உரியதுதான். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும்,செம்மொழி நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இணையப் பல்கலைக்கழகம் முதலான அமைப்புகள் அதற்கான முன்முயற்சியை இப்போதாவது எடுக்கவேண்டும். அதுவே அவருக்குச் செலுத்தும் மெய்யான அஞ்சலியாக இருக்கும்.

– து.இரவிக்குமார்

ravikumar01