தமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை

ஓர் ஏமாற்று வேலை

 தமிழில் படிப்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக 30.09.2010 இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையைக் கண்டு தவறாக நம்பியதுபோல் இப்போது அத் தொடர்பில வெளிவரும் திருத்த ஆணை குறித்தும் நாம் நம்பி ஏமாறுகிறோம்.

இன ஒதுக்கீட்டைச் சுழற்சி முறையில் பின்பற்ற அரசு ஆணை உள்ளது. தமிழ்வழியில் படித்தோருக்கான முன்னுரிமையை இச்சுழற்சி முறையில் திணித்துள்ளனர். எனவே, உரிய முன்னுரிமை என்பது இல்லாமல் போகிறது. 20 விழுக்காட்டு முன்னுரிமையை முதலில் வழங்கிவிட்டு, எஞ்சிய பணியிடங்களுக்கு ஒதுக்கீட்டுச் சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும்.

 20 விழுக்காட்டு முன்னுரிமையில் இன ஒதுக்கீட்டுச் சுழற்சி முறையைத் தனியே பின்பற்றும் வகையில் ஆணை இருக்க வேண்டும்.

இப்போதைய ஆணையில் தமிழ் வழி பயின்றவர்களுக்கு 18 ஆவது இடம் பிற்பட்டவகுப்பைச்சேர்ந்தவருக்கும் 19 இடம் மிகவும் பிற்பட்டவர் அல்லது சீர் மரபினருக்கும் வழங்கப்பெறும். அஃதாவது 20 இடங்களுக்குப் பணியாளர்களை நிரப்புவதாக இருந்தால் 20 விழுக்காடு என்ற அளவில் 4 பேருக்குப் பணி வழங்கப்படமாட்டாது. இனச்சுழற்சி முறையில் இதைத் திணித்ததால் இருவருக்கு மட்டுமே வழங்கப்படும். இது தமிழில் படித்தவர்களுக்கு வழங்கும் நீதியாகுமா? தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி விட்டு அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டில் இனச் சுழற்சி முறையைப் பின்பற்றும் வகையில் ஆணை பிறப்பித்திருந்தால்,  தமிழில் படித்தவர்க்கு முன்னுரிமை வழங்கியதாகவும் இருக்கும். இனச்சுழற்சி முறையைப் பின்பற்றியதாகவும் இருக்கும்.

வேலைவாய்ப்பு முன்னுரிமை ஆணைக்கிணங்க 200 பணியிடங்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்தால், பட்டியல் இனத்தவருக்கு 150 ஆவது இடமும் பட்டியல் சாதியில் அருந்ததியருக்கு 166 இடமும் இசுலாமியருக்கு 188 ஆவது இடமும் வழங்கப்பெறும். இஃது எங்ஙனம் முன்னுரிமை அளிப்பதாக இருக்கும்?

இதை இன்னும் தெளிவாகச் சொல்வதானால் தமிழில் படித்தோருக்கான வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கான (PSTM) ஒதுக்கீட்டு முறை வருமாறு. நான் ஆங்கிலத்தில் உள்ளதையும் தமிழ்ப்படுத்தித்தான் வெளியிடுவேன். எனினும் அடிப்படை ஆணைகளைக்கூடத் தமிழில் வெளியிடாத அரசின் நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? எனவே, அவ்வாறே தருகிறேன்.

This image has an empty alt attribute; its file name is attavanai-thamizhil-padithoar-velai-munnurimai.png

தமிழில் படித்தவர்களுக்கு 20விழுக்காடு மட்டும் பணி வாய்ப்பு வழங்குவது என்பதே அநீதியான ஆணை. தமிழில் படித்தவர்கள் பெரும்பான்மையராக இருக்கும் பொழுது, பெரும்பான்மையருக்குக் குறைவான பணியிடங்களை ஒதுக்குவது அநீதியல்லவா? அதிலும் குறைபாடு வைத்தால் அது பெரும் அநீதியல்லவா?

முன்னுரிமை என்றால் பிறரை விட முதலிடம் தருவதுதானே. அப்படியானால் 20 விழுக்காடுப் பணியிடங்களை முதலில் தமிழில் படித்தோருக்கு வழங்கிவிட்டு எஞ்சியதை இன ஒதுக்கீட்டு முறையில் வழங்க வேண்டியதுதானே!

இதிலும், இனஒதுக்கீடு வேண்டுமெனில் அதற்கேற்ப ஆணை வழங்கலாமே. அஃதாவது பின்வருமாறு 20 விழுக்காட்டுப் பணியிடங்களில் இனச் சுழற்சி முறை வழங்கி விட்டு, எஞ்சிய 80 விழுக்காட்டு இடங்களுக்கு வழக்கமான இனச் சுழற்சி முறையைக் கையாளலாமே.

முதல் 20 இடங்களில்

பொது 6 (2,5,8,11,14,20)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 5 (1, 6 , 9, 13, 16)

மிகவும் பி.வ. / சீர் மரபினர் 4 (3, 7, 12)

பட்டியல் சாதியினர் 2 (10, 17)

பட்டியல் சாதியினர் – அருந்ததியர் 1 (15)

பட்டியல் இனத்தவர் 1 (18)

பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் 1 (19)

என்ற முறையில் முன்னுரிமை ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன் பின் எஞ்சிய இடங்களுக்கு இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.

ஐந்திற்கும் குறைவான இடமாக இருப்பின் அந்த ஓர் இடத்தையும் தமிழில் படித்தோருக்கு வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தால்தானே உண்மையான முன்னுரிமை வழங்குவதாக இருக்கும்?

தேர்வாணைய முடிவுகளைப் பார்க்கும் பொழுது 100 பணியிடங்கள் அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்பொழுது தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளமை பாராட்டிற்குரியதுதான். ஆனால்,   இரண்டாம் நிலைப் பணி முதல் நிலைப்பணிகளில் 100 அளவில் பணியிடங்கள் இருந்தாலும் பதவி வாரியாகப் பார்க்கும் பொழுது அவற்றின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையால் நிரப்பியதாகத் தெரியவில்லை. எனவேதான் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் முதலான முதல் நிலைப்பணிகளில் நிரப்பப்பட்ட விவரங்களைத் தெரிவிக்க வில்லை போலும்.

தமிழ் வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்னும் அரசாணை ஒரு  வகையில் தமிழ் வழியில் படித்தவர்களைத் தாழ்த்துவதாக உள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களைத் துணை ஆட்சியர்,  துணைப்பதிவாளர், காவல்துணைக் கண்காணிப்பாளர் முதலான உயர் பதவிகளில் அமர்த்தி விட்டு விவரம் தெரிவித்தால் தமிழ் வழியில் படித்தவர்களைப் பெருமைப் படுத்துவதாக அமைந்திருக்கும்.   மாறாகப் போலி முன்னுரிமை ஆணை பிறப்பித்த உடன் தி.மு.க. ஆட்சியில் இழிவு படுத்தும் வகையில் கடை நிலை ஊழியரைப் போல உள்ள ஏணறையாகிய மின் ஏணி(லிப்ட்) இயக்கும் வேலையும் பதிவுரு எழுத்தர் பதவியும் தந்து விளம்பரப்படுத்தினார்கள அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். எனினும் தமிழில் படித்தால் கடை நிலைப் பணிதான் கிடைக்கும் என்று சொல்வது  தமிழ் வழியில் படித்தவர்களை இழிவுபடுத்துவது ஆகாதா?  மேலும் 20%  தமிழில் படித்தவர்களுக்கு என்று சொல்லி 80% ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது எவ்வாறு தமிழ் வழியாகப் படிக்க மாணவர்களைத் தூண்டும்? வெற்று விளம்பரம் மூலம் நன்மை அடையும் மோசடியான முயற்சிதானே இது.

எனவே இப்போதைய அரசாவது  தமிழில் படித்தவர்களுக்கும் தமிழைப் படித்தவர்களுக்கும் 80% வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றுவதை நிறுத்தி  விட்டு ஆங்கில வழிப்பள்ளிகளத் தமிழ் வழிப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறாயின் இயல்பாகவே அனைவரும் தமிழ்வழிக்கல்வியையே நாடுவர்.

தமிழில் முன்னுரிமை அளிப்பதாக அமைந்த ஆட்சியாளர்களின் பெருமைமிகு உரைகள், வழக்ககுள் முதலியவற்றையெல்லாம் குறிப்பிட்டால் கட்டுரை நீளும். எனவே, அண்மைய நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.

பள்ளிக்கல்வியை ஆங்கில வழியில் முடித்துவிட்டுப் பணித்தகுதிக்கான கல்வியைத் தமிழ் வழியில் முடித்தவர்களுக்குப் பணி வழங்குவதா எனப் பொங்கி எழுந்து இப்பொழுது திருத்த ஆணை வெளியிடுகின்றனர். எதையும் ஆய்ந்து பார்த்துக் குரல் கொடுக்கும் மரு.இராமதாசும் வழக்கு ஒன்றினனைப் பார்த்து இவ்வாறு முன்னரே தவறான குரல் கொடுத்திருந்தார்.

இவ்வாறு ஆணை பிறப்பித்தால் கல்லூரிக்கல்வியைத் தமிழ்வழியில் படித்தவர்களைப் புறக்கணிப்பதாக அமையாதா? பள்ளிக்கல்வி முதல் தகுதிக்கல்வி வரை தமிழில் படித்தவர்கள், வேண்டிய எண்ணிக்கையில் கிடைக்காத பொழுது அடுத்த நிலையில் இதில் ஒரு பகுதியைத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கினால் என்ன தவறு? பட்ட வகுப்புகளிலும் பட்ட மேற்படிப்புகளிலும் தொழிற் கல்விகளிலும் தமிழே இல்லாத துறைகள் உள்ளன. இத்தகைய சூழலில் மேனிலைக்கல்வி வரை தமிழில் பயின்றவர்களுக்குப் பணி முன்னுரிமை வழங்குவதுதானே இயல்பான அறமாகும். தமிழ்வழிக்கல்வியே இல்லாத கல்வித்தகுதியினால் வாய்ப்புள்ளவரை தமிழில் பயின்றவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது அல்லவா?

எனினும் இதற்காக நாம் முந்தைய இன்றைய ஆட்சியாளர்களை முழுமையாகக் குறை கூற இயலவில்லை. ஏனெனில் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணமும். ஆனால், தக்க முறையில் வழிகாட்ட வேண்டிய உயர் அதிகாரிகள், தவறான ஆணையைப் பிறப்பித்து மக்களுக்குச் சார்பான அரசின் எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.

எனவே, அரசு மீண்டும் தமிழ்வழிக்கல்வி பயின்றவர்களுக்கான பணிவாய்ப்பு முன்னுரிமை வழங்கும் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும். விழுக்காட்டு எண்ணிக்கையை மாணாக்கர் எண்ணிக்கைக்கிணங்க 80 விழுக்காடு வழங்குவதே சிறப்பு என்பதையும் உணர வேண்டும்.

அரசுப்பணிகளில் தமிழ்ப்புலவர்களுக்கும் தமிழ் வழிப் பயின்றவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனப் போராடிச்சிறை சென்ற செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் கனவு சிறிதளவே நனவாகியுள்ளது. அவ்வாறு இல்லாமல் முழுமையாக நனவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழில் படித்தால் வேலையில் முன்னுரிமை என்னும் அறிவிப்பைக் கேட்டுத் துள்ளிக்குதித்த அரசியல் கட்சியினரும் தமிழ் அமைப்பினரும் உண்மையைப் புரிந்து அதற்குக் குரல் கொடுத்துத் தமிழ் வழிப் பயின்றவர்களைச் சிறப்பிக்க வேண்டும்.

தமிழ்வழி பயின்றவர்களுக்கு முன்னுரிமை என்ற நிலை எழாத வகையில் தமிழ் நாட்டில் கல்வி எனில் தமிழ்வழிக்கல்விதான் என்னும் நிலையை உருவாக்க வேண்டும்.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

(திருவள்ளுவர், குறள் 670)

ஆதலின் வினைத்திட்பத்துடன் செயல்பட்டுத் தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை உறுக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல