(தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 3 இன் தொடர்ச்சி)

தமிழில் பிறமொழிக் கலப்பு 1/4 

 

 இந் நிலவுலகிற் பழமைக் காலந் தொட்டு இன்றுகாறும் வழங்கிவரும் மொழி தமிழ் ஒன்றேயாம் என்பதை முன்னர் ஒருமுறை விளக்கிக் காட்டினாம். மற்றை மொழிகளிற் சில பன்னூறாண்டுகட்கு முன்னே இறந்துபோயின, பல சின்னூறாணடுகளாகவே தோன்றி நடைபெறுகின்றன. சில பழமையாகி இறந்தன. பல புதுமையுற்றுப் பிறந்தன. பழமையும் புதுமையும் ஒருங்குடைய ஒரு மொழியை அவற்றினிடத்தே காண இயலாது. மற்று தமிழ் மொழியோ பழமைக்குப் பழமையுமாய்ப் புதுமைக்குப் புதுமையமாய்த் தன் இயல்பு பிறழாது, ஏறக்குறைய முந்நூறு நூறாயிரம் மக்களினிடையே உலாவி வருகின்றது. இங்ஙனம் இது பண்டுதொட்டே உயிரொடு விளங்கி வருதலின், முற்காலத்தில் வழங்கிய மொழிகளின் சொற்கள் சிலவும் பிற்காலத்தில் நடைபெறும் மொழிகளின் சொற்கள் சிலவும் இதன் கண்ணே கலந்து காணப்படுதல் இயற்கையே யாம். யாங்கனமெனின்; நீண்டகாலம் உயிரோடிருக்கும் ஒருவன் பல நாடுகளிலுஞ் சென்று முயலுந் தொழின் முயற்சியும் மிகுந்த சுறுசுறுப்பும் உடையவனாயிருந்தால், அவன் தனதிளமைக் காலத்தில் தன்னோடிருந்து இறந்து போனவர் வைத்த பொருள்களிற் சிலவற்றையுந், தனது பிற்காலத்தில் தன்னோடிருப்பவர் வழங்கும் பண்டங்களிற் சிலவற்றையுங் கையாள நேர்வதுபோல, உயிரொடு சுறுசுறுப்பாய் உலவிவருந் தமிழ்மொழியுந் தான் வழங்கிய பண்டை நாளில் வழங்கி யிறந்த ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளின் சில சொற்களையும், இஞ்ஞான்று தன்னொடு சேர்ந்துலாவும் ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளின் சில சொற்களையுந் தான் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றது.

இன்னும் இதனை விளக்கிக் காட்டல் வேண்டின், உயர்ந்த மலை முகட்டில் என்றும் நீர் ஊறும் ஒரு சுனையிலிருந்து இடையறாது ஓடிவரும் ஓர் அருவிநீருக்குத் தமிழ்மொழியை ஒப்பிட்டுச் சொல்லலாம்; இனி இவ்வருவிநீர் ஓடிவரும் இடையிடையே சுரப்பின்றிச் சேறும் நீருமாய் நிற்குங் குளங்குட்டைகட்கு வழக்கில் இல்லாத ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளையும், இன்னும் அவ்வழியின் கீழே இருபாலும் ஆங்காங்குப் புதிது தோன்றித் தனித்தனியே ஓடும் யாறுகளுக்கு ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளையும், இவ் யாறுகளிலிருந்து பிரிந்து வந்து அவ்வருவியொடு கலக்குஞ் சிறுசிறு கால்களின் நீருக்கு அம்மொழிகளிலிருந்து தமிழில் வந்து கலக்குஞ் சில சொற்களையும் ஒப்பாகச் சொல்லலாம். பன்னெடுங் காலமாக வறளாது ஓடிவருந் தமிழருவியானது தான் வரும் வழியிலுள்ள ஆரியம் முதலான பழைய குளங் கூவல்களிற் சென்று அவற்றின் சொற்களாகிய நீரையுந் தன்னொடு கலப்பித்துப் புதியவாக்கிப் பின்னும் இடையிடையே தண்கண் வந்து கலக்கும் பின்றைக்காலத்துச் சொற்களாகிய சிறு கால்களின் நீரையுந் தன்னுருவாக்கித் தன்னை வழங்கும் மக்கட்குப் பெரிதும் பயன்பட்டு வருகின்றது.

இனி, ஒரு மொழியின்சொற்கள் மற்றொரு மொழியில் வந்து கலக்கவேண்டுவதுதான் என்னையென்று வினாவினால்; ஒரு மொழியினைப் பேசும் மக்கள் தம் நாட்டையும் தம் இனத்தாரையும் விட்டு நீங்காமல் இருக்கும் வரையில், அவர் தாம் இருக்கும் நாட்டின்கண்ணே பிறமொழி பேசும் பிறநாட்டார் வந்து சேராதிருக்கும் வரையில், அவர் பேசும் மொழியில் அயல்மொழிச் சொற்கள் வந்து கலப்பதற்கு இடமேயில்லை. அங்ஙனமின்றி அவர் பல நாடுகளையும் அந்நாடுகளிலுள்ள பலதிறப்பட்ட மக்களையும் போய் கண்டும், அவர் நாட்டுப் பண்டங்களைத் தாம் விலைகொண்டும், தம்நாட்டுப் பண்டங்களை அவர்கட்கு விற்றும், அவர்தம் வழக்கவொழுக்கங்கள் சிலவற்றைத் தாங் கைப்பற்றியும், தமக்குரிய சிலவற்றை அவர் கைப் பற்றுமாறு தந்தும், ஒருவரது நாகரிகத்தை ஒருவர் பின்பற்றியும் ஒழுகும் உயர்ந்த அறிவும் உயர்ந்த நடையும் வாய்ந்தவர்களா யிருந்தால் அவர் பேசும் மொழியில் மற்ற மொழிச்சொற்கள் புகுந்து கலவாமல் இரா. ஆகவே, இம்முறையால் நோக்குமிடத்துப் பலவகையாலும் உயர்ந்த நாகரிகவாழ்க்கை யுடையராய் விளங்கிய தமிழ் மக்கள் வழங்கிவந்த தமிழிற் பிறமொழிச் சொற்கள் சில வந்து கலக்கலானது இயற்கையேயா மென்பது உணரப்படும்.

அங்கனமாயிற், பழைய காலத்தில் றமிழ் மக்கள் அயல் நாட்டவரொடு சென்று அளவளாவும் நாகரிக முதிர்ச்சி உடையரா யிருந்தா ரென்பதற்குச் சான்று என்னை யெனின்; இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுமே ஒரு பெருஞ் சான்றாமென்க. அருமை பெருமையிற் சிறந்த இவ் வொருநூலை ஒரு சிறிது உற்றுநோக்குவார்க்கும்; இந்நூல் எவ்வளவு பழமை யுடையதாய் இருக்கவேண்டு மென்பதும், மிகப் பழையநாளிலே இவ்வுயர்ந்தநூலை எழுதிய ஆசிரியரோடு ஒருங்கிருந்த தமிழ் முதுமக்கள் எத்துணைச் சிறந்த அறிவும் நாகரிகமும் வாய்ந்தவராய் யிருந்திருக்கவேண்டுமென்பதும் அவர் உள்ளத்திற் பதியாமற்போகா. இந்நூலின்கண் உள்ள “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை“ என்னுஞ் சூத்திரத்தாற் பண்டைத் தமிழ்மக்கள் பொருள் ஈட்டும் பொருட்டுத் தம் மனைவி மக்களையும் நாட்டையும் விட்டுக் கடல் வழியே மரக்கலன்களில் ஏறித் தொலைவான நாடுநகரங்களிற் சென்று சேர்வரென்பது பெறப்படுகின்றது. தமிழர்கள் கடல்தாண்டிச் சென்று வேற்றுநாடுகளிற் பொருள்முயற்சி செய்த்ததுபோலவே, வேற்று நாட்டவரும் தமிழ்நாட்டிற் போந்து பல முயற்சிகளை நடத்தினாரென்பது ஈபுருமொழியில் எழுதப்பட்ட பழைய விவிலிய நூலினால் இனிது விளங்குகின்ற தன்றோ?

காவிரிப்பூம்பட்டினத்திற் கரிகாற்சோழன் என்னும் வேந்தர்பெருமான அரசாண்டபோது, பல்வேறு மொழிகள் வழங்கிய பலவேறு தேயத்தாரும் அந் நகரத்தினிடத்தே போந்து கலந்திருந்து பல தொழின்முயற்சி நடத்தினமையும்; கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்து குதிரைகள் வந்தமையும்; இமயம் மேரு முதலிய மலைகளிலிருந்து பொன்னும் மணியும், மேற்கணவாய் மலைகளிலிருந்து சந்தனைக்கட்டை அகிற்கட்டைகளுந். தென் கடலிலிருந்து முத்துகளுங், கீழ்க்கடலிலிருந்து பவளங்களுங், கங்கையாற்றிலிருந்து அதன் பொருள்களும், இலங்கை பருமா என்னும் நாடுகளிலிருந்து அவற்றின் விளைபொருள்களும் அந்நகரத்தில் வந்து விலயானமையும், இற்றைக்குச் சிறிதேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட பட்டினப்பாலையிலும், அதற்குச் சிறிது பிற்பட்ட சிலப்பதிகாரத்திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றவல்லவோ? கிரேக்க நாட்டிலுள்ள யவனர்கள் தமிழ்நாட்டிற் போந்து தமிழ அரசர்களின் கீழ்ப் பல அலுவல்கள் பார்த்தமை பெருங்கதை, முல்லைப்பாட்டு முதலான பழந்தமிழ்ப்பாட்டுகளில் நன்கு குறிக்கப்ட்டிருக்கின்றது. இங்ஙனம் பண்டைநாளில் தமிழ்நாட்டார் அயல்நாடுகளிலும் அயல்நாட்டார் தமிழ் நாடுகளிலும் போந்து ஒருவரோடொருவர் அளவளாவியிருந்தமை இனிது புலப்படுதலின் வேற்று நாட்டவர்க்குரிய மொழிகளின் சொற்களிற் சில தொன்றுதொட்டே தமிழிற் புகுந்து வழங்கவாயின என்று உணர்தல் வேண்டும். இவ்வாறு நேர்ந்த கலப்பின் றன்மையை ஆராய்ந்து உணர்வார்க்குத் தமிழர் பண்டைக்காலத்திலேயே நாகரிகத்திற் சிறந்து விளங்கினா ரென்பது புலனாகும்.

(தொடரும்)

மறைமலை அடிகள்,  தனித்தமிழ் மாட்சி