தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4

(தமிழில் பிறமொழிக் கலப்பு ¼ தொடர்ச்சி)

அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்தது போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேயமொழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமேயெனின்; ஆம், தமிழ்ச்சொற்கள் பல பழைய மொழிகளிலுங் கலந்து வழங்கவேபடுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கலை குடம் முதலான பலசொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன எல்லாம் மென்மை முகில் முதலான பல சொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர் எருமை சினம் செவ்வை முதலான பலசொற்கள் சாலடி ஈபுரு முதலான மிகப்பழைய மொழிகளிலும், இன்னும் பல மற்றும் பல மொழிகளிலுமாக ஒருங்கு கலந்து காணப்படுகின்றன. அவையெல்லாம் இங்கெடுத்துக் காட்டப் புகுந்தால் இக் கட்டுரை மிக விரியுமாதலின் அவை தம்மை நுண்ணிய ஆராய்ச்சியாற் பல நூலுதவி கொண்டு அறிந்து கொள்க.

இவ்வாறு மொழிகள் ஒன்றோடொன்று கலக்கப் பெறுதற்கு அவற்றை வழங்கும் மக்களின் நாகரிகமே வழியாயிருத்தலால், நாகரிகம் வாய்ந்த எந்தமொழியும் பிறமொழிக் கலப்பில்லாமல் இருத்தல் இயலாது. இது மக்களியற்கையினையும் அவரது வாழ்க்கையின் இயல்புகளையும் அமைதியாக ஆராய்ந்து பார்ப்பவர்க் கல்லாமல் மற்றவர்க்கு ஒரு சிறிதும் விளங்கமாட்டாது. தமிழ்மக்கள் பண்டுதொட்டே நாகரிகத்திற் சிறந்தவராயிருந்ததனால் அவரோடு பல மொழி பேசும் பல நாட்டவருங் கலந்து பழகவே மற்ற மொழிகளின் சொற்களிற் சில தமிலுங் காணப்படுவனவாயின. இங்ஙனங் காணப்படுதல் தமிழ்மொழியின் நாகரிகச் சிறப்பினையும் அதன் வளப்பத்தினையுங் காட்டுகின்றதே யல்லாமல், அதற்கு அது தாழ்வாதலைக் குறிக்கின்ற தில்லை. உண்மை இவ்வாறிருப்ப, இதனைச் சிறிதும் உணரமாட்டாமல் சுவாமி நாத தேசிகர் என்பார் தாம் இயக்கிய இலக்கணக் கொத்தில், “அன்றியுந் தமிழ்நூற் களவிலை அவற்றுள், ஒன்றேயாயினுந் தனித்தமிழுண்டோ“ எனக் கூறியது வெற்றாரவார வுரையாமன்றிப் பிறிதென்னை?

மேலும், நெடுங்காலம் உயிரோடிருந்து திகழும் ஒரு மொழியிற் பிற சொற்கள் கலத்தல் போலச், சின்னாள் உயிரோடிருந்து பின்னர் இறந்துபடும் ஒரு மொழியிற் பிறசொற்கள் மிக நுழைந்து நிலைபெறுதற்கு இடமேயில்லை. இதனாலேதான், ஆரிய மொழியிற் பிற மொழிச் சொற்கள் மிகுதியாகச் சேர்ந்து காணப்படவில்லை. ஆரியம் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே எவரானும் பேசப்படாமல் இறந்துபட்டமையின், அதன்கட் பிறசொற்கள் புகுதற்கு வழியில்லாமற் போயிற்று. இதுகொண்டு, ஆரியமொழி உலகவழக்கிற்குச் சிறிதும் பயன்படாமையோடு அது நாகரிக வளர்ச்சிக்கு இசைந்ததாகாமையும் நன்கு பெறப்படும். ஒருவர் ஒருமொழி பேசுகின்றவராய் இருந்தால் மட்டும் அவர் மற்றமொழிச்சொற்களை எடுத்தாள நேருமல்லது, அவர் ஏதுமே பேசாத ஊமையாயிருந்தால் அவர் பிறவற்றை எடுத்தாளச் சிறிதும் இடமுண்டாகமாட்டாது. ஆதலால், சொற்களை ஏற்கவும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படவும் மாட்டாதாயிற் றென்க.

இனி, உலவழக்கின் கண் உள்ள ஒரு மொழியிற் பிறசொற்கள் வந்து சேருமாயின், அஃது இயற்கையாக நிகழவேண்டுமே யல்லாமற் கல்வியிறிவுடைய சிலரால் அவர் தமக்குத் தோன்றியபடி யெல்லாம் அவை செயற்கையாக வலிந்து புகுத்தப்படுத லாகாது. அன்றி அங்ஙனம் புகுத்தப்படுமாயின் அவை அம் மொழியில் நிலைபெற்று உயிர்வாழா. இருவர் தமக்குள் தோன்றிய நேசத்தால் ஒருங்கு ஒட்டி உயிர்வாழ வேண்டுமே யல்லாமல், பிறரால் வலிந்து பொருத்தப்பட்டு அவர் ஒன்றுபட்டிருத்தல் இசையாகாது. இவ்வியல்பு மொழிகளின் சேர்க்கையாலும் பிறழாமல் அமைந்திருப்ப தொன்றாகும். ஒரு மொழி வழங்கும் ஒருதேயத்தில் உள்ளார் புதிதாக ஒரு பண்டத்தைக் கண்டுபிடித்துச் செய்து அதற்குத் தமது மொழியிற் பெயரும் இட்டுப் பிறகதனை வேறு தேயங்களிற் கொண்டுபோய் விலைப்படுத்துங்கால், இப் பண்டத்தின் பெயர் வேறு மொழியிற் கலத்தல் இயற்கையேயாம். இத்தகைய நிகழ்ச்சிகளிலுங் கூடப், புதுப் பண்டங்கள் வாங்கும் மற்ற நாட்டவர் நாகரிகமும் உயர்ந்த அறிவும் உடையராயிருந்தால், அவற்றிற்குத் தமது மொழியிலேயே புதுப்பெயரிட்டும் வழங்குவர்.

மேல்நாட்டிலிருந்து வந்து இத் தென்னாட்டில் விலையாகுந் தெளிவான ஒருவகை மட்பாண்டத்தைக் கிளாசு என்றுங் கோப்பை என்றும் வழங்குகின்றனர்; கிளாசு கோப்பை என்னும் இச்சொற்கள் ஆங்கிலச் சொற்களின் திரிபுகளாகும்; இப்பாண்டங்கள் மேல்நாட்டிற் செய்யப்பட்டவனாயிற் தமிழ்நாட்டிற்குப் புதியனவாய் இருத்தலால் இவற்றிற்குரிய ஆங்கிலச் சொற்களைத் தமிழர் தாமும் எடுத்தாளுதல் பொருத்தமேயாம்; இப் பாண்டங்களையுங் கூடத் தமிழறிவு மிக்கவர்கள் ‘கண்ணாடிக் குவளை‘ ‘பீங்கான் கிண்ணம்‘ என்று தமக்குரிய தமிழ்ச் சொற்களாலேயே வழங்குவர். ‘எஞ்சின்‘ ‘டிரெயின்‘ ‘டிக்கட்டு‘ ‘டிராம்‘, ‘இஸ்கூல்‘, ‘கமிஷன் ஏஜண்டு, ‘ஷாப்பு‘, ‘மார்க்கட்டு‘ முதலான ஆங்கில மொழிகளைப் பொதுமக்கள் அவற்றிற்கு முறையே ‘பொளி‘, ‘வண்டித்தொடர்‘, ‘சீட்டு‘, மின்சார வண்டி‘, ‘பள்ளிக்கூடம்‘, ‘தரகன்‘, ‘கடை‘, ‘அங்காடிக்கடை‘ முதலான தமிழ்ச் சொற்களையே இட்டு வழங்குவர். கல்வியறிவும் நாகரிகமும் வாய்ந்தவர்கள் இங்ஙனம் பிறநாட்டுச் சொற்களை எடுத்து வழங்கவேண்டிய இடங்களிலும் அவற்றிற்கு ஈடாகத் தமது மொழியிலுள்ள சொற்களையே நடைபெறவிட்டு வாழ்வர். இவ்வாறு செய்தல் அவர்க்குள்ள முயற்சியின் திறத்தையும் நாகரிகச் சிறப்பினையுந் தமது மொழியில் வைத்த பற்றினையும் வெளிப்படையாகக் காட்டுவதாகும்.

முயற்சியும் உண்மையான பற்றும் இல்லாதவர்கள் பிறமொழி பேசுவோருடன் கலந்தால் தமது மொழிச் சொற்களை விட்டு பிறசொற்களையே எளிதில் எடுத்தாளத் தலைப்படுவார்கள். தமக்குரிய மொழியை வளம் பெறச் செய்யும் முயற்சியும் அதன்பாற் பற்றும் இல்லாமற் போதல் எதனால் என்றாற், பிறிதொரு மொழியிலுந் தாம் வல்லுநர் என்பதைக் காட்டித் தம்மை உயர்வுபடுத்திக் கொள்ளும் எண்ணமும், பொருள் வருவாய் ஒன்றிலேயே நோக்கம் வைத்து அதற்கேற்றது பிறமொழிப்பயிற்சியே என்ற பிழைபட்ட கருத்துங் கொள்ளப் பெற்றிருத்தலாலேயாம். இதற்கு இத்தென்றமிழ்நாட்டிலுள்ள பார்ப்பன மாந்தரும், அவரைப் பின்பற்றினவரும் விடாப்பிடியாய்க் கைக்கொண்டிருக்கும் ஒழுகலாறே ஒருபெருஞ் சான்றாம். இத் தமிழ்நாட்டின்கண் உள்ள பொருள்களை வழங்குதற்கு ஏராளமான தமிழ்ச்சொற்கள் இருப்பவும், அவற்றைவிடுத்து இத் தென்னாட்டிற்கு உரியவல்லாத வடமொழிச் சொற்களாலும், இப்போது சில ஆண்டுகளாக ஆங்கிலச்சொற்களாலும் அவற்றை வழங்கிவருகின்றனர். தமிழ்மக்கள் எல்லாருந் தண்ணீர் எனறு வழங்கிவர, அவர்கள் அதனை ஜலம் என்று கூறுகின்றார்கள். ‘எனக்கு ஓர் ஏனத்திலே குளிர்ந்த நீர் கொண்டு வா, வறட்சியாயிருக்கிறது‘ என்று சொல்லவேண்டுவதை ‘நேக்கு ஒரு பாத்திரத்திலே குளுந்த ஜலங் கொண்டா ‘, தாகமா இருக்கு‘ எனற் வடசொற்களைச் சேர்த்தலோடு இடையிடையேயுள்ள தமிழ்ச் சொற்களையுஞ் சிதைத்துப் பேசுகிறார்கள். இன்னும் ‘பயனற்ற செயல்‘ என்பதைப் ‘பிரயோஜனமற்ற காரியம்‘ என்றும், வெயில் வெளிச்சம், வானம், காற்று, நெருப்பு, உணவு, உழவு, அலுவல் தூய்மை, நாடோறுங், கல்வி என்பவற்றை முறையே சூர்ய ப்ரகாசம் ஆகாசம், வாயு, அக்நி, ஆகாரம், விவசாயம், உத்யோகம், பரிசுத்தம், திநேதிநே, வித்தை என்றும் வடசொற்களை அவர்கள் நூற்றுக்கணக்கான வடசொற்களை அவர்கள் தமிழ் பேசுங்கால் இடையிடையே வேண்டாக்கூறலாய் வழங்கி வருகின்றனர்.

(தொடரும்)

மறைமலை அடிகள்,  தனித்தமிழ் மாட்சி