தமிழில் பிறமொழிக் கலப்பு 3/4

(தமிழில் பிறமொழிக் கலப்பு 2/4 தொடர்ச்சி)

இங்ஙனஞ் செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களையேனும் உலக வழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்படுதலாகா தெனின்; இறந்துபோன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்து பல நூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி இறக்கச் செய்தல் எள்ளளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந்தொகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருள்களை எடுக்க முயல்வார் திறத்திற்குந், தமிழ்ச் சொற்களைக் கைந்நெகிழ விட்டு வடசொற்களை வருந்திச் சொல்ல முயல்வார் திறத்திற்கும் வேறுபாடு சிறிதுங் காண்கிலேம், வடமொழியைத் தனியே முழுதும் உயிர்ப்பிக்க முயன்றாலும் அதனைச் சிறிது பயனுடைய தென்று சொல்லலாம், அங்கனஞ் செய்ய இயலாது அதன்சொற்கள் சிலவற்றை மட்டும் உயிரோடுலவுஞ் சிறந்தமொழியில் வலிந்து புகுத்தி அம் மொழிக்குக் கேடு சூழ்தல் பெரிதும் இழிக்கத்தக்கதொன்றாம். இன்றியமையா இடங்களில் வடசொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யான் கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுதற்கு ஏராளமான தமிழ்ச்சொற்கள் இருக்கையில், அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கின்றோம். பிற சொற்களை எடுத்து, வழங்குதற்கு இன்றியமையா இடங்கள் என்பன, புதுப் பொருள்களைக் கூறுதற்குத் தமிழில் உள்ள சொற்களை எவ்வளவு முயன்று பார்த்தும், அதற்கு அவை; இசையாத நேரங்களே யாம், முயற்சியும் அறிவும் உடையவர்கள் கருத்துவைத்தால் எத்தகைய புதுப் பொருள்கட்குந் தமிழிலிலேயே பெயரமைக்கலா மென்பதே நமது கொள்கை. உயிரோடுலவி வரும் மொழிகள் எவையாயிருப்பினும், அவை எத்துணை ஏழைமை யுடையவாயினும் அவற்றிற் குரியோர் உண்மைப் பற்றுடையராய் அவற்றை அங்ஙனம் வளம் பெறச் செய்து வருகுவராயின் அதனால் அவர் உரமான அறிவும் நன்முயற்சியும் மேன்மேல் மிகப் பெற்றுத் தாமுந் தம் மினத்தாரும் உயர்வர்.

இனி, இவ்வாறன்றி இக்காலத்துப் பார்ப்பனமாந்தர்போல் வடமொழிச் சொற்களையுந் தமிழின் இடையிடையே கலந்து பேசுவோர் தூய தமிழ் பேசும் மற்றைப் பெரும்பாலரின் வேறாகப் பிரிந்து அவர்களொடு தொடர்பில்லாதவராய், அவர்களால் தாமுந் தம்மால் அவர்களுந் பெரும் பயன் வரவரக் குறையத் தாமுந் தம் மினத்தாருஞ் சில நூற்றாண்டுகளில் தமிழுக்கு முற்றும் புறம்பாய் வேற்றினமாய் மறைந்து போவ ரென்பது திண்ணம். இஃது இவர்க்கே தாழ்வாய் முடியுமல்லாமற், பன்னூறாயிரம் மக்களினிடையே பரவியிருக்குந் தமிழுக்கு இதனாற் சிறிதுஞ் சிறுமை வராது.

அங்ஙனமன்று, பார்ப்பன மாந்தரும் அவர்போல்வார் பிறரும் வடமொழியையே தமக்குரிய மொழியாகக் கருதி அதனையே மிகவும் பயிலுதலின் அதன் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுகின்றாரெனின்; அங்ஙனம் வடமொழியினிடத்து மிகுந்த பற்றுவைத்து அதனையே பயிலும் அவர்கள் அம் மொழியைத் தம் பெண்டிர் பிள்ளைகள முதலான எல்லார்க்குங் கற்பித்து அம்மொழியிலேயே அவருடன் பேசுதல் வேண்டும்; அதுவே அதன்பால் வைத்த உண்மைப் பற்றுதலுக்குப் பொருத்தமாகும். தமிழருடன் தமிழிற் பேச விருப்பம் இல்லாத அவர்கள், தாம் தமிழரோடு உண்ணல் கலத்தல்கள் செய்யாது அவரின் வேறுபிரிந்து தம்மை உயர்வு படுத்திக் கொண்டது போலவும், அவர்களுள் வடமொழியை நிரம்பக் கற்றோர் சிலர் தமிழரொடு தாம் நேரே பேசுதலும் ஆகா தென்று ஓர் ஏற்பாடு செய்துகொண்டிருத்தல் போலவுந் தாமுந் தமிழையே முற்றும் பேசாதொழிதலே பொருத்தமுடைத்தாம். அவ்வாறு தங்கொள்கைக்கு ஏற்ப நடத்தலை விடுத்து வடசொற்கள் சிலவற்றைத் தமிழரொடு கலந்து பேசுதலால் மட்டுமே அவர் வடமொழிக்குரியவராய் விடுவரோ? அவருட் சிலர் இப்போது ஆங்கிலக் கற்று ஆங்கிலச் சொற்களையுந் தமிழிற் சேர்த்துப் பேசுகின்றார். அதனால் அவர் ஆங்கிலமொழிக்கு உரியவராவரோ? ஆகாரன்றே. அதுபோலவே. வடமொழியைத் தஞ் சுற்றத்தார் எல்லாரோடும் முற்றும் பேசத் தெரியாத அவர் அதன்பாற் பாராட்டும் பற்றுவெறும் போலியே அல்லாமல் ஏதும் பயனுடையதாக காணப்படவில்லை. ஆகவே, உலகவழக்கிற்குப் பயன்படாத வடமொழிமேல் வைத்த போலிப்பற்றால் வளம்நிறைந்த தூய தமிழைக் கெடுக்க் முந்துதல் பார்ப்பண மாந்தர்க்கும் அவரைப் பின்பற்றினார் பிறர்க்குஞ் சிறிதும் முறையாகாது.

அவ்வாறான்று, வடமொழி உலகவழக்கிற் பெண்டிரானும் பிள்ளைகளானும் பேசுதற்குப் பொருந்தி வராத பெயர் வினைகளில் உயர்திணை அஃறிணைப் பாகுபாடுகள் உலக இயற்கையில் அமைந்தபடியாக இல்லாமற் செயற்கையாக, வலிந்து வகுக்கப்பட்டு ஊன்றிப் பயில்வார்க்கும் பேருழைப்பினையும் பெரு வருத்தத்தினையும் தருவதாயிருத்தலின் அஃது எல்லாரானும் பேசப்படாதனை ஒரு குற்ற்மாகச் சொல்லுதல் ஆகாதெனின்; இது குற்றமோ அன்றோ என்பதனை இங்கே முடிகட்டப் புகுந்திலம். உலகவழக்கிற் பெண்டிர் சிறார் முதலான எத்திறத்தாரானும் பேசுதற்கு இயைந்த எளிய தன்மையுந், தன்னைக் கற்பாருக்கு இனியனவாய்க் காணப்படும் இயற்கைப்பொருத்தமுள்ள சொனமுடிபு பொண்முடிபுகளும் வாய்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாக இளமை குன்றாமல் வழங்கிவரும் அருமை பெருமை மிக்க செந்தமிழ் மொழியில் வேண்டா கூறலாய் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கொண்டுவந்து நுழைத்தல் பெரிதுங் குற்றமாவதாம் என்பதனையே இங்கே விளக்கப் புகுந்தோம்.

(தொடரும்)

மறைமலை அடிகள்,  தனித்தமிழ் மாட்சி