தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 2 : முனைவர் இராம.கி
இக்கருத்தரங்கில் தமிழ்ப்பின்னங்கள், குறியீடுகளை ஒருங்குறியிற் சேர்ப்பது கருதி, தமிழ்ப்பெயர்களை ஒரேவகை உரோமன் எழுத்தில் [அதாவது உயர் கட்டெழுத்தையும் (upper case letters), தாழ் கட்டெழுத்தையும் (lower case letters) கலக்காது அந்தந்த தனிக்கட்டெழுத்தில்] எப்படிக் குறிப்பதென்ற கேள்வியெழுந்திருக்கிறது. அதை முடிவு செய்வதற்காக
- பேராசிரியர் மு.பொன்னவைக்கோ, துணைவேந்தர், தி.இரா.நி.பல்கலைக்கழகம்
- பேரா.வி.செயதேவன், முதன்மைப் பதிப்பாசிரியர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சீராய்வுத் திட்டம்
- பேரா.முருகையன், பேராசிரியர்(ஓய்வு), அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
- முனைவர் மா.பூங்குன்றன், பதிப்பாசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
- முனைவர் மு.கண்ணன், பதிப்பாசிரியர்,செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
- முனைவர் சிரீரமணர், ஆராய்ச்சி அறிஞர்
- திரு மணி மு. மணிவண்ணன், தலைவர், தமிழ் ஒருங்குகுறிப் பணிக்குழு, உத்தமம்
அடங்கிய குழுவொன்றைக் கருத்தரங்கின் முடிவில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இக்குழு இதுவரை கூடியதா, தன் தேர்வுமுடிவை எடுத்ததா, அரசிற்குப் பரிந்துரையளித்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் தமிழறிஞனுமில்லை; கணிஞனுமில்லை. கொஞ்சமே தமிழறிந்த பொறிஞன். [”கணிஞனும், தமிழறிஞனும் இல்லெனில் தமிழ்க்கணிமை பற்றிப்பேச உனக்கென்ன அருகதை?” என்று யாராவது அன்றே கேட்டிருந்தால் இப்புற்றுள் கை வைத்திருக்கமாட்டேன். “கரைவேட்டியோ, கதர்வேட்டியோ போடாதவன் தமிழரிடை அரசியல் பேச அருகதை இல்லாதவன்” என்று சொல்வதுபோல் இருக்கிறது.] ஆர்வ மிகுதியால் 16 ஆண்டுகள் தமிழ்க்கணிமை பற்றிப் பேசிவிட்டேன். என்னைப் பொறுத்துக்கொண்ட தமிழருலகிற்கு நன்றி.
(அதே நேரத்தில் தமிழெழுத்து, ஒலிகளின் நுட்பம் பற்றி மேலோடத் தெரிந்தவரெல்லாம் தமிழ் ஒருங்குறியுனுட் புகுந்து ”அதை மாற்று, இதை நுழை, அதை வைத்தே தீரவேண்டும்” என்று ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் முன்னீடு கொடுத்துத் தாம் வேண்டும் மாற்றங்களை அடையுங் காலமுரணை எண்ணாதிருக்கமுடியவில்லை. 10 கோடிப்பேரின் செய்யாமையிடையே,, ஒரு தனிமனிதன் தன் தனிப்பட்ட தாக்கத்தால் தான் தோன்றித்தனமாய்ச் செய்துவிடும் அச்ச விளைவுகளும் இருக்கின்றன. தனிமாந்தரின் தான்தோன்றிச் செயல்களுக்கு முன் தமிழக அரசோ, இந்திய நடுவண் அரசோ தடுமாறித்தான் போகின்றன. மேலே கூறிய கருத்தரங்கம் நடந்ததற்கே ஒரு தனி மாந்தரின் முன்னீடு தான் கரணியமாகும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
என்று சொன்ன குறளை நினைத்துக்கொள்ள வேண்டும் போலும்.)
எழுத்துப்பெயர்ப்பு விதயத்தில் எனக்குத் தென்பட்டதை ஓரிடத்திற் பதிவு செய்வோம். படிப்பவர் படிக்கட்டும். எழுத்துப்பெயர்ப்புக் குழுவினர் என் ஓர்மைகளை வேண்டின் ஒருவேளை கருதட்டும் என்று எழுத முற்படுகிறேன். விளக்கங்கேட்டு அவர் எனைப் பணித்தால் இயன்றது செய்ய அணியமாயுள்ளேன். (அக்கருத்தரங்கிற்கும் அணில்போல உதவத்தான் செய்தேன்.)
எழுத்துவடிவப்பெயர்ப்பென்பது (transliteration) கேட்பொலிப்பெயர்ப்பினும் (transcription) வேறுபட்டது. எழுத்துப்பெயர்ப்பின் ஊற்றுக்கொத்து (source set) என்பது தமிழெழுத்துக்கள் அனைத்தும் அடங்கியதாகும். அதன் எயினக் கொத்து (target set), உரோமனெழுத்துக்கள் அடங்கியதாகும். இரு கொத்துக்களிலுமே இருக்கும் எழுத்துக்கள் வெறும் வடிவங்களல்ல, அவை ஒலிகளையும் குறிக்கின்றன. எழுத்தென்ற வகைப்பாட்டின் ஆழமான தொல்காப்பியப்பொருளை இங்கு புரிந்துகொள்ளவேண்டும்.
வட இந்தியப் பெருமி (Brahmi) வழிப்பட்ட நாகரியெழுத்தை வைத்து அதே அடைப்பலகையிற் (template) தமிழெழுத்தைச் சில கணிஞர் இடைப்பரட்டி விளங்கஞ் சொல்வது நம்மை முன்செலுத்தாது. [மைக்ரொசாவ்ட்டின் பாசா இந்தியா என்ற வலைத்தளம் அப்படியொரு பணியைச் செய்துகொண்டிருந்தது. தமிழெழுத்து பெருமியெழுத்தைப் போல அபுகிடா (abugida) வகை என்றங்கு முறையற்றுச் சொல்லிக்கொண்டிருந்தார்]. [இன்னுஞ் சிலரோ பெருமியிலிருந்து தமிழி உருவாக்கப்பட்டதென்று அவக்கரப்பட்டு முழு ஆய்வில்லாது சொல்கிறார். இதுவரை கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளின் படி பெருமிக்கும் காலத்தால் முந்திக் (கி.மு.490) தமிழிக் கல்வெட்டுக் கிடைத்திருக்கிறது. தமிழியிலிருந்து பெருமி ஏன் தோன்றியிருக்கக் கூடாதென்று பல்வேறு ஆய்வாளர் எண்ணிப் பார்க்கத் தவறுகிறார். இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடிருப்பதை உணராமலும், இப்படியொரு ‘குதருக்கம்’ நடப்பது தெரியாமலேயும் தமிழறிஞரூம் உருப்படியான கணிஞரும் கருத்துச் சொல்லாது விலகியிருக்கிறார்.]
(தமிழெழுத்தைத் தமிழி என்றே நான் இப்பொழுதெல்லாங் குறித்துவருகிறேன். தமிழி என்பது பெருமிக்கும் முந்தையது. தனிப்பட்டதென்று அண்மைத் தொல்லியல், கல்வெட்டு ஆய்வுகள் சொல்லிவருகின்றன. இனிமேலும் திரு ஐராவதம் மகாதேவனைப் பின்பற்றித் தமிழ்-பிராமி என்று குறிப்பது சரியல்ல. பெருமியென்பது அகரமேறிய மெய்யெழுத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழியென்பது அகரமேறாத் தனிமெய்யை அடிப்படையாகக் கொண்டது.)
ஒருங்குறியேற்றம் நடந்தபோது இத்தப்பைச் சிலர் செய்யாதிருந்திருப்பின் தமிழுக்கு நன்மை கிடைத்திருக்கும். ஒருங்குறியில் 128 அறைகளுக்குள் தமிழெழுத்துச் சிறைப்பட்டிருந்திருக்காது. அந்நேரம் தமிழறிஞரும், பெரும்பாலான கணிஞரும் சேர்ந்து தூங்கிவிட்டார். தூங்காதவரும் தமக்குள் கட்சி கட்டி ‘TAB/TAM/TSCII’ என்று உள்ளூர்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பல்வேறு உள்ளூர்ச் சண்டை போடுவதிற்றான் தமிழர்கள் 2500 ஆண்டுகள் கழித்திருக்கிறோமே? தமிழர் என்றைக்குத்தான் ஒன்றுபட்டிருக்கிறோம்? அரசியலார் மட்டும் இதில் மாறுவரா, என்ன? 1985 அளவிற் தமிழக அரசை தமிழறிஞர், கணிஞர் என இவர்கள் யாருமே தமிழ்க் கணிமை பற்றித் தட்டியெழுப்பவில்லை. நல்ல வாய்ப்பை நழுவவிட்டோம்.
இந்த தூக்கத்திற்கு நடுவில் நடுவணரசின் CDAC நிறுவனம் தனக்குத் தோன்றியது போல் ISCII அடைப்பலகையை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அப்படியே முன் மாதிரியாக அனுப்பியது. இப்படி 128 இடங்களிற் தமிழ் சிறைப்பட்டதால் எல்லாக் கணினி வெளியீட்டுச் சாதனங்களிலும் (output devices) ஒரு rendering engine இன்றித் தமிழாவணங்களை இப்பொழுதுங் காட்சிப் படுத்த முடிவதில்லை. தமிழைக் காட்சிப் படுத்தும் கணிகள் இந்த வேலையைச் செய்தபின் தான் குறியீடுகளை வெளியீட்டுச் சாதனங்களுக்கு அனுப்பின. மேலைமொழிக் கணிமைகளின் எளிமைக்கு முன்னால் காலகாலத்திற்கும் தமிழ்க்கணிமையிற் சுற்றிவந்து மூக்கைத் தொடும் நிலைக்கு நாம் ஆட்பட்டிருக்கிறோம். இப்பொழுது தன் நிலையுறுதிப் பொள்ளிகையைக் (stability policy) காரணங்காட்டி ஒருங்குறிச் சேர்த்தியம் ”128 அறைகளுக்கு மேலில்லை” என அடம்பிடிக்கிறது. அதை மறுத்து வாதமிட நமக்கு ஆற்றலில்லை. 800 பவுண்டுக் கொரில்லாவிற்கு முன் நாமெல்லாம் எந்த மூலை? எனவே 128 இடங்களிற் சிறைப்பட்டபடியே தமிழ்க் கணினி நிரல்களுக்குள் நாம் இன்று வேலைசெய்ய வேண்டியிருக்கிறது.
[தமிழ் ஒருங்குறியில் மொழிச்செலுத்தம் (language processing) என்பது உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களை வைத்து நடப்பதில்லை. இந்தக் கட்டுரையைப் படிப்பவர் சற்று மூச்சைச் சீர்படுத்தி நானென்ன சொல்கிறேனென உணர்ந்து படிக்கவேண்டுகிறேன். உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய், சில குறியீடுகள் என்று இன்னுங் கீழ்மட்டத்தில் மொழிச்செலுத்தம் நடந்து, முடிவில் நாம் படிக்கும்வகையில் உயிர், அகர உயிர்மெய், குறியீடுகளை வெளியீட்டுச் சாதனங்களில் ஒன்றோடொன்று பொருத்தி ஒட்டிவைக்கவேண்டும். அப்போது தான் தமிழெழுத்தின் தோற்றப் பொலிவிருக்கும். இந்தப் பொருத்தும்நிரலே rendering engine எனப்படுகிறது. எந்தெந்த நிரலிகளின் முடிவில் பொருத்துமியந்திரம் சரியாக வேலை செய்யவில்லையோ, அங்கெல்லாம் தமிழெழுத்துத் தோற்றம் கோணல் மாணலாய் வெளிப்படும். இன்றைக்கும் அங்குமிங்குமாய் தமிழெழுத்துக்கள் குதறப்பட்டு இணையத்தில் இளிச்சவாய்த் தோற்றங் காட்டி அமைவது இயல்பாய்ப் போனது. ஒரு வெருவி (virus) தமிழ் நிரலிக்குள் உள்நுழைந்தால் போதும், தமிழெழுத்து இளித்து விடும். எத்தனை ஆவணங்களைப் பார்த்துவிட்டோம்?]
இந்த எழுத்துப்பெயர்ப்பிலும் அதேவகைப் பிழையைச் செய்துவிடக் கூடாது. தமிழுக்காகப் பணிசெய்யும் கணிஞரும், தமிழறிஞரும் ஒன்றுசேர்ந்து வேலைசெய்யவேண்டும்..
பொதுவாகத் தமிழியெழுத்தின் ஒலி அவ்வெழுத்தின் வடிவம், குறிப்பிட்ட எழுத்து சொல்லில் வருமிடம் ஆகியவற்றைப் பொறுத்தது.
‘Sound of a Tamili letter = Function of (the shape of the letter, place of its occurrence in a word)’
அதே பொழுது,
‘Sound of a Brahmi letter = Function of (the shape of the letter)’.
எனவே தமிழியெழுத்தின் ஒலிப்பு முறை ’ஒன்றிலிருந்து பல’ என்ற உறவுமுறையைக் (one to many correspondence) கொண்டது. பெருமியெழுத்தின் ஒலிப்புமுறை ’ஒன்றிலிருந்து ஒன்று’ என்ற உறவுமுறை (one to one correspondence) கொண்டது. உரோமன் எழுத்தும் ஒன்றிலிருந்து பல உறவுமுறை கொண்டது.
தமிழியும் உரோமன் எழுத்தும் ஆன இரண்டு கொத்துக்களும் ஒன்றிற்கொன்று எண்ணிக்கையளவில் மதிக்கத் தக்கனவா என்றால் இல்லை. 12 உயிர்களோடு, ஓர் ஆயுதவெழுத்து, 6×2 வல்லின மெய்யொலிகள், ககரத்திற்கும் சகரத்திற்கும் சிறப்பான உயிரிடை (intervocalic) மெய்யொலிகள் 2, 6 மெல்லின மெய்யொலிகள், 6 இடையின மெய்யொலிகள் என்ற 39 தமிழ் எழுத்துக்களோடு, (நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏதோவொரு காலக்கட்டத்திற் சேர்ந்து கொண்ட) 6 கிரந்த எழுத்துக்களும் சேர்த்து 45க்குத் தகுந்தாற்போல் இணைக்குறிகளை நாம் பரிந்துரைக்கவேண்டும். உரோமன் எழுத்திலோ, F, W தவிர்த்து 24 வடிவங்கள் / ஒலிகளே உள்ளன. ஆக இரண்டு கொத்துக்களும் ஆங்கிலத்திற் சொல்வதுபோல் அளவிற் பொருந்தாதவை (incommensurate). 45 is not equalled to 24. இந்தப் பொருந்தாமை முரணைச் சரிபண்ண, மூன்றுவித ஓர்மைகள் உண்டு.
1. உரோமனெழுத்தில் உயர்கட்டெழுத்தையும் (upper case letters), தாழ்கட்டெழுத்தையும் (lower case letters) கலந்து எழுதுவது. [இந்தக் கலப்பினால் எயினக்கொத்து 48 என்று வந்துசேரும். ஆனால் இப்படிக் கலந்தெழுதக் கூடாதென்று ஒருங்குறிச் சேர்த்தியஞ் சொல்லுகிறது. மாறாக அந்தந்த தனிக்கட்டெழுத்திலே குறிக்கவேண்டும் என்ற வலிதாகக் குறித்திருக்கிறார்கள். எனவே இந்த ஓர்மையைச் செயற்படுத்த முடியாது.]
2. ஏதோவொரு கட்டெழுத்தையும், (1, 2,….9, 0) என்ற எண்களையும் உரோமன் குறியீடுகளையும் கலந்தெழுதலாம் [ஒரு தமிழாவணத்தில் பொருண்மை கருதி எண்களும் எழுத்துக்களும் சேர்ந்து பயிலலாம் என்பதால் எண்களை வெறும் ஒட்டுக்குறிகளாக்குவது இல்லையென்றாகிப் போகிறது.]
3. உரோமனெழுத்தோடு ஆளங்குறிகளை (diacritic marks) ஒட்டிவைத்து எழுதுவது. [இதைப் பல மேலைமொழிகளே பயனாக்கி வருகின்றன. இதைத் தவிர்க்கவேண்டுமென்று சில கணிஞர் சொல்லுவது ஏனென்று எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் சில மேலை மொழிகளே இப்படியொட்டி தங்கள் ஒலிகளுக்கு வடிவங் காட்டிவருகின்றன. தமிழுக்காக உரோமன் எழுத்தில் இதைச் செய்தாலென்ன?]
எழுத்துப் பெயர்ப்பு பற்றி ஆங்கில ஆட்சி நெடுகிலும் பல்வேறு முயற்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றின் உச்சகட்டம் எல்லோரும் பெரிதும் புழங்கிய சென்னைப் பல்கலைக்கழகச் சொற்களஞ்சிய எழுத்துப் பெயர்ப்பாகும். இந்த முறையில் மாக்கோடு, அடிக்கோடு, மேற்புள்ளி, கீழ்ப்புள்ளி, அலை என 5 ஆளங்குறிகளைப் (diacritic marks) பயன்படுத்துவர். சிறப்பாக, ஆ, ஈ, ஊ, ஏ ஓ ஆகிய எழுத்துக்களைக் குறிக்கக் குறில் வடிவங்களைப் போட்டு அவற்றின் மேலே மாக்கோடு (macron) போடுவார். மாற்றஞ் செய்யவிழைவோர் சென்னைப் பல்கலைக்கழக எழுத்துப்பெயர்ப்பை விளங்கி கொள்ளவேண்டும். அந்த எழுத்துப்பெயர்ப்பில்,
‘ஃ’ என்பதற்கு ‘k’ என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு (underbar) போடுவார். [இதற்கு மாறாய் ‘q’ எனப் போடலாம். முத்து நெடுமாறனின் அஞ்சல் விசைப்பலகையில் அப்படித்தான் செய்கிறோம்.)
‘ற்’ என்பதற்கு ‘r’ என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்
‘ன்’ என்பதற்கு ‘n’ என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்.
‘ழ்’ என்பதற்கு ‘l’ என்று போட்டு அதன்கீழ் அடிக்கோடு போடுவார்
‘ங்’ என்பதற்கு ‘n’ என்று போட்டு அதன்மேல் புள்ளி போடுவார்.
‘ட்’ என்பதற்கு ‘t’ என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்
‘ண்’ என்பதற்கு ‘n’ என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்
‘ள்’ என்பதற்கு ‘l’ என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்
‘ஷ்’ என்பதற்கு ‘s’ என்று போட்டு அதன்கீழ் புள்ளி போடுவார்
‘ஞ்’ என்பதற்கு’ n’ என்று போட்டு அதன்மேல் அலையைக் (tilde) போடுவார்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
a ā i ī u ū e ē ai o ō au ḵ
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம்
k ṅ c ñ ṭ ṇ t n p m
ய் ர் ல் வ் ழ் ள்
y r l v ḻ ḷ
ஜ் ஸ் ஷ் ஹ் க்ஷ் ஶ
j s ṣ h kṣ ஶ
சென்னைப் பல்கலைக்கழகத்தின் உரோமன் எழுத்துப்பெயர்ப்பு கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாகப் பயன்பட்டுவருகிறது. [NHM font converter இல் இந்த ஆளங்குறி முறை (diacritic method) செயற்படுத்தப் பட்டிருக்கிறது.] இதில் 5 ஆளங்குறிகளைப் பயன்படுத்துவது சிலருக்குத் தயக்கத்தைக் கொடுக்கலாம். தமிழாவணங்கள் ஆளங்குறி நிறைந்ததாய்க் “கொசகொச” என்று ஆகிவிடுமோ என்று ஐயுறலாம். இந்த ஆளங்குறிகளைக் குறைக்கலாமா என்றால், ஓரளவு முடியும்.
காட்டாக, நெடில் உயிர்களை உரோமனெழுத்தில் இரண்டாக எழுதியோ, ஒன்றோடு இன்னொன்றை அடுத்தடுத்துப் போட்டோ எழுதிவிடலாம். அதன்மூலம் உயிர்க்குறில் வடிவங்களின் மேல் மாக்கோடு போடுவதைத் தவிர்க்கலாம். உயிரிடை (intervocalic) வல்லினக் ககரம், சகரம், தந்நகரம், இடையின ரகரம், இடையின லகரம் ஆகியவற்றிற்கு ஓர் அலைக்குறியும், டகரம், அதிர் டகரம், டண்ணகரம், ளகரம் ஆகியவற்றிற்கு ஒரு கனக்குறியும் (grave) இட்டால் இரண்டே ஆளங்குறிகளை வைத்து இப்போதுள்ள சிக்கலைச் சரிசெய்து விடலாம். இரண்டு ஆளங்குறிகளை வைப்பதில் ஒரு வாய்ப்பும் இருக்கிறது.
எல்லாக் கணி விசைப்பலகைகளிலும் 1,2, 3….. என்ற எண்வரிசைப் பொத்தான்களுக்கு முன் இருக்கும் பொத்தானில் இந்த இரு ஆளங்குறிகளைக் கொண்டவொரு பொத்தான் ஏற்கனவே இருக்கிறது. அதைவைத்து நாளையே தமிழாவணங்களை உரோமனெழுத்தில் உருவாக்கிவிடமுடியும். எந்த நிரலியின் துணையுமில்லாது இதை எல்லாக் கணிகளிலும் உடனே செய்யமுடியும்.
இந்த இரண்டு ஆளங்குறிகளுக்கும் தமிழுக்குப் பொருந்துவது போற் பொருண்மையுமிருக்கிறது. டகரம், அதிர் டகரம், டண்ணகரம், ளகரம் போன்றவற்றைச் சற்று கனமாகவே ஒலிக்கவேண்டி இருக்கிறது. எனவே கனக்குறி அவற்றிற்கு இடுவது மெத்தச்சரி. அதே போல, அலைக்குறியுள்ள எழுத்துக்களைச் சற்று நெகிழ்ந்தே நாம் ஒலிக்கவேண்டியிருக்கிறது. அடிப்படையில் அலைதலென்பது ஒருவகை ஒலி நெகிழ்தலே.
என்னுடைய பரிந்துரையைக் கீழே குறித்துள்ளேன். இதன் மூலம் எந்தத் தமிழாவணத்தையும் இன்றுள்ள நிரலிகளை வைத்தே சரியான முறையில் எழுத்துப்பெயர்ப்பு செய்யமுடியும். (தமிழ்ப் பின்னக் குறியீடுகளை உரோமன் எழுத்தில் இந்த ஆளங்குறிகளைச் சேர்த்து எழுதிவிட முடியும்.) எந்தக் குழப்பமும் ஏற்படாது.
அ A a க் K k ய் Y y
ஆ AA aa intervocalic க் K~ k~ ர் R~ r~
இ I i voiced க் G g ல் L~ l~
ஈ II ii ங் NG ng வ் V v
உ U u ச் C c ழ் L l
ஊ UU uu intervocalic ச் C~ c~ ள் L` l’
எ E e voiced ச் J j
ஏ EE ee ஞ் NJ nj ற் R r
ஐ AI ai ட் T` t` voiced ற்R` r`
ஒ O o voiced ட் D` d` ன் N n
ஓ OO oo ண் N` n`
ஔ AU au த் T t ஜ் J j
voiced த் D d ஷ் SH sh
ஃ Q q ந் N~ n~ ஸ் S s
ப் P p ஹ் H h
voiced ப் B b க்ஷ் X x
ம் M m ஶ Z z
Unused Roman letters F, W f, w
நான் பரிந்துரைத்த இந்த எழுத்துப் பெயர்ப்பில் ஒரு பெரிய அச்சமும் எனக்கிருக்கிறது. தமிழெழுத்துக்கு மாற்றாக இந்த ஆளங்குறி சேர்ந்த உரோமன் எழுத்து பயனாகிவிடக் கூடாது. அப்படியானால் , “உள்ளதும் போச்சுதடா, தொள்ளைக் காதா” என்று ஆகிவிடும். அலைபேசி கொண்டு, குறுஞ்செய்தி (SMS) அனுப்பி (enna machchi, eppatikkiiree?), இணையத்தின் மூலம் கீசிக்கொண்டு (twitter) அரட்டையடிக்கும் எதிர்கால இளைய தலைமுறை, தமிழின் எழுத்தைப் போக்கடித்துவிடக் கூடாது.
இளையரிற் பலருக்கும் அடியோடு தமிழெழுத்துத் தெரிவதில்லை. (உங்களுக்குத் தெரியுமா? கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் இளஞ்சிறார் தங்கள் கீர்த்தனைகளையும், பாடல்களையும் உரோமனெழுத்தில் எழுதிவைத்துப் பாடம் படிக்கிறார். தமிழ்ப்பாட்டும் சங்கத, தெலுங்குக் கீர்த்தனைகளும் அப்படித்தான் இளந்தலைமுறைக்குப் போகின்றன.) பெருங்கணி நிறுவனங்களும், சேவை தருவோரும் தங்களின் வணிக நலன் கருதி தங்கள் கருவிகளும், சேவைகளிலும் தமிழெழுத்து அளிப்பை (supply) வேண்டுமென்றே குறைத்துத் தருகிறார். கன்னாப் பின்னாவென்று தமிழுக்கு உரோமனெழுத்துப் புழக்கம் இளைஞரிடையே கூடிக்கொண்டிருக்கிறது. பெரியவராகிய நாமோ தேமே என்று விழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழார்வலர் விழித்தெழாவிட்டால் தமிழெழுத்து மறையுங் காலம் வெகு தொலைவிலில்லை. பழைய குடியேற்றத்தில் நாட்டாதிக்கம், இனவாதிக்கம், மொழியாதிக்கம் என நடந்தது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். புதிய குடியேற்றத்தில் இப்பொழுது எழுத்தாதிக்கம் என்பது புதிய பரிமானம். அவ்வளவு தான். ஓர்ந்துபாருங்கள்.
Leave a Reply