chinnakaalai-rasupathalam02

 

   எழுத்தாளனின் எழுத்துகளே வருங்கால மன்பதைக் கட்டமைப்பைத் தீர்மானிக்கின்றன. தரமான முற்போக்கான எழுத்துகள் மூலம் இந்த மன்பதையைச் சமன் செய்வது நல்ல எழுத்தளார்கள் கையில்தான் இருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் என்றால் பெரும் படிப்பறிவும் தொழில்நுட்ப அறிவும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இந்த மன்பதையைப்படித்து, அதனைத் திருத்தும் வகையில் எழுதும் இரண்டு கட்டுரைகள் போதும் ஒருவன் எழுத்தாளனாக ஏற்கப்படுவதற்கு!

  ஆனால், இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் பெரும்பாலான எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால், கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, எழுத்தாளுமை உள்ள எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் மலையான எழுத்தாளர் இராசு பாதாளம்.

  இவர் தமிழ்மண்ணின் மைந்தர் என்பது நமக்குப் பெருமை. சிறு அகவையிலேயே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குச் சென்றிருந்தாலும், இன்றும் தமிழுக்குத் தலைவணங்கும் மனிதனாக இருக்கிறார்.

  இதோ தின இதழ் அலுவலகத்தைத் தேடி வந்தவரிடம் உரையாடியதிலிருந்து ..  – கவிமணிkavimani-thinaithazh

 ‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம், திண்டுக்கல். சிறு அகவையில் இருந்தே எனக்கு அம்மா கிடையாது. என் அப்பாவும், பெரியப்பா வீட்டில் என்னை விட்டுவிட்டு, கேரளாவிற்கு, கூலி வேலைக்குச் சென்றுவிட்டார். ‘அங்கு இருந்த பழங்காலத்துப் பள்ளிக்கூடத்தில்’ என்னை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டார் என் பெரியப்பா. படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தேன். ஆனால் பணம் செலவு செய்து, என்னை மேலும் படிக்க வைப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை.

  இதை உணர்ந்த நான், இரண்டாவது படித்து முடிக்கும் முன்னரே என் அப்பாவைத் தேடி கேரளாவிற்குச் சென்றுவிட்டேன். என் அப்பா, கேரள மாநிலம், ஆலுவா மாவட்டத்தில் உள்ள பாதாளம் என்ற இடத்தில் கூலி வேலை செய்துவந்தார். அவரிடம் நான் படிக்க ஆசைப்படுவதாகக் கூறினேன், ‘‘உன்னை படிக்க வைக்கிற அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. நான் வேலைக்குப் போகிறேன். நீ வீட்டில் இருந்து சமைத்து வை’’ என்று என் படிப்பிற்குத் தடைபோட்டார்.

  பிறகு வீட்டில் இருந்த படியே, ‘தமிழ் வழியாக மலையாளம் கற்பது எப்படி’ என்கிற புத்தகங்களைப் படித்து மலையாளம் கற்றுக்கொண்டேன். பள்ளியில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பையன்களிடம் மலையாளத்தில் பேசிப் பழகி, மலையாளத்தில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் கற்றுக்கொண்டேன்.’’ என்ற இராசு, அடுத்து தனக்கு எழுத்துத் துறை மீது எப்படி ஆர்வம் வந்தது என்ற  சுவையான நிகழ்வைப் பகிர்ந்துகொண்டார். ‘‘பிறகு அப்பாவுடன் கட்டட வேலைக்குப் போவேன். வாரா வாரம் வரும் கூலியில், சில மலையாள எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன். காலை முதல் மாலை வரை வேலை செய்துவிட்டு, இரவு ஒரு மணி வரைக்கும் விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டே இருப்பேன். அப்படி படிக்கும்போதுதான், மலையாளக் கவிஞர் செங்கம்புழாவுடைய ‘வாழைக் குழா’ (வாழைக் குலை) என்ற கவிதையைப் படித்தேன்.

  அக்கிரகாரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வளரும் வாழை மரத்தில் ஒரு வாழைக் குலை தொங்குகிறது. அங்கு வீட்டு வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட  வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள், தினமும் ‘‘அந்த வாழைக் குலை எனக்குதான்’’ எனப் போட்டிப் போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் பழுக்கும் தறுவாயில் இருக்கும் அந்த வாழைக் குலையை அதனுடைய முதலாளி வெட்டி எடுத்துச் செல்கிறார். தோட்டத்தில் எத்தனை வாழைக்குலைகள் இருந்தும், இங்கு யாருமே கண்டுகொள்ளாத ஒரு மரத்தில் இருக்கும் குலையை, வறுமையில் இருப்பவர்களுக்குக் கொடுக்காமல் அதனை வெட்டிச் செல்கிறார்களே என முடித்திருப்பார் அந்தக் கவிதையை.

  அதைப் படித்ததில் இருந்து எனக்கும் மன்பதையில் இருக்கும் அவலங்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. சிறு சிறு கவிதைகளாக எழுதி, பக்கத்தில் இருக்கும் பையன்களிடம் படித்துக் காட்டுவேன், அவர்கள் என்னை ஏளனமாகக் கிண்டல் செய்வார்கள். அந்தப் பையன்களின் பெற்றோர்களிடம் படித்துக் காட்டுவேன், ‘‘நீ வருங்காலத்தில் பெரிய கவிஞராக வருவாய்டா’’ எனப் பாராட்டுவதைப் போல கிண்டல் செய்வார்கள்.

  அப்போது அவர்கள் என்னைக் கிண்டல் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. பிறகு 18 அகவையில் அதை உணர்ந்து. மலையாளத்தில் ஒரு பெரிய எழுத்தாளராக வர வேண்டும் என்று எனக்குள்  ஓர் இலக்கை வைத்துக்கொண்டேன். மேலும் சிறு சிறு கவிதைகள் எழுதி, பக்கத்தில் இருக்கும் ஃபேக்ட் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் காட்டுவேன். அவர் என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்துவார்.

  அந்த ஊக்கத்தின் பேரில், ‘அக்கிரகாரத் தருணி’ என்ற கண்ட காவியம் எழுதினேன். அதில், அக்கிரகாரத்தில் இருக்கும் ஒரு பெண்ணிற்கும், ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும் இடையேயான காதல் முதல் கல்யாணம் வரையிலான கதையை எழுதியிருந்தேன். அந்தப் புத்தகம் ஒரே மாதத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. இந்த அளவுக்கு என்னுடைய படைப்புக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மலையாளப் பத்திரிகைகள் எல்லாம் என் வீடு தேடிவந்து பேட்டி கேட்டன. எங்கோ ஏதோ மூலையில் இருந்து என் புத்தகத்தைப் படித்து தொலைபேசியில் வாழ்த்துவார்கள். மலையாள எழுத்தாளர்கள் அனைவரும் என்னைப் பாராட்டி  மடல் எழுதுவார்கள்.

  chinnakaalai-rasupathalambookஅதன் பிறகு ஒரு சிறுகதை புத்தகத்தை வெளியிட்டேன். அதுவும் வரவேற்பு பெற்று அனைத்து புத்தகங்களும் விற்றுத் தீர்ந்தன.  ‘நேற்று இன்று நாளை’ (இண்ணலெ இண்ணு நாளெ) என்னும் தலைப்பில்என் வாழ்க்கையில் நான் சந்தித்த  நிகழ்வுகளைக் கட்டுரைத் தொகுப்பாக எழுதி 2010 -ஆம் ஆண்டு வெளிட்டேன். அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நிறைய பாராட்டுகள், பரிசுகள் என என் மனது நிறைவுடன் இருக்கிறது’’ என்றார் இராசு பாதாளம். ஆனால் இவரது உண்மையான பெயர் சின்னக்காளை. அதுசரி சின்னக்காளை எப்படி  இராசுபாதாளமாக மாறினார்? மலையாளத் தேசத்தின் நண்பர்கள் வைத்த பெயர்தான் இது. இதில் பாதாளம் என்பது ஊரின் பெயர்.

  தற்போது சென்னையில் ஒரு தனியார்  பல்தொழில்நுட்பக் கல்லூரியில்  பாதுகாவலராக வேலை பார்க்கிறார்  இராசு. ஒருபக்கம் நீரிழிவு நோயும், மறுபக்கம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் அவரை இந்த வேலைக்கு வரவைத்திருக்கிறது.

‘‘கேரளாவில் இருந்த நிலத்தை விற்றுவிட்டேன். பிழைப்பைத் தேடி சென்னையில் இருக்கும் அண்ணன் வீட்டிற்குக் குடும்பத்தோடு வந்திருக்கிறேன். மனைவி, ஒரு மகன் என்று சிறிய குடும்பம்தான். இப்போதைய சூழலில் எதையும் எழுதுவதற்குச் சிந்திக்க முடியவில்லை. இருந்தாலும், குடும்பத்திற்காகப் பாதுகாவலர் வேலை பார்ப்பதுடன். என் மன நிறைவிற்காகத் தமிழில் சில கவிதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். மலையாளம் போலத் தமிழிலும் எனக்கு  வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.’’ என்று வழக்கம்போல தன்  வேலைக்குக் கிளம்பினார்  இராசு பாதாளம்.

தின இதழ் நாள் 24.03.2014

எழுத்தாளர் இராசுபாதாளம் பேசி : 86810 37400