தலைப்பு-தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே : thalaippu-thamizhukkupeyarvaithavaryaar
“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள்.

பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து.

தமிழ் என்ற பெயர் முதல் முதலில் தமிழ் நாட்டுக்கு வழங்கி யிருக்க வேண்டு மென்று தோன்றுகிறது. பிறகு அங்கே வழங்கும் மொழிக்கும் ஆயிற்று. முதலில் நாட்டுக்குப்பெயர் வைத்து அதைக்கொண்டு மொழிக்கும் பெயர் வைக்கும் மரபை மற்ற நாடுகளில் காண்கிறோம். மூன்று  (இ)லிங்கங்களைத் தன்பாற் கொண்டமையால் ஆந்திரதேசத்தைத் திரிலிங்க மென்றார்கள். அது பிறகு தெலுங்கம் ஆயிற்று. அதிலிருந்து அந்நாட்டில் வழங்கும்  மொழிக்குத் தெலுங்கு என்ற பெயர் வந்தது. தமிழ் என்ற சொல்லுக்கே தமிழ்நாடு என்ற பொருள் உண்டு. பழைய நூல்களில் அந்தப் பொருளில் புலவர்கள் வழங்கியிருக்கிறார்கள எப்படி ஆனாலும், தமிழ் என்னும் பெயரைத் தமிழ் நாட்டினரே வைத்து வழங்கி யிருக்கவேண்டுமே யன்றிப் பிறர் சொல்ல, அதையே தமிழர் வழங்கினரென்று சொல்வது முறையன்று.

தமிழ் என்ற சொல்லைத் தமிழர்கள் ஆண்டு வந்தார்கள். தமிழ் மொழியில் அவர்களுக்கிருந்த அன்பு அளவற்றது. தங்கள் மொழி இனியது என்று எண்ணிப் பாராட்டி இன்புற்றார்கள். நாளடைவில் தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டாயிற்று. “இனிமையும் நீர்மையும் தமிழ்எனல் ஆகும்” என்று பிங்கல நிகண்டில் வருகிறது. இனிமை, ஒழுங்கான இயல்பு இரண்டையும் தமிழ் என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பெண்களின் வருணனை வரும் ஓர் இடத்தில் சீவக சிந்தாமணியின் ஆசிரியர், “தமிழ் தழீஇய சாயலவர்” என்று சொல்லுகிறார். “இனிமை பொருந்திய சாயலையுடைய மகளிர்” என்பது அதன்பொருள். கம்பரும் இனிமையென்னும் பொருளில் தமிழ் என்னும் சொல்லை வழங்கியிருக்கிறார்.

இப்படி அருமையாகப் போற்றும் அந்தச் சொல் தமிழர் வைத்த பெயர்தான். தமிழ் என்ற சொல்லில் வரும் ழகரம் மற்றவர்களுக்கு உச்சரிக்க வருவதில்லை. ஆகவே தமிழ் தமிளாகி, த்ரமிளம், த்ரவிடம் என்று பல அவதாரங்களை எடுத்தது என்று சொல்வதுதான் பொருத்தம். கமுகு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ரகரம் பெற்று ‘க்ரமுகம்’ என்று வழங்குகிறது. மீனை மீனம் என்றும், தாமரையைத் தாமரச மென்றும் வழங்குவதுபோல அம் என்ற பகுதியைப் பின்னே சேர்த்துக் கொண்டார்கள். முன்னும் பின்னும் கூட்டிய இந்த அலங்காரங்களோடு தமிழ், த்ரமிளம் ஆனது வியப்பல்ல.

தொல்காப்பியப் பாயிரத்தில் அதன் ஆசிரியர் தமிழ் நாட்டை, “தமிழ் கூறும் நல்லுலகம்” என்று சொல்கிறார். அப்படிப் பாடியவர் தொல்காப்பியருடைய தோழராகிய பனம்பாரனார் என்பவர். மேலும், “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்” என்றும் சொல்லுகிறார்.

தொல்காப்பியத்தில் ஒரு  சொல்லும் மற்றொரு  சொல்லும் சேர்ந்தால் என்ன என்ன மாறுபாடுகள் உண்டாகும் என்ற செய்தி எழுத்ததிகாரத்தில் வருகிறது. தமிழ் என்னும் சொல்லோடு வேறு சொற்கள் வந்து சேர்ந்தால் எவ்வாறு நிற்கும் என்பதைப் பற்றி ஒரு சூத்திரம் சொல்கிறது.

தமிழ் என் கிளவியும் அதனோ ரற்றே” என்பது அந்தச் சூத்திரம். தமிழ் என்ற சொல்லுக்குப் பிறகு கூத்து என்ற சொல் வந்தால் தமிழ்க் கூத்து என்று ஆகும். இதற்குரிய விதி இந்தச் சூத்திரம். தமிழர்கள் பேச்சிலும் நூலிலும் வழங்கும் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழ் என்ற சொல் மற்ற  சொல்லோடு சேர்ந்து வழங்கும்போது இப்படி ஆகும் என்று சொல்வதனால், அப்படி ஒரு சொல் அவர் காலத்திலே வழங்கியது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

தொல்காப்பியத்தில் சொல்லைப் பற்றி ஆராயும் பகுதிக்குச் சொல்லதிகாரம் என்று பெயர். இயற்கையாக யாவருக்கும் விளங்கும்படி உள்ள சொற்களை இயற்சொல் என்று அங்கே பிரிக்கிறார். ‘இயல்பாகவே விளங்கும் சொல்’ என்று சொன்னால், ‘யாருக்கு விளங்குவது?’ என்ற கேள்வி வரும் அல்லவா? தமிழ் நாட்டில் தமிழ் வழங்கினாலும் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரி தமிழ் வழங்குவதில்லை. சென்னைப் பக்கத்துத் தமிழுக்கும் திருநெல்வேலித் தமிழுக்கும் வித்தியாசம் உண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும் மதுரைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. சில சொற்கள் யாழ்ப்பாணத்தாருக்கு எளிதில் விளங்கும்; மற்ற நாட்டாருக்கு விளங்கா. ‘தெண்டித்தல்’ என்ற சொல்லை யாழ்ப்பாணத்துப் பேச்சில் சர்வசாதாரண மாக வழங்குகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதற்குத் ‘தண்டனை தருதல்’ என்ற அர்த்தத்தையே கொள்வார்கள். ‘முயலுதல்’ என்ற பொருளில் அதை யாழ்ப்பாணத்தார் வழங்குகிறார்கள். ஆகையால், எளிய சொல் என்பது இடத்தைப் பொறுத்தது என்று தெரியவரும்.

இதைத் தொல்காப்பியர் உணர்ந்தவர். இயல்பாக விளங்கும் சொல்லாகிய இயற்சொல் இன்னதென்று சொல்ல வருபவர், இன்ன பகுதியில் இயல்பாக வழங்கும் சொல் என்று குறிப்பிடுகிறார். ‘இயற் சொற்கள் என்பன, செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்துக்குப் பொருந்தித் தம் பொருளிலிருந்து மாறாமல் நடப்பவை’ என்று சொல்லுகிறார். அங்கே தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய செந்தமிழ் நிலத்தைக் குறிக்கிறார். மதுரையை நடுவாகக் கொண்ட பாண்டி நாட்டுப் பகுதியைச் செந்தமிழ் நாடென்று முன்பு வழங்கி வந்தனர். “செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” என்று வருகிறது சூத்திரம். அங்கே தமிழ் என்ற  சொல்லை ஆண்டிருக்கிறார்.

தொல்காப்பியருக்குப் பின் எழுந்த நூல்களில் தமிழ் என்ற பெயர் வந்ததற்குக் கணக்கே இல்லை. இப்படி நூல்களில் தமிழ் என்ற சொல்லாட்சி பல விடங்களில் வரும்போது “தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே” என்று சொல்வதுதானே நியாயம்?

பெரும் புலவர் கி.வா.சகந்நாதன்:

கன்னித்தமிழ்

கி.வா.சகந்நாதன் :Ki.Vaa.Ja_ki.vaa.sakanathan