தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாட்டில் எல்லாக் கட்சியின் ஆட்சிகளிலும் தமிழ் வளர்ந்தும் உள்ளது; தளர்ந்தும் உள்ளது. எனினும் எந்த ஆட்சியிலும் தமிழ் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக மாற்ற எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு, இருக்கின்ற பயன்பாட்டு நிலைகளிலும் தமிழைத் தொலைத்து வருகின்றது.
பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி தொலைக்கப்பட்டு வருகிறது. மாணாக்கர் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் தமிழ்வழிப்பள்ளிகளை அரசு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றுகிறது. அரசு மழலைப்பள்ளிகள் தொடங்க இருக்கிறது. ஆனால் அங்கு தமிழைத் தொலைத்துத்தான் அப்பள்ளிகளைத் தொடங்குகிறது.
பத்து அகவை வரை குழந்தைகளுக்கு அயல்மொழியறிவே திணிக்கப்படக்கூடாது என்பது கல்வி உளவியல். அதற்கு மாறாகப்பிஞ்சு உள்ளங்களில் ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழைத் தொலைக்கிறது தமிழக அரசு.
பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டிற்கு மேல் தமிழ் ஆட்சிமொழிச் செயல்பாடு இருந்தது. அத்தகைய துறைகளில்கூட இன்று தமிழ்ச்செயல்பாடு குறைந்துள்ளது. பதிவேடுகள், மடல்போக்குவரத்து, அறிவிப்புகள், மாறுதல் ஆணைகள், எனப் பல இடங்களிலும் தமிழ் இல்லை.
தேர்வாணையப் பாடத்திட்டங்களில் தமிழ் வரலாற்றிற்கு முதன்மை இல்லை. முதன்மை மட்டுமல்ல உரிய பங்கும் இல்லை.
தமிழ் மொழிச்சிறப்பு, தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பு, தமிழ் நாகரிகச் சிறப்பு, தமிழ் வரலாற்றுச் சிறப்பு முதலானவற்றை வெளிப்படுத்தும் வகையில் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் இல்லை.
அதைவிடக் கொடுமை, தேர்வு வினாக்களைத் தமிழில் குறித்துத் தருவதற்குத் தக்கவர் இல்லை என்று கூறிச் சில தாள்களின் வினாத்தாள்களைத் தமிழில் தரப்போவதில்லை என அதன் செயலர் அறிவித்தார். அவரது கருத்துக்குப் பரவலாக எதிர்ப்பு ஏற்பட்ட பின்னர், அவர் தனது கருத்தை மறுத்திருக்கிறார்.
அப்படித்தான் தமிழ்வழிப்பள்ளிகைள மூடப்போவதில்லை என்று முதலில் அறிவித்தார்கள். பின்னர் எந்தெந்தப் பள்ளிகளை மூடப்போவதில்லை என்று அறிவித்தார்களோ அவற்றை எல்லாம் ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றி வருகின்றனர். ஒரு பள்ளியில் ஆங்கிலம் வருகின்றது என்றால் தமிழ் அங்கே தொலைக்கப்படுகிறது என்றுதானே பொருள்.
அரசு கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளை அறிமுகப்படுத்திய பொழுது அரசியலறிவியல், சமூகவியல் துறைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தனர். அந்தப் பாடங்களுக்குத்தான் தமிழில் வினா எடுக்க யாரும் இல்லையாம்!
தமிழ்நாட்டுப்பாடநூல் கழகமே 50 ஆண்டுகளுக்கு முன்னரே கலையியல் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க அத்தாள்களுக்கான வினாக்களைத தமிழில் எடுக்க யாருமில்லை என்பது முரணில்லையா?.
மேனிலைக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் இருக்கும் பொழுது அதை நடத்தும்ஆசிரியர்களால் வினாத்தாளா அளிக்க முடியாது? அப்படியானால், ஆளில்லாமல் அல்ல, மனமறிந்தே தமிழைத் தொலைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிதான் இப்படி உள்ளது என்றால் முதன்மை எதிர்க்கட்சியும் அப்படித்தான் உள்ளது. தி,முக. சட்ட மன்ற உறுப்பினர்கள்தான் ஆங்கிலவழிப் பள்ளிகளைத் தொடங்க வலியுறுத்துகின்றனர். எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மழலையர் கல்வி நிலையிலேயே ஆங்கிலம் வேண்டும் என்று வழக்கு தொடுக்கின்றார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், “தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்துகிறார்.
இவையெல்லாம் அவர்களின் தனிப்பட்டகருத்து என்று இவற்றை ஒதுக்க முடியாது. எதிர்க்கட்சியின் தலைமை அதற்கு உடன்படுவது ஏன்?
அவர்களும் ஆங்கிலவழிப் பள்ளிக்காவலர்களாக விளங்குபவர்கள்தானே! தங்கள் ஆட்சியில் அவர்களும் தமிழைத் தொலைத்தவர்கள்தானே! எனவேதான் இன்றைய ஆட்சியின் தமிழ்த்தொலைப்பிற்கும் அமைதி காத்து அதற்கு உடந்தையாக உள்ளனர்.
பொதுமக்களும் தமிழ் அமைப்புகளும்தான் குழந்தைகளின் எதிர்காலம் கருதிக் குரல் கொடுத்துத் தமிழ்நாட்டில் தமிழ் வாழச் செயலாற்ற வேண்டும் தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா அல்லது அரசு தமிழைத் தொலைக்குமா என்பது மக்கள் கைகளில்தான் உள்ளது.
இலக்குவனார் திருவள்ளுவன்
தினமணி 09.11.2018
Leave a Reply