தமிழைத் துரத்தும் பள்ளிக் கல்வித் துறை

 நாளும் நற்செயல்கள் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு நற்பணிகள் ஆற்றி நல்லரசு நடத்துகிறார் முதல்வர் மு.க.தாலின். அமைச்சர் பெருமக்களும் அவர் வழியில் நல்லரசு நிலைக்கத் துணை நிற்கின்றனர். ஆனால், அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் தமிழுக்குக் கேடு செய்யும் வகையிலும் அதிகாரிகள் சிலர் திட்டமிடுகின்றனர். அதற்கு அரசும் துணைபோகும் அவலம் நேர உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளைக் பெருக்கும் வகையில் சட்டமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதற்கிணங்க “அரசு – அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்கள் நீக்கப்படும்” என்றார். இதனால் ஆங்கிலவழிக்கல்வி பெருகித் தமிழ்வழிக்கல்வி மறையும் நிலைதான் ஏற்படுகிறது.

அரசு மாறினாலும் முந்தைய அரசின் நல்ல திட்டங்களைத் தொடர வேண்டும். என்றாலும் நடுநிலையாளர்களாகக் காட்டும் வகையில் முந்தைய அரசின் தீய செயல்களையும் தொடர வேண்டும் என்றில்லை. ஆனால், தமிழ்வழிக்கல்விக்குச்சாவு மணி அடிக்கும் முந்தைய அதிமுக அரசின் திட்டங்களைத் தொடரும் வகையில் அரசு அறிவிப்புகள் வருகின்றன.

 “தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாத்திரங்களும் தமிழ் மொழி மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோர் எல்லோரும் கொண்டிருக்கிறார்கள்” என்றார் பைந்தமிழ்த்தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்.

நம் நாட்டில் காந்தியடிகள் முதலான தலைவர்கள் பலரும் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியுள்ளனர்; இப்பொழுதும் கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். பயிற்சிமொழிக் காவலர் பேரா. முனைவர் சி.இலக்குவனார், “உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.  நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம்.” எனத் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்துகிறார்.

 துணைக்குடியரசுத்தலைவர் வெங்கையா(நாயுடு) “மொழியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பன்முக அணுகுமுறை தேவை. இது தொடக்கப்பள்ளி மட்டத்திலிருந்தே தொடங்கி உயர் கல்விக்குத் தொடரப்பட வேண்டும். குறைந்தது தாய் மொழியில் செயல்பாட்டு கல்வியறிவு உறுதி செய்யப்பட வேண்டும்.” என்றார். ‘தாய்மொழிக்கல்வி மூலம் தாய்நாட்டு வளர்ச்சி’ என்பதை இலக்காகக் கொண்டு வெங்கையா(நாயுடு) வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். நாடு முழுவதும் அந்தந்த மக்களின்தாய்மொழி வழியிலான கல்விக்கு ஒன்றிய அரசு உதவும் வகையில் அவர் செயலாற்ற வேண்டும்.

 அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஒன்று, 22 நாடுகளில் 160 மொழிக் குழுக்களிடம்  தாய்மொழிக்கல்வி குறித்து விவரம் திரட்டியது.  பெரும்பாலான மாணக்கர்களின் பள்ளிக்கல்வி முழுமை பெறாததற்கும் பிறமொழியைக் கற்கும் திறன் இழந்ததற்கும் தாய்மொழி அல்லாத பிற மொழிக்கல்விதான் காரணம் என ஆய்வு முடிவைத் தெரிவித்தது. இதனால் 2008இல் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு  தாய்மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே பிற மொழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி வழியே உயர்கல்வி  என்பதையே  வலியுறுத்தத் தொடங்கியது.

இமயமலை போலுயர்ந்த

ஒருநாடும் தன்மொழியில்

தாழ்ந்தால் வீழும் (தமிழியக்கம்)

எனப் பாவேந்தர் பாரதிதாசன் இதைத்தான் வலியுறுத்துகிறார். 

 “எல்லா நாடுகளுமே தத்தம் நாட்டில் உள்ள பிற நாட்டினரின் தாய்மொழிக்கல்வியில் கருத்து செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, நார்வே, சுவீடன் முதலான ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாட்டில் வளரும் பிற மொழியினரின் குழந்தைகளுக்கும் அவரவர் தாய்மொழியைக் கற்பிக்க வழிவகை செய்துள்ளன. நார்வே நாட்டில் தமிழ்மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண், நார்வே நாட்டின் மருத்துவக் கல்வி நுழைவிற்கு உதவுகிறது.

பாப்பூ நியூ கினியா  நாட்டில் கணிசமான தொகையில் மக்கள்பேசும் 450 மொழிகளைக் கல்வி மொழிகளாக அந்நாடு பின்பற்றுகிறது.

எத்தியோப்பாவில், தாய் மொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, கற்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையானது பெருமளவில் குறைந்தது.

பிலிப்பைன்சு அரசாங்கம் 2012 இல் அனைத்துத் தொல்குடி மக்களும் அவரவர் தாய் மொழி வழியே கல்விக் கற்பதைக் கொள்கை முடிவாக எடுத்து நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

பிற மொழிக் குழந்தைகள் சுவீடனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பெற்றோர்களின் இடப்பெயர்வின் காரணமாகச் சுவீடனில் வாழ்ந்தாலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்தாலும் தாய்மொழிக்கல்வியை அவர்களுக்கு அளிப்பதைச் சுவீடன் கல்வித்துறை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நம் நாட்டிலோ இங்கேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அயல் மொழிக்கல்வியைத் திணிப்பதையே அரசுகள் கடமையாகக் கொண்டு செயல்படுகின்ற அவலம் உள்ளது.“

தாய்மொழி சார் கல்வி(mother tongue-based education) உள்ள நாடுகளில் கல்வி வளர்ச்சியும் பிற வளர்ச்சியும் சிறப்பாக உள்ளன. அயல்மொழி சார் கல்வி உள்ள நாடுகளில் இவை பின்தங்கியே காணப்படுகின்றன.

பொதுவாக அயல்மொழியினர் ஆட்சியில் கட்டுப்பட்ட நாடுகளில் எல்லாம் தாய்மொழிக்கல்வி புறக்கணிக்கப்படுகிறது. இவற்றுள் எந்தெந்த நாடுகள் விழிப்படைந்து தாய்மொழிக்கல்விக்கும் தாய்மொழிவழிக்கல்விக்கும் மாறியனவோ அங்கெல்லாம் வளர்ச்சியைக் காண முடிகிறது.

பிற நாட்டு அரசுகள் தத்தம் நாட்டில் வாழும் அயல் நாட்டார் தத்தம் தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறவேண்டும் என்பதில் முனைப்பாகக் கருத்து செலுத்திச் செயல்படுகின்றன. தமிழ் நாட்டிலோ நாட்டு மக்கள் தம் தாய்மொழியிலான தமிழில் கல்வி கற்பதற்குத் தடையாகச் சூழல்கள் உள்ளன.

நாம் எதற்கெடுத்தாலும் மேல் நாட்டைப் பாருங்கள், சப்பானைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள் என்கிறோம். ஆனால் வளர்ச்சி பெற்ற அந்நாடுகள் தத்தம் தாய்மொழியில் கல்வி அளிப்பதால்தான் வளர்ந்துள்ளன என்பதை மறந்து விடுகிறோம். ஒருவர் தன் தாய்மொழி யல்லாத பிற மொழியில் படிக்கும் பொழுது பிற மொழிப்பாடமே ஒரு சுமையாக அமைகிறது. இதனால், அம்மொழியில் படிக்கும் துறைப்பாடங்களும் சுமையாக மாறிவிடுகின்றன. கல்வியாளர்களின் இக் கருத்தை உணர்ந்து எலலா நாடுகளும் தாய்மொழிக்கல்வியில் கருத்து செலுத்துகின்றன. பிற மொழிக்கல்வியால் உருப்போடும் மனனக் கல்விமுறைதான் வளர்கிறது. மாறாகத் தாய்மொழி வழிக்கல்வியானது ஆசிரியர் மாணாக்கர் உறவை மேம்படுத்தி ஐயங்களை அகற்றவும் தெளிவு பெறவும் உதவுகிறது. இதனால் மாணாக்கர்களின் சிந்தனை ஆற்றல் பெருகுகிறது.

“தாய்மொழிக் கல்வியால்தான் இன்று நான் என் கனவுகளை அடைய முடிந்தது” என்கிறார் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று விண்வெளி வீரராகப் பயிற்சி பெற்று வரும் தமிழக மாணவி உதய கீர்த்திகா

தமிழ்நாட்டைச்சேர்ந்த புள்ளி விவரங்கள் அளித்தால் திராவிட ஆட்சிகளை நஞ்சாக எண்ணுவோர், இவர்களுக்கு வேறு வேலை இல்லை என்பர். எனவே, பிற மாநில விவரங்களைப் பார்ப்போம்.

மூவாண்டிற்கு முன்னர் அண்டைய மாநிலமான கருநாடகாவில் ஆங்கிலவழித் திணிப்பு நிகழ்ந்த பொழுது எழுந்த எதிர்ப்பலையை நாம் காண்போம். அன்றைய முதல்வர் குமாரசாமி, சோதனை முயற்சி எனச் சொல்லி கருநாடகத்தில் இருக்கும் 28,847 தொடக்கப் பள்ளிகளில் ஆயிரம் பள்ளிகளில் மட்டும் ஆங்கில வழியாகக், கல்வி கற்பிக்கப்படும் என்றார்.

ஆனால், இதற்குக் கன்னட செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆங்கில வழிக் கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்றார் சாகித்திய அகாதமியின் முன்னாள் செயற் குழு உறுப்பினர் நரஃகள்ளி பாலசுப்பிரமணியா. அவர், “பொறியாளரும் அரசியல் வல்லுநருமான விசுவேசுவரையா, விண்வெளி ஆராய்ச்சியாளர் உடுப்பி இராமச்சந்திரன்(யு.ஆர்.இராவு), புகழ்பெற்ற அறிவியலாளரான சிந்தாமணி நாகேச இராமச்சந்திரன் (சி.என்.ஆர்.இராவு) முதலான சமூக முன்னோடிகள் அனைவரும் பத்தாம் வகுப்புவரை கன்னட வழிக் கல்வியில் பயின்றவர்களே” என்றார்.

“படிப்பதும், எழுதுவதும் புரிந்து கொள்ளும் மொழியில் இருந்தால், மாணவர்களுக்கு இரண்டாம் மொழி ஒன்றைக் கற்பது எளிதாக இருக்கும். மொழியைக் கற்பித்தல் குறித்த புரிதல் நம் நாட்டில் பெரிதாக இல்லை. கல்வியில் தாய் மொழி முதன்மைப் பங்கு வகிக்கிறது. இதனை நாம் புரிந்துகொள்வது இல்லை. தாய் மொழியைச் சரியாகக் கற்கும் ஒருவரால் இரண்டாவது,  மூன்றாவது மொழிகளை எளிதாகக் கற்க முடியும்” என்றார் பேராசிரியர் இராம்பால்.

“இரண்டாண்டுகளுக்கு முன் கருநாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அரசு பள்ளிகளில் கன்னடவழிக் கற்பிப்போர் குறித்த நிலையை விளக்கியது. அஃதாவது கருநாடக அரசுப் பள்ளிகளில் கன்னட வழியில் பயிலும் மாணவர்களில் 35 விழுக்காட்டினர் பட்டியல் வகுப்பு மாணவர்கள். 60 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்தவர்கள், எஞ்சியுள்ளவர்கள் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகள்” என அம்மாநிலப்பள்ளிக் கல்வி அதிகாரி ஒருவர் விளக்கினார்.

உலக நாட்டு அமைப்புகளின் ஆய்வு விவரங்கள், தங்களுடைய இளமைக் காலத்தில் தாய்மொழியில் கல்வி கற்கும் குழந்தைகள், பிற மொழிகளையும், பிற பாடங்களையும், தாய்மொழியில் கல்வி கற்காத  குழந்தைகளைவிடச் சிறப்பாக கற்றுத் தேர்ச்சி பெறுகின்றனர் என்பதை உறுதியாக்குகின்றன. எனவேதான்,  கல்வியின் தரம் உயரத் தாய்மொழியிலான கல்வியை ஆதரிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கங்களாக அவை கூறுகின்றன.

எனவே, மழலைப் பருவத்திலேயே தமிழையும் தமிழ் வழிக்கல்வியையும் அளிப்பதன் மூலம், நாம் குழந்தைகளை அறிஞர்களாகவும் வல்லவர்களாகவும் ஆக்க முடியும்.

நாம் முழுமையாகத் தாய்மொழிக்கல்வியையும் தாய்மொழி வழிக்கல்வியையும் நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாது என ஆன்றோர்கள் கூறுவதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தப் பின்வரும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

  1. கல்வித்துறையை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். தாய்மொழி வழிக்கல்விக்கான ஒதுக்கீடுகளை மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்க வேண்டும்.
  2. பணி வாய்ப்பு இல்லாமல் தாய்மொழிக்கல்வி வெற்றி பெறாது. எனவே, எல்லாப்பணித்தேர்வுகளும் அனைத்து மாநில மொழிகளிலும் நடைபெற வேண்டும்.
  3. மத்திய அரசின் எல்லாக் கல்வி நிலையங்களும் அயலகக் கல்வி நிறுவனங்களும் பிற கல்வி நிறுவனங்களும் அவை இருக்கும் மாநில மக்களின் மொழிகளில் கல்வி கற்பிக்க வேண்டும்.
  4. அரசியல் யாப்புப் பட்டியலில் உள்ள தேசிய மொழிகள் அல்லாத பிற தாய்மொழிக் கல்வியும் அவ்வம் மொழியினரின் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
  5. உயர்நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் அயல்நாட்டு நிறுவனங்களிலும்மாநில மொழிகளே ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும். இதனைத் தமிழ்நாட்டு முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.

அப்பொழுதுதான் தமிழ் வழிக் கல்விக்கு எத்தகைய இடையூறும் இருக்காது. மக்களுக்குத் தமிழ் வழிக்கல்வியில் நம்பிக்கையும் வரும்.

தனியார் பள்ளிகள் நிதிநிலை ஆதாரங்களைத்திரட்டிக் கொண்டு ஆங்கிலவழிப்பள்ளிகளை நடத்துவதற்கு இசைவு தரக் கூடாது. உடனடியாக அனைத்து ஆங்கில வழிப்பள்ளிகளையும் மூட வேண்டும். தமிழ் வழியிலான கல்வி கற்பிக்கும் பள்ளிகள் மட்டுமே இயங்க வேண்டும். அவையும் தரமான நிலைகளில் இருக்க வேண்டும். கல்விப்பணி என்பது அறப்பணி. வணிகம் அன்று! எனவே, சொந்த நிதி ஆதாரத்தில் பள்ளி நடத்த மட்டுமே இசைவு தர வேண்டும். நன்கொடை பெற்று நடத்துவதற்கு இடம் தரக் கூடாது. இதுவரை நன்கொடை பெற்று நடந்து வரும் பள்ளிகளில் நன்கொடையாளர்களைக் கொண்ட கூட்டுறவுக் கல்வியக முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு ஒத்து வராவிடில் அப்பள்ளிகளை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். மகுடைத் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில் மேலும் சில திங்கள் தாய்மொழி வழிக்கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்காக மூடி இருந்தால் ஒன்றும் குறைந்து போய் விடாது.

‘தமிழைத்துரத்தும் பள்ளிக்கல்வித்துறை’ என்னும் அவலநிலை மாற வேண்டும். இதற்குத் தமிழ் வழிக்கல்விக்கு எதிரான அதிகாரிகளைத் தூக்கி அடிக்க வேண்டும். தாய்மொழிக்கல்வியில் நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே உயர் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். தேசிய அளவில் ஆங்கில மொழியில்  நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளை அவர்கள் சுலபமாக எதிர்கொள்ள ஆங்கில வழிக்கல்வி தேவை எனப் பரிந்துரைத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநரை அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழ்வழிக்கல்வியும் தரமான ஆங்கிலமொழிக் கல்வியும் தரப்படும் வகையில் நம்பிக்கை உடையவரைப் பள்ளிக் கல்வி இயக்குநராக  அமர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில், ஆங்கில வழிக் கல்வியை அறவே நீக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியையும் ஆங்கில மொழிக் கல்வியையும் சிறப்பாக அளித்தல் வேண்டும். முதல்வர் வழியில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி விரைவில் நடவடிக்கை எடுத்துப் பள்ளிக்கல்வியில் தமிழை வாழவைக்க வேண்டும்.

பிற மொழித் திணிப்பு எதிர்ப்பு நமது காப்புரிமை!” என்னும்  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் முழங்கிய முழக்கத்தை நாம் மறவாமல் பின்பற்ற வேண்டும்!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல