இராபர்ட்டு கால்டுவெல் 

முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம்,  காட்டுலாந்து(Scotland).

ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர்.

 சித்திரை 26,  1845 / 1814 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7 ஆம் நாள் அவர் பிறந்தார். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற அவர் தன் பத்தாம் அகவையில்  பெற்றோருடன் காட்டுலாந்துக்குப் போய்விட்டார்.

பதினோறாம் அகவையில் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுறப் பயின்ற கால்டுவெல், தன் தந்தையின் விருப்பப்படி ஓவியத்துறையிலும் பயின்றார்.

தபுளின்(Dublin) ஓவியக் கல்லூரியில் பயின்ற அவர், சிறந்த ஓவியருக்கான உயர்ந்த பரிசுகளைப் பெற்றிருக்கிறார். ஆனாலும் அவரின் சிந்தனையும் நாட்டமும் இறைப் பணியாற்றும் சமயத் துறையையே நாடியது.

அவரின் இருபதாம் அகவையில், இலண்டன் மாநகரக் கிருத்துவச் சமயத் தொண்டர் சங்கத்தில்  உறுப்பினராகச் சேர்ந்தார்.

இச்சங்கத்தின் சார்பில் கிளாசுகோ பல்கலைக் கழகத்தில்(University of Glasgow) சேர்ந்து, ஜரோப்பிய மொழிகளில் அமைந்த சமய நூல்களையும், நீதி நூல்களையும், படித்த கால்டுவெல், அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வயவர்(சர்). தானியல் கெய்த்தே சேண்டுபோர்டு (Daniel Keyte Sandford) என்பவரின் பாடப் பயிற்சியால் ஈர்க்கப்பட்டார்.

பேராசிரியர் தானியல், கிரேக்க மொழியின் சிறப்புகள், அதன் அருமை பெருமைகளைப் பிற மொழிகளுடன் ஒப்புமைப்படுத்திக் காட்டி விளக்கிய திறமையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார் கால்டுவெல்.

இந்த நிகழ்வே பின்னர்த் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுத அவருக்கு அடிப்படையாக அமைந்தது.

தென்னிந்திய திருச்சபை வேண்டுகோளை ஏற்று இலண்டன் திருச்சபை(London Missionary Society), சமய பரப்புரைக்காகக் கால்டுவெலைச் சென்னைக்கு அனுப்பியது. 1838 ஆம் ஆண்டு இளைஞரான கால்டுவெல், கப்பல் மூலம் சென்னை வந்து இறங்கினார்.

இங்கே துரூ, வின்சுலோ, பவர், ஆண்டர்சன் ஆகிய தமிழறிஞர்களாகிய  ஆங்கிலேயர்களின் நட்பு,  இவரின் தமிழார்வத்தை உந்தித் தள்ளியது. கால்டுவெல்லின் மனைவி, நாகர்கோயில் கிருத்துவச் சமயப் பணியாளரான மால்து (Mault) என்பவரின் மகள் எலிசா தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் என்பது இவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

சங்க இலக்கிய- இலக்கணங்களையும், பழந்தமிழ் ஏடுகளையும் தேடித் தேடிப் படித்தார். அகழ்வாய்வுகளில் ஈடுபட்டார்.

இவரின் அகழ்வாய்வில் பண்டைய தமிழர்களின் ஈமத்தாழிகளைக் கண்டறிந்து கூறினார்.

பாண்டிய நாட்டின் மீன் சின்னம் பொறித்த தங்கக் காசுகளைக் கண்டறிந்தார்.

சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற இவர் தரங்கம்பாடி, தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை வழியகச் செல்லும் போது அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரத் தமிழ், பேச்சு மொழி, பண்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு வந்தார். அத்துடன் இவரின் தமிழ்க்கல்வி, வரலாற்றுக் கல்வி, அகழ்வாய்வும் சேர்ந்தன.

‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ (A Political and General History of the District of Tirunelveli) என்ற புகழ் பெற்ற நூலை எழுதினார்.

இந்நூலை 1881 ஆம் ஆண்டு அன்றைய மதராசு அரசு வெளியிட்டுள்ளது.

1856 ஆம் ஆண்டு Comparative Grammar of the Dravidian of South Indian Family Language என்ற ஆங்கில நூலை எழுதினார்.

இந்நூல் உலக அளவில் கால்டுவெல்லுக்குப் புகழைக் கொடுத்தது மட்டுமல்லாமல், உலக அளவில் மொழியியல் ஆய்வுக்குப் பெரிதும் துணை செய்யும் நூலாகவும் அமைந்து விட்டது.

இந்நூலுக்காக அவர் படித்த கிளாசுகோ பல்கலைக் கழகம் அவருக்கு முனைவர்(டாக்டர்) பட்டம் வழங்கி உள்ளது.

தமிழில் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்‘ என்று அழைக்கப்படும் இந்நூலின் தமிழ் வடிவப் பெயர் ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்’.

இந்நூலில் குசராத்தி, மராத்தி, ஒரிசா, தக்காணப்பகுதி, நீங்கலாகப் பலுசித்தானம், வங்காளத்தின், இராசுமகால் மலைகள் தொட்டு, கன்னியாகுமரி வரையும் திராவிட மொழிக் குடும்ப மொழிகளே ஆளப்பெற்றிருந்தது. என்கிறார் கால்டுவெல்.

‘‘இந்திய நாட்டின் வடபகுதியிலோ, தென் பகுதியிலோ சமற்கிருதம் என்று அழைக்கப்படும் வடமொழி, உள்நாட்டு மொழியாக இருந்ததில்லை. அப்படி நம்பவும் வழியில்லை” –என்றும்

‘‘உள்நாட்டுச் சிற்றூர் மக்கள், நாட்டுப் புறங்களிலும் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள், வட மொழிச் சொற்களைப் பேச்சு வழக்கில் கையாளாமல், ஒதுக்கித் தள்ளும் தூய பழக்கம் காணப்படுகிறது. ஒரு மொழியின் தொன்மைச் சிறப்புகளை, அம்மொழியிலும், செய்யுள்களிலும், தாழ்த்தப்பட்ட குடி மக்களின் பேச்சுகளில் இருந்தே ஆய்ந்து காணமுடியும் என்பது உண்மை’’ என்றும்

‘‘தமிழ் என்னும் சொல்லுக்கு நேர் வடமொழிச் சொல் திரவிடம் என்பதாகும். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசும் மொழியையும் ஒன்றெனக் குறிப்பதாகும். தமிழ் என்ற சொல்லின் ஒலி வடிவிற்கும், திராவிடம் என்ற சொல்லின் ஒலி வடிவிற்க்கும் இடையே எத்துனையோ  வேறுபாடு காணப்பட்டாலும், இரண்டும் ஒரே வேரில் இருந்தே பிறந்ததாகக் கொள்வதற்கு இடம் உள்ளது. தமிழ் என்ற சொல்லே பின்னர் திரவிடம் எனத் திரிபுற்றது என்று  சொல்வதைக் காட்டிலும், திராவிடம் என்ற சொல்தான் தமிழ் என்று திரிபுற்றது என்று கூறுவது சரியானதாகும்” என்றும்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகிறார் கால்டுவெல்.

தமிழர் – திராவிடர் இவ்விரு சொற்களும் தமிழரையே குறிக்கும் ஒரு பொருள் இரு சொற்கள் என்று முனைவர் அம்பேத்கர் சொல்வது இங்கு கருதத்தக்கது.

 

திராவிடம் என்பதைக் குறியீட்டுச் சொல் என்கிறார் கால்டுவெல்.

“தமிழ்மொழி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றையும் குறிப்பதற்கு குறியீடொன்று தேவைப்படுகிறது. திராவிடம் என்று அதனை வகுத்துக் கொண்டால், எடுத்துக் கொண்ட ஒப்பிலக்கண முறைக்கு அது மிகவும் பயனுடையதாக அமையும்” என்றும் விளக்குகிறார்.

திராவிட மொழிக்குடும்பம், ஆரிய மொழிக் குடும்பம் எனும் இரு குடும்ப மொழிகளைத் திருந்திய மற்றும் -திருந்தாத மொழிகளாகப் பகுத்துத் தன் ஒப்பிலக்கணத்தை விரிவுபடுத்தித் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியிருக்கிறார் கால்டுவெல்.

முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று உலகுக்குப் பறைசாற்றி, 1941 முதல் நெல்லை மாவட்ட இடையன் குடியில் 50 ஆண்டுகள் வாழ்ந்து அரும் பணியாற்றித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார் இராபர்ட்டு கால்டுவெல் அவர்கள்.

தன் 77ஆம் அகவையில், தி.பி.  1924 /1891 ஆம் ஆண்டு ஆகத்து 28 ஆம் நாள், கொடைக்கானலில் இயற்கை எய்தித் தன் பணிகளை முடித்துக்கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

எழில்.இளங்கோவன்

கருஞ்சட்டைத் தமிழர்

14 ட்டோபர் 2017