தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி

தமிழ் அகராதிகளில் பாராட்டுதலுக்குரிய முதன்மை அகராதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. 12 மடலங்களாகவும் இவை 31 பிரிவுகளாகவும் வந்துள்ள மிகுதியான சொல் வளம் உடைய அகராதியாகும். இது தமிழின் சொல்வளத்தை உலகிற்கு உணர்த்தும் சிறப்பான அகராதியாகத் திகழ்கிறது.. இவ்வகராதி மேலும் சிறப்பாக அமைய, நிறைகாணும் முயற்சியில் சில கருத்துகளைக் காண்போம்.

சமசுகிருதச் சொல், மயக்கமாக உள்ளவற்றை அவை தமிழ்ச்சொற்களே என்பதை இப்பேரகரமுதலி விளக்குகிறது. எனினும் அயற்சொற் மடலத்தில் இடம் பெற்றுள்ள சொற்களுள் நூற்றுகணக்கான தமிழ்ச்சொற்களும் இடம் பெறுகின்றன.

இதேபோல்  அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சில தமிழ்ச்சொற்கள் இதில் இடம் பெறவில்லை. அவற்றை அயற்சொற்கள் எனக் கருதியிருந்தால் அயற்சொல் மடலத்தில் சேர்த்திருக்க வேண்டும். எம்மொழிச் சொற்கள் என ஐயம் ஏற்பட்டு விட்டு விட்டார்களா என்றும் தெரியவில்லை. ஐயம் இருந்திருப்பின் ஐயக் குறிப்புடன் வெளியிட்டு இருக்க வேண்டும்.

திராவிடச் சொற்களெல்லாம் தமிழ்ச்சொற்களின் திரிபு என்பதே இப்பேரகரமுதலியின் அடிப்படைக் கொள்கை. அவ்வாறிருக்க சில சொற்களைத் திராவிடச் சொற்களாகக் காட்டியிருக்க வேண்டா. தமிழ்க்குடும்ப மொழியில் நிலை பெற்றுள்ள சொற்கள் எனக் காட்டியிருக்கலாம்.

தமிழ், திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்பதும் இப்பேரகராதியின் அடிப்பைக் கொள்கை(பக்.10). ஆனால், சில தமிழ்ச்சொற்கள் ஆரியச் சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டுகளாகக் காண்போம்.

  • அகதி

கதி என்பதற்குப் புகலிடம் முதலான பல பொருள்கள் இதே அகராதியில் தரப்பட்டுள்ளன. (பேரகரமுதலி: ‘க’ மடலம் பக்கம் 316 ; மடலத்தின் பாகத்தைக் குறிக்காமல் எளிமை கருதி எழுத்தை இணைத்து மடலம் குறிக்கப்பெறுகிறது.) அப்படியானால் எதிர்மறை முன்னொட்டு  ‘அ’ சேர்ந்து புகலிடம் அற்றவன் என்னும் பொருள் தரும் அகதி என்பதும் தமிழ்ச்சொல்தானே! ஆனால் அயற்சொல் மடலத்தில் சமசுகிருதத்தில் இருந்து வந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. மயக்கத்திற்குக் காரணம்  வழக்கத்தில் (ங்)க என்னும் ஒலிப்பு உள்ளதே!  ஒலிப்பு மயக்கத்தால் தமிழ்ச்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்டலாமா?

  • அகர்ணம்

காதின்மை, காதுகேளாமை எனப் பொருள் வழங்கிச் சமசுகிருத aghar > தமிழ் அகர்ணம் எனக் காட்டப்பட்டுள்ளது.

‘கன்னம்’ என்னும் தமிழ்ச்சொல்லின் ஒரு பொருள் ‘காது’ என்பதாகும். (‘க’ மடலம் பக்கம் 704 இல்) ‘துளையுள்ள காது’ எனப் பொருள் விளக்கப்பட்டுள்ளது. எதிர்ச்சொல் முன்னொட்டு ‘அ’ சேரும் பொழுது ‘அகன்னம்’ ஆகிறது.

(அ)கன்னம் சமசுகிருதத்தில் (அ)கர்ணம் என மருவியுள்ளது. இந்த உண்மையை உணராமல் நல்ல தமிழ்ச்சொல்லைச் சமற்கிருதமாகக் காட்டியது ஏனோ?

 அகர்முகம் 

அகரம் நெடுங்கணக்தில் முதலில் வருவது. எனவேதான் “அகரமுதல எழுத்தெல்லாம்” என்றார் திருவள்ளுவர். எழுத்துகளுக்கு முதலாக அமையும் அகரம் நாளடைவில் முதன்மையையும் முன்மையையும் குறித்தது. பொழுதின் முற்பொழுதாக – முதல் பொழுதாக அமையும் வைகறை இதன் அடிப்படையில் ‘அகரமுகம் >  ‘அகர்முகம்’ எனப்பட்டது. எனவே, வைகறையைக் குறிக்கும் ‘அகர்முகம்’ தமிழே!

  • அகரகாயம்

‘காயம்’ உடலைக் குறிக்கும். (“காயமே இது பொய்யடா” என்னும் சித்தர் பாடலை நாமறிவோம்.) உடலின் முன்பக்கம் ‘அகரகாயம்’ ஆயிற்று. எனவே, இது தமிழ்ச்சொல்லே!

  • அகரத் திரவம்

பால், தயிர் ஆகியவற்றில் முதலில் – மேல் பகுதியில் – முற்பகுதியில் அமையும் ஏடு அகரத்திரவம் ஆயிற்று. இதுவும் தமிழே!

  • அகரநீர்

 முத்துச்சிப்பியின் நடுவில் முதலில் சேரும் நீர் அகர நீர் எனலாயிற்று. இதுவும் தமிழே!

  • அகற்பன்

பேரகரமுதலியில்  கற்பனை, கற்பள், கற்பித்தல், கற்பிதம், (‘க’ மடலம் பக்கம் 671-673) எனக் கல் வேர்ச்சொல் அடிப்படையிலான பல சொற்களைக் காண இயலும்.

கற்பன் – கல்வியறிவுள்ளவன் எனக் குறிக்கப்பெற்றுள்ளது(பக்.671).  கற்பன் என்பது கற்பிக்கப்படுபவனையும் குறிப்பது. கற்பிக்கப்படுவது என்பது கல்வி கற்பிக்கப்படுவதை மட்டுமல்ல.

இவன் இத்தகையன், இத்தன்மைகள் அல்லது இத்தன்மையுடையோருக்கு ஒப்பானவன் எனக் கற்பிதப்படுவத்துவது. எனவே, இவ்வாறு ஒப்பு சொல்ல முடியாத – கற்பிக்கப்பட இயலாதவன் அகற்பன் எனப்படுகின்றான். எனவே, அகற்பன் தமிழ்ச்சொல்லே!

  • அகன்னம்

முதலிலேயே (அகர்ணம் விளக்கத்தில்) இது தமிழ்ச்சொல் என நிறுவப்பட்டுள்ளதைக் காண்க.

  • அகற்பித மரணம்

கற்பிதம் தமிழ்ச்சொல்லெனக் (‘க’ மடலம் பக்கம்  673 இல்) காணலாம்.

முதுமையின் காரணமாக அல்லது  நாள்பட்ட நோயின் காரணமாக என்றெல்லாம் சொல்ல முடியாதபடி / கற்பிதம் கூற முடியாதபடித் திடீரென்று நேரும் மரணம். எனவே, இதுவும் தமிழ்ச்சொல்லே!

  • அசங்கம்

சங்கு என்பதன் அடிப்படையில் பிறந்த சங்கம் தமிழ்ச்சொல்லே என்பதை அகர மடலத்தில் காணலாம். எனினும் ‘சங்க’, வடபுலத்திரிபு என மொழிஞாயிறு பாவாணர் கருதியதனால், சங்கம் என்னும் சொலலாட்சியைத் தவிர்த்துக் கழகம் என்னும் சொல்லையே வழங்கினார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அஃதாவது பாவாணரின் கருத்திற்குக் காரணம் கூறப்பட்டுள்ளதே தவிரப் பொருள் விளக்கத்தில் சங்கம் என்பது தமிழ்ச்சொல் என்பது தெளிவாகிறது.

எனவே, அசங்கம் என்பதும் தமிழ்ச்சொல்லே!

  • அசங்கமம்

கூடுகை, சேருகை, புணர்ச்சி முதலான பொருள்கள் உடைய சங்கமம் தமிழ்ச்சொல்லே என்பதைப் பேரகரமுதலியே (ச மடலம் பக்கம் 37) விளக்குகிறது. அப்படியாயின் எதிர்மறை முன்னொட்டு ‘அ’ இணைந்த ‘அசங்கமம்’ தமிழ்தானே!

  • அசலகால்

 கால் என்பது காற்றைக் குறிக்கும். சலசலத்து வரும் வன்காற்று சலகால் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் மென்காற்றாக வருவது அசலகால். எனவே, இதுவும் தமிழே!

  • அசலம்,
  • அசலன்

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் முறையே மலை, அசைவில்லாதவன் எனப்பொருள் உடைய அசலம், அசலன் ஆகிய இரண்டும் தமிழ்ச் சொற்களே என்பதில் ஐயமில்லை.

  • அசீர்த்தி

சீர் என்னும் சொல்லின் அடிப்படையில் பிறந்த சீரகம் தமிழ்ச்சொல்லே என நாம் சீ மடலம் பக்கம் 187இல் காணலாம்.

சீரகம் செரிமானத்திற்கு ஏற்றது. எனவே, சீர்த்தி என்பது செரித்தலையும் குறித்தது. ஆகவே அசீர்த்தி என்பது செரியாமையைக் குறிக்கும் நல்ல தமிழ்ச் சொல்லே!

  • அசீரகம்

குழந்தைகளின் உடலைச் சீராக வைக்க உதவுவதால் தாய்ப்பால் சீரகம் எனப்பெற்றது. தாய்ப்பால் சுரத்தல் குறைவான அல்லாத நிலை அசீரகம் ஆயிற்று. எனவே, அசீரகம் தமிழ்சச்சொல்லே!

  • அசீரணக் காய்ச்சல்

சீர் நிலையில் உடலை வைத்திருக்க உதவும் செரிமானம் சீரணம் எனப்பட்டது. செரிமானமின்மை அசீரணம். செரிமானமின்மையால் ஏற்படும் காய்ச்சல் அசீரணக் காய்ச்சல்.

   இவ்வாறு நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் அயற்சொற்களாக – ஆரியத்திரிபுகளாகத் தவறாகக் காட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டிற்காகச் சில மட்டுமே பார்த்துள்ளோம். இவை மட்டுமல்லாமல் ஒருசார் தனித்தமிழ் அன்பர்களால்  தமிழல்ல எனக் கருதப்படும் தமிழ்த்திங்கள் பெயர்கள், காரணம், பந்தம், சந்ததி முதலான பல சொற்கள் யாவும் தமிழே! இவற்றைத் தனியாக ஆராய்ந்துதான் தெரிவிக்க இயலும். எனவே, தமிழக அரசு சீராய்வு வல்லுநர்க் குழு ஒன்றை அமர்த்தி, இக் குறைபாடுகளைக் களைய வேண்டும்.  செ.சொ.பி.பேரகரமுதலி ஒரு சொல்லைத் தமிழ் என்றால் தமிழாகவும் இல்லை யென்றால் அவ்வாறாக அயற்சொல்திரிபாகவும் கருதும் பல கோடி மக்கள் உள்ளனர். எனவே, இதில் தவறுகளுக்கு இடமளிக்கக் கூடாது.

தமிழைத் தமிழாக ஏற்போம்!

தமிழையே எங்கும் பயன்படுத்துவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 22.09.2019