நாலடி இன்பம்!- 12 பற்கள் மூலம் சில சொற்கள்!

பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை

இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால்

உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்

எண்ணார் அறிவுடை யார். (நாலடியார், பாடல் 18)

பொருள்: வயது எவ்வளவு கடந்துள்ளது? பற்களின் வலிமை எவ்வாறுள்ளது? வலிமையான உணவையும் உண்ண முடியுமா? என்று கருதப்படும் மறைந்துவரும் இளமையை அறிவுடையவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.

சொல் விளக்கம்: பருவம்=அகவை; எனைத்து=எத்தனை; உள=ஆகியுள்ளன; பல்லின்=பற்களினுடைய; பால்=வலிமைத்தன்மை; ஏனை=எவ்வளவு; இருசிகையும்= இரண்டு பிடியளவேனும் அல்லது வன்மை மென்மை ஆகிய இருவகை உணவுகளையும்; உண்டீரோ என்று=சாப்பிடடீர்களா எனக் கேட்டு, வரிசையால்=முறைமையாக, உள்=உள்ளத்திற்குள், நாட்டம்=ஆராய்ச்சி, கொள்ளப்படுதலால்=பிறரால் செய்யப்படுதலால், யாக்கை=உடலினது, கோள்=கொள்கையை, அறிவுடையார்=அறிவுள்ளவர்கள்l எண்ணார்= பொருளாக நினையார்.

‘போலீசுகாரன் மகள்’ படத்தில் கண்ணதாசனின்

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

அதற்கு முன்னாலே வா வா வா வா

அழகுடன் இளமை தொடர்ந்து வராது

இருக்கின்ற போதே வா வா வா

என்னும் பாடல் வரிகள் வரும்.

இவ்வாறு இளமையில் இன்பம் துய்க்க எண்ணினாலும் அது நிலையற்றது எனவே, அறிவுடையவர்கள் இளமை வாழ்வு குறித்து மகிழார்.

நிலையாமையை வலியுறுத்துவதற்காக இவ்வாறு கூறினாலும் இளமை இன்பத்தையும் துய்க்க வேண்டும். வாழ்க்கை இன்பம் நிலைப்பதற்காக அற வழியில் பொருள் ஈட்டித் தானும் சுற்றத்தாரும் மகிழ வாழ வேண்டும்.

  • இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம் 25.09.2019