mullaaippaatu_attai02

  இங்ஙனம் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்து, போந்த உயிர்க்கொலை­யினை நிறுத்துதற் பொருட்டாகத் ‘தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்­பட்டனவா­மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதும் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருந்தினமையானும் ஆரியர்க்கும் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் நேர, அவ்வமயத்தில் வட நாட்டிலிருந்த தமிழ் அரசகுலத்திற் கௌதமசாக்கியார் என்பார் தோன்றிப் பழைய தமிழ்மக்கள் ஆராய்ந்து வந்த அரிய நல்லொழுக்க முறைகளை எடுத்து விவரித்துச் சொல்லப் புகுந்தார். கல்லாத மக்கள் மனமுங் கரைந்து உருகும்படி மிக்க இரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விருப்பத்தை எடுத்து விவரித்து, இந்நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பானாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் நிவாரணம் என்னுந்தூய நிலை தானே வருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிரமாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலுமேலுந் தீவினையே விளையுமல்லது நல்வினை எய்தா­தென்றுங் கௌதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயினர். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருகும்படியான கௌதமர் கொள்கைகள் சில நாளிலே எங்கும் பரவலாயின. மக்களெல்லாரும் ஆரியக்குருக்கள்மார் சொற்களில் ஐயுறவு கொண்டு தம் அறிவால் நல்லன பலவும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங் கருத்துகளிற் தோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிந்தனர். பிராஞ்சு தேயத்திற் தோன்றியதையொத்த ஒரு பெரிய மாறுதல் எங்கும் உண்டாவதாயிற்று. இங்ஙனம் ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ்சுழன்று வரும்போது, தென்னாட்டிலுள்ள தமிழருந் தாம் தமதுள்ளதே ஆராய்ந்து வைத்த அரிய பெரிய நுண்பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டையத் தமிழ்மொழி­யினைப் பண்டை நாளிற் போலவே பெரிதும் வளம்படுத்தும் அரிய முயற்சியில் தலைநின்றார்.

-தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு

ஆராய்ச்சியுரை: பக்கம்: 40-41